சீமானும் கிராமப்பொருளாதாரமும்

ஆயிரங்கால்களில் ஊர்வது

அன்புள்ள  ஜெ,

சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான். தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான்.

இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா?

அன்புடன்,

வா.ப.ஜெய்கணேஷ்.

***

அன்புள்ள ஜெய்கணேஷ்

கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. அவற்றிலிருந்து சில வரிகள் சீமான் போன்றவர்களின் நாவுகளில் சென்றமைகின்றன. அவற்றை ஸ்டாலின் பேசமுடியாது, ஏனென்றால் அவர் உடனடியாக அரசாட்சிக்கு வரக்கூடும். ஒரு வகையான தன்னார்வலக் குறுங்குழுவாக இருப்பதனால் சீமான் அவற்றைப் பேசுகிறார்.

அவற்றை மக்களிடம் பேசும்போது அவர்கள் கவனிக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் அறிந்த உண்மை நிலவரம். ஆகவே அதற்கு ஒரு மேடைமுக்கியத்துவம் உள்ளது. அதை ஓரு பரப்புரையாக நான் பார்ப்பதில்லை. ஒருவகையான பரபரப்புரையாகவே காண்கிறேன்.

காந்தியர்கள் பேசும் கிராமியப்பொருளியலுக்கும் இவர்கள் பேசுவதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. காந்தியர்கள் கிராமியப்பொருளியலின் அழிவென்பது உலகளாவ எழுந்துள்ள நுகர்விய – பெருந்தொழில்மய பொருளியலின் தவிர்க்கமுடியாத விளைவு என்று மதிப்பிடுகிறார்கள். இந்தப்பொருளியலின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு அதை நம்மால் முழுமையாக எதிர்க்க இயலாது என்பார்கள். ஆகவே கூடுமானவரை தாக்குப்பிடிக்கலாம் என்று கூறி அதற்கான திட்டத்தை முன்வைப்பார்கள். தாக்குப்பிடிக்கும் பொருளியல் வழியாகவே அவர்கள் கிராமியப் பொருயலுக்கான வழியை வகுக்கிறார்கள்.

இதில் எப்போதும் காந்தியர்கள் குற்றம்சாட்டுவது நம்மைத்தான். அதாவது தங்களையும் உள்ளடக்கிய மக்களை. நமது நுகர்வுமனநிலையை. நம் லாப வெறியை. நாம் ஒட்டுமொத்தக் கண்ணோட்டத்துடன் இல்லாமலிருப்பதை. மக்களிடம் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளும்படி, மறுபரிசீலனை செய்யும்படி சொல்கிறார்கள்.

அதை காந்தியர் மட்டுமே சொல்லமுடியும். ஏனென்றால் அதற்கான தார்மிகநிலை அவர்கள் தங்கள் வாழ்க்கையினூடாக ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்ஆனால் அதைக்கூட சற்றேனும் அறவுணர்வுள்ளவர்களே ஏற்கிறார்கள். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை. இங்கே காந்தியத்தின் எல்லை அது.

சீமான் போன்றவர்கள், பலவகையில் சூழியலழிவையும் கிராமப்பொருளியல் அழிவையும் பேசுபவகர்கள் கூடவே பலவகையான சதிக்கோட்பாடுகளை மிகைப்படுத்திப் பேசுவதைக் காணலாம். அதாவது நம் மீது பிழையே இல்லை, எல்லாமே எதிரியின் சதி. அவனை ஒழித்துவிட்டால் எல்லாம் சீராகிவிடும். எதிரி எவராகவும் இருக்கலாம். அமெரிக்க ஏகாதிபத்தியம் முதல் உள்ளூர் தெலுங்கர்கள் வரை.

இது பரப்பரசியலின் வழி. மெய்யான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு பொய்யான கவற்சியான தீர்வுகளை அளிப்பது. அவற்றை வாக்குறுதிகளாக அளித்து அதிகாரம் நோக்கிச் செல்வது. நேற்று மெய்யான பிரச்சினைகளை பரப்பியக்கமான திராவிட இயக்கம் பொய்யான திராவிடநாடு, தனித்தமிழ்நாடு போன்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் அணுகியது. வடவர் பார்ப்பனர் என பொய்யான எதிரிகளைச் சுட்டிக்காட்டியது. அதிகாரத்தை அடைந்தது. சீமானும் அந்தவழியிலேயே செல்கிறார்

மக்களுக்கு இதுதான் பிடிக்கும். எதிரியைச் சுட்டிக்காட்டு என்றுதான் அவர்கள் கோருகிறார்கள். எப்போதும் அன்னியருக்கு எதிரான போர்நிலையில் இருப்பது பழங்குடிகளின் இயல்பு. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வாழும் பழங்குடியை நோக்கி இவர்கள் பேசுகிறார்கள்.

சீமான், தன்னார்வக்குழுவினர் போன்றவர்கள் பேசிய எல்லா சிக்கல்களும் எளிய வெறுப்பரசியல்களாக உருமாற்றப்பட்டு நீர்த்து இலக்கழிந்தது வரலாறு. அவர்கள் மக்களைக் கவர விழைகிறார்கள். மக்கள் எளிய வெறுப்புகளை நாடுகிறார்கள் சீமானுக்கு அவருடைய எளிய வெறுப்பரசியலுக்குரிய கருக்களாகவே இவை பயன்படுகின்றன.

மக்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள வழிவகுக்காமல், அவர்களை விமர்சிக்காமல், அவர்களுக்கு பிடித்ததைப்பேசுபவர்கள் வெற்று அரசியல்வாதிகள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுபவர்கள், எதிர்மறை உணர்வுகளை வளர்ப்பவர்கள் அழிவையே கொண்டுவருவார்கள்

காந்தியம் சீரான நீண்ட போராட்டங்களையே முன்வைக்கும். எல்லா போராட்டங்களினூடாகவும் தன்னை மேம்படுத்திக்கொள்வதையே முதல் இலக்காகக் கொள்ளும். அதற்கு எதிர்க்கவேண்டிய தரப்பும் மாற்றிக்கொள்ளவேண்டிய கருத்துக்களும்தான் உண்டே ஒழிய  அனைத்துத்தீமைகளுக்கும் காரணமான எதிரிகள் இல்லை. ஆகவேதான் அது முதிராஉள்ளங்களை கவர்வதில்லை. அது விறுவிறுப்பற்றதாக அவர்களுக்குப் படுகிறது

ஆகவே இவர்கள் மெய்யான பிரச்சினைகளைப் பேசுகிறார்களே என மகிழவேண்டியதில்லை. இவர்கள் பேசுவதனாலேயே அவற்றின் உண்மையான தீவிரம் மழுங்கடிக்கப்பட்டு, பொய்யான களங்களுக்கு போராட்டம் திசைதிருப்பப் பட்டு அழியும் என அச்சமும் கவலையும்தான் கொள்ளவேண்டும்

ஜெ

***

நீர் நெருப்பு – ஒரு பயணம்
ஆயிரங்கால்கள் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைஅபிக்கு வாழ்த்து- பாவண்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44