‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60

பன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன் இணைந்துகொண்ட ஆழ்ந்த குரலில் கர்ணன் களம்பட்ட செய்தியை பாடினார். அங்கிருந்த பதினொரு சூதர்களும் உதடுகளிலிருந்து எழாமல் நெஞ்சுக்குள் முழங்கிய ஒலியால் அதற்கு கார்வை அமைத்தனர். “சூதரே, மாகதரே, விண்ணின் முடிவிலா நீரப்பரப்பு ததும்பி கதிரவன் மீது பொழிந்தது. சுடரனைத்தும் அணைந்து வெம்மை மறைந்து, செந்நிறம் மங்கி, சாம்பல் வட்டமென்றாகி, விளிம்புகளில் எஞ்சும் அனல் அக்கருமையில் கசிந்து பரவ, எடை மிகுந்து மெல்ல மேற்கே தாழ்ந்து மறையும் கதிரவனை நான் கண்டேன்.”

தோழரே, எந்தையர் கண்ட கதிரெழுகைகள் அனைத்தையும் கண்டவன் நான். என் மைந்தர் காணப்போகும் அனைத்து கதிர்நிகழ்வுகளையும் காணும் வல்லமை கொண்டவன். பிறிதொரு முறையும் கதிரவன் இவ்வண்ணம் கருகி அணைந்ததில்லை. அந்தி ஒளிமங்கி மஞ்சள்பூத்து சிவந்து பின் நீலம்கொண்டு கருகி இருள்வதையே கண்டிருக்கிறேன். திரியிழுத்த அகல் என ஒளிர்வட்டம் குறுகி அணைவதை அன்று கண்டேன். கிழக்கிலிருந்து முகில்திரள்கள் பெருகி எழுந்தன. அங்கு விரிந்திருக்கும் பெருங்கடல்கள் அனைத்தும் தீப்பற்றிவிட்டனவோ, ஆழி நீரெல்லாம் நெய்யென்றாகி எரிந்து புகையாக மாறினவோ என்று ஐயுறும்படி கருங்குவைகளாக மலையடுக்குகளாக எழுந்து எழுந்து வந்தன.

அவற்றுக்குள் பல்லாயிரம் உபேந்திரர்கள் மின்படைக்கலம் கொண்டு களிப்போரிடுவதைப்போல் ஒளித்துடிப்புகளை கண்டேன். வானம் இடியென நகைப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மண்ணின் நடுக்கை கண்டிருப்பீர்கள். புற்றுக்குள் நாகங்கள் அதிர்ந்து உடல் சுருட்டுவதை அறிந்தும் இருப்பீர்கள். அன்று கண்டேன், விண்மீன்கள் நடுங்கும் இடியோசையை. ககனத்தில் விரையும் அனைத்து கோள்களும் திகைத்து நின்று சுழலும் தாளத்தை. கடுவெளியின் இருளுக்குள் அலைத்து அலைத்துச் சென்று கொண்டிருந்தது அவ்வோசை. திசைநாகங்கள் நடுங்கிச் சுருள, புவி அதிர்ந்தது. நாகஉலகங்கள் அனைத்திலும் அசைவுகள் உறைந்தன. ஓயா நெளிவுகள் நிலைக்க, இருப்பிலிருந்து இன்மையென்றாயிற்று இருண்ட நாகப்பெருவெளி.

முரசுகள் முழங்கத்தொடங்கின. “விண்ணெழுந்தார் அங்கர்! மூதாதையருடன் நின்றார் கதிர்மைந்தர்! தெய்வமென்றானார் கர்ணன்! கணம் ஓயா கொடை அளித்த கைகள் நிலம் படிந்தன. தாழா தலை மண் தொட்டது. அணி அகலா அழகுடல் வீழ்ந்தது. இன்று வானும் மண்ணும் இருள்கொள்க! இன்று கடுகி அழிக காலம்! விழுந்தான் விண்ணூர்வோன் புதல்வன். பேரழகன் விண்ணிலெழுந்தான்! தேவர்கள் மலர்த்தார்களுடன் சூழ நின்றனர். கந்தர்வர்கள் இன்னிசை முழக்கி வரவேற்கின்றனர். கின்னரரும் கிம்புருடரும் அவன் நடக்கும் பாதையை அணி செய்கின்றனர்! இதோ விண்ணகம் கொண்டாடுகிறது. இதோ முனிவர்கள் இறையுணர்வுகொண்டு மெய்ப்படைகிறார்கள்.”

“முரசின் ஓசையைக் கேட்டபடி நான் காவல்மாடத்தில் அமர்ந்திருந்தேன். என் கைகளில் இருந்த பன்னிரு நரம்புகள் கொண்ட மகரயாழைத் தூக்கி அப்பால் வைத்தேன். இனி ஒற்றைத் தந்தி நாதம் மட்டும் எழுக! எண்ணுகையில் எல்லாம் ஒரு விம்மலென இவன் நினைவு இங்கு திகழ்க! இங்கிருந்த ஒவ்வொன்றாலும் தோற்கடிக்கப்பட்டவன். அன்னையரால், தந்தையரால், உடன்பிறந்தாரால், பிதாமகர்களால், ஆசிரியர்களால், தெய்வங்களால். சூதரே, மாகதரே, அறுதியாக அறத்தால். இந்நாள் வரை அறத்தெய்வம் நெறிபிழைப்போரையே பலிகொண்டு இங்கு திகழ்ந்தது. அவர்களின் அஞ்சித் துயருற்ற உள்ளத்தை அவியெனக் கொண்டது. மாசுகலந்த குருதியை உண்டு சுவை மறந்தது. இன்று அது இன்கனி தேடியிருக்கக்கூடும்.”

“கனிகளில் இனிய கனி இது. அறமன்றி பிறிதிலாது மண்ணில் வாழ்ந்து நிறைந்தவன். உடல்முழுமை கொண்ட அழகன். கனிந்து தன்னை அத்தெய்வத்தின் பலிபீடத்தில் வைத்தவன். கொள்க தெய்வம்! கொள்க பேருருவே! இத்தூய பலியை கொள்க! இனியொரு பலி யுகயுகங்களுக்கு உனக்கு தேவையில்லாமல் ஆகுக! இந்தப் பலியால் உன் நா இனிக்கட்டும். உன் நெஞ்சு குளிரட்டும். உன் விழிகள் ஒளி கொள்ளட்டும். இனி வரும் மைந்தர் அறிக, இந்தத் தூய பலியைக் கொடுத்து இங்கு நிறுத்தினோம் அறத்தேவனை என! இனியொன்றில்லை எனும்படி பெரும்பலி கொடுத்து எழுப்பியுள்ளோம் அவனை என! இங்கு கொலுவீற்றிருங்கள் எங்கள் இறையே. இங்கு கோல் கொண்டருளுங்கள் எங்கள் தலைவனே. இனி உங்கள் சொல் இங்கு மாற்றிலாது திகழ்க! இனி அறமென்பதில் அறிஞர்களுக்கு ஐயம் இல்லாதாகுக!” குரல் விம்மி அழுது யாழ் மேலேயே தலைவைத்து உடலதிர்ந்தார் சூதர். சூழ்ந்திருந்தோர் அவரை நோக்கிக்கொண்டு அடிநாதத்தை மட்டும் மீட்டிக்கொண்டிருந்தனர்.

அர்ஜுனன் தேர்த்தட்டில் தலைகுனிந்து அமர்ந்திருக்க இளைய யாதவர் தேரைத் திருப்பி பாண்டவப் படைகளுக்குள் கொண்டு சென்றார். தொலைவில் கர்ணனின் களவீழ்ச்சியை அறிவிக்கும் முரசொலிகள் எழுந்துகொண்டிருந்தன. பாண்டவப் படையினர் முற்றிலும் சொல்லடங்கி தனித்தனியான மானுட உடல்களாக மாறி பிரிந்து பின்னடைந்தனர். மறுபுறம் கௌரவப் படையினர் சிறுசிறு குழுக்களென்றாயினர். ஒவ்வொரு குழுவும் பிறிதொரு குழுவுடன் இணைந்தது. உடல்கள் உடல்களுடன் ஒட்ட அவர்கள் ஒற்றைத் திரளென்றாகி சுருங்கி பின்னடைந்துகொண்டிருந்தனர். இரு படைகளுக்கும் நடுவே வெந்தும் கரிந்தும் சிதைந்தும் கிடந்த மானுட உடல்களும் தேருடைவுகளும் புரவிச்சிதைவுகளும் யானைக்குவியல்களுமாக குருக்ஷேத்ரம் விரிந்து விரிந்து அகன்றது.

ஒருபோதும் அது அத்தனை அகலம் கொண்டிருக்கவில்லை. அத்தனை பெரிதா களமென்று இயல்பாக அதை திரும்பி நோக்கிய ஒவ்வொருவரும் திகைப்புற்றனர். பின்னர் திரும்பி தங்களைப் பார்த்து தாங்கள் அத்தனை குறைந்துவிட்டோம் என்பதைக் கண்டு திகிலுற்றனர். பாண்டவப் படையினரில் ஈராயிரம் பேருக்கும் குறைவானவரே எஞ்சியிருந்தனர். அவ்வளவே கௌரவப் படையிலும் உயிருடன் மிஞ்சினர். பின்னடைந்து இரு படைகளும் குருக்ஷேத்ரத்தின் இரு எல்லைக்கு சென்றபோது இரு தரப்பாலும் முற்றிலும் கைவிடப்பட்டு வேறெங்கிருந்தோ வந்து குவிந்தனபோல் கிடந்தன அவ்வுடல்கள். பெருவெள்ளம் பொங்கிப் பாய்ந்து அணைந்தபின் வடிந்த சகதியின் மட்கிய குப்பைகளும் நெற்றுகளும் தடிகளும்போல.

படைவீரர்கள் ஒவ்வொருவரும் அதை நோக்க அஞ்சினர். ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே நோக்கினர். எடைமிக்க தலைகளால் நிலம் நோக்கினர். அரிதாக சிலர் விண்ணை நோக்கினர். முகில் எழுந்து மூடிக்கொண்டிருந்த வானிலிருந்து மழைத்துளிகள் தெறித்தன. நீராடி சாலையினூடாக கொட்டில் மீளும் யானைக்கூட்டங்களின் உடலிலிருந்து தெறிக்கும் துளிகளென. இருதரப்பிலும் எவரும் தங்குவதற்கு குடில்கள் எஞ்சவில்லை. எரியெழுந்து பாதைப் பலகைகள் அனைத்தும் எரிந்துவிட்டிருந்தமையால் கரிபடிந்த தடங்களே பாதையென்றாகி தெரிந்தன. களஞ்சியங்கள் எரிந்து அணைந்துவிட்டிருந்தன. அவற்றிலிருந்து கசிந்த கரும்புகை தயங்கி வானில் நின்றது. இரு தரப்பிலும் ஒற்றை வாழ்த்தொலி கூட எழவில்லை. முரசுகள் மட்டும் “விழுந்தார் மாவீரர்! அங்கநாட்டு அரசர் வீழ்ந்தார்! கதிர்மைந்தர் களம்பட்டார்! வெல்க கர்ணன் புகழ்! வாழ்க வசுஷேணன் எனும் பெயர்!” என்று முழங்கிக்கொண்டிருந்தன.

புரவியில் அர்ஜுனனை நோக்கி வந்த நகுலன் விரைவழிந்து சற்றே திரும்பி நின்று “யாதவரே, நமது படைகளிலிருந்தும் அங்கருக்கான வாழ்த்தொலிகள் எழவேண்டும். நான் ஆணையிடவா?” என்றான். இளைய யாதவர் சொல்லெடுப்பதற்குள் அர்ஜுனன் உரத்த குரலில் “வேண்டாம்!” என்றான். சீற்றத்துடன் திரும்பிய நகுலன் “போர் முடிந்துவிட்டது, மூத்தவரே. போர் முடிவை அறிவித்து களமுரசுகள் முழங்கிய கணமே வஞ்சங்களும் அகன்றுவிடவேண்டுமென்பது நெறி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். புகழ்சூடிவிட்டீர்கள். சூதர்கள் சொல் யாக்கத் தொடங்கிவிட்டார்கள். இனி எதற்கு இக்காழ்ப்பு?” என்றான். “வேண்டாம் என்று உன்னிடம் சொன்னேன்” என்று மேலும் சீற்றத்துடன் அர்ஜுனன் சொன்னான்.

நகுலன் சினத்தில் உடல் நடுங்க, வலிப்புகொண்ட முகத்தில் பற்கள் வெளித்தெரிய, மூச்சின் ஒலியில் “இது கீழ்மை. நீங்கள் அவரை வீழ்த்தியதைவிட பெரும் கீழ்மை இது. அதோ களம் வீழ்ந்து கிடப்பவர் பாரதவர்ஷம் கண்ட மாவீரர். ஒற்றை வாழ்த்தொலிகூட எழாது அவர் உடல் அங்கு கிடக்கிறது. அவரை எளிய வீரனின் உடலென அவர்கள் எடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றான். அவன் குரல் உடைந்தது. “இங்கு வீழ்ந்த அத்தனை மாவீரர்களையும் இருதரப்பும் சேர்ந்து வாழ்த்தியிருக்கிறது, மூத்தவரே. அவரை நாம் வாழ்த்துவதே முறை.”

அர்ஜுனன் “வேண்டியதில்லை! வேண்டியதில்லை!” என்றான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. பின்னர் எழுந்து காண்டீபத்தைத் தூக்கி நகுலனை அறைவதுபோல் நீட்டி “விலகிச்செல்! அறிவிலி! விலகிச்செல் இங்கிருந்து. இனி ஒரு சொல்லும் பேசாதே” என்றான். நகுலன் அசையாது நின்று “இக்கீழ்மையை நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை, மூத்தவரே” என்றான். “சற்று முன் எழுந்த கீழ்மையை எதிர்பார்த்தாய் அல்லவா?” என்று அர்ஜுனன் கேட்டான். நகுலனின் முகம் மாறியது. “போரில் செய்த கீழ்மையை போருக்குப்பின் இயற்றும் இச்சிறுமைகளினூடாக நிகர் செய்து கடந்து செல்லலாம் என்று எண்ணுகிறாயா?” என்று அர்ஜுனன் கேட்டான். அதிர்ச்சியுடன் “மூத்தவரே!” என்றான் நகுலன்.

“இக்கீழ்மையை எவரும் வெல்ல இயலாது. இது நம் கொடிவழியினரின் நினைவில் நின்றிருக்கும். பல்லாயிரம் தலைமுறைகள் இங்கு சூதர் இதை பாடுவர். என் புகழ் பேசப்படுமிடத்தில் எல்லாம் இவ்வெற்றியின் கெடுமணமும் உடனிருக்கும். எதைச் செய்தும் நீ இதை மறைக்க இயலாது. மறைக்கவும் வேண்டாம். இது இங்ஙனமே இருக்கட்டும். குருக்ஷேத்ரத்தில் விழுந்த அவன் உடல் நமது கொடிவழியினரின் நினைவில் நீடிக்கட்டும். தீரா நோயென என்றும் நம் குருதியில் திகழட்டும் அந்நினைவு” என்றபின் மூச்சிரைக்க அவன் தளர்ந்தான். ஓசையுடன் தேர்த்தட்டை அறைந்தது காண்டீபம். தளர்ந்து பின்னகர்ந்து பீடத்தில் அமர்ந்து “உலகியலில் வெற்றியென ஒன்று இல்லை என உணரும்பொருட்டு இது நிகழ்ந்தது. இங்கே அடைவதொன்றில்லை என்று உணரும்பொருட்டு இப்போர் மூண்டது போலும்” என்றான். தலையை இரு கைகளால் தாங்கி முனகிக்கொண்டான்.

தவிப்புடன் “யாதவரே” என்று நகுலன் அழைத்தான். புன்னகையுடன் இளைய யாதவர் சொன்னார் “இங்கு படை எண்ணிக்கை மிகக் குறைவு. தன்னந்தனிக் குரல்கள் ஆங்காங்கே எழுந்து வாழ்த்திக்கொண்டிருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு பெரும் குரலென்றாகி விண்முட்ட ஒலிக்க போதிய வாய்கள் இல்லை. ஆகவே வாழ்த்தொலி எழுந்தும் எப்பயனும் இல்லை. முரசுகள் ஒலிக்கட்டும். அது களமுறைமை.” நகுலன் சீற்றம்கொண்டவனாக ஏதோ சொல்ல நாவெடுத்தான். பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு தலைவணங்கி திரும்பிச் சென்றான். புரவியில் ஏறி அதை உதைத்துச் செலுத்தி விரைந்தான்.

தேரை முன்செலுத்தியபடி இளைய யாதவர் “உன் துயர் அறிகிறேன், பார்த்தா. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் துயருறாத மெய்வீரன் எவனும் இங்கில்லை” என்றார். “இது வெற்றியல்ல, வெறும் வஞ்சம்! வெற்றுக்கீழ்மை!” என்று உரத்த குரலில் அர்ஜுனன் சொன்னான். “முதல் பிழையிலிருந்து தொடங்கி இங்கு வந்து நின்றிருக்கிறாய். விதைத்தது வளரும், தொடங்கியது நிறைவுறும்” என்றார் இளைய யாதவர். “ஒன்றில் நீ நிறைவுறலாம். இனி நீ இங்கே இயற்றுவதற்கு கீழ்மை எதுவுமில்லை. இக்களத்தில் இனி உன்னால் வெல்லப்படவும் எவருமில்லை.” அர்ஜுனன் “ஆம், மெய்” என்றான். கசப்புடன் புன்னகைத்து “இதில் துயருற ஏதுமில்லைதான். பீஷ்மரையும் துரோணரையும் வீழ்த்திய எனக்கு இயைந்ததுதான் இச்செயல்” என்றான்.

தேரைச் செலுத்தியபடி “அவர்கள் ஒவ்வொருவரும் அனைத்துச் செயல்களினூடாகவும் இந்த முடிவை நோக்கியே வந்துகொண்டிருந்தார்கள், பார்த்தா. உனது அனைத்து எண்ணங்களூடாகவும் உணர்வுகளூடாகவும் நீயும் இங்கு வந்து சேர்ந்துகொண்டிருந்தாய். இது நீங்கள் அனைவரும் பிறப்பதற்கு முன்னரே முடிவு செய்யப்பட்ட தருணம். இங்கு நீங்கள் உங்களுக்கு ஆணையிடப்பட்டதையே முடித்தீர்கள் என்று கொள்க!” என்றார் இளைய யாதவர். “ஊழ்!” என்று ஏளனத்துடன் அர்ஜுனன் சொன்னான். “எத்தனை நாணமற்ற சொல்! எத்தனை கீழ்மை நிறைந்த சொல்! எத்தனை சிறுமைகளும் தீமைகளும் இச்சொல்லால் மறைக்கப்பட்டிருக்கும்!”

“ஆம்” என்று இளைய யாதவர் நகைத்தார். “உண்மை. ஆனால் அதற்கிணையாகவே அத்தனை மேன்மைகளும் வெற்றிகளும் மெய்மைகளும் உவகைகளும் மறைக்கப்பட்டிருக்குமெனில் அது நிகர் செய்யப்படுகிறது. ஊழென்பது ஒவ்வொரு வண்ணமும் பிறிதொன்றுடன் கலந்து உருவாகும் வெண்மை. பருப்பொருட்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இயல்பு நிறைந்து உருவாகும் வெறுமை.” அர்ஜுனன் தன் தலையை இரு கைகளிலும் தாங்கி அமர்ந்திருந்தான். குமட்டல் எடுப்பதுபோல் இருமுறை உலுக்கிக்கொண்டான். தேரின் உலுக்கலில் அவன் உடல் உயிரில்லாத சடலம் என அசைந்து அதிர்ந்தது.

அவர்களுக்குமேல் விண்ணகம் இடிக் கொந்தளிப்பால் நிறைந்திருந்தது. நூறு நூறு குருக்ஷேத்ரக் களங்களை எடுத்து எடுத்துக் காட்டி அமைவதுபோல் மின்னல்கள் துடித்தன. “இன்று பெருமழை பெய்யக்கூடும்” என்று இளைய யாதவர் சொன்னார். “இங்குளோர் அனைவரும் இரவில் மழைப்பொழிவில்தான் அமர்ந்திருக்க நேரும்.” அர்ஜுனன் அவர் சொன்னதை கேட்கவில்லை. வானை நோக்கி “உன் தந்தை மகிழ்ந்திருக்கிறார். இன்றிரவை அவரே ஆள்வார்” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் அச்சொல்லால் தொடப்பட்டவனாக நிமிர்ந்து நோக்கினான். மின்னல் அவன் முகத்தை சுடரச்செய்து அணைய வானம் இடியோசையால் நிறைந்தது.

பாண்டவப் படைகள் மிகமிகக் குறைந்துவிட்டிருந்தமையால் அந்த விரிந்த வெளியில் அவர்கள் சிதறிப்பரந்திருந்தனர். அனைவர் உடல்களும் கரி படிந்திருந்தன. காட்டெரிக்குப் பின்னர் சருகுக் கரிதுகள் அலைவதுபோல அவர்கள் நிலமெங்கும் அசைந்தனர். அவர்கள் சென்றமைய இடம் இருக்கவில்லை. படைகளின் பின்புறத்தில் களஞ்சியங்கள் எரிந்து புகை எழுப்பிக்கொண்டிருந்தன. தலைமைதாங்கி ஆணையிட எவரும் இருக்கவில்லை. ஆகவே அவர்கள் உள்ளத்தில் எழுந்த எண்ணத்தால் கொண்டுசெல்லப்பட்டார்கள். அருகிருந்தவர்களின் அசைவுகளை தாங்களும் இயற்றினார்கள். ஒரு திசை நோக்கி குவிந்துசென்று அங்கே எரியும் புகையும் மண்டியிருக்கக் கண்டு பின்னடைந்தனர். பின்னிருந்தவர்கள் முன் உந்த தேங்கி வளைந்து பிறிதொரு வழி திறந்து அத்திசை நோக்கி சென்றனர்.

அவர்களுக்கு ஆணையிட்டபடி முரசுகள் முழங்கின. ஆனால் அவ்வாணைகளுக்குள் ஒருமை இருக்கவில்லை. ஆகவே அவை சொல்கலந்து வெற்று ஓசையென்றாயின. அவை வானிலிருந்து பொழிந்த விண்முரசுகளின் ஒலியில் கலந்து வீணாயின. கொம்புகளை முழக்கியபடி வந்த சிறிய படைத்தலைவர்கள் “ஒன்றாகத் திரள்க, அணிகொள்க!” என்று ஆணையிட்டனர். “ஒன்றாகத் திரண்டு உணவில்லாமல் துயில்க!” என ஒருவன் படைத்தலைவனை பகடி செய்தான். அவன் திரும்பி சீற்றத்துடன் ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு புரவியைத் திருப்பிக்கொண்டு சென்றான்.

“இன்று மழையே நமக்கு கூரையென்றாகும்” என்று ஒருவன் சொன்னான். “நன்று. பகலில் நெருப்பு. இரவெல்லாம் மழை” என்றான் ஒருவன். பலர் நின்று திரும்பி நோக்கி புன்னகைத்தனர். அந்தக் கையறுநிலையை அவர்கள் சிரித்துக் கடக்க முயன்றனர். “இன்று நாம் நன்கு வெந்த மானுட ஊனை உண்ணவிருக்கிறோம். நம் உடலில் மானுட பலி கோரும் தெய்வங்கள் எழும். நாளை இக்களத்தில் தெய்வங்கள் நின்று போரிடும்” என்று ஒருவன் சொன்னான். “மானுட உடல்களை புணரலாமென்றால் ஏன் உண்ணலாகாது?” என்றான் ஒருவன். அவன் என்ன சொன்னான் என எவருக்கும் புரியவில்லை.

தனித்து, சோர்ந்து, பிரிந்து, தள்ளாடி அமர்ந்து, பின் எழுந்து, எங்கு எத்திசை நோக்கி என்றறியாது நடந்துகொண்டிருந்த பாண்டவப் படைகளினூடாக கரித்தடப் பாதையில் இளைய யாதவர் தன் தேரை ஓட்டிச்சென்றார். படைவீரர்கள் பிளந்து அவருக்கு வழிவிட்டனர். புகையை ஊடுருவிச் செல்வதுபோல் தேர் அவர்களை ஓசையின்றி, தொடுகையின்றி விலக்கிச் சென்றது. தேரின் சகட ஓசை மட்டும் கேட்டது. நடந்துகொண்டிருந்தவர்களின் காலடியோசைகள் புகைத்திரையால் மூடப்பட்டு நீருக்குள் என மழுங்கி ஒலித்தன. பகல் முழுக்க எழுந்த வெடிப்பொலிகளால் அடைத்துவிட்டிருந்த காதுகளில் கம்பி அறுந்த யாழ் என பிறழ்வொலி ஒன்று எஞ்சியிருந்தது.

ஒவ்வொரு நாளும் போர் முடிந்து அத்தேர் அவ்வாறு படைகளைக் கடந்து அப்பால் செல்கையில் இருபுறமும் வாழ்த்தொலிகள் எழுவது வழக்கம். துயருற்றுக் களைத்திருந்தாலும் குருதி வார்ந்து சோர்ந்திருந்தாலும்கூட படைவீரர்கள் படைக்கலங்களைத் தூக்கி “ஃபால்குனன் வாழ்க! பார்த்தன் வாழ்க! வில் விஜயன் வாழ்க! வெற்றிகொள் வேந்தன் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்புவார்கள். பெருமிதமும் களிவெறியும் கொண்டு சிலர் கூத்தாடுவார்கள். புண்பட்டு தட்டுவண்டிகளில் அள்ளி அடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுபவர்கள்கூட அவ்வாழ்த்தொலியைக் கேட்டு கையூன்றி எழுந்தும் ஒருக்களித்துத் திரும்பியும் தேர்த்தட்டில் வில்லுடன் நின்று செல்லும் அர்ஜுனனை நோக்கி முகம் மலர்வார்கள்.

ஒவ்வொரு நாளும் புலரியில் படைமுகம் எழுகையில் அனைவரும் திரும்பி நோக்குவது அர்ஜுனனைத்தான். அவன் கையில் நாண் கொண்டுள்ள காண்டீபமே அவர்களை உளம் தூண்டியது. அவர்களின் கனவுகளில் வந்து ஒளியாடியது. எங்கெங்கோ ஏதேதோ தெய்வங்களின் கைகளில் அவ்வில்லை அவர்கள் பார்த்திருந்தார்கள். தொலைதூரச் சிற்றூர்களில் குலதெய்வமென அமர்ந்திருந்த காட்டிருப்புகள் அவ்வில்லை கையில் வைத்திருந்தன. “இது நான். என்றும் உடனிருப்பேன்” என்றன. அவர்கள் ஒருபோதும் குடித்தெய்வங்கள் உடனில்லாமல் வாழ்ந்தவர்கள் அல்ல.

அவர்கள் அந்த வில்லை நோக்குகையில் எல்லாம் மெய்ப்புகொண்டனர். இளைய யாதவர் ஓட்டிய அந்தத் தேரை போரிடுகையிலும் உளம் தொடர்ந்துகொண்டிருந்தனர். அமரத்தில் அங்கில்லையென அமர்ந்திருந்த கருவண்ண உடலனை நூறு முறை ஆயிரம் முறை விழிகளால் தொட்டு உழிந்தனர். அவருடைய குழல்கற்றையில் இமைப்பின்றி ஒளிகொண்ட பீலிவிழியை நோக்கி உளம் மடிந்து வணங்கினர். “எங்கு வெற்றிகொள் விஜயனும் சொல்திகழ் கரியனும் உளரோ அங்கு மெய்மையும் சிறப்பும் அழிவில்லாது நிலைகொள்ளும் என்று அறிக!” அச்சொல் ஒவ்வொரு இரவிலும் சூதர்களின் பாடல்களின் முடிவில் எழுந்து நின்றது. அச்சொல்லுடன் அவர்கள் துயிலச்சென்றனர். இளமழை பொழிந்த குளிரில் அது அனல்போல் வெம்மையளித்தது. காலையில் விழித்தெழுகையில் இளங்காற்றென வந்து உடல் மலர வைத்தது. அச்சொல்லை தங்கள் அகம் ஓயாது உரைத்துக்கொண்டிருப்பதை அவர்கள் எப்போதும் உணர்ந்தனர்.

ஆனால் அன்று அவர்கள் எவரும் அர்ஜுனனை திரும்பிப் பார்க்கவில்லை. அவன் அவர்களை கடந்து சென்றபோது இயல்பாக நோக்கியபின் விழிதிருப்பிக்கொண்டனர். அத்தேர் கடந்து நெடுந்தொலைவிற்குச் சென்ற பின்னர் எவனோ ஒரு வீரன் ஓங்கி நிலத்தில் உமிழ்ந்தான். சிலர் அவனை திரும்பிப்பார்த்தனர். அவன் பித்தன்போல் நகைத்து “பழிகொள் வீணன்! இக்குருதியிலாடி அவன் அடைந்ததென்ன?” என்றான். “வாயை மூடு! நீ அரசப்பழி சூடுகிறாய்!” என்றான் ஒருவன். “இல்லை, தெய்வப்பழி சூட விரும்புகிறேன்! இதோ இக்களத்தில் நிகழ்ந்ததற்கு அப்பால் நாமும் நம் குடியும் அடையும் பெரும்பழியென பிறிதொன்றுண்டா? தெய்வப்பழி இது. எங்கள் குடிமீது எங்கள் கொடிவழியின்மீது தெய்வப்பழி விழுக! எங்கள் மூதாதையர் அடைக தெய்வப்பழி!” என்று அவ்வீரன் உரக்கக் கூவினான்.

சூழ்ந்திருந்த அனைவரும் அவனை பதைப்புடன் நோக்கினர். வெறிகொண்டு நகைத்து அவன் கைகளை விரித்தான். வெறியாட்டென நடுக்கு எழ சுழன்று ஆடி நின்றான். “பழி கொள்ளும் பொருட்டு தெய்வம் எழுந்திருக்கிறது, தோழரே! மானுடப்பழிகொண்டு மகிழ வந்துள்ளது இறுதி தெய்வம்! இதோ சென்றவனை நீங்கள் கண்டீர்கள் அல்லவா? அவன் தெய்வம். பலி கொள்ள வந்த கொடுந்தெய்வம். கலியுகத்தின் தெய்வம். குருதியாடி நிறைவுற்று களம் மீள்கிறான். அள்ளி அள்ளி உண்டான் நிணத்தையும் குருதியையும். இக்களத்தில் விழுந்த அத்தனை உயிர்களையும் உண்டான். மானுடரை, புரவிகளை, யானைகளை சுவைத்தான். பசி கொண்ட அந்த வாயை நான் கண்டேன்.”

“ஈடில்லா கொலைஞன்! கோடி கோடி கொலைகளினூடாக தெய்வமென்றானவன்! அவனை நான் கண்டேன்! ஆம், அவன் என் பழியையும் கொள்க! கொள்க என் பழியையும்! அவன் கொள்க என் பழியையும்! என் குடித்தெய்வங்களே இவனிடம் சென்றமைக என் பழி! இப்புவியில் ஒரு துளி எச்சமின்றி அழிக இவன் குடி!” இடையிலிருந்து வாளை எடுத்து அக்கணமே தன் கழுத்தில் வைத்து இழுத்து தலை துண்டாக்கி மடிந்து நிலத்தில் விழுந்தான். அவன் முகத்தில் எஞ்சிய அவ்வெறி தசைச்சிற்பமென நிலைத்து மண்ணில் கிடந்தது. சூழ்ந்திருந்தோர் அதை நோக்க அஞ்சினர். அனலை வட்டமிட்டுச் செல்பவர்கள்போல் அதை ஒழிந்து நடந்தனர். ஆனால் ஒவ்வொருவரும் அந்நோக்கை தங்கள் உள்ளத்தில் கொண்டு சென்றனர்.

முந்தைய கட்டுரைஇசையும் வண்ணமும்
அடுத்த கட்டுரைச.துரை பேட்டி -அந்திமழை