2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெறும் ச.துரையின் மத்தி தொகுப்பிலிருந்து சில கவிதைகள். விருதுவிழா 9-5-2019 அன்று மாலை தக்கர்பாபா வித்யாலயா, தி நகர், வினோபா அரங்கில் நிகழ்கிறது
உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
கரையில் அமர்ந்திருப்பவன்
பேசவேயில்லை
அலைகளைப் பார்க்கிறான்
அலைகள் குரைக்கின்றன
உனக்குப் பயமில்லையா
குரைக்கும் அலைகள் எதைத்தான்
கேட்கின்றன?
அவன் எதுவும் பேசவில்லை
சற்றே எழுந்துபோய் தடவிக்கொடுக்கிறான்
அவை எக்கி எக்கி இடுப்புக்குமேல் வரை
நக்கிக்கொடுக்கின்றன
*
வெள்ளரிப்பிஞ்சுகளைப் பயிரிடும் ஒருத்தி இறந்துபோனாள்
நானொரு பச்சைப்பாம்பைப்போல
அவளில்லாத நிலத்தை
சுற்றித்திரிகிறேன்
எனக்குக் கண்களின் மீது பிரியம்
அதிகமென்றார்கள்
என் உடல் பயிரிடப்பட்ட வெள்ளரிக்
கிளைகளை ஒத்தது என்கிறார்கள்
என்னை ரப்பர் மேனி என்கிறார்கள்
எனக்கு அதெல்லாம் தெரியாது
நான் தற்போது பச்சைப்பாம்பு
நீங்கள் எளிதாக அடித்துவிளையாடலாம்
அவ்வளவுதான்
*
ஒரு காலத்திற்குப் பிறகு
சார்லஸ் மீண்டும் உயிர்த்தெழுந்தார்
நிலவுகளில் மீன்பிடிக்கப்போகாதே
நல்ல பாடு வராதென்று இயல்பான
தமிழில் பேசினார்
வாலை மீன்களுக்கு வீசுகிற
தூண்டில்களில் இரைகளை இணைக்கையில்
கர்த்தரையும் தூக்கி கடலில் வீசுவார்
இரையோடு சேர்ந்து கர்த்தரைக் கடிக்கிற
மீன்களை தூண்டில்வெட்டி இழுத்து
படகின் உட்புறத்தொட்டிக்குள் நீந்தவிடுவார்
இரையின் சுவை பறிபோன வாலைமீன்கள்
கர்த்தரைச் சுவைத்தபடியே படகுக்குள்
கட்லாக்களுக்கு இரையாகும்வரை
நீந்திக்கொண்டிருக்கும்
சார்லஸ் உயிர்த்தெழுந்த
இந்த ஆறுமணிநேரத்தில் நான்கு
வாலைமீன்களைப் பிடித்திருக்கிறார்
இருபத்தியொருமுறை கர்த்தரை
கடலில் வீசியிருக்கிறார்
*
நள்ளிரவில் எல்லோரும் தனித்துப்போனதும்
அவளுக்கு யாரிடமாவது
சண்டையிடவேண்டும் போலிருந்தது
யாருமே இல்லாத வீட்டில் ஆட்களைத்தேடி
கூச்சலிட்டுக் களைத்துப்போனவள்
முடிவாக அவளிடமே
சண்டையிட முடிவெடுக்கிறாள்
அதைச் சுவாரசியமான முடிவாக எண்ணிவிட்டாள்
பாத்திரங்கள்
மீன்தொட்டி
நாற்காலி என அனைத்தையும் வீசி
அடக்கிப்பார்த்தாள்
அவளுக்கு அவள் அடங்கவேயில்லை
இடதுபக்க அலமாரியில் உபயோகிக்கப்படாத
கத்தியொன்றை எடுத்து
அவளைப்பார்த்து சிரித்தாள்
அவளும் சிரித்தாள்
இப்போது என்ன செய்வாள்”?