ஒன்பதாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான சார்ங்கர் தன் கையிலிருந்த பித்தளைக் கம்பியை வளைத்துச் செய்ததுபோன்ற சிறிய இசைக்கலனை உதடுகளுடன் பொருத்தி, நாவாலும் உதடாலும் அதை மீட்டி, சிறு தவளைகள் போலவும் வண்டுகள் சேர்ந்து விம்மலோசை எழுப்புவது போலவும் அதை இசைத்து, போர்க்களத்தின் காட்சியை விரித்துரைக்கலானார். பிற சூதர்கள் அவருடன் இணைந்துகொண்டனர். அங்கு குருக்ஷேத்ரத்தின் பதினேழாவது நாள் போர்க்களம் மீண்டும் நிகழ்வதுபோல் தொட்டுவிரிந்து அகன்று அலைகொள்ளும் காட்சிகளென விரிந்தது. அவர்களின் சொற்களின் நடுவே பந்தங்களின் ஒளியில் உடலெங்கும் அணிச்சுடர்கள் நிறைந்திருக்க கர்ணன் கிடந்தான். பனியில் அணிகளின் ஒளி சற்று நனைந்திருப்பதுபோல் தோன்றியது. அங்கே ஒலித்த பாடலின் சொற்கள் அக்குளிரில் நடுக்கு கொண்டவை போலிருந்தன.
சூதரே, மாகதரே, கேளுங்கள். நான் குருக்ஷேத்ரப் பெருங்களத்தை பார்க்கிறேன். அங்கு முட்டி மோதும் உடல்களும் படைக்கலங்களும் ஒற்றை விசையொன்றின் பல்லாயிரம் நெளிவுகளெனத் தோன்றுகின்றன. விசைகொண்டோடும் நாகம் போலவோ, தன்னில் தான் களித்து துள்ளிக் குதித்து சுழன்றாடும் குட்டிப்புரவி போலவோ, ஒற்றை உடலே எங்கும் நின்று கொந்தளித்துக் கொண்டிருந்தது. மேலிருந்து நோக்குகையில் படைக்கலங்களின் மின்களால் நிறைந்திருந்தது அது. கீழிருந்து நோக்குகையில் உதிர்ந்த உடல்களுக்குமேல் தாவிச்செல்லும் கால்களால் மூடியிருந்தது. அனலெழுந்து பெய்துகொண்டிருந்த அக்களத்தின் மீது முகில்பிளந்த ஒளி பெய்துகொண்டிருந்தது.
அன்றைய போர் ஐந்தனல்களின் போர் என்று அறிந்தேன். நான் அக்களத்தில் எரி எழுந்த காட்டின் பெருந்தழல்கள் என அசைந்த செங்கொப்பளிப்பையே கண்டேன். இரண்டாவது அனலோனாகிய வஹ்னி கர்ணனின் அம்புகளில் ஏறிப்பாய்ந்தான். மண்ணிலறைந்து வெடித்தெழுந்தான். தேர்களை அள்ளிப்பற்றி கொழுந்தாடினான். யானை உடல்களைச் சுட்டு அவற்றை அலறி சரியச்செய்தான். படைக்கலங்கள் கூட அனல் துண்டுகளென கனல் கொண்டன. அர்ஜுனனும் கர்ணனும் எதிரெதிர் நின்று தழலம்புகளால் போராடினர். ஒருகணம் பிந்தவில்லை, ஒருகணம் முந்தவும் இல்லை. அவர்களின் அம்புகளால் இரு படைகளின் பொருதுமுனை செவ்வனல் ஒழுகும் ஆறு எனத் தெரிகிறது. செங்குருதி தோய்ந்த வாளின் வளைந்த முனை. இரு படைகளும் இரும்புத்தகடுகளென உரசிக்கொண்டு அனலெழுப்புகின்றனவா?
சூதரே, இங்கிருந்து பார்க்கையில் இரு படைகளும் விட்டில்கள்போல் அவ்வனல்பரப்பை நோக்கி வந்து பெருந்திரளென விழுந்து பொசுங்கிக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. இன்றுடன் முற்றாக அழிந்துவிட விரும்புபவைபோல. சிறகுகொண்டதே அனலுக்கு உணவாவதற்கு என்பதுபோல. போர் தொடங்கிய இச்சிறுபொழுதுக்குள்ளேயே பெரும்பகுதியினர் எரிந்தழிந்துவிட்டிருக்கின்றனர். இருபுறமும் முகப்புப்படையிலிருந்து எவரும் பின்னடையவில்லை. முன்னுந்தி எழுவதற்குப் பின்னால் படைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. இரு படைகளுக்கும் பின்பகுதி சிதறுண்டு அலைக்கழியும் படைவீரர்களும் தேர்களும் உதிரி வண்டிகளும் நிறைந்ததாக தெரிகிறது. இதோ எரியம்பு விழுந்து சாலையென அமைக்கப்பட்ட பலகைகள் பற்றிக்கொள்கின்றன. நெருப்பு அவற்றினூடாக ஓடை நீர் என வழிந்தோடி பின்பகுதியை அடைகிறது. எழுந்து மிகத் தொலைவில் சென்றுவிழுந்த எரியம்புகளால் கூடாரங்கள் பற்றிக்கொள்கின்றன. வைக்கோற்போர்களும் அன்னக்களஞ்சியங்களும்கூட அனல்கொண்டுவிட்டன. இரு படைகளும் இப்போது எல்லாப்புறமும் எரியால் சூழப்பட்டிருக்கின்றன. எரி நடுவே நின்று கொந்தளிக்கின்றது மானுட உடற்பெருக்கு.
கர்ணனின் அம்புகளிலிருந்து எழுந்த அனல் நுண்ணுருக்கொண்டு அங்கே எழுந்த பெருந்தவளை ஒன்றின் நீள்நாக்கு என பாய்ந்தும் மாறிமாறிச் சுழன்றும் படைகளை நக்கி உண்டது. இன்றுடன் போரிடுவதற்கு இரு தரப்பிலும் எவரும் எஞ்சப்போவதில்லை என்ற எண்ணத்தை போரிட்டுக்கொண்டிருந்த படைத்தலைவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தனர். திரும்பித்திரும்பி நோக்கி உளமழிந்தனர். போர்க்களத்தில் எரி ஏன் தடுக்கப்பட்டிருந்தது என அறிந்தனர். எரியை எழுப்புவது வரைதான் அது மானுடக் கைகளுக்குரியது. எழுந்த பின் எரி தன் வழியை தானே கண்டுகொள்கிறது. தன் இலக்கை வெறிகொண்டு சென்றடைகிறது. இப்புவியில் தானன்றி வேறேதும் எஞ்சலாகாது என எண்ணுகின்றதா அது? தானுண்ணும் அன்னம் அழிந்து தானும் அழிந்து வெறுமையை உருவாக்கிச் செல்ல ஆணையிடப்பட்டுள்ளதா? பேரழகு கொண்டது அனல். அழிவின் பேரழகு. மின்னி மின்னி அணையும் மாபெரும் மலர்வுகளை பார்க்கிறேன். வெண்வெடிப்பு மஞ்சள் இதழ்களென்றாகி சிவந்து நுனிகருகி நீலம்கொண்டு விரிந்தமைய மையத்தில் மீண்டும் எழுகிறது இருள். இவ்வொளி எங்கிருந்தோ இருளை உறிஞ்சி இங்கே துப்பிக்கொண்டிருக்கிறது.
வெந்து கருகி குவிந்த உடல்களுக்கு மேல் எழுந்து சென்றன தேர்கள். அலைகளிலென தடுமாறின. நிலையழிந்து ஒன்றுடன் ஒன்று முட்டிமோதின. கருகிய கொடிகளைக் கொண்டு எவர் எவரென அறிய இயலவில்லை. ஆணையிடும் கொடிகளும் கருகியணைந்தன. வெடிப்பொலியில் முரசொலிகள் மறைந்தன. ஒளிக்குறிகள் அனுப்ப இயலவில்லை. ஆணையிடும் கைகளை நோக்க இயலாது புகை திரையிட்டது. சகுனியின் ஆணை “எரியெழுகையை ஒழிக… எரியெழும் இடத்தை உய்த்து விலகிக்கொள்க!” என முழங்கிக்கொண்டிருந்தது. அதன் ஊடே புகுந்த வெடிப்போசைகள் அவற்றை சொற்திரிபு செய்தன. “எரிக்கு உணவாகுக! எரியே ஆகுக! எரிக்கு அடிபணிக!” என அச்சொற்கள் முழங்குவதுபோலக் கேட்டு சில படைவீரர்கள் திகைத்தனர். “எரிமலர் சூடுக… எரியால் மூடுக!” என முரசுகள் முழக்கமிட்டன. ஒவ்வொருவரும் அத்தருணத்தில் புகையால் முழுமையாக போர்த்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களின் செவிகள் கூர்கொண்டன. கேட்காமலேயே சொல்லுணரும் திறன் கொண்டன. அந்தப் படை அனைத்துவகை தொடர்புறுத்தல்களையும் இழந்து அகங்களை ஆளும் அச்சம், வெறி எனும் உணர்வுகளாலேயே ஒன்றென நிறுத்தப்பட்டது.
சகதேவன் தன் தேரை நோக்கி ஒடுவதைக்கண்ட சல்யர் கைநீட்டி அமரத்திலிருந்து எழுந்து கூச்சலிட்டார் “விடாதே! அவனை கொல்! கொல்! கொல் அவனை!” கர்ணனை நோக்கி முற்றிலும் திரும்பி “என்ன செய்கிறாய்? எங்கே திரும்புகிறாய்? இதுவே தருணம்! கொல்” என்று கூவினார். கர்ணன் இடது பக்கம் தேர் திரும்பும்பொருட்டு கைகாட்டினான். சல்யர் திகைப்புற்று “என்ன செய்கிறாய்? அவன் இக்களத்தில் உன் எதிரி. களத்தில் மறமொன்றே நெறி. அளியும் கொடையும் அங்கு பழி சேர்ப்பது. துறப்பது இளிவரலாவது. அறிவிலி! கொல் அவனை!” என்றார். வாயோரம் நுரையெழ “இப்போதே கொல்… ஓர் அம்பு போதும்… கொல் அவனை!” என்றார்.
கர்ணன் அச்சொற்களை செவிகொள்ளவில்லை. சல்யர் “கொல் அவனை! கொல்! அறிவிலி!” என்று வெறிகொண்டவராக கூவிக்கொண்டிருந்தார். கர்ணனின் கையசைவுக்கு ஏற்ப அவனைச் சூழ்ந்து வந்த படைகள் அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு அரைவட்டமெனத் திரும்பியமையால் சல்யராலும் தன் தேரை திருப்பாமலிக்க இயலவில்லை. எழுகதிர் வடிவமென அமைந்த சூழ்கை சற்றே வளைந்து பாஞ்சாலர்களின் வில்லவர்ப் பெருக்கை எதிர்கொண்டது. கர்ணன் காலில் கட்டை விரலாலும் நுனி விரலாலும் பற்றிய விஜயத்தின் நுனியை அசைவிலாது தேரில் நிறுத்தி செவி வரை நாணிழுத்து ஒன்றின் சீற்றத்தை ஒன்று ஏற்க, ஒன்றின் காற்றசைவை இன்னொன்று பெற, தன் அம்புகளை தொடுத்தான். அனலேந்திய அம்புகள் சூல்கொண்ட நாகமென பருத்திருந்தன. அவை வில்விட்டு மேலேறுகையில் விம்மலோசை எழுந்தது. அனல்சூல் கொண்ட அம்பு விண்ணில் சீறியதுமே சிறியதோர் அம்பு மேலும் விசையுடன் தொடர்ந்து சென்று அதை அறைந்தது. அனல்கருவைச் சூடிய முதல் அம்பு வெடித்து விழிஇருளச் செய்யும் மின்னொளியை வானில் நிறைத்து வெங்காற்று வளையங்களை உருவாக்கி அனல் அலையலையெனப் பெருகியது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான அனல்துகள்கள் வீசுவலையென குடைவிரிந்து வளைந்து இறங்கின.
சல்யர் ஒரு கையால் கடிவாளத்தைப் பற்றியபடி திரும்பி நோக்கி பற்களை இறுகக் கடித்து “நீ அவனை தப்பவிட்டாய்… நீ அவனை வேண்டுமென்றே தப்பவிட்டாய்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். “அவனுக்கு உயிர் அளிப்பதற்கு நீ யார்? போர்க்களத்தில் உயிர்க்கொடை அளிக்கும் உரிமை அப்போரை அறைகூவி முன்னெடுத்த அரசனுக்கு மட்டுமே உண்டு. பிற எவருக்கும் தங்கள் உயிர்மீதே உரிமை இல்லை என்பதை அறியாதவனா நீ?” என்று சல்யர் கூவினார். “சகதேவன் என் மருகன். என் தங்கையின் வயிற்றில் எழுந்தவன். என் தோள்களில் வளர்ந்தவன். ஆனால் இக்களத்தில் அவனை என் எதிரி என்றே கொள்கிறேன். அவனை கொல்லவேண்டும் என உன்னை தூண்டுகிறேன். ஏனென்றால் நான் போர்நெறிகளை அறிந்தவன். போர்முனையில் தனிநோக்கங்களும் தனிவிழைவுகளும் பழி என அறிந்தவன்.”
பின்னர் அவர் மூச்சிளைப்புடன் தளர்ந்தார். அமரத்தில் அமர்ந்துகொண்டு இரு வளைவாடிகளில் தோன்றி அவனிடம் சொன்னார். “இப்போரில் அவனை நீ கொன்றிருந்தால் பாண்டவர்களின் உளஉறுதி இன்றே அவிந்திருக்கும். இக்கணம் வரை அவர்கள் தளராமல் நின்று பொருதுவதற்கு ஒன்றே அடிப்படை என்று கொள்க! அவர்கள் ஐவரில் எவரும் இன்னும் உயிர் துறக்கவில்லை. அவர்களில் எவர் ஒழிந்தாலும் பிறர் உயிர் வாழ எண்ணமாட்டார்கள் என்பது உறுதி. இன்னும் பிந்தவில்லை, இன்னும் வாய்ப்புள்ளது. செல்க, அவன் தன் தேரில் ஏறிக்கொண்டிருக்கிறான். விழுந்த பிணங்களின் மேல் அவன் தேர் அலைமோதிக்கொண்டிருக்கிறது. அவனை இப்போதுகூட உன்னால் நீளம்பால் அறைய முடியும். எரியம்புகளால் அவனை தொடரமுடியும். சற்று விசை கூடினால் முன் சென்று அவனை மறித்துவிடவும் கூடும்.”
கர்ணன் அவர் சொற்களை கேளாதவன்போல் தன் எதிரில் எழுந்துவந்த படைகளை நோக்கி அம்புகளை செலுத்திக்கொண்டிருந்தான். சல்யர் “என்னை சிறுமைசெய்கிறாய். என் சொற்களை விலக்குகிறாய்!” என்று கூச்சலிட்டுக்கொண்டே முழுப் படையும் செல்லும் திசைக்கே தேரை செலுத்தினார். “இதன்பொருட்டு வருந்துவாய்… அவன் உன்னை பழித்துவிட்டுச் செல்கிறான். அவனை நீ உயிர்தப்பவிட்டாய் என்பதை நீ மட்டுமே அறிவாய்.” கர்ணன் அவருக்கு மறுமொழி சொல்லவில்லை. “வெல்க… இன்று வெல்வதனூடாக நீ இழந்த அனைத்தையும் அடைவாய்! பாரதவர்ஷத்தின் மாமன்னனுக்கு மும்முடி சூட்டியவன் நீ என்றாவாய். குலமும் புகழும் தேடி வரும்… இதுவே இறுதி வெற்றி. இவ்வெற்றிக்கென்றே நீ இதுவரை தோற்றாய்…” கர்ணனை அவருடைய சொற்கள் சென்றடைவதாகத் தெரியவில்லை. இரு தூண்களின் ஆடிவளைவுகளில் மாறிமாறித் தோன்றி அவர் கூவினார். “வெல்க! வெல்க!”
எழுசுடர்ச் சூழ்கையிலிருந்து ஏழு நேர்கதிர்களாக எழுந்த கௌரவ வில்லவர்படை காளையின் உடலை தாக்கியது. அதை ஏழு பிரிவுகளாகப் பிரிந்து ஊடுருவியது. ஏழு நாகங்களாக மாறி பாண்டவப் படையை துண்டுகளாக்கியது. அதன் கிளைகள் விரியும் தோறும் மீண்டும் தங்களை ஒருங்கிணைத்துக்கொள்ளும் பொருட்டு பாண்டவப் படை பின்நகரலாயிற்று. “அவர்களை பின்னடைய விடலாகாது. பின்னடைந்து ஒருங்கிணைந்தால் மீண்டும் ஒற்றைக்காளை உருவென ஆவார்கள். அவர்களை துண்டுபடுத்தும்பொருட்டு நாம் ஏழு சரடுகளாக மாறியிருக்கிறோம். அவர்கள் பின்னடைந்தால் அவர்கள் ஒன்றாவார்கள். நாம் பல துண்டுகளாக அவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். முன்னகர்க! முன்னகர்க!” என்று சல்யர் கூவினார்.
கர்ணனின் அம்புகளுக்கு ஏற்ப, அவன் எண்ணுவதற்கு ஒருகணம் முன்னரே சல்யரின் கடிவாளங்களால் இயக்கப்பட்ட புரவிகள் தேரைத் திருப்பின. “உன்னை எதிர்கொள்ளும் படைகளை முற்றாக அழி. ஒருவர்கூட எஞ்சியிருக்கலாகாது. நமது இரு சரடுகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட படை முற்றழிந்தால் இரு சரடுகளும் ஒன்றிணைந்து மேலும் விசை கொள்ள முடியும்” என்றார். கர்ணன் “ஆம். ஒருவர் கூட எஞ்சமாட்டார்கள். ஐயம் வேண்டாம்” என்றபடி அம்புகளை தொடுத்தான். இரு கதிர்ச்சரடுகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட பாண்டவப் படை நொறுங்கியது. அதன் முகப்புமுனையில் கர்ணனின் எரியம்புகள் அறைந்து அனலெழுப்பின. பின்வாங்க முடியாமல் பின்பக்கம் கௌரவப் படைச் சரடு மறித்தது. அதற்கப்பாலிருந்த பகுதியில் இருந்து சகதேவனும் மறுபக்கம் நகுலனும் அச்சரடுகளை தாக்கினர். அதை உடைத்து இடைவெளியை உருவாக்கி பாண்டவப் படையை பின்னடையச் செய்ய முயன்றனர். கர்ணனின் அனலம்புகளிலிருந்து பாண்டவப் படை பின்னடைந்தது. “அதோ மீண்டும் அவர்கள் வந்திருக்கிறார்கள். இச்சரடுகள் உருவாக்கிய வழியினூடாகச் சென்று அவர்களை கொல். இக்கணமே அவர்களை கொல்” என்று சல்யர் கூவினார். கர்ணன் ஆணையிடுவதற்குள்ளாகவே தன் புரவிகளை சவுக்கால் சொடுக்கி விசைகொள்ளச் செய்தார். “அவர்களில் ஒருவர் இப்போது வீழ்ந்தாலும் வெற்றி தொடங்கிவிட்டதென்றே பொருள். அறிக, அவர்களில் ஒருவராவது வீழ்வதுவரை எவரைக் கொன்றாலும் அவர்கள் தோற்பதில்லை!”
கர்ணனால் கொல்லப்பட்ட உடல்கள் இடைவெளியின்றி விழுந்து பரவி உருவான களவெளியினூடாக சல்யரின் தேர் சென்றது. உளைச்சேற்றில் என சகடங்கள் புதைந்து தேர் அசைந்தாடியது. கர்ணன் இரு கால்களும் தேர்த்தட்டில் உருக்கி ஒட்டப்பட்டவைபோல நின்று உடலில் சற்றும் உலைவில்லாது விஜயத்தை இயக்கி பாண்டவப் படையை அழித்தபடி முன்னால் சென்றான். அனல் நீரென மாறி பெருகி நின்றிருந்தது களத்தில். மழைத்திரையென எழுந்து உலைந்தாடியது. வலுவுடன் வீசி புகைத்திரையை அள்ளி அகற்றிய காற்றுக்குப் பின் ஒருகணம் மிக அருகே நகுலனை கர்ணன் கண்டான். “அதோ! அதோ!” என்று கூவியபடி சல்யர் எழுந்தார். “அதோ அவன்! அவனை கொல்! இக்கணமே கொல்!” என்று வீறிட்டார். புகைத்திரைக்குள் கர்ணனைக் கண்டுவிட்ட நகுலன் தன் படைகள் பின்னடைய சங்கொலி எழுப்பியபடி தான் அம்புகளை ஏவியபடி முன்னெழுந்து வந்தான்.
அர்ஜுனன் நகுலனையும் சகதேவனையும் காக்கும்பொருட்டு சங்கொலியுடன் எழுந்துவர அவனை கிருதவர்மனின் தலைமையிலான கௌரவப் படையின் கதிர் தடுத்தது. அவர்கள் போரில் தொடுத்துக்கொண்டு நிகராற்றலுடன் களம்நின்றனர். மறுமுனையில் நகுலனையும் சகதேவனையும் காக்கும்பொருட்டு பீமன் எழுந்துவர அஸ்வத்தாமனின் படைக்கதிர் அவனை தடுத்தது. இரு சுவர்களால் அவர்கள் பிரிக்கப்பட்டுவிட நகுலனும் சகதேவனும் தங்கள் படையுடன் கர்ணன் முன் நின்றனர். நகுலன் சற்றும் அஞ்சாமல் அம்புகளைத் தொடுத்தபடி அவனை எதிர்கொண்டான். கர்ணனின் எரியம்புகளை விண்ணிலேயே தடுத்து உடைத்து எரிமழையாக வீழ்த்தினான்.
சல்யர் அமரத்தில் இருந்து கொந்தளித்தார். “அனலம்பை எடு! அவனை தேருடன் தூக்கி வீசு! இக்கணமே அவர்களில் ஒருவன் கொல்லப்பட்டாக வேண்டும். அவர்கள் உயிருடன் மீண்டால் உன்னை வென்றுவிட்டதாகவே பொருள்… இருவரையும் கொல். அன்றி ஒருவரையாவது கொல்!” என்று சல்யர் கூச்சலிட்டார். “அவர்களில் ஒருவனைக் கொல்வது இன்னொருவனையும் கொல்வதற்கு நிகர். அவர்கள் ஈருடல்கொண்ட ஒருவர்… கொல்!” கர்ணனின் அம்புகள் சென்று அறைந்து வெடிக்க நிலம் அதிர்ந்தது. நகுலனின் தேருக்கடியில் சென்று வெடித்த அம்பு அவனை தேர்த்தட்டிலிருந்து தூக்கி வீசியது. புரவிகள் உடல் உடைந்து நாற்புறமும் தெறிக்க புழுதி எழுந்து மழையென விழுந்தது. அவன் படைக்களத்தில் தெறித்து விழ அவன் மேல் விண்ணிலிருந்து எரிபற்றிக்கொண்ட தேர்ச் சிம்புகள் விழுந்தன. உடல் முழுக்க செம்புழுதியும் குருதியும் படிந்திருக்க நிலத்தில் புரண்டெழுந்து அவன் சகதேவனை நோக்கி ஓடினான்.
“கொல் அவனை! இக்கணமே கொல்!” என்று சல்யர் கூவினார். ஆனால் தன் படைப்பிரிவை வலப்பக்கம் திரும்புவதற்கு கர்ணன் ஆணையிட்டான். சகதேவன் தன் தேரை முன்னால் கொண்டு வந்து நகுலனை அதில் ஏற்றிக்கொண்டு திரும்பி பின்னடைவதை சல்யர் கண்டார். சவுக்கை ஓங்கி தேர்த்தட்டில் வீசிவிட்டு எழுந்து திரும்பி கர்ணனை நோக்கி “யார் நீ? சொல்! யார் நீ? எதன்பொருட்டு இங்கே வந்தாய்? யாருக்காக போர்புரிகிறாய்?” என தொண்டை புடைக்க கூவினார். “உன்னை தன் உயிர்த்தோழன் என்று எண்ணியிருக்கும் அஸ்தினபுரியின் அரசருக்கு வஞ்சம் செய்கிறாய். இழிமகனே, உன்னை தோள்சேர்த்தணைத்து அவர் விடைகொடுத்து இன்னும் இருநாழிகைகூட ஆகவில்லை. அதற்குள் அவருக்கு இரண்டகம் செய்கிறாய்!” மூச்சிரைக்க அவர் “நீ எண்ணுவதென்ன? போர்புரியாமல் பின்னடைகிறாயா? சொல், தேரைத் திருப்புகிறேன்” என்றார்.
சல்யரை நேருக்குநேர் நோக்கி கர்ணன் “அர்ஜுனனை அன்றி பிறரை நான் கொல்லப்போவதில்லை, மத்ரரே” என்றான். “ஏன்?” என்று சல்யர் கேட்டார். “அவனை அன்றி பிறரை கொல்லமாட்டேன் என உறுதிகொண்டிருக்கிறேன்.” சல்யர் விழிகள் மாற “அவளுக்கு சொல் கொடுத்தாயா?” என்றார். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “அறிவிலி! ஆண்மகனா நீ? சூழ்ச்சிக்காரப் பெண்ணொருத்தி வந்து உன் உயிரை உன்னிடமிருந்து பெற்றுச்சென்றிருக்கிறாள். உன் வெற்றியை, பெருமையை அனைத்தையும் பெற்றுச்சென்றிருக்கிறாள். அதைக்கூட உணராதவனா நீ?” கர்ணன் “அது நான் அளித்த சொல்” என்று தணிந்த குரலில் சொன்னான். சல்யர் தலையில் ஓங்கி அறைந்தபடி “அச்சொல் உன்னை கொல்லும். அச்சொல்லால் உன் உயிரை அவள் பெற்றுச்சென்றுவிட்டாள்” என்றார். “அதற்கு அவளுக்கு ஏது உரிமை? உனக்கு அவள் ஒருதுளி முலைப்பாலேனும் அளித்திருக்கிறாளா? சொல்…”
“அவளுடையது என் குருதி” என்று கர்ணன் சொன்னான். “மூடா, நீ இன்னமும் உளம் முதிராதவன். இப்புவியில் நூல்கள் உருவாக்கிய அனைத்துப் பொய்களிலும் பெரிய பொய் தாய்மை. பெண்ணை இல்லம்தேக்கிவைக்க, அவள் மேல் குடியைக் கட்டி எழுப்ப மூத்தோர் அதை சமைத்தனர். சொல்லிச் சொல்லி அதில் பெண்ணை தளையிட்டனர். அத்தளையிலிருந்து விடுபடும் சூழ்ச்சித்திறன் கொண்ட பெண் அது மறுஎல்லைக்குத் திரும்பி ஆண்கள் அனைவரையும் சிறையிடும் ஆற்றல்கொண்டது என உணர்கிறாள். அதை தன் படைக்கலமாகக் கொண்டவள் வெல்லமுடியாதவள்” என்றார் சல்யர். “நீ அறியாத கதையா? இந்தப் போரே சத்யவதி என்னும் அன்னையின் சிறுமையால் எழுந்தது. இவள் கொண்ட பெருஞ்சிறுமையால் வளர்ந்தது… இங்கு பெய்யும் இக்குருதியின் ஒவ்வொரு துளிக்கும் அவளே பொறுப்பு… அவளுக்கு அளித்த சொல் உன்னை கட்டுப்படுத்தாது. நான் சொல்கிறேன், அது உன்னை கட்டுப்படுத்தாது. இதோ நான் என் சொல்லால் அத்தளையை உடைக்கிறேன்.”
“சொல்பிறழ்வது என் வழக்கம் அல்ல” என்று கர்ணன் சொன்னான். “செல்க!” என கைகாட்டினான். “நீ சொல்பிறழ்வதனால் வரும் அனைத்துப் பழியையும் நான் சூடுகிறேன். நீ கொள்ளும் அனைத்துப் பழிகளையும் சூடும் முறைகொண்டவன் நான்…” என்று சல்யர் சொன்னார். அவர் விழிகள் நீரணிந்தன. “அவள் சொல்லவேண்டும். அவள் சொல்லாமல் நான் சொல்ல நெறியில்லை… அவளுக்குக் கட்டுண்டிருக்கின்றன தெய்வங்களும்” என்றபோது அவர் குரல் உடைந்தது. “வேண்டாம். செல்க, முன்னெழுந்து செல்க! உன் வில்திறனால் பாண்டவர் ஐவரையும் வெல்க… ஒருவரை கொன்றால் நால்வரும் அடிபணிவார்கள்… நான் சொல்வதை கேள். ஐயம்கொள்ளாதே.”
கர்ணன் “மத்ரரே, என் ஆற்றலால் இப்போரை நான் வெல்ல இயலும்” என்றான். சல்யர் சீற்றம்கொண்டு கூச்சலிட்டார் “இந்தப் போரை நீ வெல்ல இயலாது. அறிவிலி, இந்தப் போரில் நாம் வெல்ல முடியாது. ஏனென்றால் இது ஏற்கெனவே தோற்றுவிட்டது. தொடங்குவதற்கு முன்னரே தோற்றுவிட்ட போர் இது. இதை அறியாத ஒருவரும் இப்படையில் இல்லை. என்று மறுபுறம் துவாரகையின் யாதவன் தேர்த்தட்டில் அமர்ந்தானோ அப்போதே நாம் தோற்றுவிட்டோம். முற்றழிவை நோக்கி ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்கிறோம். அவன் முடிவெடுத்துவிட்டான், நம்மை அழிப்பது என்று. உருளும் மலைப்பாறைக்குக் கீழே ஒரு கல் என ஒன்றை வைக்கச் சொல்கிறேன். இப்போரை இன்று நிறுத்திவிட்டால்கூட நீ உயிருடன் மீளமுடியும். நான் எண்ணுவது அதை மட்டுமே. அவர்களில் ஒருவரை கொல். பாண்டவர் உளம்தளர்ந்து யாதவனிடம் சென்று போரை நிறுத்தும்படி கோருவார்கள். நம்முன் இருக்கும் வழி இது ஒன்றே.”
கர்ணன் “என் வில்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என் ஆசிரியரின் சொல் உடன் உள்ளது. நான் இக்களத்தை வெல்வேன். யுதிஷ்டிரனை வென்று அஸ்தினபுரியின் முடியை என் தோழனுக்கு அளிப்பேன்… உயிருடனிருந்து அதை நோக்குக!” என்றான். சல்யர் சலிப்புடன் “நீ இங்கு இயற்றுவது என்னவென்று அறிவாயா? இது கொடையல்ல, வெற்று ஆணவம். இந்த ஆணவம் உன்னுள் இருக்கும் தாழ்வுணர்விலிருந்து எழுவது. அனைத்து ஆணவங்களுக்கும் அடியிலிருப்பது தற்சிறுமையே. உன்னை இங்கு நிறுவிக்கொள்ள முயல்கிறாய். கொடையாளன் என்றும், வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவன் என்றும் உன்னைப்பற்றி சூதர்கள் பாடவேண்டும் என்று விரும்புகிறாய். ஆகவேதான் வெற்றிக்கான அனைத்து வாய்ப்புகளையும் நீயே தவிர்க்கிறாய்” என்று சல்யர் சொன்னார். “வீரர்களில் ஒருசிலரை கவ்விக்கொள்ளும் மாயை இது. வெற்றியைவிட தோல்வியே பெரும்புகழ்சேர்ப்பது என அவர்கள் எண்ணத்தலைப்படுவார்கள். துயரப்பாடல்களைப் பாடும் சூதர்களின் நாவில் அவலநாயகனாக என்றென்றும் வாழலாமென எண்ணமுயல்வார்கள்…”
கர்ணன் பற்களைக் கடித்து “போதும், இங்கே சொல்லாட நான் வரவில்லை” என்றான். “நான் சொல்லியாகவேண்டும். நோய்கொண்டவர்களிடம் இறப்பை நோக்கிய விழைவை உருவாக்குகிறது ஒரு தெய்வம். பொருதுபவர்களிடம் தோல்வியை நோக்கிய ஈர்ப்பை வளர்க்கிறது. ஆழங்களை எட்டிப்பார்ப்பவர்களிடம் பாய்ந்துவிடு எனச் சொல்கிறது. அதன் பெயர் விஷாதை. அது வியாமோகை என்னும் பிறிதொரு தோற்றம் கொண்டு அணுகுகிறது… அந்தத் தெய்வம் இப்புவியில் இதுவரை பல்லாயிரம் ஆடல்களை நிகழ்த்தியிருக்கிறது. களத்தில் வீரன் இறுதியாக வெல்லவேண்டியது அதையே. அதை வெல்க… இந்த உளமயக்கு உனக்கு பேரழிவை அளிப்பது. இதை வெல்க!” என்றார் சல்யர். அப்பால் அர்ஜுனனின் நாணொலியை கர்ணன் கேட்டான். “செல்க… செல்க… அவனை நான் எதிர்கொள்ளவேண்டும்” என்று கூவினான்.