2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. வரும்9-6-2019 அன்று சென்னை தக்கர்பாபா கூடத்தில் பரிசளிப்புவிழா ந்டைபெறுகிறது. இவை அவருடைய மத்தி தொகுப்பிலுள்ள கவிதைகள்
ச.துரை – நான்கு கவிதைகள்
ச.துரை ஐந்து கவிதைகள்
ச. துரை கவிதைகள்
1
சப்தங்கள் மெல்லிய
நரம்புகளால் முடிச்சிடப்பட்டவை
நரம்புகள் அறுந்து சப்தம் உடையும்போதுதான்
சப்தம் உருவாகிறது
2
கண்ணாடி என்கிறார்கள்
எனக்கு அவற்றின் பிரதிபலிக்கும் குணத்திற்கு முன்னதாகவே
உடைகிற சப்தம்தான் கேட்கிறது
3
பின்னிரவில் ஒரு இருமல் சப்தம் கேட்டது
யாரென்று கேட்டேன்
நான்தான் அமைதி என்றொரு குரல் கேட்டது
4
நண்பா
என்னை சப்தங்கள்தான் இன்றுவரை இயக்குகின்றன
இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால்
எனக்குத்தான் காதுகள் செயலிழந்து பலகாலமாயிற்றே
5
எனக்குத்தெரிந்தவளின்
துணையென்கிற சப்தம்
ஒருநாள் மாடியிலிருந்து
தவறிவிழுந்து இறந்து போயிற்று
அதன் பின்னந்தலையிலிருந்து
சிவப்புச் சப்தங்கள் வடிந்தன
நீங்கள் நினைப்பது சரிதான்
சப்தங்களுக்கு நிறமுண்டு
6
ஒரு போத்தலை திறக்கிற மாதிரித்தான்
அவன் பிறந்தான்
பின்பொருநாள் போத்தல் உடைகிற மாதிரி சிரித்தான்
யார் யாரோ அவனைப் பெருக்கி அள்ளி
குப்பையில் வீசினார்கள்
அவன்தான் பிறகொருநாள் என்னிடம்
இதைச் சொன்னான்
இந்த வாழ்வில்
சப்தமில்லாமல் புரண்டுபடுத்தல்போல்
பெரிய அவஸ்தை ஏதுமில்லை
7
என்றாவது ஒருநாள் மலை உச்சி ஏறிநின்று
அவ்வளவுதான் என்று கத்தியிருக்கிறீர்களா?
அப்படிக் கத்துவது அவ்வளவானதில்லை
என்று உணர்ந்திருக்கிறீர்களா?
நேற்று அவன் வெகு உயரமான
காற்றின்மீது ஏறிநின்று
நிலம்பார்த்து
அவ்வளவுதான் என்று உரக்கக் கத்தினான்
அத்தனை பெரிய
துயரம் ஒன்று அங்கு நிகழ்ந்தது
நிலமும் அவ்வளவுதான் நீ
என்று திருப்பிக் கத்தியது