1000 மணிநேர வாசிப்பு சவால்
வாசிப்புச் சவால் -கடிதங்கள்
வாசிப்புச் சவால் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ஜப்பானெல்லாம் சென்று வந்து உடல் நலமுடன் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் ஜப்பான் உரையை பாதி கேட்டுள்ளேன். மீதியை நாளை தொடர வேண்டும். இந்தக்கடிதம் 1000 மணி நேர வாசிப்பு சவாலில் எனது பங்கு மற்றும் நிலைமை பற்றியது.
நான் எப்பொழுதும் வாசிப்பவன். வாசித்ததை spreadhseet-ல் கணக்குப்போட்டு வைத்திருப்பவன். ஆதலால் ஒரு வருடத்திற்கு எத்தனை புத்தகங்கள் வாசிப்பேன் என்றுஎனக்கு நன்றாகவே தெரியும். மணி கணக்கில் எவ்வளவு நேரம் என்று ஒரு பொழுதும்பார்த்ததில்லை. உங்களின் தளத்தில் சுனில் கிருஷ்ணனின் அறிவிப்பு வந்ததும், நான்வருடத்திற்கு படிக்கும் புத்தகங்களின் பக்கங்களையும், நான் படிக்க எடுத்துக்கொள்ளும்நேரத்தையும் வகுத்து பார்த்தால், நான் 250 முதல் 300 மணிநேரம் வருடத்திற்கு வாசிப்பவன்என்று தெரிந்தது. ஆதலால், சவாலில் தோல்வி பெறுவேன் என்று அதி நிச்சயமாகத் தெரியும். இருந்தும் சுனிலுக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு மின்கடிதம் எழுதலாம் என்றுதள்ளிவைத்திருந்த வேலை இந்த சவாலில் பங்கு கொள்கிறேன் என்பதால் நிறைவேறியது.
நான் வாசித்தேன், என்ன வாசித்தேன் என்பதை என் மனைவி ராதா , மகன் ஜெய்ந்தரை தவிரவேறு யாருக்கும் சொல்லமுடியாதவனாக இருந்தேன்.
[மற்றவர்கள் கேட்கும் நிலைமையில்இருப்பதில்லையாதலால்) தங்களின் தளமும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் , மேலும் பலவாசக உள்ளங்களை அறிமுகம் செய்ய கடந்த மூன்று வருடங்களாக வாசித்ததை பகிரகொஞ்சம் பஞ்சம் இல்லை. இருப்பினும், யாரெல்லாம் என்ன வாசிக்கிறார்கள், எவ்வளவு நேரம்வாசிக்கிறார்கள் , ஏன் என்னால் மட்டும் வாசிக்கும் மக்களை பார்க்கமுடியவில்லை என்று ஒரே கேள்வியாக இருக்கும். சுனில் ஆரம்பித்துவைத்த சவாலின் மூலம் எண்பதுஎண்பத்தைந்து வாசக நண்பர்களை அறிந்துகொண்டேன். இதில் கலந்துகொண்டதால் வந்தமற்ற பயன்கள் என்ன?
அ) மாதத்திற்கு மூன்று புத்தகங்கள் என்பது நான்கு அல்லது ஐந்து புத்தகங்கள் என்று ஆகியுள்ளது.
ஆ) லா.சா. ரா. , கந்தர்வன் எழுதிய கதைகளின் தொகுப்பு வீட்டு அலமாரியில் எப்பொழுதும்இருக்கும். அவைகளை எடுத்து அங்கு ஒன்று இங்கு ஒன்றுமாக படிப்பேன். இப்பொழுதுஅவர்கள் எழுதிய எல்லா சிறுகதைகளையும் வாசித்தவன் என்று ஆகிவிட்டேன்.
இ) அமெரிக்காவின் பொருளாதாரத்தையம் பங்கு சந்தையையும் வாசித்தேதான் ஓரளவுபுரிந்துகொண்டேன். ஆனாலும், வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டு அதில் வரும்வருமானத்தை எப்படி சரியாக கணக்கு பார்ப்பது, குறைவாக வருமான வரி கட்டுவது எப்படிஎன்று சொல்லிக்கொடுக்கும் சில புத்தகங்களை வாங்கிவைத்து படிக்காமல் இருந்தேன். இப்பொழுது அதை படித்து எனது கணக்கு வழக்கு போடும் விதத்தை மாற்றிஅமைத்துக்கொண்டேன்.
இழந்தது அல்லது மாறியது என்ன ?
சுனில், இணையத்தில் வாசிப்பதை கணக்கில் கொள்ளமுடியாது என்று சொல்லிவிட்டார். தங்கள் தளத்தில் வாசிப்பதை அவர் அப்படி சொல்லமாட்டார் என்று தெரிந்தாலும், உங்கள்பக்கத்தை வாசிக்கும் நேரத்தை கணக்கில் சேர்த்துக்கொள்ளுவதில்லை.
முடிப்பதற்கு முன் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அதை அருண்மொழி நங்கை அவர்களிடம்சொல்லிவிடவும். அவர் என்னமோ சுரேஷ் நிறைய படிக்கிறார், போஸ்ட் ஆஃபிஸில் வேலையேஇல்லையா என்று ஆதங்கப்படுவதாக சொல்லியிருந்தீர்கள். ராதா, தினமும் செக் செய்வதுஅருண்மொழி எவ்வளவு படித்திருக்கிறார்கள் என்றுதான். நீங்கள் ஜப்பான் போனதும் போதும். அந்த சமயத்தை பயன்படுத்தி, ராதா அவரை மிஞ்சிவிட்டார்.
அன்புடன்,
வ. சௌந்தரராஜன்
ஆஸ்டின்
***
அன்புள்ள சௌந்தரராஜன்
இந்த வாசிப்புச் சவால் ஓர் அழகான நிகழ்வு என எனக்குப் படுகிறது. ஏனென்றால் இப்படி ஒரு சவாலை நமக்குநாமே விடுத்துக்கொள்ளாவிட்டால் நாம் இன்றைய சூழலில் வாசிக்க மாட்டோம். ‘இயல்பாக’ வாசிக்கவேண்டும் என சிலர் சொல்லலாம். ஆனால் அவ்வாறு எதுவுமே ‘இயல்பாக’ நிகழ்வதில்லை. தீவிரமானவை எல்லாமே நோன்புகளாகக் கடைக்கொள்ளப்படவேண்டியவை. எழுதுவது வாசிப்பது மட்டும் அல்ல சிந்திப்பதுகூட. அதற்கென முடிவுகொள்ளவேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கவேண்டும். அதற்கான தடைகளைக் கண்டடைந்து நீக்கவேண்டும். அதன்மூலம் அடையும் பயிற்சியை ஒருங்கமைத்துக் கொள்ளவேண்டும்
என் வாழ்க்கைமுழுக்க எனக்கென நோன்புகளை நானே விதித்துக்கொண்டிருக்கிறேன். அவற்றை பெரும்பாலும் நிறைவேற்றியுமிருக்கிறேன். வெண்முரசு அதில் இறுதியானது. எண்பத்திநான்கில் நான் மலையாள விமர்சகர் கே.பி.அப்பன் மலையாளத்தின் நல்லநாவல்களின் பட்டியல் ஒன்றைப் போட்டிருப்பதைக் கண்டேன். அத்தனை நாவல்களையும் ஓராண்டில் வாசிப்பது என நோன்புகொண்டேன். அவ்வாண்டு இறுதிக்குள் நூறு நாவல்களை வாசித்திருந்தேன். ஒரேநாளில் இரண்டு நாவல்கள் வாசித்ததுகூட உண்டு.
1987 ல் ஓராண்டில் முதன்மையான ருஷ்ய இலக்கியங்கள் அனைத்தையும் வாசிப்பது என முடிவெடுத்தேன். பலநூல்களை வாங்கினேன். பலவற்றை நூலகத்தில் எடுத்தேன். அவ்வாண்டு தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், துர்கனேவ், கார்க்கி, அலெக்ஸி தல்ஸ்தோய், குப்ரின், நிகாலைகோகால் என முதன்மையான எல்லா படைப்பாளிகளையும் வாசித்து முடித்தேன்.
அன்று நான் குடியிருந்தது காசர்கோட்டிலிருந்து கும்பளா செல்லும் சாலையில் கடலோரமாக ஒரு பழைய முஸ்லீம் வீட்டில். தன்னந்தனியாக. நாளில் பன்னிரண்டு மணிநேரம்கூட வாசிப்பதுண்டு. வேலை மாலை நான்கரை முதல் மறுநாள் காலை ஆறுமணிவரை. இரண்டு ஷிப்ட் அதில் முடியும். மாலை ஏழுக்கெல்லாம் வாசிக்க ஆரம்பிக்கலாம். [அலாரம் வைத்துவிட்டு வாசிக்க அனுமதி உண்டு. எவரேனும் அழைத்தால் மணி அடிக்கும்.] பன்னிரண்டுக்கு படுப்பேன். காலை ஐந்து மணிக்கு எழுந்தால் சற்று வேலை இருக்கும். எட்டுமணிக்கெல்லாம் வீடு. ஒரு தூக்கம் போட்டு பதினொரு மணிக்கு எழுந்தால் அன்று இரவு பன்னிரண்டு மணிவரை. மறுநாள் காலை ஆறுமுதல் மாலை நான்குமணிவரை.
அன்று வாசித்ததுபோல் என்றும் வாசித்ததில்லை. அது உருவாக்கிய அடித்தளமே இன்றும் நீடிக்கிறது. எழுத்தாளனாக விமர்சகனாக. மெல்ல மெல்ல வாசித்தால் அந்த அடித்தளத்தை உருவாக்கிக்கொள்ள பல ஆண்டுகளாகியிருக்கும். நான் இலக்கிய உலகில் நுழைந்தபோதே பெருமளவு வாசித்தவனாக, அதற்கான தன்னம்பிக்கை கொண்டவனாக இருந்தேன். சிந்திப்பதற்கான மூலப்பொருட்கள் என்னுள் இருந்தன. ஆகவேதான் சிந்திப்பதற்கான பயிற்சியை அளிக்கும் ஆசிரியர்களைக் கண்டடைய முடிந்தது. அவர்களிடமிருந்து தாழ்வுணர்ச்சி இல்லாமல் கற்க முடிந்தது.
மெல்லமெல்ல ,கொஞ்சமாக வாசிப்பவர்களின் சிக்கல் என்னவென்றால் ஓரிரு நூல்களில் அவர்கள் நின்றுவிடுவார்கள். சில நூல்களால் அடித்துச்செல்லப்படுவார்கள். போதுமான வாசிப்பு இல்லாமலேயே முடிவுகளுக்கு வந்துவிட்டு அம்முடிவுகளுக்கேற்ப அதன்பின்னர் வாசிக்க ஆரம்பிப்பார்கள். இலக்கியம் தத்துவம் வரலாறு ஆகியவற்றில் அடித்தளவாசிப்பு மிகமிக இன்றியமையாதது. அவை முழுக்கமுழுக்க உள்ளத்தில் இருக்கவேண்டும். சிந்திப்பதென்பது அவ்வாறு நம்முள் இருப்பவற்றை வேறுவேறு வகையில் அடுக்கிக்கொள்வதும் முடிவுகளைச் சென்றடைவதும்தான்.
அத்தனைவிரைவாக வாசித்தால் நினைவில் நிற்குமா என்று கேட்பவர்கள் உண்டு. அவர்கள் வாசிப்பை அறியாதவர்கள். வாசிப்புக்கு நம் உள்ளம் கூர்ந்திருப்பதே முக்கியமான தேவை. நாம் விட்டுவிட்டு வாசிப்பது, அவ்வப்போது வாசிப்பது, வேலைகள் நடுவே வாசிப்பது எல்லாமே உள்ளம் கூராத வாசிப்புகள். வேறு உலகமே இல்லாமல் நூலில் மூழ்கிக்கிடந்து வாசிப்பதே முழுமையாக நம்மை அளிக்கும் வாசிப்பு. அவை நம்மைவிட்டு விலகுவதில்லை. நாம் அந்நூல்களை ‘அறிவதில்லை’ அவை காட்டும் வாழ்க்கைக்குள் நுழைந்து வாழ்கிறோம். ஆகவே அவை மறப்பதில்லை. அவை நம்முள் உருமாறியிருக்கும். நம்முடையவையாகியிருக்கும். நம் சிந்தனைகளாகவும் வெளிப்படக்கூடும். அவை நம்மை வடிவமைத்திருக்கும்
இத்தகைய அறைகூவல்களை விட்டுக்கொள்வது நம் எல்லை என்ன, நம் சாத்தியங்கள் என்னென்ன என்பதைக் காட்ட உதவுவது. பலசமயம் நம்மால் நிறைய வாசிக்கமுடியும் என்பதை நாமே ஆச்சரியத்துடன் கண்டடைவோம். இவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பது மேலும் ஊக்கமூட்டுவது. ஒரு குருகுலத்தின் மாணவர்கள் சேர்ந்து கற்பதுபோலத்தான் இதுவும். இன்று குருகுலங்கள் இணையத்தால் கட்டமைக்கப்படுகின்றன என்று கொள்ளலாம்
ஜெ
பிகு: அருண்மொழி ஜப்பான் சென்றுவந்த சூட்டோடு சிங்கப்பூர் சென்றிருக்கிறாள். பிள்ளைகளுடன். 5 ஆம் தேதி திரும்பி வருவாள். வந்ததும் வெறிகொண்டு வாசிக்கப்போவதாகச் சொல்லி புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறாள்.