[2019 ஆண்டுக்கான -குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருதுவிழா வரும் ஜூன் 9 ஆம் தேதி சென்னையில் தக்கர்பாபா அரங்கில் நிகழ்கிறது. மதியம் 2 மணிமுதல் சிறுகதைகள் குறித்த கருத்தரங்கும் மாலை 6 மணிமுதல் விருதளிப்புவிழாவும் நடைபெறும்]
சற்றே உங்கள் பாழடைந்த குகைப்பூதங்கள்
ங்கள் முன் தோன்றுவதை நிறுத்துங்கள் தேவனே
என்ன வேண்டும் கூறுங்கள் கூறுங்கள் என நச்சரிக்கின்றன
நிலத்தின் மொழியைக் கேளுங்கள்
அவற்றில் ரத்தமில்லை
நரபலியில்லை
தோட்டாக்களில்லை
பரிசுத்தத்தில் மிதக்கிற தேவனே
எங்கள் நிலம் வாயாடி
புரண்டுகொண்டே இருக்கும்
பரிசுத்த கருணையின் மேன்மையை
இசைக்கும் தேவனே
மெழுகுகளை ஏற்றி காற்றை வதைக்கிறார்கள்.
*
கூடாரமொன்றினுள் அடுக்கிய
டம்ளர் கோபுரத்தின்மீது
பந்து எறியப்படுகிறது
டம்ளர்கள் சரிகின்றன
துளிமோதி நினைவுகள்
உதிருமே அதுபோல
பெரிய எலும்புத்துண்டை
கவ்விய டாபர்மானைப்போல துள்ளுகிறான்
எல்லாரும் கைதட்டுகிறார்கள்
கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்
பழையபடி டம்ளர்களை
சோர்வோடு கோபுரங்களாய்
அடுக்குகிற கிழவனே
நீயே நீயேதான்
பழஞ்சேர்த்தி
ஞாபக அழுத்தி
நினைவடர்த்தி
மீள்மனதி
*
தவளையொன்று
இருளுக்குள் பாய்ந்தது
இருளுக்குள் நுழைய கதவுகளே இல்லை என்றார்கள்
உண்மைதான் வெளிச்சத்திலிருந்து
இருளுக்குள் நுழைய கதவுகளேயில்லை
ஆனால் இருளுக்குள் இருந்து
இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு
நிறைய தடுப்புகள் இருக்கிறது
*
கூடை நிறைய
பழங்களோடு வந்திருந்தாள்
மத்தியான்னத்திற்கும் சாயங்காலத்திற்குமான
இடைப்பட்ட புள்ளியில்
பழத்தை உண்டு
கொட்டையை நிலத்தில் வீசினாள்
இது நெய்தல் பெண்ணே
இங்கு இதன் விதைகள் வளராது
மறுமுறை விதையை உண்டு
பழத்தை நிலத்தில் வீசினாள்
இது நிலம் பெண்ணே
பழங்களை உண்ணாது
இம்முறைக்கு பழங்களையும்
விதைகளையும் உண்டு
வெறுங்கையை வீசினாள்
புரிந்தார்போலச் சிரித்தேன்
பதிலுக்குச் சிரித்தவளின்
தலையில் பெயர்தெரியா மரக்கிளைகள்
*
அவளுக்கு எதிரே கடல் அமர்ந்திருந்த்து
கரையோர மணலில் ஒரு பிடி அள்ளி
தன் பாதத்தைப் புதைத்துப் பார்த்தாள்
வெதுவெதுக்குள் சில்லென மின்னியது
இந்த விளையாட்டு பிடித்துப்போக
மறுமுறைக்கு மணலே
அவள் உள்ளங்கைக்குள் அமர்ந்துகொண்டது
அவளை அவள் மேனி முழுக்க
புதைக்கச் சொல்லி தூண்டியது
குழிதோண்ட வைத்தது
புதைவுக்கு ஏற்றார்போல் இசைவு செய்தாள்
தலையை வெளிவைத்து புதைத்தும்கொண்டு
தன் உடலை எக்கிப்பார்த்தாள்
அந்தப்பெண் தலைக்கு
கரையோர உவர்நிலமே உடலாய்
பரவி விரிந்திருந்தது.