ர் ,ன் என்பவை…

அன்புள்ள ஜெ..

ஒரு கன்னட மொழி பெயர்ப்பு நூல் படித்தேன்..மொழி பெயர்ப்பில் என்னை ஒரு விஷ்யம் குழப்பியது.. யோசிக்கவும் வைத்தது.மாணவர்கள் , பேராசிரியர்கள் , அதிகாரிகள் என அனைவரையுமே அவன் இவன் என குறிப்பிடுவது சற்றே குழப்பியது..

பொதுவாக தமிழில் , அவர் இவர் அவன் இவன் என்பதற்கு சில குறிப்பிட்ட ( எழுதப்படாத ) விதிகள் உண்டு.அமைச்சர் வந்தான் என யாரும் எழுதுவதில்லை.. ஆனால் வேலைக்காரன் வந்தான் என எழுதலாம்…நடிகன் விக்ரம் என எழுத முடியாது… நடிகை மும்தாஜ் என எழுதலாம்

கரகாட்டக்காரி வீட்டில் சோதனை என்பதற்கும் கரகாட்டக்கார கலைஞர் வீட்டில் சோதனை என்பதற்கும் வித்தியாசம் உண்டு… ஆனால் கரக்காட்டக்காரி , ஆசிரியை , நடிகை என்பார்கள்அதிலுமேகூட மருத்துவச்சி என குறிப்பிடுவதில்லை ( இலக்கிய நூல்களை சொல்லவில்லை.. பொதுவான போக்கு )… டாக்டர் என பெண்களை பால் வேற்றுமையை சொல்லாமல் குறிப்பிடுவார்கள்..

நம் மரபில் அரசன் , அப்பன் , இறைவன் என அனைவரையுமே அவன் இவன் என சொல்லி வந்தாலும் தற்போது அது முடியாது .. தேவையும் இல்லை.ஆங்கில இந்து , பெண் நடிகர்களை actor என்றுதான் குறிப்பிடுகிற்து… தமிழ் இந்து நடிகை என்று குறிப்பிடுகிறது

chairman , spokesman , actor actress போன்ற பாலின வேறுபாட்டு சொற்கள் கூடாது என குரல் கொடுத்து அவற்றை பெரும்பாலும் ஆங்கில பயன்பாட்டில் இருந்து எடுத்து விட்டனர்ஆனால் தமிழில் இது குறித்து பேச வேண்டிய பெண்ணிய அமைப்புகள் எதுவும் பேசவில்லை

இவை குறித்த உரையாடலை நீங்களாவது தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்

அன்புடன்
பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்

காலந்தோறும் அறவியல் மாறுபடுகிறது – அது மேம்படுகிறது என்றே நான் நம்புகிறேன். மானுடசமத்துவம், தனிமனித உரிமை, அனைவருக்கும் அரசதிகாரப் பங்களிப்பு ஆகிய மூன்று கூறுகளில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் நாம் தொடர்ச்சியாக முன்னகர்ந்துகொண்டிருக்கிறோம். அதற்கேற்ப மொழியில் மாற்றம் வந்தாகவேண்டியிருக்கிறது.

சென்ற தலைமுறையில் பாடநூல்களில் கூட வண்ணான் வந்தான், அம்பட்டன் வந்தான் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. சினிமாக்களில் இன்றுகேட்டால் அதிர்ச்சியூட்டும்படி சாதிய ஏற்றத்தாழ்வு, மானுட இழிவுபடுத்தல் வெளிப்படும் வசனங்கள் இருந்திருக்கின்றன. தொடர்ச்சியாக நாமும் மாறிக்கொண்டேதான் இருக்கிறோம்.

பொதுவான அறவியலில் உருவாகும் மாற்றத்திற்கு ஏற்ப இச்சொற்கள் மாறுபடும். இச்சொற்களை மாற்றுவதனூடாகவே பொதுவான அறவியலில் பெரும் மாற்றம் உருவாவதையும் காணலாம். உதாரணமாக அலி போன்ற சொற்கள் திருநங்கை போன்ற சொற்களால் மாற்றீடு செய்யப்பட்டபோது அவர்களைப்பற்றிய சமூகப்பார்வை மாறியதை நாம் காணலாம்.

ஆகவே, மொழியில் நீங்கள் சொல்வதுபோல பாலியல்வேறுபாட்டைக் குறிக்கும் சொற்கள் களையப்படவேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். குறிப்பாகச் செய்திகளில், ஆட்சிமொழியில் இந்த மாற்றம் நிகழவேண்டும்.

அதேசமயம் தமிழில் ர்,ன் விகுதிகள் பெரிய சிக்கலை அளிப்பவை. இப்போது பள்ளிமாணவரைக்கூட ர் என்றே குறிப்பிடுகின்றன ஊடகங்கள். ஆனால் எந்த வயதுவரை? தோராயமாக ஒரு பத்துவயது என வைத்துக்கொண்டு அதற்குக்கீழே ன் போட்டுவிடுகின்றன. இந்தச் சிக்கல் நமது மொழியமைப்பில் உள்ளது. சீரான பொதுப்புரிதல்வழியாகவே இது மாற்றமடையமுடியும்

அங்கும் பல சிக்கல்கள் எழும். திருடர் திருடினார் என்றோ கொலைகாரர் பிடிபட்டார் என்றோ எழுதமுடியுமா என்ன? அதேசமயம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதவரை எப்படி குற்றவாளி என முடிவுசெய்வது? நமது சமூகத்தின் பொதுப்புரிதல் அதில்செயல்படுவதைக் காணலாம். பொருளியல் குற்றவாளிகளுக்கு செய்தித்தாள்கள் ன் போடுவதில்லை.
என் பார்வையில் எல்லா பெயர்களுக்கும் ர் போட்டுவிடுவதே திர்வு எனத் தோன்றுகிறது. முதலில் சற்று ஒவ்வாமை இருக்கும், அது காலப்போக்கில் கடந்துசெல்லும்.

ஆனால் இந்தவகையான ‘அரசியல்சரிகளை’ இலக்கியத்தில் செல்லுபடியாகாது. இப்படி ‘சலவைசெய்த’ மொழியில் எழுதினால் இலக்கியம் உண்மையை உரைக்காது. இலக்கியம் எல்லா நெறிகளையும் கடப்பதே. ‘நாகரீகநெறிகளுக்கும்’ ‘பண்புநெறிகளுக்கும்’ கூட அது கட்டுப்பட்டாகவேண்டும் என்பதில்லை.

இலக்கியத்தில் சொல்வதை விட உணர்த்துவது முதன்மையானது. ஒரு கதாபாத்திரத்தை வாசகருடன் அணுக்கமாக ஆக்கும்பொருட்டு ன் போடப்படலாம். ஒருவர் மேல் இன்னொருவருக்கு இருக்கும் தொலைவைச் சுட்ட ன் போடப்படலாம். ஆசிரியருக்கு ஒரு கதாபாத்திரம் மீதிருக்கும் அணுக்கத்தான் ன் போடப்படலாம். உதாரணமாக ஜே.ஜே.சிலகுறிப்புகளில் சுந்தர ராமசாமி ஜே.ஜே யை அவன் என்றே சொல்கிறார்.

ஜெ

முந்தைய கட்டுரை‘ சப்தம் ஆப்பிள் வடிவிலானது’ – அருணாச்சலம் மகாராஜன்
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63