வெ.நாராயணன் -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ,

சோற்றுக் கணக்கை படித்தபின் எனக்கு காஞ்சிபுரம் – இலக்கியவட்டம் நாராயணன் தான் ஞாபகத்திற்கு வந்தார். எனக்குத் தெரிந்த ‘கெத்தேல் சாகிப்’ அவர்தான். அவர் நடத்திய இலக்கிய வட்டக் கூட்டங்களில் புத்தக விற்பனையும் உண்டு. நவீன இலக்கிய பதிப்பகங்கள் பலவற்றிலிருந்து 25% சதவிகித தள்ளுபடி விலைக்குப் புத்தகங்கள் வாங்கி அதே 25% தள்ளுபடியில் வாசகர்களுக்குக் கொடுப்பார். அதுவும் கடனுக்கு. எல்லாக் கூட்டங்களிலும் புத்தகங்கள் மூன்று, நான்கு பெஞ்சுகளில் கண்காட்சியாக வைக்கபட்டிருக்கும. கூட்டத்திற்கு வரும் யார் வேண்டுமென்றாலும் அப்புத்தகங்களை கடனுக்கு வாங்கிச் செல்லலாம். அக்கடனை எப்பொழுது வேண்டுமானாலும் திருப்பிச் செலுத்தலாம். திருப்பிச் செலுத்தாமலேயே கூட சிலர் இருந்திருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு கணக்குப் பாத்தபோது ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் அங்கு புத்தக விற்பனை நடந்துள்ளது எனபது தெரியவந்தது. (இரண்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிய நாட்களில் நானே கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளேன்) இதில் எத்தனை ரூபாய் அவர் போட்டது, எத்தனை ரூபா வாங்கியவர்களிடமிருந்து வந்த பணம் எனபதற்கு அவரிடம் கணக்கு வழக்கு கிடையாது. ஆனால் கடனுக்குப் புத்தகம் புத்தகம் வாங்கியவர்களுக்கு மூன்று முறை அஞ்சல் அட்டை அனுப்புவார். பதிலோ, பணமோ வரவில்லையெனில் கவலைப் படமாட்டார். பண விசயத்தில் கறாரான குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இது அதிர்ச்சியாக இருக்கும்.

1997 முதல் 2000 வரை அவரது பல் கூட்டங்களில் நான் புத்தக விற்பனைக்கு பில் போடுபவனாக இருந்திருக்கிறேன். அதற்கு முன்பு வரை அப்படி யாரும் பொறுப்பெடுத்து கிடையாது; அந்நேரத்தில் இலக்கிய வட்ட நண்பர்களில் யார் புத்தகங்கள் பக்கம் இருக்கிறார்களோ அவர்தான் பில் போடுவார். அதனால் எத்தனை புத்தகங்கள் பணம் கொடுக்காமல் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதற்கு கணக்கு கிடையாது. பொதுவாக அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், நான் இருக்கும்போதே ஒருமுறை ஒரு நபர் ஒரு புத்தகத்துடன் வாசல் தாண்டிச் சென்றுவிட்டார். கேட்டதற்கு அதை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என நினைத்துவிட்டாராம்!

ஒருமுறை அப்பாவிடம் (நாராயணன் அவர்களை நான் அவ்வாறுதான் அழைப்பேன்) வாராக் கடன் குறித்து கேட்டபோது, அவர் அலட்டிகொள்ளாமல் உண்மைலேயே இலக்கிய ஆர்வம் உள்ளவன் கண்டிப்பாக ஒருநாள் புத்தகத்திற்கான பணத்தைத் திருப்பித்தருவான் என்றார். வராத பட்சத்தில் அவரது சொந்தப் பணமோ அல்லது நுகம் எழுதிய எக்பர்ட் சச்சிதானந்தம், தரும. ரத்தினக் குமார், சேதுராமன், காமராஜ், அமுத கீதன் போன்ற நண்பர்கள் பகிர்ந்துகொள்வோம் என்றார். இதனால் வீட்டில் அவருக்குக் கெட்ட பெயர். அவர்மேல் கோபம் கொள்ளும்போது, புகழ் போதையில் அவர் அவ்வாறு செய்வதாக அம்மா சொல்வார். ஆனால், ஒரு இலக்கிய வட்ட நிகழ்ச்சியை நடத்த அவரது செயல்களை அருகிருந்து பார்த்தவன் என்ற முறையில் அவர் புகழுக்காக செய்வதில்லை எனபது எனக்கும் தெரியும். நிகழ்ச்சி நடக்க இருக்கம் நாள் (அனேகமாக கடைசி ஞாயிறு) அன்று ஏழு மணிக்கு பூக்கடைச் சத்திரம் PTVS வன்னியர் உயர்நிலைப் பள்ளி சென்று ஒற்றை ஆளாக டெஸ்க், பெஞ்சுகளை தூக்கி முறைப்படுத்தி வைப்பார். பள்ளிக்கு வெளியில் பேனர் கட்டுவார். ஆற்காடு அருகில் இசையனூர் கிராமத்தில் நான் வேலை பார்த்து வந்த அக்காலங்களில் சனியன்று மாலையே அவர் வீடு சென்று தங்கிவிடுவது என் வழக்கம். மறுநாள் காலையில் தினமணி பேப்பர் படித்துவிட்டு, அவர் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் வேர்க்கடலையை சாப்பிட்டுவிட்டு அவருக்கு உதவி செய்யலாம் என்று செல்லும்போது கிட்டத்தட்ட அவர் எல்லா வேலைகளையும் செய்து முடித்திருப்பார். அவர் உடம்பு முழுதும் வியர்வையில் நனைந்திருக்கும். ஆம், அது கெத்தேல் சாகிப் பொருட்கள் வாங்கி, சமையல் செய்து, பரிமாறுவது போன்றது தான்.

நான், ஓரளவு நல்ல வேலையில் அமர்ந்ததும் ஒரு இலக்கிய வட்ட நிகழ்வையாவது என்னுடைய செலவில் நடத்தவேண்டும் என்ற ஆசை இருந்தது. எல்லாவற்றையும் ஒத்திப்போடும் என் வழகத்தாலும், அவருக்கு உடல் நலம் குன்றியதால் அதிக கூட்டங்கள் முன்புபோல் நடத்த முடியாமல் போனதாலும் என் ஆசை நிராசையானது. கடைசியில் அவரும் மறைந்துவிட்டார். எல்லோருக்கும் எப்போதும் உதவிய அவருக்கு, யாராலும் உதவி செய்யமுடியாமல் போன ஒரு நிலையில் நிகழ்ந்த அவரது மரணம் பலருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை இரண்டாண்டுகளாக என் பிளாக்கில் பதிய வேண்டுமென்று நினைத்திருந்தேன். இதை எழுத வைத்த கெத்தேல் சாகிப்பிற்கும், உங்களுக்கும் நன்றி.

அன்புடன்
தங்கவேல்

அன்புள்ள தங்கவேல்,

நான் நாராயணனை நன்றாகவே அறிவேன். 1990 ல் என்னுடைய ரப்பர் நாவலை வாசித்துவிட்டு எனக்கு ஒரு கார்டில் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின் பல கடிதங்கள். எப்போதுமே கார்டுதான். ரப்பர் ஸ்டாம்பு அடித்திருப்பார். என்னுடைய நூல்களை அவர் விற்க விரும்புவதாக எழுதியிருந்தார். வெளியாகி இருந்த ஒரே நூல் ரப்பர். அதை அனுப்ப ’தாகம்’ பதிப்பகம் அகிலன் கண்ணனுக்குச் சொன்னேன்

திசைகளின் நடுவே வெளிவந்தபோது எனக்காக அங்கே ஒரு விவாதக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். நான் செல்ல முடியவில்லை. இளம் எழுத்தாளனுக்கு அன்றைய சூழலில் அதெல்லாம் பெரிய கௌரவங்கள்.

1992ல் எனக்கு திருமணமானபோது அவருக்குச் சொன்னேன். காஞ்சீபுரம் வரும்படி அழைத்தார். நானும் அருண்மொழியும் 1992 டிசம்பரில் அவரைப்பார்க்கச் சென்றோம். காஞ்சீபுரத்தில் ஓட்டலில் தங்கினோம். அவர் என்னை அவரது வீட்டுக்கு கூட்டிச்செல்லவில்லை ‘அதெல்லாம் எதுக்கு? உங்களுக்கு நெறைய எடமிருக்கு’ என்று சொன்னார்

மூன்றுநாட்கள் காஞ்சியை முழுக்க சுற்றிக்காட்டினார். அறியப்பட்ட கோயில்கள் தவிர சமண காஞ்சியிலும் பௌத்த காஞ்சியிலும் உள்ள கைவிடப்பட்ட சின்ன கோயில்கள். நான்கடவுளில் வரும் மண்ணுக்கு அடியில் உள்ள கோயில் எல்லாம். அவரே ஒவ்வொரு கோயிலிலும் நுட்பங்களை சுட்டிக்காட்டினார். கோயில்களுடன் சம்பந்தமுள்ள வேடிக்கைகளை சொன்னார். மூன்றுநாட்களும் அவரது ஆளுமையை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன்

‘வெ நாராயணன்னா என்ன?’ என்றேன். ‘வெட்டிவேலை நாராயணன்தான் வேற என்ன?’ என்றார். அவரது பூர்வீகம் தஞ்சை. காஞ்சியில் இருந்தாலும் தஞ்சாவூர்த்தனம் அவரிடம் நிரம்ப உண்டு. கிட்டதட்ட அறம் கதையில் வரும் சாமிநாதன்போல

இலக்கியமனிதர்கள் வரிசையில் அவரைப்பற்றி நீண்ட கட்டுரை எழுதுவதாக இருந்தேன்.

வெ.நாராயணன் ஒரு கர்ம யோகிதான். ஞானிதான். கெத்தேல் சாகிப்பை போல

ஜெ

முந்தைய கட்டுரைசரஸ்வதி இரு பிழைகள்:சித்தன்
அடுத்த கட்டுரைஅறம் சோற்றுக்கணக்கு -கடிதங்கள்