கதைகள், அச்சிதழ்கள்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அறம்,சோற்றுக்கணக்கு கதைகளை மீளமீள வாசித்துக்கொண்டிருக்கிறேன். எளிமையான கட்டமைப்புள்ள இந்தமாதிரியான கதைகள் எப்படி நம்மிடமிருந்து திடீரென்று இல்லாமல் ஆயின என்று ஆச்சரியமாக இருக்கிறது. எளிமை இலக்கியமல்ல என்று எப்போது நம்ப ஆரம்பித்தோம்? எப்படி கதைகளை வாசித்து கற்பனைசெய்து தீவிர உணர்ச்சிகளை அடைவதை விட்டுவிட்டு கட்டுடைப்பு செய்ய ஆரம்பித்தோம்?

நான் தமிழ் சிற்றிதழ்களை தொடர்ந்து வாசிப்பவன். ஒரு நல்ல சிறுகதை வாசிப்பது என்பது மிகமிக அபூர்வமாகவே நடக்கிறது. பெரும்பாலும் என்னத்தையாவது எழுதி வைக்கிறார்கள். உண்மையிலே இந்த சிறுகதைகளை யாருமே வாசிப்பதில்லை. நானும் பலபேரிடம் கேட்டிருக்கிரேன். சினிமா அரசியல் என்று வாசித்து தூக்கிபோட்டுவிடுவார்கள். நல்ல கதையனுபவமே இல்லாமல் ஆகிக்கொண்டிருக்கிறது

ரெண்டு கதைகளுமே அற்புதம். ஊமைச்செந்நாய், மத்தகம் வாசித்த பிறகு மீண்டும் புனைகதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வைக்கும் அனுபவம்

குமார் அருணாச்சலம்

அன்புள்ள குமார்,

நலம்தானே?

எளிமையான கதைகள் எப்போதும் உள்ளன. எல்லாருமே எழுதியிருக்கிறார்கள். சிக்கலான கதைகளை எழுதிய புதுமைப்பித்தனும் மௌனியும் சுந்தர ராமசாமியும் கூட. அதேபோல எல்லா காலத்திலும் அவை வந்துகொண்டும் உள்ளன.

கதையின் கருவே அமைப்பை தீர்மானிக்கிறது. ஒரு சிக்கலான உளவியல் கரு, ஒரு வரலாற்று உண்மையைச்சொல்லும் கரு எளிமையான கதையாக அமையமுடியாது . அது படிமங்களை கையாளலாம். தொன்மங்களை பயன்படுத்தலாம்.

இத்தகைய கதைகளின் எளிமை என்பது இதன் நேரடியான உணர்ச்சிகளால் ஆனது. மானுட மேன்மையின் ஒரு கணத்தை தொடக்கூடியவை இவை. உண்மையில் வாழ்ந்த மனிதர்களின் சித்திரங்கள் கொண்டவை. ஆகவே எந்த அளவுக்கு நேரடியாக எளிமையாக உள்ளனவோ அந்த அளவுக்கே இவை மனதை தொடும். கொஞ்சம் ஆசிரியனின் கை தெரிந்தாலே சுவை குன்றும். ஆகவே இவை இப்படி உள்ளன

எல்லா காலத்திலும் கதை நீங்கள் சொல்லும்படித்தான் உள்ளது. நல்ல கதை என்பது வாழ்க்கைமேல் செய்யும் விமர்சனம். வாழ்க்கைமீதான உணர்ச்சிகரமான ஊடுருவல். வாழ்க்கையில் இருந்து நேரடியாக வருவது. ஆனால் அது அபூர்வமாகவே நிகழ்கிறது இல்லையா? நல்ல எழுத்தாளர்களின் நல்ல தருணங்கள் அவை.

மற்ற கதைகள் எப்போதுமே கதை என்ற வடிவத்தை கொஞ்சம் முன்னெடுக்கின்றன, கொஞ்சம் மாற்றி எழுதுகின்றன. அந்த வடிவத்தை கவனிப்பவர்களுக்கு ‘ஓ, இப்படி செய்திருக்கிறாரா’ என்ற சிறிய சுவாரசியத்தை அவை அளிக்கின்றன. அவை வந்துகொண்டேதான் இருக்கும்.

சிற்றிதழ்களில் நல்ல கதைகள் குறைந்துவிட்டன. அல்லது அனேகமாக இல்லை. அதற்கான காரணங்கள் பல. முதல்காரணம், படைப்பூக்கத்தன்மை இல்லாததுதான். இளம் எழுத்தாளர்கள் வாழ்க்கையை விட்டுவிட்டு வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ‘எழுதிப்பார்க்கிறார்கள்’

இரண்டாவது காரணம், குழு அரசியல். சென்ற சிலவருடங்களில் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஐந்துகதைகள் சு. வேணுகோபாலின் ’வெண்ணிலை’ தொகுதியில் உள்ளன. அவற்றுக்கு இதழ்களே கிடைக்கவில்லை; நேரடியாக தொகுப்பாக வெளிவந்தன.

ஜெ

அன்புள்ள ஜெ,

ராமலட்சுமியை மணம் செய்துகொண்டது செஞ்சோற்று (?!) கடனை
தீர்ப்பதற்குத்தானா? இருக்கலாம். எதையும் எதிர்பாராமல், எந்தவிதமானபாகுபாடும் காட்டாமல், சோறிடுவதை ஒரு அறம் போலவே மகிழ்ச்சியுடன் செய்தகெத்தேல் சாகிப்பின் தன்மை கதாநாயகனுக்கும் வந்துவிட்டது போலவே எனக்குத்
தோன்றியது. இது என்னுடைய மிகைகற்பனையாகவும் இருக்கலாம்.

நன்றி

கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

சோற்றுகணக்கு போடாமல் எந்த மனிதரும் வாழ்வதில்லை. அதுதான் லௌகீகம் என்பது. அதில்தான் மானுடமே மாட்டிக்கொண்டிருக்கிறது. ஞானத்தால் யோகத்தால் சிலர் வெளியே செல்கிறார்கள்.

கதைசொல்லி அவன் போடும் சோற்றுக்கணக்கை ஒருகணம் உணர்கிறான். நானும் அதையே செய்கிறேனா என துணுக்குறுகிறான். அதுதான் உச்சக்காட்சி

ஜெ

அன்புள்ள எழுத்தாளருக்கு!

தாமதமாகத்தான் படிக்க முடிந்தது, என் கணினி பழுதானதால். ஆரம்பம்இயல்பானதாக இருந்தாலும் உங்களின் வழக்கமான சித்தரிப்பு பசியில், உணவின்வாசனையில், சாஹிபின் உபசரிப்பில் உச்சத்தை அடைந்தது. ஒவ்வொரு வரிகளும்நெகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன. பசி அறியாதவர்களுக்கு,இலக்கியத்தின் நுட்பத்தை அறிந்தவர்களுக்கு இது வழக்கமான சிறந்த இலக்கியபடைப்பாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு வந்த கடிதங்களின் நெகிழ்ச்சி(இதுவும் சேர்த்துதான்) பசியின் பிடியில் இருந்த அனுபங்களை தொட்டுச்செல்கின்றன , வழக்கமாக இலக்கிய நுட்பத்தை மட்டும் பாராட்டாமால். அதுவேஉங்களின் நடை மற்றும் அறச்சார்பு. எப்போதும் தீர்க்க முடியாதகணக்குகள்தான். நண்பர்களை எண்ணிப் பார்கிறேன்.
கண்கள் சந்திக்கும் தருணங்கள் சுயமரியாதையை தக்க வைத்துக்கொள்ளமுயற்சிப்பது உளவியல் ரீதியில் சித்தரிக்கப்படுள்ளது.

இருவரும்உரையாடிக்கொண்டே இருந்திருப்பார்கள் மனதின் மூலம். பிள்ளை வேலைகிடைத்ததும் சாஹிப்பிடம் ” சான்றோன் எனக்கேட்டத்தாய்” என்றுஎதிர்ப்பார்ப்பது இயல்பானதே. ஆனால் அவர் எல்லோரிடம் எந்த வேறுபாடுகளையும்காட்டவில்லை, பிள்ளை அவரை தாயாக ஏற்றுக்கொண்டாலும். இதுவே இக்கதையின்உச்சம் என்று நினைக்கிறேன்.

திரு. நாஞ்சில் நாடன் இக்கதையை படித்துவிட்டு
என்ன கூறினார் என்று தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறது. மிக்க நன்றிகள்.

அன்புடன்
தண்டா

அன்புள்ள தண்டா

நாஞ்சில் இன்னமும் இக்கதையை வாசிக்கவில்லை. அவர் இணையத்தை வாசிப்பதில்லை. கதை அச்சேறி அவர் வரை சென்று சேர மிகவும் தாமதமாகும்

ஜெ

Dearest J
I Read Aram and Sotrukannu two days ago. I deeply appreciate and thank you for bringing these experiences out. Very few things or experiences bring such a deep impact from deep of the heart now a days. It is a profound reading experience altogether. It brought me a lot of memories and introspection.
With lots of love and appreciation
Umamaheswaran
SanDiego

அன்புள்ள ஜெ.எம்

அறம் சோற்றுக்கணக்கு கதைகளை எங்கள் இயக்குநர் அவரே பிரிண்ட் அவுட் எடுத்து எல்லாருக்கும் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதனால்தான் நான் வாசிக்க முடிந்தது. நான் இமெயிலுக்குத்தான் கம்ப்யூட்டர் பார்ப்பது. பிரவுசிங் செண்டரில் உட்கார்ந்து கதைகளை படிக்க என்னால் முடியாத நிலை.இன்னும் இதேபோல எத்தனையோ பேர் உள்ளார்கள். இந்தமாதிரி கதைகளை அச்சில் வெளிவந்தால்தானே நல்லது? நிறையபேர் வாசிப்பார்கள் இல்லையா? கதைகளை இண்டெர்நெட்டிலேயே போடுவது நல்ல விசயமா?

நான் இந்த ரெண்டு கதைகளையும் கண்னீர் விட்டுக்கொண்டேதான் வாசித்தேன். இதற்கு முன்னால் கலர் ஆப் பாரடைஸ் படம் பார்த்துத்தான் இந்த அளவுக்கு அழுதேன். ‘எனக்கு யாருமே இல்லை. கடவுள் எங்கள் மேலே அன்போடு இருந்தால் ஏன் கண் இல்லாமல் படைத்தார்’ என்று கண்ணில்லாத பையன் கேட்கிற இடத்திலே தேம்பி விட்டேன். அதே மாதிரித்தான் இந்தக்கதையிலே ‘என் அம்மாவின் சோறு’ என்ற இடத்திலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது

நன்றி

வேணு

அன்புள்ள வேணு,

நலம்தானே

நீங்கள் சொல்வது நல்ல விஷயம். அச்சில் வெளிவர வேண்டிய கதைகள். அச்சு மட்டுமே வாசிக்கும் வாசகர்கள் பாதிப்பங்கு. அவர்களை சென்றடைய வழி இல்லை. இவற்றில் ஒருகதை தமிழினியில் வரக்கூடும்.

ஆனால் நான் எழுதவந்த காலம் முதலே கணிசமான கதைகள் பிரசுரிக்கப்படாமல் நேராக நூலாகியவைதான். அறிவியல் புனைகதைகள் அனைத்தும் அப்படித்தான். நிழல்வெளிக்கதைகளில் சிலவே அச்சிதழ்களில் வெளிவந்தன. சிறுகதைகளில் புகழ்பெற்ற பல கதைகள் எந்த இதழிலும் வெளிவராதவை

முதல்காரணம், தமிழில் அச்சிதழ்கள் குறைவு. என்னுடைய வேகத்துக்கு அவை போதாது.

இரண்டாவது தமிழ்ச்சிற்றிதழ்கள் எப்போதுமே தனிப்பட்ட காழ்ப்புஅரசியலுக்குள்ளும், எதிர்மறை அரசியலுக்குள்ளும் இயங்குபவை. உதாரணமாக காலச்சுவடு. அது என்னை வசைபாட செலவழித்த பக்கங்களில் கால்வாசியைக்கூட என் கதைகளுக்கு அளித்ததில்லை. அளித்த பக்கங்கள் ஒவ்வொன்றுக்கும் இன்று இலக்கிய வரலாற்றில் இடமிருப்பதை அவர்களின் தொகைநூல்களை கண்டாலே அறியலாம். இப்போது உயிர்மையும் அதையே செய்கிறது. இன்னும் சில வருடங்களில் பல பக்கங்களை வசைக்கும் அவதூறுக்கும் ஒதுக்குவார்கள்.

மேலும் இவையெல்லாமே எதிர்மறை அரசியலை முன்னெடுப்பவை. அந்த அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. அதை நான் எப்போதும் முன்வைப்பவன். ஆகவே இவற்றால் வெறுக்கப்படும் இடத்தில் இருக்கிறேன்.

நான் எழுதச்சாத்தியமான சில இதழ்களும் உண்டு. அதாவது சண்டை இல்லாதவை. உயிர்எழுத்து, தீராநதி போல. அங்கே என்ன நடக்கிறது என்றால் நான் ஒரு நல்ல கதையை அங்கே பிரசுரித்தால் அடுத்த இலக்கத்திலேயே அந்தக்கதையை பிய்த்து சீரழித்தும், என்னை சம்பந்தமில்லாமல் வசைபாடியும் யார் எவரென்றே தெரியாதவர்கள் எழுதும் நாலைந்து கடிதங்களை வெளியிடுவார்கள். கேட்டால் மறுதரப்பு, கருத்துச் சுதந்திரம் என்பார்கள்.

அதன் மனநிலை எளிமையானது. எல்லா தரப்பினரையும் சமாதானப்படுத்த நினைக்கிறார்கள். என்னுடைய கதையை ஒரு இதழ் வெளியிட்டாலே அந்த இதழ் இந்துத்துவம் ஆகிவிட்டது என்று சில கடிதங்கள் வரும். உடனே அந்த இதழ் மிரண்டுபோய் அவர்கள் அனுப்பும் வசைகளையும் அச்சிடும்.

என்னுடைய கதை அந்த வசைகளுக்கு கவனத்தைப் பெற்றுத்தருவதாக ஆகும் என்பதே நிகர விளைவு. மேலும் கதை உருவாக்கும் உயர்மனநிலையும் உடனடியாக சிதைக்கப்பட்டுவிடும்

நீங்கள் அச்சிதழில் எழுத வேண்டும், அப்போதுதான் உங்களை ‘எக்ஸ்போஸ்’ பண்ண எங்களுக்கு இடம் கிடைக்கும் என்றே ஒருவர் என்னிடம் ஒருமுறை சொன்னார்

பரவாயில்லை. இந்தமுறை இணையம் என்ற ஊடகமாவது இருக்கிறதே. இதுவே போதுமானது. இதில் மட்டும் வந்தாலும்கூட கதைகளை எப்படியும் இருபதாயிரம் பேர் வாசித்திருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கை இது

ஜெ

முந்தைய கட்டுரைஅவதூறு, கடிதம்
அடுத்த கட்டுரைவேளாண்மை இருகடிதங்கள்