தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1

பகுதி ஒன்று . பக்கிரியும் பாடகனும்

தோப்பில் முகம்மது மீரான் என்னை முதன்முதலில் சந்தித்தபோது கேட்ட்து “நீங்க பசீரை பாத்திருக்கேளா?” என்றுதான். அவருக்கு வைக்கம் முகம்மது பஷீர் முன்னுதாரண எழுத்தாளர். “பசீர் போல எளுத முடியாது…” என்று ஏக்கத்துடன் சொல்வார். தமிழில் மீரானுக்கு முன்னோடிகள் இல்லை. அவருடைய முன்னோடி பஷீர்தான். மாணவராக இருக்கையிலேயே அவருக்கு பஷீர் அறிமுகமாகிவிட்டார். ”பஷீரை முதல்ல படிக்கிறப்பம் ஒரு தமாசக்காரன்னாக்கும் நினைச்சது. உள்ள போயி அவருக்கு உள்ள இருக்கப்பட்ட சூப்பிய பாக்கியதுக்கு பத்து இருபது வரியமாயிப்போட்டு” என்றார் மீரான். இருபதாண்டுகளுக்கும் மேலாக பஷீரை உபாசித்து வந்திருக்கிறார்

அவர் எழுதிய முதல் நாவலின் கைப்பிரதியை வாசித்தபின் சுந்தர ராமசாமி அவரிடம் சொன்னார். “வைக்கம் முகம்மது பஷீரோட சாயல் நெறைய இருக்கு” மலர்ந்து போய் கைகூப்பிக்கொண்டே இருந்தார் மீரான். “ரொம்ப நல்ல விஷயம் அது… நல்ல தொடக்கம் இருக்கிறதைபோல இலக்கியத்திலே பெரிய அதிர்ஷ்டம் ஒண்ணுமே கெடையாது” மீரான் கண்கலங்கினார். அதன்பின் அதை என்னிடம் சொன்னபோதும் கண்கலங்கினார். “பஷீர்னு சொல்லிப்போட்டாரே. பின்ன என்னவேணும்? அப்பமே நெறைஞ்சுபோச்சு கேட்டேளா?”

என்னிடம் சுந்தர ராமசாமி சொன்னார்.  “இலக்கியத்திலே இவரபோல பிளெஸ்ட் ஸோல் வேற கண்டதில்லை. மலையாளத்திலே நெறைய வாசிச்சிருக்கார். தமிழில ஒண்ணுமே வாசிச்சதில்லை. மலையாளத்திலே அவரு வாசிச்சது எல்லாமே அங்க உள்ள நல்ல இலக்கியங்களைத்தான். ஒருவரி கூட கமர்ஷியல் ரைட்டிங் படிக்காம இலக்கியத்துக்குள்ள வந்திட்டார்… எவ்ளவுபெரிய எனெர்ஜி சேவிங்! இங்க ஒருத்தர் நாகர்கோயில் வர்ரதுக்கு திருவனந்தபுரம் போயி எர்ணாகுளம் வழியா மதுரவந்து திருநெல்வேலி வழியால்ல வந்து சேரவேண்டியிருக்கு”

சுந்தர ராமசாமி சொன்னார். வணிக எழுத்தின் வழியாக இலக்கியத்திற்குள் வருவதன் மூன்று இடர்பாடுகள். வாசகர்களுக்கும் அது உண்டு. வணிகசினிமா வழியாக நல்லசினிமாவுக்குள் செல்வதற்கும் இந்த இடர்பாடுகளைக் காண்கிறேன். ஒன்று, வாசிக்கும்போதே படைப்பு தன்னை மகிழ்விக்கவேண்டும், அந்த எழுத்தாளர் அதற்கு முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு . இரண்டு, எல்லாவற்றையும் பொதுவாகப்புழங்கும் அன்றாடமொழியிலேயே சொல்லிவிடமுடியும் என்னும் நம்பிக்கை. இலக்கியத்தில் மொழி என்பது சிந்தனையை, தயக்கத்தை, அகச்சிடுக்குகளை எல்லாம் சொல்வதற்குரியது என்றும் சொல்வதற்கு நிகராகவே அது சொல்லாமல் உணர்த்தவும் முயல்கிறது என்றும் தெரியாமலிருப்பது. மூன்று, இலக்கியம் என்பது ஒரு கருத்தைச் சொல்வது அல்ல, ஒரு நிகர்வாழ்க்கை அனுபவத்தை அளிப்பது என்னும் தெளிவில்லாமலிருத்தல்.

இந்த மூன்று இடர்களினால் நல்ல படைப்புக்களை நிராகரிப்பார்கள் வணிக எழுத்தின் வாசகர்கள். இலக்கியத்தின் நுட்பமான இடங்களை புரட்டிச்சென்றுவிடுவார்கள். தங்களுக்குத்தெரிந்ததை அதில் மீண்டும் எதிர்பார்ப்பார்கள். உண்மையின் கூர்மையை விட தளுக்கு ஒழுக்கு ஆகியவற்றை விரும்புவார்கள்.

மீரான் பஷீரிலிருந்து தொடங்கி பிற அனைவரையும் வாசித்திருந்தார். மலையாளத்தில் கவிதைகள்கூட எழுதிப்பார்த்திருந்தார். “மலையாளத்தில் இவர மாதிரி பஷீரோட வாரிசுகள் யார்?” என்று சுந்தர ராமசாமி கேட்டார். நான் அப்போது அவருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடித்ததின் உள்ளடக்கம் இன்னொரு கட்டுரையிலும் வந்தது. மலையாளத்தில் பஷீருக்கு இரண்டு வகையான மாணவர்வரிசை உண்டு. ஒருசாரார், பஷீரின் அங்கதத்தையும் தத்துவ தரிசனத் தளத்தையும் முன்னெடுப்பவர்கள். முதன்மையானவர் வி.கே.என். பட்டத்துவிள கருணாகரன், ஓ.வி.விஜயன் ஆகியோரிலும் பஷீரின் தொடர்ச்சி உண்டு

யு ஏ காதர்

இன்னொருவகையினர், பஷீரின் ‘கள்ளமில்லா கதைசொல்லி’ ஆக தங்களை உருவகம் செய்துகொள்பவர்கள். பஷீரின் சமூகவிமர்சனத்தன்மை, கதாபாத்திரச் சித்தரிப்பு ஆகியவற்றை தொடர்பவர்கள். அனைத்துக்கும் மேலாக பஷீர் என்னும் மனிதநேயரின் வழித்தோன்றல்கள். யு.ஏ.காதர் அவர்களில் முக்கியமானவர்.வி.ஏ.ஏ.அஸீஸ் , புனத்தில் குஞ்ஞப்துல்லா, டி.வி.கொச்சுவாவ ஓன்று ஒரு நிரை அங்கே உண்டு. தோப்பில் இந்த வரிசையில் வரும் படைப்பாளி.

தோப்பிலின் முதல்நாவலான  ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’க்கு முன்னோடியாக அமைந்த சில நாவல்களை மலையாளத்தில் சுட்டிக்காட்ட முடியும். யூ.ஏ.காதரின் ‘சங்ஙல’ என்னும் நாவல். வி.ஏ.ஏ.அஸீஸ் எழுதிய ’துறமுகம்’. ஓரளவுக்கு புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘ஸ்மாரக சிலகள்’ [தமிழில் மீசான் கற்கள், தமிழாக்கம் குளச்சல் மு யுசுப்] இந்நாவல்களில் மீரான் வி.ஏ.ஏ.அஸீஸை படித்ததில்லை. நான் அவருக்கு துறமுகம் நாவலை தேடிப்பிடித்து அனுப்பினேன்.

மீரானில் எங்கே பஷீரைக் கண்டடைவது? கடலோரக் கிராமத்தின் கதையில் தபால்காரரிடம் சர்க்கரைப்பொங்கல் நிறைத்த தூக்குபோணியை கொடுத்து ‘சிந்தாமல் சிதறாமல்’ கொழும்புவில் இருக்கும் தன் கணவனிடம் சேர்ப்பித்துவிடும்படிச் சொல்லும் பெண் பஷீர் எழுதியிருக்கக்கூடிய கதாபாத்திரம். மீன்வெட்டி பிழைப்பு நடத்துபவர் கடும் வறுமையில் குழந்தைகளுக்கு மரவள்ளிக்கிழங்கு வாங்குவதற்காக மீன்வெட்டும் கத்தியை விற்றுவிட்ட மறுகணமே பெரிய மீன்வெட்ட வாய்ப்பு வரும் தருணம் அதன் அபத்த தரிசனத்தால் எல்லாவகையிலும்  ‘பஷீரியன்’ எனப்படத்தக்கது.

பஷீரில் இருக்கும் ’கதைசொல்லி’தான் மீரானிடமும் வாழ்கிறார். விரிவாக விவாதித்தால் வாசக ஆர்வம் குறையும். ஆனால் சில குறிப்பிட்ட கூறுகளைச் சுட்டிக்காட்டுவது வாசிப்பை விரிவடையச்செய்யக்கூடும். பஷீரின் உரையாடல்கள் வழக்கமானவை அல்ல. அன்றாடவாழ்க்கையில் நாம் பேசுவது பொதுவாக தொடர்சொற்றொடர்களாகத்தான். உதிரி ஒற்றைவரிகளாக அல்ல. ஆனால் பஷீர் அப்படித்தான் எழுதுவார். அந்த உரையாடல் ஹெமிங்வேயின் வழியாக உலகளாவ இலக்கியத்தில் பரவியது.  பஷீர் ஹெமிங்வேயின் நல்ல வாசகர். அதை அவர் பதிவுசெய்திருக்கிறார்.

ஹெமிங்வேயின் உரையாடல் பாணி எங்கிருந்து வந்தது? அது போர்முனை உரையாடல். அவர் போர்ச் செய்தியாளர். அவருடைய பல நாவல்கள் போர்ப்புலம் கொண்டவை. பின்னர் அந்த உரையாடல்முறை குறைவாகச் சொல்லி நிறைய உணரச்செய்வதற்கு உதவுவதை ஹெமிங்வே கண்டுகொண்டார். அது மேற்கத்திய விறுவிறுப்பு நாவல்களுக்குரிய அழகியலாக பின்னர் மாறியது

தமிழில் ப.சிங்காரத்தின் நாவல்களில் அந்த உரையாடல்முறையை நாம் காணலாம்.

‘சோறு?”

“எங்காவது”

என்று புயலிலே ஒரு தோணியில் வரும் உரையாடல் ஓர் உதாரணம். அசோகமித்திரன், ஜி.நாகராஜன் இருவரும் அந்த உரையாடலுக்காக முயன்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் புனைவுப்புலத்திற்கு ஏற்ப அவ்வுரையாடல்களை மறுஆக்கம் செய்து பொருத்த அவர்களால் இயலவில்லை.

பஷீர் அதை அப்படியே மலையாளத்திற்குக் கொண்டுவந்தார். அவருடைய சமகால இலக்கியத்தோழர்கள் செகாவிலிருந்தும் மாப்பசானில் இருந்தும் ஊக்கம் கொண்டபோது பஷீர் ஹெமிங்வேயிலிருந்து தொடர்ச்சி கொண்டார் என்பது வியப்பானதுதான். ஆனால் பஷீரல் ஹெமிங்வே உண்ணப்பட்டு நன்கு செரிக்கப்பட்டார். பஷீரின் உரையாடல்களில் நேரடியாக ஹெமிங்வேயை காணவே முடியாது. அவை மாப்பிளாக் கலாச்சாரத்திற்குள் ஆழச்சென்றவை. அம்மக்களின் சொற்களின் மழுங்கலை மட்டும் அல்ல ஓசையைக்கூட எழுத்தில்கொண்டுவந்தவை. எந்த இலக்கிய அழகியலும் எங்கோ இருக்கும் இன்னொன்றின் தொடர்ச்சியே. மேதைகளில் அது முற்றாக அவர்களுடையது என தோற்றம் அளிக்கிறது

பஷீருக்கு அந்த சுருக்கமான உதிரிவரி உரையாடல்கள் அவருடைய கதைப்புலம் யதார்த்தமானது என நம்பவைக்கையிலேயே யதார்த்தம் மீறிச்சென்று நுண்வாசிப்பை நிகழ்த்தும்படி வாசகனைச் செலுத்துவதற்கு மிகவும் பயன்பட்டன. அவருடைய ஆக்கங்களில் அந்தச் சுருக்கமான ஒற்றைவரி உரையாடல்கள் அவ்வப்போது கவித்துவம் கொள்கின்றன. சூஃபி தரிசனம் எழுகையில் விந்தையான முறையில் ஜென் மொழிகள் என உருமாறுகின்றன.

பஷீர் மலபார் மாப்பிளா கலாச்சாரத்தின் பதாகை. ஆனால் அவர் அவர்களின் வாழ்க்கையை எழுதவே இல்லை.தகழியை ‘குட்டநாட்டின் கலைஞன்’ என்று சொல்வதுபோல பஷீரை ‘மாப்பிளைக் கலாச்சாரத்தின் கதைசொல்லி’ என்று சொல்லமுடியுமா என்ன? பஷீர் ‘பஷீரின் கதைசொல்லி’ மட்டும்தான். எல்லா கதைகளிலும் அவரே நாயகன். அவருடைய வாழ்க்கை. அவருடைய சூழல். அவற்றில் மாப்பிளாக் கலாச்சாரமே கிடையாது. அவற்றினூடாக மலபார் மாப்பிளாக்களின் உணவு, உறவுகள் எதையும் உணரமுடியாது.

அதேசமயம் அவை பஷீரையும் காட்டவில்லை. அவை காட்டும் பஷீர் அல்ல உண்மையான பஷீர். வெவ்வேறு நினைவுக்குறிப்புகள் வழியாக எழும் பஷீர் முற்றாக இன்னொருவர். பஷீரின் அந்த சுயசரிதைத்தன்மைதான் அவருடைய மாபெரும் புனைவு. அவர் தன் தரிசனங்களை அகவயமாக நிகழ்த்திப்பார்க்கும் ஒரு களம் அது. வெளியே உள்ள மெய்வாழ்விலிருந்து சில தரவுகளை எடுத்துக்கொண்டு அவர் அதை உருவாக்கிக்கொள்கிறார்.

மீரானிடம் பஷீரின் அந்த உரையாடல்முறை தொடர்வதை நாம் காணலாம்.

“அவன் இப்பம் காங்கிரசாக்கும்”

“அப்படீண்ணா”

“காந்திக்கெ கச்சி. வெள்ளக்கானுவளெ வெரட்டனுமெண்ணு செல்லுத கச்சி”

“ஓஹோ அப்படியா சங்கதி?”

“அவன் காங்கிரசானதினாலே நம்மொ முஸ்லீம்களெல்லாம் லீக்காவணும்”

“அதென்னவாக்கும் சங்கதி? மனசிலாவல்லியே….”

“ஜின்னாக்கெ கச்சி”

“நல்ல மூளைதான் ஹபீபே, ஜின்னா நம்மொ இஸ்லாமான ஆளுதானா?”

“பின்னே? பத்தரமாத்து!”.

முழுக்க முழுக்க பஷீரியன் உரைநடை. இந்த உரையாடலை ஓ.வி.விஜயனின் ‘கசாக்கின் இதிஹாச’த்திலும், புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான்கற்களிலும் கூட காணலாம். பஷீரில் கள்ளமற்ற நகைப்பும் அவ்வப்போது கவித்துவமும் திகழ வழிவகுக்கும் இந்த உரையாடல் மீரானில் கூரிய விமர்சனத்திற்குரிய கருவியாக ஆகிறது. காந்தி இந்து, ஆகவே முஸ்லீம்கள் லீக் ஆகவேண்டும்.ஜின்னா முஸ்லீம், ஆகவே அவர் பத்தரை மாற்று. இந்த வரிகளினூடாக இரு உள்ளங்கள் மட்டும் அல்ல, அவற்றை சுட்டிக்காட்டும் மீரானின் வலுவான கேலியும் வெளிப்படுகிறது

துயர் மிக்க தருணங்களிலும் இதே மொழிதான்.

”எனக்கு உடுப்பு இல்லை”

“உன் உடுப்பை துவைச்சு போட்டிருக்கு”

“அது கிழிஞ்சது இல்லையா?”

“காலையிலே கிழிஞ்சதை தைச்சு தாறேன்”

“தச்ச உடுப்ப போட்டுட்டுப் போனா பையங்க சிரிப்பாங்க”

“வாப்பா இல்லாத உன்னைப்பாத்து சிரிச்சா சிரிக்கட்டும்”

இவற்றினூடாக சொல்லவேண்டிய அனைத்தையும் சுருக்கமாக உணர்த்த அவரால் முடிகிறது. பஷீரிலிருந்து மீரான் பெற்றுக்கொண்ட உதிரிச்சொல் உரையாடல்கள் அவருடைய நாவல்களை நுட்பான அகவெளிப்பாடு கொண்டவை ஆக்குகிறது. கதைமாந்தர் பேசிச்செல்லும்போதே என்ன எண்ணுகிறார்கள், எதை உணர்கிறார்கள் என வாசகன் உய்த்துணரச் செய்கின்றன அவை.

யதார்த்தவாத எழுத்தின் மிகப்பெரிய சுமையே யதார்த்தம்தான். தொடர்ச்சியாக இரு யதார்த்தவாதக் கதைகளை வாசித்தால் நம் உள்ளம் சலிப்புறுவதைக் காணலாம். ஏனென்றால் வாசிப்பென்பதே யதார்த்த அன்றாடத்தில் இருந்து தப்புவதற்கான விழைவால்தான் நிகழ்கிறது. யதார்த்தவாத கதையில் உரையாடல்கள் யதார்த்தமாக இருந்தாகவேண்டும். அவற்றில் கவித்துவமும் தரிசனமும் எழ முடியாது, கூடாது. அவை எழாத மொழி நமக்கு விரைவிலேயே சலிப்பூட்டும். அச்சவாலை வெவ்வேறு வகையில் நல்ல படைப்பாளிகள் கடந்துசெல்கிறார்கள். மீரான் கடந்துசெல்லும் வழி இது.

பஷீரின் இன்னொரு தனித்தன்மை மேலும் ஆர்வமூட்டுவது. பஷீர் கஸல்பாடல்களில் மிக ஈடுபாடு கொண்டவர். அவற்றின் கற்பனாவாதத் தன்மை அவரை மிகமிகக் கவர்ந்தது. அவர் வாசிக்க ஆரம்பித்தபோது மலையாளத்தில் எழுதப்பட்ட அமிருதபுளினம், மார்த்தாண்டவர்மா போன்ற கற்பனாவாத நாவல்களின் நடையையும் அவர் ரசித்திருந்தார். ஆனால் அவருடைய புனைவுலகில் அந்த வரிகளுக்கு இடமில்லை. ஆகவே அவை மெல்லிய பகடியாக திரிந்து அவருடைய படைப்புக்களில் வெளிவந்தன. “அன்றும் சூரிய பகவான் தன் பொன்னொளிக் கிரணங்களை பரப்பியபடி வானில் எழுந்தான். கீழே பார்த்தான். வேறு விசேஷம் ஒன்றுமில்லை, எல்லாம் வழக்கம்போல” என்பதுபோன்ற வரிகள் ஓர் உதாரணம்

ஆனால் பஷீரிடமிருந்து பெற்ற  அந்த கற்பனாவாதச் சாயல்கொண்ட சூழல்விவரணையை மீரான் அப்படியே பயன்படுத்துகிறார். அவருடைய கதைகளின் சூழல் மிகமிக பின்தங்கிய மக்களால் நிறைந்தது. அழகு நிறைந்த இடங்களில்கூட வாழ்க்கை அழுகிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான கதைகளில் வீழ்ச்சியையும் சிதைவையும்தான் அவர் எழுதினார். அந்தச் சித்தரிப்புகளுக்கு மீதாக தொடர்பில்லாமல் அவருடைய இயற்கை வர்ணனைகள் நின்றிருக்கின்றன.பல நாவல்களில் அத்தியாயங்களின் தொடக்கத்தில் அதைக் காணலாம்

உதாரணமாக “மேற்குவானத்தின் விலாப்பக்கத்தின் வழியே நழுவி இறங்குகின்ற கிழவன் சூரியனின் ஈற்றில் மலரும் சிவந்த சிரிப்பில் தென்னையின் தலைகள் குளித்து ஈரம் புலர்த்தி நின்றன” என தொடங்குகிறது ஒரு கதை. [இறக்கை இழந்த பறவைகள்] இந்த வர்ணனைக்கும் கதைக்கும் தொடர்பே இல்லை.

ஆனால் தொடக்கம் முதலே இந்த வர்ணனைகள் அவருடைய புனைவுலகின் ஓர் இன்றியமையாத கூறு என எனக்குப் பட்டிருக்கிறது. 1986 வாக்கில் ஆ.மாதவன்  ‘ஒரு கடலோரக்கிராமத்தின் கதை’ யின் கைப்பிரதியைப்பற்றிப் பேசும்போது இதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டினார். அன்று நான் சொன்னேன், அது அவர் ஒரு கதைசொல்லியாக திகழ்கையில் குறையாக இல்லை என்று. அவர் ஒரு கதைப்பாடகர். பச்சை உருமால்கட்டி ஆர்மோனியத்துடன் அமர்ந்து ஜின்னுகளையும் ஹூரிகளையும் பற்றிப் பாடுபவர். அந்தப் பாடலின் ‘எடுப்பு’கள் இந்த வர்ணனைகள். அவை ஓர் தூய யதார்த்தச் சித்தரிப்புக்குத்தான் அயலானவை. கதைசொல்லிக்கு அல்ல. அவனால் வானின் மகத்துவத்தை பற்றி பாடிவிட்டு தெருவின் சாக்கடையைச் சொல்லத் தொடங்கமுடியும்.

மீரானுக்கும் பஷீருக்குமான ஒரு முக்கியமான வேறுபாட்டைச் சுட்டி மேலே செல்லவேண்டும். ஒருவகையான முரண்விளையாட்டாகவே அதைச் சொல்லமுடியும்.  பஷீர் தன்வரலாற்றை எழுதியவர். மீரான் புறவாழ்க்கையை கதைசொல்லியாக நின்று எழுதியவர். பஷீரில் சமூகச்சித்தரிப்பே இல்லை. மீரானில் சமூகச்சித்தரிப்பே கதையென அமைகிறது. அவருடைய இலக்கே சமூகவிமர்சனம்தான். ஆனால் பஷீரின் தன்வரலாற்றில் பஷீர் இல்லை. அது பெரும்பாலும் புனைவு. மீரானின் சமூகசித்திரத்தின் அடியில் எப்போதும் கூரிய விமர்சனத்துடன் மீரான் இருந்துகொண்டிருக்கிறார். புனைவுக்கு அடியில் அது பெரும்பாலும் நிகழ்ந்த உண்மைகளால் ஆனது.

பஷீரை தொடர்ந்து வந்த இலக்கியவாதிகள் பஷீரிடமிருந்து வேறுபடுவது அவர்கள் புறவயமாகப் பார்த்து எழுத ஆரம்பித்தமையால்தான். யு.ஏ.காதர், வி.ஏ.ஏ.அஸீஸ் ,புனத்தில் குஞ்ஞப்துல்லா போன்ற அனைவருமே இஸ்லாமிய சமூகவாழ்க்கையின் சித்திரத்தை அளிக்க முயன்றார்கள். யூ.ஏ.காதரின் சங்கல, வி.ஏ.ஏ.அஸீஸின் துறமுகம், புனத்திலின் மீசான் கற்கள் என இப்படைப்புகளில் பெரும்பாலானவை இஸ்லாமிய சமூக அமைப்பின் வீழ்ச்சியை அல்லது வளர்சிதை மாற்றத்தைச் சித்தரிப்பவை. ஒரு பெரிய இஸ்லாமியக்குடும்பத்தின் சரிவை காட்டும் நாவல் சங்ஙல. ஒரு காலகட்டமே மறைவதை மீசான்கற்கள் காட்டுகிறது. ஆலப்புழா துறைமுகத்தின் வீழ்ச்சியுடன் அதை நம்பி வாழ்ந்த இஸ்லாமிய வணிகர்களின் வாழ்வும் பண்பாடும் மறைவதை வி.ஏ.ஏ.அஸீசின் துறமுகம் காட்டுகிறது.

தோப்பிலின் நாவல்களும் இதே பாணியிலானவைதான். ஒரு கடலோரகிராமத்தின் கதையே வீழ்ச்சியின் சித்தரிப்புதான். சாய்வுநாற்காலி மேலும் தெளிவாக அச்சரிவைச் சித்தரிக்கிறது. செயலற்று, துருவேறி அழியும் இஸ்லாமிய சமூகத்தை நோக்கி பரிவும் விமர்சனமும் எள்ளலும் துயருமாக அவை பேசுகின்றன. அவற்றின் போலிநடிப்புகள், சுயஏமாற்றுதல்கள், தேங்கிநின்றமையால் எழும் வன்மங்கள், பிறசமூகங்களுடனான பூசல்கள் ஆகியவற்றை விரிவாகச் சித்தரிக்கின்றன.இந்த சமூகச்சித்தரிப்புப் பரப்பில் கதைசொல்லியில் பஷீர் வாழ்கிறார். அவர் இந்த வாழ்க்கைக்கு அப்பால் இதை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் கண்கொண்டிருக்கிறார். ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் தர்காவில் ஊரை நோக்கி புன்னகைத்தபடி வாழும் சூஃபி பக்கிரி பஷீர்.அங்கே ஆர்மோனியத்துடன் வந்தமர்ந்த பாடகர் தோப்பில்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61