காலமில்லா கணங்களில்… லிங்கராஜ்

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்
நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்
நின்றிருந்துகிடந்த நெடியோன்

அன்பின் ஜெ,

திருவைகுண்டம் பேரூராட்சியின் கடைசி எல்லை என, கைலாசநாதர் கோவில். நவதிருப்பதி வைணவம். இக்கோவில் நவகைலாசத்தில் ஒன்று. சனிக்கு ஸ்தலம் கிழக்கே விரிந்து கிடக்கும் வயல் பார்த்து தனியே சிவன். கைலாச நாதனின் துணையாக சிவகாமி அம்மை தெற்கு பார்க்கும் படி..உள் ப்ரகாரத்தில் வடக்கு நோக்கி ஜூரத் தேவர் புதிதாக அறிமுகம். தெற்கு பார்க்கும் தக்‌ஷினாமூர்த்தி, கணபதி மற்றும் சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் காலையின் அமைதியில்.. மேற்கே பார்த்தபடி இருக்கும் லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு , சண்டிகேஸ்வரர் அருகே இருக்கும் வடக்கு பார்க்கும் துர்க்கை இல்லை ஆனால் தெற்கு பார்த்தபடி சண்டிகேஸ்வரர் அருகே சனிஸ்வரர் உள்ளார். வெளியே காசி விஸ்வநாதர் ன் மற்றும் விசாலாட்சி. சொல்லில் சின்ன சிவன் கோவில் தான்.

ஆணால், யாளிகளின் விரிவு முதலில் முதலாக பட்டது இங்கே தான். சந்தனசபாபதி அரங்கில் முழுக்க யாளி சூழ் உலகம். யானை மேல், சிம்மம் மேல் என சிறு அரங்கு முழுதும் யாளி தூண்களின் பரப்பு. வளவளப்பின் மெருகில் கெண்டைகால் இறுக்கம் கொண்டு சலங்கை கட்டியும், ஆபரணம் பறந்தபடியும் இருந்த வீரபத்திரர், கோவில் முதல் கோபுரம் உள் நுழையும் இடத்தில் வரவேற்கும் யாளி மேல் வீரன், கோபுர அடிதளத்தில் சிறிய சிற்பங்கள், தூண்களில் நுணுக்க செதுக்கல்கள், கோபுரம் தாண்டிய மண்டபத்தில் தூண்களில் வரைதல்கள் என பல வகை. கோவிலை சுற்றி வர காலையின் வெயிலும், ஒலித்து கொண்டு இருந்த நாதஸ்வர ஒலியும், யாரும் இல்லா சுற்று மண்டபங்களும் கால உறைதல்.  கிளம்பி வெளியே வர, ஊரின்அந்த தெருவில் மண்னோடு புதைத்து கொண்ட தேர் நிகழ்வாழ்விற்கு கொண்டு வந்தது.

2] ஆள்வார் எனப்படும் ஆள்வார்திருநகரி பற்றி நீங்கள் முன்னரே சில முறை எழுதி இருந்தீர்கள். “காலமில்லா” எனும் வார்த்தை மீண்டு வந்தது நம்மாழ்வார் கோவிலில்.. சொல்ல முடியாத உணர்வு. இடது பக்கம் ஆதிநாயகிதாயார் இருக்கும் மண்டபம் முழுக்க மீண்டும் வந்தனர் யாளிகள். தாயார் முன் இருக்கும் ஒரு சிறு மண்டபத்தின் தூண்களில் ரம்யமாக கருமையுடன் வேலைபாடு. உற்சவர் உட்கார வைக்க அல்லது திருமண உற்சவம் தனி இடம் போல. மேல் சுவர் தாங்கி நிற்கும் இடை கற்கள், தூண்கள் என முழுக்க கல் விளையாட்டு. காலையின் வெளிச்சம் பெருமாளின் ப்ரகாரத்தில் வெயிலும் இங்கே அரை இருளும் உள்ள சூழ்நிலை அந்த காலத்தில் கொண்டு வைத்தது. கோவிலின் வலது புறம் நம்மாழ்வரின் சந்நிதி முழுக்க மஞ்சளின் ஒளியில் சிற்பங்கள். நுணுக்க வகை ஒரு தினுசு என்றால், ஒரு பார்வை படும் இடத்தில் கூட சடக்கென்று தெரியும் தனி சிற்பங்கள் வேறு வகை…. உறங்கா புளி இருக்கும் இடத்தில் காலம் நின்று கொண்டு இருந்தது.  அந்த இருட்டும், வெளிச்சம் பாதியுமாக இருந்த தூண்களுமாக ஆள் உயரம் மேல் இருக்கும்  ஆதிநாத பெருமாள், முன் இருக்கும் பொன் மின்னும் மூர்த்திகள் விட்டு வர மனம் கொள்ளவில்லை. ஸ்ரீலங்காவில் இருந்த வந்த 15 வயது குமுதவள்ளி பெண் குழந்தை தலை வாரி, சிவப்பு நாமம் தரித்து அசைந்தபடி துதிக்கை ஆட்டியபடி கொஞ்சியது.

மாலை ஆள்வார் அருகே உள்ள திருகளூர் செல்ல, மதுரகவி ஆழ்வார் சிறு வீதி புறப்பாடு பல்லக்கில். பூ மணம் கமழ ஆழ்வார் சுற்றியபடி வந்தார். வைத்தமாநிதி பெருமாள் நீண்டு படுத்தபடி, உயர்த்த கை தூக்கியபடியும், காலின் வெள்ளி கவசம் தீப ஓளியில் மின்ன, சிரசு அருகே சேஷன் ஒளியில் மங்கலாக மறைத்து கொள்ள, கூர் மூக்கு கொண்ட கரியோன் நெடியோன் கிடந்தபடி கவர்ந்து கொண்டான். தாயார் குமுதவல்லி மற்றும் கோளுர்வல்லி. சிற்பங்களின் போதை இல்லா சிறிய கோவில். மாலையின் நிலா, நீல வானம் அதிகம் கூட்டம் இல்லா கோவில் என ஏகாந்தம். அந்த ஆழ்வாரின் உலாவில் சிறுவன் ஒருவன் நாமம் தரித்து இரண்டு கையிலும் வாத்தியம் ஏந்தி ஊதியபடி சுற்றி வந்தது அந்த மாலையில் குறுநகை தருவிடம்.

மறுநாள் திருவைகுண்டம். நின்றபடி அருள் கொடுக்கும் வைகுண்டநாயகியும் சோரநாயகியும். உள் நுழைந்தவுடன் இருக்கும் வலதுபுற மண்டபம் திருவேங்கடவனின் ராஜ்யம். ஒவ்வொரு தூணின் பக்கங்களிலும், மேல் செல்லும் குறுக்கு கற்களிலும், ஒவ்வொரு தூண்களிலும், கற்களிலும் செதுக்கலின் உச்சம் இந்த நுணுக்க யாளிகள். அசையா தீப ஒளியில் ஒரு தூணில் ஆஞ்னெயர் ஒளிர்ந்து கொண்டு இருந்தார். உள்ளே நுழையும் இடத்தில் நான்கு சிலைகள் அள்ளி கொல்லும் வரவேற்பு. உடைந்து இருந்தாலும் சிறு சிற்பங்கள் எல்லாம்  ராமனின் சிலைக்கு தோற்றவை அல்ல. கல் கொண்டு நிரப்பிய வைகுண்ட பெருமாள். முழுக்க முழுக்க கற்களால் ஆனவைகளை பார்க்கையில் திகைப்பும் ஆச்சர்யமும் கடைசியில் எவ்வளவு அள்ளி கொள்ள முடியும் என்கிற சோர்வும். இங்கே மண்வாளமாமுனி சந்நிதி சாத்தி இருந்தது. பத்து அவதார மூர்த்திகள், தங்கம் மின்ன லட்சுமி நரசிம்மர்…

வேறு காலம் அது. சென்று விட்ட காலம். விஷ்ணுபுரம் திருவிழா நாட்கள் மனதில் தோன்றியது. நீங்கள் சொன்னது போல, காலமில்லாதவை இவைகளும், இவர்களும். ஊர் திரும்ப பஸ் ஏறி கொள்ள, மழை அறைந்து பெய்ய ஆரம்பித்தது.

பி.குஜுன் 6 முதல் 10 வரை நம்மாழ்வார் நவ கோவிலகளுக்கும் பல்லக்கு வழி செல்லும் உற்சவம். 10 அன்று திருநகரியில் மெயின் திருவிழா

லிங்கராஜ்

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66
அடுத்த கட்டுரைகிரீஷ் கர்நாட் – ஒரு விவாதம்