உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]

ச.துரை விக்கி

குமரகுருபரன் விக்கி

இருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில்  பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர் மார்க்ஸுக்கும் ஃப்ராய்டுக்கும் நடுவே ஒரு பாலம் கட்ட முயல்கிறார். பாலத்தில் தொண்ணூறு விழுக்காடு நடந்து செல்லமுடியும். அதன் பின் பறந்து மறுபக்கம் செல்லவேண்டும். அவரால் பறக்கமுடியும்” என்று அவரைப்பற்றி அவருடைய கடும் விமர்சகரான சுகுமார் அழீக்கோடு ஒருமுறை சொன்னார். கேரளம் கண்ட மாபெரும் மேடைப்பேச்சாளர்கள் இருவருமே.

அன்று எம்.என்.விஜயன் சொன்னார். உளவியல் கருதுகோள்களை இலக்கியம் அயலாக பார்க்கவேண்டியதில்லை. அவை இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவக்கூடியவை. இலக்கியத்தை அவற்றைக்கொண்டு வகுத்துவிட, தீர்ப்பளிக்க முயல்வதுதான் தவறு. அதாவது ஒரு கவிதையை வாசித்துவிட்டு என்னென்ன மாத்திரைகள் அதற்கு அளிக்கப்படவேண்டும் என்பதுபோன்ற எளிமையாக்கல்கள். அது மார்க்ஸிய எளிமையாக்கலுக்கு சமானமானது என விஜயன் சிரித்தார். ஆனால் உளவியல் மாதிரிகளை ஹோமியோபதி மருந்துகள்போல பயன்படுத்தலாம். எவ்வளவு குறைவாக எடுக்கவேண்டும் என்பது முக்கியமான. எவ்வளவு கலக்கவேண்டும் என்பது அதைவிட முக்கியமானது

உளவியல்மாதிரிகள் இலக்கியத்திற்கு எதைக் கொடுக்கின்றன? இலக்கியப்படைப்புக்களுக்கு இரு தளங்கள் உண்டு. ஒன்றை அவற்றின் புறவயமான குறிப்பீட்டுத்தளம் எனலாம். நாம் வாழும் அன்றாடவாழ்க்கையுடன், நாம் உணரும் அகவுலகுடன் அதை எங்கே பொருத்திக்கொள்வது என்னும் கேள்விக்கு விடையாக அமைவது அது. அது படைப்பின் ஒரு முனை. மறுமுனைதான் வாசகனின் கற்பனையில், முடிவிலியில் நீள்கிறது. கவிதையை புறவயமாக ஏதேனும் இடத்தில் பொருத்திக்கொள்வதை வாசிப்பின் தொடக்கம் எனலாம். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால்  தருணப்படுத்திக்கொள்வது [contextualization] எனலாம்

புனைகதைகளில் இது பெரும்பாலும் எளிதானது. ஏனென்றால் அதன் வடிவத்தால் அது ஒரு வாழ்வுச்சூழலில் தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதை வரலாற்றில், சமூகப்பின்னணியில் நம்மால் சற்று முயன்றால் பொருத்திவிடமுடியும். கவிதைகளின் மிகப்பெரிய சிக்கலே அவை புறவயமான தருணம் அற்றவை என்பதே. அவற்றின் தருணத்தை கற்பனையால் உருவாக்கிக்கொள்ளும் வாசகனை அவை எதிர்பார்க்கின்றன.

கவிஞர்கள் – கவிதைவாசகர்கள் மிகச்சிலர் மட்டும் அடங்கிய சிறிய சூழலில் இந்த context அவர்களுக்குள் பொதுவாக உருவாக்கிக்கொள்வதாக இருக்கிறது. ஒருவகையான குழூக்குறிபோல அங்கே கவிதை செயல்படுகிறது  வெளியே இருந்து கவிச்சூழலுக்குள் நுழையும் வாசகர் அந்த குறுவட்டத்திற்குள் புழங்கும் மீமொழியை கற்றுக்கொண்டாலொழிய கவிதை புரிபடாமலாகிறது

பெரும்பாலான தருணங்களில் கவிதை புரியவில்லை என்பவர்கள் அக்கவிதையை ஒரு தருணத்தில் பொருத்தி ‘இப்படி பொருள்கொண்டு பாருங்கள்’ என ஒரு மெல்லிய விளக்கத்தை அளித்த்துமே புரிந்துகொள்வதை, மேலதிகவாசிப்புகளை நிகழ்த்திக்கொண்டே செல்வதைக் காணலாம். அந்தவகையான தருணப்படுத்துதலுக்கு உளவியல்மாதிரிகள் உதவியானவை என்று எம்.என்.விஜயன் சொன்னார்.

அதாவது ஒரு கவிதையை குறிப்பிட்ட நுண்ணிய உளநிலையின், உளச்சிக்கலின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வது. அங்கிருந்து தொடங்குவது.  “அதன்பின் அதை ரத்துசெய்துவிட்டு மேலும் வாசித்துச்செல்லவேண்டும். அர்த்தப்படுத்துதல் வாசகனின் ஆழுள்ளத்தில் நிகழவேண்டும். அந்த உளவியல்மாதிரி என்பது ஒரு கருவி. திறந்தபின் சாவிக்கு வேலை இல்லை’ என்றார் எம்.என்.விஜயன்

இதை தான் ஏன் பரிந்துரைக்கிறேன் என்றால் பெரும்பாலான உளவியல்மாதிரிகள் கவிதைகளில் இருந்து எடுக்கப்பட்டவை, படிமங்களாகவே நிலைகொள்பவை, ஆகவே அறிவியலைவிட இலக்கியத்திற்கே அணுக்கமானவை என்று எம்.என்.விஜயன் சொன்னார். ஈடிப்பஸ் உளச்சிக்கல், அல்லது மசோக்கிஸம் , அல்லது சாடிஸம் – அனைத்துமே இலக்கியத்திலிருந்து உருவான புரிதல்கள், இலக்கியத்தை முதன்மையாகச் சுட்டுபவை.

இக்காரணத்தால் அறிவியலுக்குரிய கறார்த்தன்மைக்கு மாறாக இலக்கிய உருவகங்களுக்குரிய நெகிழ்வுத்தன்மை, விரிவடையும் தன்மை உளவியல் கருவிகளுக்கு உண்டு. ஆகவே பிற அறிவியல்கருவிகளை இலக்கியத்தில் பயன்படுத்த்த் தயங்குவதுபோல உளவியல் மாதிரிகளைப் பயன்படுத்த தயங்கவேண்டியதில்லை என்று எம்.என்.விஜயன் சொன்னார்.

ச.துரையின் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்தபோது சில உளவியல் மாதிரிகள் இக்கவிதைகளுக்கான அடிப்படையான தருணப்படுத்துதலை உருவாக்கிக்கொள்ள உதவும் என்று பட்டது. உளவியலில் உள்ள ஆளுமைப்பிளவு, ஆளுமைப்பரவல் கொள்கைகள் ஆர்வமூட்டுபவை. ஃப்ராய்ட் சிறுகுழந்தைகளிலேயே இந்த ஆளுமைப்பிளவுத் தன்மை தொடங்கிவிடுகிறது என்கிறார். தன் இயல்பான விழைவுகளுக்கும் புறவுலகு கோரும் நடத்தை நெறிகளுக்கும் நடுவே முரண்பாடு தோன்றுவதனால் தன்னை தானறியாமலேயே இரண்டாகப் பகுத்துக்கொள்கிறது குழந்தை. உள்ளும் புறமும் உருவாகிறது. உள்ளே ஒரு தன்னுரையாடல் ஓடிக்கொண்டிருக்க வெளியே புறவுலகுக்கென இன்னொரு உரையாடலை தொடர்கிறது .இது தொடக்கம். அது மேலும் மேலும் தன்னை பகுத்துக்கொண்டே செல்கிறது. ஒருகட்டத்தில் ஓர் ஆளுமை என்பது வெவ்வேறு வகையிலான வெளிப்பாடுகளின்  அல்லது வெவ்வேறு வகையிலான தன்னிலைகளின் ஒட்டுமொத்தமாக ஆகிவிடுகிறது.

இந்தப் பிளவுறுதலைப்பற்றி பேசாத தொன்மையான இலக்கியங்கள் இல்லை, தொன்மங்கள் இல்லை. இதனுடன் இணைந்துகொள்ளும் இன்னொரு உளநிகழ்வுதான் தன்னை தன் உடல் என வனைந்துகொள்ளுதல். தன் உடலைப்பற்றிய அகச்சித்திரம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு, அதை தன் அகத்தின் புறஅடையாளமாக அல்லது  குறியீடாக உருவகித்து தன் உளநிலைகளை அதில் ஏற்றிச்சொல்லி, விரிவாக்கிக்கொண்டே செல்லுதல். இதுவும் செவ்விலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காணக்கிடைப்பதே. இவ்விரு கூறுகளின் நுட்பமான இணைவும் ஆடலும்தான் உலகக் கலையிலும் இலக்கியத்திலும் ஏராளமான உடல்சார்ந்த படிமங்களையும் தொன்மங்களையும் உருவாக்கியிருக்கிறது

உதாரணமாக, குதிரையும் மனிதனும் இணைந்த செண்டொர் [ centaur ]  எந்த உள நிலையின் உருவகம்? பத்து தலைகளும் இருபது கைகளும் கொண்ட ராவணன் எதன் வடிவம் ? உடல்பெருகுதல் உடல் பிளவுறுதல் உடல்சிதைதல் உடல்வெவ்வேறாக அடையாளம் கொள்ளுதல் ஆகியவை பழங்குடித்தொன்மங்களிலும் ஏராளமாக உள்ளன. இவை நேரடியாகவே தொல்மானுடக்கனவிலிருந்து எழுந்தவையாக இருக்கவேண்டும். தன் உளநிலையை உடல்மேல் ஏற்றிப்பார்த்தலென்பது மானுடனின் உளச்செயல்பாடுகளில் முதன்மையானது. செரிமானமின்மை வாயிலிருந்து பொருட்கள் கிளம்புவதுபோல கனவாக வருகிறது. மிதமிஞ்சிய களைப்பு உடல் எடை கூடிவருவதாகவோ குறைந்துவிடுவதாகவோ கனவாகிறது. இக்கனவுகளிருந்தே தொன்மையான படிமங்கள் எழுகின்றன.

அன்றுமுதல் இன்றுவரை இலக்கியத்துடன் நேரடியாக உறவாடுபவை கனவுகள். குறிப்பாகக் கவிதையில். அவை பலசமயம் கனவின் தர்க்கங்களையே தாங்களும் கொண்டிருக்கின்றன. கனவிலிருந்து படிமங்கள் உருவாகி இலக்கியத்திற்குள் வருகின்றன. மீண்டும்  இலக்கியத்திலிருந்து கனவுக்குள் செல்கின்றன. அவ்வாறு ஒன்றை ஒன்று அவை வளர்க்கின்றன. பல கவிதைகளை மிக எளிமையாக ஒருவகைக் கனவுக்காட்சிகள் என வகுத்துக்கொள்வது அவற்றை தருணப்படுத்திக்கொள்ள மிக உகந்தது, மேலதிகப் பொருள்விரிவை அதிலிருந்து முன்சென்று அடையலாம். நம் கவிதைகளில் மானுட உடல் கொள்ளும் பிளவுகள் சிதைவுகள் மற்றும் அடையாளங்களை இப்படி வகுத்துக்கொள்ளலாம்.

கனவுருக்காட்சி போலவே எழுதப்பட்டிருக்கும் ச.துரையின் பல கவிதைகளில் உடல் வெவ்வேறுவகையில் அடையாளமாற்றம் கொள்கிறது. இவை வெவ்வேறு உளவியல்மாதிரிகளாக முதல்கட்டத்தில் அடையாளப்படுத்திக்கொள்ளத் தக்கவை.  உதாரணமாக  இக்கவிதை

நாடியில் இருந்து கீழ்நோக்கி
இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது
கடைசிவாரத்தில் கோட்டின் இட்துபுறத்தில்
கிடார் வாசிக்கிற சிறுவன் ஒருவன் வந்தமர்ந்தான்
வலது புறத்தில் பெரும்புயல் ஒன்றை
கப்பலில் கட்டித் தூக்கியபடி மாலுமி
கடலைப்பார்த்தபடி நின்றார்

இது என்ன என்று கேட்டேன்
பசிக்கும் வயிறும் கேட்டது

யாரிந்த மாலுமி
யாரிந்த கிடார் சிறுவன்
இந்தக் கடல் எங்குள்ளது
இவனுக்கு யார் கிடார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தது?

எனக்குத் தலைசுற்றுவதுபோல் இருக்கிறது வயிறே
நேற்றிரவு கோட்டின் வலதுபுறத்தில்
புயலை கரைக்குக் கொண்டுவந்த
மாலுமி மது அருந்தினான்.
சிறுவன் கிடார் வாசித்தான்
இரவு முழுக்க உறங்கவேயில்லை
வெகு அதிகாலையிலேயே வீட்டுக்காரர்
மனைவியோடு வந்து கதவைத்தட்டினார்
இனி இம்மாதிரி கச்சேரிகளைச் செய்வதாய் இருந்தால்
நீங்கள் தாராளமாக வேறுவீடு பார்க்கலாம்

எனக்கு வேறுவீடு பார்ப்பதெல்லாம் பிரச்சினையே இல்லை
இத்தனைக்கும் காரணம் இந்த மாலுமிதான்
அவனையும் கொஞ்சம் கேளுங்கள் என்று
வேகவேகமாய் பனியனைக் கழற்றினேன்
அங்கு சிறுவனுமில்லை
மாலுமியுமில்லை
பிறகென்ன
எல்லாம் நடந்துவிட்டது
இது புதுவீடு இப்போது முதுகில்
நேர்குறுக்கில் நான்கு கோடுகள் உருவாகிவிட்டன
ஒருவன் ஜெபிக்கிறான்
பின்னொருவன் சொற்பொழிவாற்றுகிறான்
இன்னொருவன் மீன்பொரிக்க
நானோ முகம் தெரியாதபடி குப்புறப் படுத்திருக்கிறேன்.

உடல் பிளவுருக்கொள்ளல் என இக்கவிதையை முதற்தளத்தில் வகுத்துக்கொள்ளலாம். தன் உடல் இரண்டாக பிளவுபடுதலில் தொடங்குகிறது இக்கவிதை. புயலடிக்கும் கடல் ஒருபக்கம், கிட்டார் இன்னொரு பக்கம். ஒன்றையொன்று அவை இணைநிற்கவும் செய்கின்றன. டொர்னடோர்[ Giuseppe Tornatore] இயக்கத்தில் வெளிவந்த The Legend of 1900 என்னும் திரைப்படத்தில் பியானோ கலைஞனாகிய கதைநாயகன் வெளியே கப்பலைத் தூக்கி அம்மானமாடும் புயலின் தாளம் உள்ளே அறைக்குள் பியானோ வாசிப்பவனுடன் சேர்த்து மொத்த அறையையும் அலைக்கழிக்க அதற்கேற்ப அவன் பியானோ வாசிக்கும் காட்சியை நான் நினைவில் இணைத்துக்கொண்டேன்.

ஆளுமைப்பிளவு,  பின்னர் அது பெருகுவதன் சித்திரம் இது என முதலில் வகுத்துக்கொள்கையில் கவிதையின் கூற்று ‘தெளிவை’ அடைந்துவிடுகிறது. ஒரு வாழ்க்கைத்தருணத்தை எதிர்கொள்ள இரண்டாக ஆகும் ஒருவன். பின்னர் நான்காக ஆகிறான்.  நேர்குறுக்காக உருவாகும் கோட்டில் நான்காகப் பிரிந்து ஒருவன் சமைக்க ஒருவன் சொற்பொழிவாற்ற ஒருவன் ஜெபிக்க ஒருவன் துயில்கிறான். புயல் சொற்பொழிவாகியிருக்கக் கூடும். கிட்டார் ஜெபமாக. அல்லது நேர்மாறாகக் கூட. நேற்றையபசிக்கு ஒருவன் சமைக்கிறான். அப்பிளவைக் கண்டு திகைத்து இக்கவிதையை கண்டடைய நேர்ந்தவன் குப்புறவிழுந்திருக்கிறான்

இச்சித்திரத்திலிருந்து மேலே செல்லும் வாசிப்பு கவிதையின் விரிவை நாம் அடையச் செய்யும். கிடார் புயல் ஆகியவற்றை படிமங்களாக விரிக்கலாம். அந்த உளநிலையை கற்பனையில் சென்றடையலாம். பெரும்புயலை கப்பலில் கட்டித்தூக்கியபடி போன்ற தலைகீழாக்கங்களை கருத்தில் கொள்ளலாம். அந்த உளநிலையை மேலும் மேலும் அணுக்கமாக்கி நாம் வாழ்க்கையிலறியும் உச்சத்தருணங்களை நோக்கிக் கொண்டுவரவும் முடியும்

இக்கவிதையிலுள்ள பிளவின் இன்னொரு தோற்றம் ’இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்’ என்னும் கவிதையில் சிதைவாகவும் மயக்கமாகவும் வெளிப்படுகிறது. கவிதை முதற்தோற்றமென அளிப்பது ஒரு நடனம். மேல்நாட்டு பால்ரூம் நடனம் என தொனிக்கிறது. ஆடும் மங்கை ஒருத்தி சுழற்சியின் விசையில் காலத்தில் பின்னகர்ந்து ‘எங்கோ’ செல்கிறாள். தந்தையைக் காண்கிறாள்.எப்போதும் சாகாத தந்தையை. இரு தருணங்களை நினைவுறுகிறேன். போரும் அமைதியும் நாவலில் நடாஷா தன் தந்தையுடன்தான் எப்போதும் நடனமிடுகிறாள். முதல்முறையாக அவள் ஒரு விருந்தில் இளைஞனாகிய போரிஸுடன் நடனமிடும்போது அந்த வேறுபாடு அவளை கிளர்ச்சியுறச் செய்கிறது. ரோமென் ரோலந்தின் ஸீன் கிறிஸ்டோஃப் நாவலில் ஸீனுடன் நடனமிடும் இளம்பெண் ஒருத்தி அவன் அசைவுகளில் அவள் தந்தை வெளிப்படுவதாக எண்ணி திகைத்து விலகிவிடுகிறாள்.

அந்தக் காலமயக்கத்திலிருந்து மேலும் சென்று ஒரு காலச்சிதைவை அடைகிறது கவிதை. அனைத்தையும் மேலிருந்து, அகாலத்திலிருந்து பார்க்கிறது. அங்கே தந்தையின் கொந்தளிப்பு வெளிப்படுகிறது. வாசகனின் கற்பனை அதை கதைநிகழ்வுகளாகக்கூட ஆக்கிக்கொள்ளலாம்.  ‘ஐஸ்கட்டிக்குள் மீன்கள் நீந்துகின்றன’ என்னும் வரி அழகியது. இன்று உறைந்து உருக்கொண்டு பனிக்கட்டியாக ஆகிவிட்டிருக்கும் நீரின் நேற்றில் நீந்துகின்றன அந்த மீன்கள்.

இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்

காலணியின் விரல்பகுதியை
தரையில் குத்தி நின்றவளை சுற்றிவிடுகிறாள்
பலமாகச் சுற்றியதில்
காலத்தில் பின்னோக்கிப் போய்விடுகிறாள்
இப்போது வயது பதினேழாகிவிட்டது

அப்பா நீங்கள் சாகவில்லையா?
அப்படிக்கேள் மகளே
அப்பாக்கள் எப்போதும் சாகமாட்டார்கள்

உங்களின் இடது காலை நீட்டமுடியுமா?
வேண்டாம் மகளே
தும்பைப்பூ மாதிரியான உன் கைகளில்
தைலவாடை குடிபுகும்

என் காதலனை நீங்கள் சந்திப்பீர்களா?
நிச்சயம் மகளே
விலாங்குமீன்கள் வாங்கி வருகிறேன்
உணவில் கலந்தாடலாம்

அவள் இடுப்பில் கைகளைப் புதைத்து
உலுப்பியபடியே அவளின் வலதுகாலை
தலைக்குமேல் தூக்குகிறான்
சற்றே அழுத்தித் தூக்கிவிட்டான்
தொங்கிய அவள் பார்வைக்கு எல்லாமே தலைகீழாகிவிட்டது
இசைத்தட்டின் சுழற்சிக்குள் இருந்து
பணியாளன் நெருங்க நெருங்க பெரிதாகிறான்
சுவரில் அறைந்திருந்த தலைகீழ் மோனாலிசா நேராகிவிட்டாள்
டைனோசர் எலும்பைப்போல கிடார் மிதக்கிறது
ஐஸ்கட்டிக்குள் மீன்கள் நீந்துகின்றன

காலத்தின் பின்னணிக்கும்
தலைகீழ் நடமாட்டத்திற்கும் இடையே
கைகளைப்பின்னி மது அருந்துகிறார்கள்
பதினேழுவயது அப்பா
தரையில் முடிச்சிட்ட கயிற்றுக்குள் தலையை நுழைத்து
மேல்கூரையை கால்களால் தொட முயற்சிக்கிறார்

அப்பா இவர்தான் என் காதலர்
சந்தோஷம் மகளே
அந்தக் கயிறை தரையில் முடிச்சிட்டு
என்னோடு அமருங்கள்.

உளவியல் மாதிரிகளைக்கொண்டு திறந்தபின் மேலே செல்லும் பயணத்தில் உளவியலின் கருவிகளும் உதவியாக ஆகலாம். நம் அனுபவநினைவுத் தொகுப்பும், நமது கனவுகளும் வழிகாட்டலாம். ஒருங்கமைந்துகொண்டு நாம் உருவாக்கியிருப்பது இவ்வுலகம். இங்குள்ள ஒவ்வொன்றும் ஒருங்கமைந்து வடிவுகொண்டு ஒத்திசைந்து சூழலாகி இவையனைத்தையும் சமைத்துள்ளன. பிளந்தும் சிதைத்தும் செல்லும் பார்வையினூடாகவே இவை இவ்வாறு ஆனமையை நாம் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

முந்தைய கட்டுரைமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51