வங்கத்தில் என்ன நடக்கிறது?
கேரளத்திலும் இடதுசாரிகளின் அரசியல் முடிந்துவிட்டது, வங்கம்போல அவர்கள் இங்கே இனி எழவே முடியாது என்று சிலர் எனக்கு எழுதியிருந்தார்கள். பெரும்பாலானவர்களின் விழைவு அது, அத்தகைய விழைவுகளை அவர்கள் வருடிக்கொண்டிருக்கவேண்டியதுதான். சிலர் உண்மையான ஆதங்கத்துடன் கேட்டிருந்தார்கள். தமிழகத்தைப்போலவே கேரள அரசியலைக் கூர்ந்து நோக்கி வருபவன் என்பதனால் அவர்களுக்காக இதை எழுதுகிறேன்
வங்கத்திற்கும் கேரளத்திற்குமான வேறுபாடு என்ன? வங்கத்தில் இடதுசாரி அரசியல் என்பது முழுக்க முழுக்க கல்கத்தாவை மட்டுமே நம்பிச்செயல்பட்டது. வங்கத்தில் பயணம்செய்தவர்கள் அறிவார்கள். வங்கம் கல்கத்தா – எஞ்சிய நிலம் என இரு பெரும்பிரிவாகப் பிரிந்திருக்கிறது. நாம் வங்கம் என எண்ணும் கலை,இலக்கியம், திரைப்படம் ,அரசியல் அனைத்துமே கல்கத்தாவைச் சார்ந்தவை. வங்கத்தின் பெருநிலம் பிகாரைப்போலவே தோன்றுவது. எல்லாவகையிலும். செழிப்பான சேற்றுநிலம். பசுமை. ஆனால் பழைமையான வீடுகள். இடிபாடுகள் நிறைந்த சிற்றூர்கள். ஈரமான குண்டும் குழியுமான சாலைகள். படிப்பறிவே எட்டாத மக்கள்திரள்.
நிலப்பிரபுத்துவ ஆதிக்கம் நிறைந்த வங்கத்தின் சிற்றூர்களிலிருந்துதான் இப்போது கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் அடித்தள உழைப்புப்பணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். குமரிமாவட்டத்தில் மட்டும் பத்தாயிரம் வங்கக்குடும்பங்கள் செங்கல்சூளைகளில் பணிபுரிகிறார்கள். கேரளத்தில் சென்ற பத்தாண்டுகளில் வங்கத்தின் ‘பொருளியல் அகதிகள்’ வேலைதேடி வரத்தொடங்கியபோது பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அவர்கள் ‘ஓர் அரசியல்சதி’யால் அவ்வாறு அனுப்பப் படுகிறார்கள் என தோழர்கள் நம்பினர். அவர்கள் வந்திறங்கிய ரயில்நிலையத்தில் வழிமறித்து தர்ணா செய்த நிகழ்வுகூட உண்டு.
வங்கக் கம்யூனிஸ்டுக் கட்சி அங்கே அறிவுஜீவிகளை தன்வயப்படுத்தியது. அவர்களைக்கொண்டு நகரை ஆண்டது. கிராமங்களை வெல்ல அது ஒரு குறுக்குவழியைக் கையாண்டது. கிராமத்து குறுநிலக்கிழார்களையே இடதுசாரிகளாக ஏற்றுக்கொண்டது. பெருநிலக்கிழார் என்னும் அமைப்பு வங்கத்தில் ஐம்பதுகளிலேயே அழிந்தது – அவ்வழிவின் சித்திரத்தை சரத்சந்திரர் நாவல்களிலேயே காணலாம். பின்னர் உருவாகிவந்த குறுநிலக்கிழார்கள் நிலத்தை கையடக்கி , கிராமங்களை ஆண்டனர். அவர்கள் மேல் கட்சியை கட்டியெழுப்பிய கம்யூனிஸ்டுக்கள் அதை உறுதியான அடித்தளம் என நம்பினர். முப்பதாண்டுகள் அது அவ்வாறே நீடித்தது
அன்றும் இன்றும் வங்க அரசியல் நேரடி வன்முறை கொண்டது. ‘கைப்பற்றுதல்’ அதன் செயல்பாடுகளில் முக்கியமானது. சுதந்திரப்போராட்டக் காலத்திலேயே சுபாஷ் சந்திரபோஸின் அணியினர் காங்கிரஸை கைப்பற்ற முயன்றனர். பின்னர் ஃபார்வாட் பிளாக் காங்கிரஸின் பல பகுதிகளை வன்முறையால் கைப்பற்றியது. பின்னர் இடதுசாரிகள் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து மம்தா பானர்ஜியின் திருணமூல் காங்கிரஸ் கைப்பற்றியது. இதை நம்பியதே வங்க மார்க்ஸியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது
அது கேரளத்தில் நிகழவில்லை. கேரளத்தின் கம்யூனிஸ்டுக் கட்சி நேர்மாறாக சிற்றூர்களில் வேரூன்றியிருக்கிறது. சொல்லப்போனால் நகரங்களில் தான் ஆற்றலற்றதாக உள்ளது. வடகேரளத்தின் மார்க்ஸியச்சிற்றூர்கள் ஒருவகையான ’மார்க்ஸியஜனநாயகம்’ நிலவுபவை. பல ஊர்களில் எனக்கு நண்பர்கள் உண்டு. அங்கெல்லாம் நான் சென்று தங்கியிருக்கிறேன். அவற்றின் சிறப்பியல்புகள் சில உண்டு. அவற்றை வங்கத்தில் காணமுடியாது
அ. மார்க்ஸியக் கல்வி. இச்சிற்றூர்கள் அனைத்திலும் துடிப்பாகச் செயல்படும் நூலகங்கள் உள்ளன. மார்க்ஸியர்கள் அவற்றை நடத்துகிறார்கள். நான் திறந்துவைத்த நூலகமே ஒன்று உள்ளது. பலவற்றில் ஒவ்வொருநாளும் இருநூறு நூல்களாவது வெளியே செல்கின்றன. சாதாரணமான விவசாயக்கூலிப் பெண்கள் அடிப்படை அரசியல் – பொருளியல் அறிவுடன் இருப்பதை, விவாதிப்பதை அங்கே காணமுடியும்
ஆ. கேரளத்தின் எந்தச்சிற்றூரிலும் நிலப்பிரபுத்துவ அமைப்பு இல்லை. அது முற்றாகவே அகன்று ஐம்பதாண்டுகள் கடந்துவிட்டன. ஈ.எம்.எஸ் உருவாக்கிய நிலச்சீர்திருத்தம், பின்னர் சி.அச்சுதமேனன் காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மிச்சபூமி வினியோகம் மற்றும் லட்சம்வீடு திட்டம் போன்றவை அனைவருக்கும் சற்றேனும் நிலம் என்னும் நிலையை உருவாக்கியிருக்கின்றன
இ. வெளிநாட்டுவேலைக்குச் சென்றவர்களிடமிருந்து வரும் பணம், உள்ளூரிலுள்ள சுற்றுலா மற்றும் கட்டுமானத்தொழில் போன்றவற்றால் கேரளச்சிற்றூர்களில் பெரும்பாலும் அனைவருக்குமே வாழத்தகுந்த ஊதியம் உள்ளது. கேரளத்தில் வறுமை சற்றேனும் எஞ்சியிருப்பது நகர்ப்புறச் சேரிகளிலும் மலைப்பகுதியின் பழங்குடிக் காலனிகளிலும் மட்டுமே . கேரளக்கிராமங்கள்தான் எண்பதுகளில் தமிழகத்திலிருந்து பிழைப்புதேடிச்சென்ற கிட்டத்தட்ட பதினைந்துலட்சம் தொழிலாளர்களுக்கு இடம்கொடுத்தவை. அவர்கள் இன்று கேரளக்க்குடிமக்கள். இப்போது இருபதுலட்சம்பேருக்குமேல் வங்காளிகளும் பிகாரிகளும் கேரளத்தில் உள்ளனர். [இவை அரசு சட்டச்சபையில் முன்வைத்த தோராயமான கணக்குகள்] பல தொகுதிகளில் அவர்கள் தேர்தல்வெற்றிகளையே முடிவுசெய்பவர்களாக உள்ளனர்.
ஈ. கேரளத்தின் மார்க்சிய ஆதிக்கம் உள்ல சிற்றூர்களில் இடதுசாரிக் கட்சித்தோழர்களே செல்வாக்கு செலுத்துகிறார்கள். இன்றும் அது ஒரு நல்லெண்ண அதிகாரம் மட்டுமே. அதிகார ஆதிக்கம் அல்ல. அதில் ஒரு ஜனநாயகத்தன்மை உள்ளது. அந்தச் சிற்றூரின் அனைவருக்கும் அந்த அதிகாரத்தில் குரல் உள்ளது
ஆகவே வங்கநிலைமை கேரளத்தில் நிகழாது. பினராயி விஜயனின் ஆட்சியைப் பற்றி பெரிய புகார்கள் ஏதும் அங்கில்லை. சபரிமலை விவகாரம் அங்குள்ள மக்களின் உள்ளத்தில் மெல்லிய ஒரு திசைமாற்றத்தையே செலுத்தியிருக்கிறது. பாரம்பரிய காங்கிரஸ் ஓட்டுகளில் ஒருபகுதியை அது பாரதிய ஜனதாவுக்குக் கொண்டுசென்றது. அதேசயமம் மோடி எதிர்ப்பு வாக்குகளை வாங்கி காங்கிரஸ் சமன்செய்துகொண்டது.
அங்கே காங்கிரஸ் வென்றது எதிர்பார்க்கக்கூடியதுதான். ஏனென்றால் இது மத்திய அரசைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல். இதை அறியாத ஒரு கேரள வாக்காளர்கூட இருக்க வாய்ப்பில்லை. இந்தத்தேர்தலில் காங்கிரஸ் அங்கே பெற்றது இடதுசாரி எதிர்ப்பு வாக்குகள் அல்ல. காங்கிரஸ் ஆதரவு வாக்குகள்கூட ஓரளவே. பெரும்பாலான வாக்குகள் மோடி எதிர்ப்பால் வந்தவை. அவற்றை மதரீதியான வாக்குகள் என சொல்பவர்கள் கேரளத்தின் உளநிலையை புரிந்துகொள்ளாதவர்கள்
கேரளத்தில் சென்ற ஆண்டு வந்த வெள்ள அழிவு, அதில் மத்திய அரசு காட்டிய அதிர்ச்சியூட்டும் புறக்கணிப்பு கேரளத்தில் ஆழமான உளப்புண்ணை உருவாக்கியிருக்கிறது. கேரளத்தின் கணக்கிடப்பட்ட அழிவுக்கு நூற்றில் ஒருபகுதியைக்கூட மத்திய அரசு நிவாரணமாக அளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அறிவிக்கப்பட்ட ஐநூற்றுச்சொச்சம் கோடி ரூபாயில் நிவாரணப்பணிகளுக்கான செலவையும் அப்போது அளித்த ரேஷன் தானியங்களுக்கான விலையையும் கழித்துவிட்டு மிகமிகச்சிறிய தொகையையே அளித்தது. அதாவது நடைமுறையில் ஒன்றுமே கொடுக்கவில்லை
அந்தக் கசப்பே முழுமையான காங்கிரஸ் ஆதரவாக மாறியது. இடதுசாரிகளுக்கு விழும் வாக்குகளில் ஒருபகுதி காங்கிரஸுக்குச் செல்ல வழிவகுத்தது. இந்தவெற்றி அதனால்தான்
இனி என்ன ஆகும்? வரும் சட்டச்சபைத் தேர்தலில் பினராயி விஜயனின் இடதுசாரி அரசே மீண்டும் வெல்லுமா? கேரளத்தில் ஆளும்கட்சி மீண்டும் வெல்வது மிக அரிது. ஆகவே மீண்டும் காங்கிரஸ் வெல்லலாம். அது அப்போதைய அரசியல்கூட்டுக்கள், தேர்தல்சூழல் ஆகியவற்றைச் சார்ந்தது. ஆனால் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் அணி வழக்கம்போல மிகச்சிறிய வாக்குவேறுபாட்டில்தான் முன்னாலோ பின்னாலோ இருந்துகொண்டிருக்கும். இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அங்கே இடதுசாரி ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும்
அதன்பின்னர் நீடிக்குமா? அது இடதுசாரிகள் வரும்சூழலுக்கு ஏற்ப கம்யூனிசத்தை எப்படி விளக்கிக்கொள்கிறார்கள், தலைமைதாங்கி முன்னெடுக்க எவ்வகையான தலைவர்கள் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தது. இன்றிருக்கும் இதே ஸ்டாலினிச கம்யூனிசம் இப்படியே தொடருமென நான் நினைக்கவில்லை. ஆனால் உழைக்கும்மக்களின் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட மேலும் வலுவான ஒரு கட்சியாக இடதுசாரித்தரப்பு அங்கு உருவெடுக்கக்கூடும் என நினைக்கிறேன். அவ்வாறு உருவாகவேண்டுமென விரும்புகிறேன்