சமணத்தில் வராகர்

விமலரும் வராகரும்

அன்புள்ள ஜெ

சீனுவின் கடிதத்தையும் உங்கள் பதிலையும் வாசித்தேன் . சமணர்களின் இறையியல் / தந்திர சடங்குகள் தொடர்பாக பலருக்கும் இருக்கும் தவறான புரிதல்தான் சீனுவிற்கும் இருக்கிறது . மூலநூல்களையோ சம்பந்தபட்டவர்களையோ நேரில் அணுகாமல் வெளிநாட்டு ஆய்வாளர்களின் நூல்கள் வழியாக இந்திய சமயங்களை புரிந்து கொள்ள முயல்பவர்கள் சில பொறிகளில் சிக்கி விடுவார்கள் .

சமணர்கள் காலம் காலமாக ஹிந்து தாந்ரீக நூல்களை பிரதி செய்து அவர்கள் பாணியில் பயன் படுத்தி வருகின்றனர் .சித்தாந்தங்களை எளிதில் உருவாக்கலாம் .ஆனால் பலன் தரும் தேவதைகளை புதிதாக உருவாக்க முடியாது .எனவே எப்போதும் இத்தகைய வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன . இஸ்லாமிய மாந்த்ரீகர்கள் சிலர் காளியையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவதை கண்டிருக்கக் கூடும் .அது போலத்தான் சமணர்கள் விஷயமும் .அவர்கள் வசம் பத்மாவதி கல்பம் போன்ற பல நூறு நூல்கள் தந்திர மந்திர சாதனைகளுக்காகவே உண்டு .ஜைனர்கள் மஹாலக்ஷ்மி , சரஸ்வதி , காளி , அஷ்ட / தச திக் பாலர்கள் , இந்திரன், விநாயகர் , பைரவர் , நவக்ரஹங்கள் போன்ற தேவதைகளை பல காலமாக வழிபடுகின்றனர் .பூஜை முறையும் பிரதிஷ்டையும் எல்லாம் ஹிந்து மத பத்ததிகளின் பிரதிபலிப்பு தான் .இத்தனை தேவதைகளும் சமணர்கள் ஹிந்து மதத்திற்கு தந்த கொடை என்று ஒரு ஆய்வாளர் வாதிடுவார் எனில் ஹிந்து மதத்தை சமணத்தின் உள் பிரிவாக கருதி நமக்கும் சிறுபான்மை சான்றிதழ் தருமாறு தான் கேட்க வேண்டும் .

சமணர்கள் ஹிந்து மத தேவதைகளை தங்கள் கோவிலுக்குள் இணைத்து வழிபட தொடங்குவதற்கான ஒரு வித grammar ஐ அவர்கள் தற்போது வழிபடும் கண்டாகர்ணன் வழிபாட்டை கொண்டு அறியலாம் .நமது மஹாபாரத , ஹரிவம்ச கண்டாகர்ணன்தான்.அநாதி காலமாக சில பூஜைகளின் போது இவருக்கான மந்திரம் / தோத்திரம் கூறப்படுவது உண்டு .சுமார் 150 வருடங்களுக்கு முன் ஒரு ஜைன மடாலய தலைவர் கண்டாகர்ண வழிபாடு செய்யுமாறு ஜைனர்களை ஊக்குவித்தார் .இன்று கண்டாகர்ணனுக்கு ஆஹா ஒஹோ என்று சமண கோவில்களில் வழிபாடு நடக்கிறது .சிலர் சொல்வது போல சமண தெய்வங்கள் ஆயுதம் தரித்திருக்கா என்பதெல்லாம் தவறு .

இனி கடலூர் சீனு கண்டது யாரை என்று பார்க்கலாம் .நான்கு கரங்களுடனும் கோல முகத்துடனும் நான்கு துதிக்கை மீது அமர்ந்து இருக்கும் இந்த மூர்த்தியை ஜைனர்கள் மணிபத்ர வீரன் என்கிறார்கள் .ஒரு காலத்தில் இந்த மூர்த்தியை தபா கச்சா மடாலயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே வழிபட்டு வந்தனர் .இப்போது பலரும் வழிபடுகின்றனர் .இவர் மடத்தின் ரக்ஷா மூர்த்தியாக கருதபட்டார் .மடத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு இறந்த ஒரு சாதாரணன் பிறகு இவ்வடிவத்தை அடைந்தான் என்பது அவர்கள் நம்பிக்கை .இவரையும் வராஹ விஷ்ணுவையும் ஜைன நூல்கள் குழப்பிக்கொள்வது இல்லை.கொஞ்சம் மந்திரங்களுக்கு உள்ளே போய் பார்த்தால் குபேர புத்ரனான மணிபத்ரன் என்னும் யக்ஷனின் சாயை இருப்பது தெரியும் .ஹிந்து மதத்தில் உள்ள மூல மந்திரங்களை போலத்தான் அங்கேயும் இருக்கிறது .பெளத்தத்திலும் மணிபத்ரன் வழிபாடு உண்டு .மற்றபடி சமணர்கள் இப்போது பயன்படுத்தும் துதிகளில் நான் முன்னர் குறிப்பிட்ட மடாலய தொடர்பு காணப்படுகிறது .

உம் : ” இஷ்ட ஸித்திம், மஹா ஸித்திம் ஜய லக்ஷ்மிவிவர்த்தய/ தபா கச்ச நாயகம் …..மணி பத்ரம் வீரம் ” .இதில் தபா கச்ச நாயகம் என்னும் பதம் இருப்பதை பார்க்கலாம் .மற்றபடி தீர்த்தரங்கர் வழிபாடு அல்ல இது .பத்து தீர்த்தரங்கர்கள் தசாவதாரமாக மாற்றப்பட்டதாக கூறுவது எந்த வித அடிப்படை ஆதாரமும் அற்ற முதல் குரங்கு தமிழ் குரங்கு பாணி கோஷம் தான் . சமணர்களுக்கும் அத்தகைய கோஷம் இட உரிமை உள்ளதை நாம் மறுக்க முடியாது :)

சீனுவைப் போன்று இந்திய சமயங்கள் மீது ஆர்வம் உடையவர்களுக்கு நான் வைக்கும் தாழ்மையான விண்ணப்பம் ஒன்று தான் .இந்திய சமயங்கள் பல இழைகளால் ஆனது .அனைத்தையும் பொதுமைபடுத்தும் ,ஒன்றாக்கும் , தரப்படுத்தும் மேற்கத்திய அறிதல் முறையை கொண்டு நாம் அவற்றை அணுக முடியாது ( இது நீங்கள் பல முறை அழுத்தமாக  எழுதி உள்ள விஷயம் தான் ) . ஏதாவது வினோதமான சடங்கை கண்டால் நூலகத்திற்கு சென்று அதைக் குறித்து தேடுவதை விட , நம் ” ஆய்வாள பெருந்தகைகளை ” கேட்பதை விட அங்கிருக்கும் பூசாரியிடமோ , ஏதாவது முதியவர் இடமோ கேட்பது அதிக பலன் தரும் .

நன்றி
அனீஷ் க்ருஷ்ணன் நாயர் .

***

அன்புள்ள அனீஷ்

விரிவான கடிதம், நன்றி

இந்திய மதங்களின் வழிபாட்டு – குறியீட்டு அமைப்புக்களை ஓரளவேனும் புரிந்துகொள்ள உங்களைப்போல் இதிலேயே மூழ்கி இருக்கவேண்டும். அவ்வளவு விரிவானவை, அவ்வளவு மாறிக்கொண்டிருப்பவை

இந்து பௌத்த சமண மதங்களைப்பற்றிய என் புரிதல் ஒன்று உண்டு, இதை இந்த மதங்களைப்பற்றிய அறிஞர்களின் நவீனநூல்களிலிருந்து பெறவில்லை, தொடர்ச்சியான பயணங்கள் வழியாக நேரடியாக இன்றும் வாழும் இந்தமதங்களின் மரபுகளிலிருந்தும் இடங்களிலிருந்தும் பெற்றேன். ஓரளவு மூலநூல்களும் வரலாற்று நூல்களும் படித்திருக்கிறேன். என் புரிதல் வலுப்பெற்றே வருகிறது. அது இதுதான் ஒட்டுமொத்த நோக்கில் இந்த மூன்று மதங்களும் ஒன்றே.

மதங்களுக்கு அடிப்படையாக அமையும் குறியீட்டுக் கட்டமைப்பு, ஆசாரநடைமுறைகள், நம்பிக்கைகள் ஆகியவை இம்மூன்று மதங்களிலும் ஒன்றே. வேறுபாடு இருப்பது உயர்மட்டத் தத்துவத் தளத்தில்; அப்படிப்பார்த்தால் இந்துமதத்தின் பிரிவுகளுக்கு இடையிலேயே அந்த வேறுபாடு அதேயளவுக்கு வலுவாக உள்ளது

இவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை முதன்மைப்படுத்துவது, இவற்றுக்கிடையேயான மோதல்களை மதப்போர் அளவுக்குச் சித்தரிப்பது ஆகியவற்றை ஐரோப்பிய இந்தியவியலாளர்கள் செய்தனர். அதை அவர்கள் தங்கள் புரிதலின் குறைபாடுகளால் , அறிதலின் எல்லைகளால் சென்றடைந்தனர். அவர்கள் ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் நிகழ்ந்த உக்கிரமான மதப்போர்களின் பின்னணியில் நின்று இந்த மதங்களை நோக்கினர்.அது இயல்பானதே.

இங்கே மூன்று மதங்கள் இருந்தன. ஆகவே அவை ஒன்றோடொன்று போரிட்டிருக்கவேண்டும். ஒன்றை ஒன்று அழித்திருக்கவேண்டும். வென்றது மறைந்ததை அழித்திருக்கவேண்டும் என்பது அவர்களின் எளிய கணிப்பு.

இக்கணிப்பு அதன்பின்னர் காலனியாதிக்க அரசியலாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு பிரிவினையரசியலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவின் இடதுசாரிகளின் வரலாற்றுப் பார்வை என்பது முழுக்கமுழுக்க காலனியாதிக்க வரலாற்றாசிரியர்கள், பண்பாட்டாய்வாளர்களின் தரவுகள் மற்றும் புரிதல்களை மூலப்பொருளாகக் கொண்டு மேலே கட்டி எழுப்பப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய கல்வி -இதழியல் துறைகளில் இடதுசாரி அறிஞர்களின் செல்வாக்கு மிகுதி. அவர்கள் இந்த மோதல்சித்திரத்தை வலுவாக முன்வைத்தனர். பிளவுபடுத்தும் எந்த கொள்கையையும்போல அது அரசியல்வாதிகளால் எளிமைப்படுத்தப்பட்டு எடுத்தாளப்பட்டது.

ஆகவேதான் சமணர்கழுவேற்றம் போன்ற கருத்துக்கள் உச்சகட்டமாக மீண்டும் மீண்டும் புனையப்பட்டு முன்னிறுத்தப்பட்டன. பண்டைய இந்தியா கொடூரமான மதமோதல்களின் வெளி என சித்தரிக்கப்பட்டது. இன்றும் பலநூறு நூல்கள் அதையே சொல்லிக்கொண்டிருக்கின்றன. அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை என எளிய ஆதாரங்களைக்கொண்டு வாதிடப்புகுந்தாலும்கூட மிகையுணர்ச்சிகளுடன், தேவைக்குமீறிய அறக்கொந்தளிப்புடன் வந்து மோதுகிறார்கள். சற்றே ஐயம் தெரிவிப்பவர்களைக்கூட இந்துத்துவர்கள், அடிப்படைவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள்.

உதாரணமாக, ராஜராஜசோழன் பௌத்தவிகாரைகளை அழித்த சைவ வெறியன் என ஒருவர் சொன்னால் நாம் நாகைசூடாமணிவிகாரத்திற்கு சோழர்கள் அளித்த கொடைகளைச் சுட்டிக்காட்டலாகாது. நாயக்க அரசர்கள் வைணவ வெறியர்கள் என்று சொன்னால் திருமலாபுரம் கல்வெட்டில் நாயக்கர்கள் பௌத்தபள்ளிக்கு அளித்த கொடை மற்றும் தீர்ப்பு பற்றி சொல்லப்பட்டிருப்பதை குறிப்பிடகூடாது. கிட்டத்தட்ட ஒற்றைவரலாற்றுச் சித்திரம் போதிய ஆதாரங்கள் இல்லாமல் நிறுவப்பட்டு விவாதங்கள் மறுக்கப்பட்டு மூர்க்கமாக நிலைநிறுத்தப்படுகிறது.

இம்மூன்று மதங்களும் இங்கே செயல்பட்ட விதம் ஐரோப்பிய, மத்திய ஆசிய மதங்களின் செயல்பாட்டுக்கு முற்றிலும் மாறானது. இவை ஒற்றைமதம் போலவே செயல்பட்டன. இப்போது இந்துமதப்பிரிவுகள் எப்படிச் செயல்படுகின்றனவோ அப்படி. அதாவது, தத்துவத்தளத்தில் தொடர்ச்சியான கருத்துமோதல் மற்றும் முரண்பாடுகள். அதேசமயம் நம்பிக்கை வழிபாடு சார்ந்த அடித்தளத்தில் ஒருமை.

சமண, பௌத்த மதங்கள் தங்கள் தத்துவக்கொள்கைகள், தாங்கள் முன்வைத்த அறவியல் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துச்சென்றனவே ஒழிய அவர்களின் முந்தைய மதநம்பிக்கையை முற்றாகக் கைவிட்டு தங்களிடம் வரவேண்டுமெனச் சொல்லவில்லை. அவர்களின் மதநம்பிக்கை பிழை என்றும் பெரும்பாவம் என்றும் சொல்லவில்லை. ஆகவே ஒருசமணர் ஒருவகையில் இந்துவாகவும் இருக்கமுடியும். பௌத்தர் இன்னொருவகையில் இந்துவாகவும் இருக்கமுடியும். இன்று ஒரு வைணவர் குலதெய்வ வழிபாட்டையும் தடையின்றி செய்வதுபோல.

நம் நண்பரும் எழுத்தாளருமான காளிப்பிரசாத் மரபான வைணவ [ஐயங்கார்] குடியில் பிறந்தவர். அவருடைய குடும்பம் அவர்களின் மடத்துக்கு அணுக்கமானது. அன்றும் இன்றும். ஆனால் அவருடைய குலதெய்வம் காளி. ஆகவே அவர் காளிப்பிரசாத்.

இந்த இருநிலையைப் புரிந்து கொள்ளாமல் இந்திய மதங்களைப் புரிந்துகொள்ள முடியாது. இந்தியாவெங்கும் பலநூறு குகைகளில் ஒருசுவரில் சமணச் சிற்பங்களையும் மறுசுவரில் பௌத்தச் சிற்பங்களையும் கூடவே இந்துச் சிற்பங்களையும் காணலாம். வைணவ ஆலயங்களில் இந்துச்சிற்பங்கள் மிகச்சாதாரணமாக உள்ளன. இந்து ஆலயங்களில் தீர்த்தங்காரர் , புத்தர் சிலைகள் உள்ளன. உதாரணம் சிருங்கேரியிலுள்ள கிருஷ்ணதேவராயர் கட்டிய ஆலயத்தில் தீர்த்தங்காரரும் புத்தரும் விஷ்ணுவின் அவதாரங்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.பெலவாடியில் விஷ்ணுவின் மூலச்சிலையின் பிரபாவளையத்திலேயே புத்தர் பத்தாம் அவதாரமாக இருக்கிறார். இந்த  இயக்கவியலைக் கொண்டே தர்மஸ்தலா போன்ற சமணர்களால் நடத்தப்படும் சைவத்தலத்தை புரிந்துகொள்ளமுடியும். கர்நாடகத்தில் பல சமண ஆலயங்களில் மாத்வர்கள் பூசைசெய்வதை புரிந்துகொள்ளமுடியும்.

இந்த மதங்களுக்கிடையே முற்றாக மோதல் இல்லாமல் இருந்திருக்குமா? அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. மோதல்கள் உண்டு. கைப்பற்றல்கள் உண்டு. அது சைவ வைணவங்களுக்கு நடுவிலே மட்டுமல்ல சைவப்பிரிவுகள் வைணவப்பிரிவுகள்ஆகியவற்றுக்கு உள்ளேயேகூட உண்டு. அந்தப்பூசல் இவை ஒரே மதம் என்பதை மறுக்கவில்லை.

இருமுனைகளில் இவை முற்றிலும் வேறுவேறு மதங்கள் என்னும் கருத்தை ,இங்கே மதப்போர் நிகழ்ந்தது என்னும் கருத்தை மறுக்கவேண்டியிருக்கிறது. ஒன்று இவற்றை இவ்வாறு சித்தரிக்கும் ஐரோப்பிய இந்தியவியலாளர்களையும் இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும். இன்னொன்று, பௌத்த சமண மதங்களை புறச்சமயமாகக் கண்டு வெறுப்பும் ஒவ்வாமையுமாக அணுகும் இன்றைய இந்து மத அடிப்படைவாதிகளை.

இந்திய மதங்களின் இந்த ஒற்றைத்தன்மையை புரிந்துகொண்டாலொழிய இந்தியாவையும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது. வருங்காலத்தில் நம் வரலாற்றை ஐரோப்பியரும் அமெரிக்கரும் நம்மை கேட்காமலேயே எழுதி நம்மை ஏற்கவைக்கும் காலம் இல்லாமலாகும் என்றும் அப்போது இவை மேலும் தெளிவுறும் என்றும் நினைக்கிறேன்.

உங்கள் குறிப்பும் அதையே உறுதிசெய்கிறது. நன்றி

ஜெ

மதப்பூசல்களின் எல்லை

முந்தைய கட்டுரைச.துரை, ஐந்து கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55