தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1

பகுதி இரண்டு: மேலும் துல்லியமான காலண்டர்

மீரானுக்கு முன் இஸ்லாமிய வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் எழுதியவர்கள் இல்லையா? இலக்கியச்சூழலில் இல்லை. வணிக இலக்கியச் சூழலில் இரண்டு பெயர்களைச் சொல்லலாம். கருணாமணாளன், ஜே.எம்.சாலி. இருவருமே அன்றைய பிரபல இதழ்களில் எழுதியவர்கள். எழுதிக்குவித்தவர்கள் என்று சொல்ல்லாம். அவர்களின் எழுத்தின் போதாமைகள் சில உண்டு. அவற்றில் வணிகச்சூழலில் எழுதியமையால் அமைந்தவை முதன்மையானவை. அவற்றை எளிய வாழ்க்கைச்சித்திரங்கள் என்று மட்டுமே சொல்லமுடியும். வாசகனுக்கான இடைவெளிகள் அற்றவை. ஆசிரியரே மையக்கருத்தைச் சொல்லி முடிப்பவை. வாசகர்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் விழுமியங்களை முன்வைப்பவை.

அவற்றுக்குமேல் உள்ள போதாமை என்பது இஸ்லாமியத் தன்னுணர்வு எனலாம். தாங்கள் இஸ்லாமியர், சிறுபான்மையினர், ஆகவே பெரும்பான்மையினருக்கு தங்களைப்பற்றி நல்லெண்ணம் உருவாகவேண்டும் என்னும் நோக்கம் கொண்டவை அப்படைப்புக்கள். ஆகவே மிகமிகக் கவனமாக மிகச்செயற்கையான ஒரு சித்திரத்தை அவை அளித்தன. பெரும்பாலும் எல்லா இஸ்லாமியக் கதைமாந்தரும் மிக நல்லவர்கள். சின்னச்சின்ன சிக்கல்கள்கூட புரிந்துணர்வு இன்மையால் வருபவை, கதைக்குள்ளேயே அவை தீர்ந்தும்விடுகின்றன. ராவுத்தர் மரைக்காயர் என்றாலே அன்பானவர்கள், நல்லவர்கள் என்றே அக்கதைகள் காட்டின

அன்றைய இஸ்லாமியர் அல்லாத எழுத்தாளர்கள் இஸ்லாமியர் பற்றி ஒரு சித்திரத்தை எழுதினார்கள். அவையும் மிகமிகக் கவனமாக எழுதப்பட்டவை. இஸ்லாமிய உணர்வுகளை புண்படுத்தலாகாது என்னும் கவலைகொண்டவை. ஆகவே இஸ்லாமியர் எப்படி தங்களை முன்வைத்தார்களோ அதை அப்படியே வாங்கிக்கொண்டு அவற்றை அப்படியே அவர்களுக்கு திரும்ப அளித்தன.  பிரபஞ்சனின் பாயம்மா ,யாஸ்மின் அக்கா போன்ற கதைகளைச் சுட்டிக்காட்டலாம். இதைப்போன்ற ஒரு தளுக்கான, எங்கும்படாத எழுத்துக்களின் சூழலில்தான் மீரான் எழுந்துவந்தார்.  ‘அவருடைய இலக்கிய இடம் அவர் நுழைந்த அரைமணிநேரத்திலேயே முடிவாகிவிட்டது’ என்று ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார்.  ஏனென்றால் அவர் ஒரு முன்னோடி. தமிழின் நவீன இஸ்லாமிய இலக்கியம் அவரிடமிருந்துதான் தொடங்குகிறது.

மீரான் தன் இடத்தை, தன் பணியை உணர்ந்து எழுதவந்தவர் அல்ல. அவர் எழுதவந்தது இலக்கியத்திற்காகவும் அல்ல. 1989ல் அவரை நேரில் சந்தித்தபோது அவர் தான் எழுத வந்தமைக்கான காரணமாகச் சொன்னது ஒன்றே ஒன்றுதான். “நெறைய அனுபவிச்சாச்சு. அதையெல்லாம் எளுதல்லேண்ணா ரோகம் வந்து செத்துப்போயிடுவேண்ணு தோணிச்சு”. மீரான் அவருடைய சொந்த ஊரான தேங்காய்ப்பட்டினத்தில் இஸ்லாமிய மத- சமூக அமைப்புக்கு எதிரானவராக பார்க்கப்பட்டார். ஒருவகை ஒதுக்குதல் அவருக்கிருந்தது. அவர் நெல்லைக்கு இடம்பெயரவும் அதுதான் காரணம் எனச் சொல்லியிருக்கிறார்.

பழைய அமைப்புமேல் மீரான் கொண்ட ஒவ்வாமையும் அவருடய எதிர்ப்பும் மிக வெளிப்படையானவை. அவருடைய நாவல்கள் அவற்றை மிக நேரடியாகப் பேசுபவை. அவர் எளியமக்கள் மேல் கனிவுகொண்டவர். அவரை 1989 ல் நாகர்கோயில் நெய்தல் இலக்கியக்கூட்டத்தில் அறிமுகம்செய்து பேசும்போது சுந்தர ராமசாமி அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது இதுதான். அவருடைய புனைவுலகை உருவாக்கும் மையமான உணர்ச்சி எளிய மக்கள் மேல் கொண்ட கருணை. அவர் அவர்களில் ஒருவராக தன்னை உணர்கிறார்- அவர்களின் அனைத்து உணர்வுகளையும் தானும் அடைகிறார்

ஆனால் சமூகநிலை என்ற அளவில் அவர் அவர்களில் ஒருவர் அல்ல. இரு தலைமுறைக்கு முன்னரே ஓரளவு பொருளியல்மேம்பாடும் குடும்பமேன்மையும் அமைந்துவிட்ட குடியைச் சேர்ந்தவர்தான். தன் வாழ்விலும் அவர் வளமாகவே இருந்தார். அவரில் எழுந்த அந்தக் கருணை ஒடுக்கப்பட்டவர்களின் குரல் அல்ல. தன்னியல்பாலேயே ஒடுக்கப்பட்டவர்களைச் சார்ந்து எழும் படைப்பாளியின் தன்னிலை அது.

மீரான் அம்மக்கள் மேல் கொண்ட கருணை அவர் எழுதிய அனைத்துக் கதைகளிலும் வெளிப்படுகிறது. அம்மக்களின் வறுமையை எளிமையாகவும் அறியாமையை கள்ளமின்மையாகவும் காட்டுகிறது அக்கருணை. அவர் அம்மக்களை நோக்கி எப்போதும் புன்னகைக்கிறார். சாலையில் அவர்களைக் கண்டால் அன்புடன் ஓரிரு சொல் பேசாமல் கடந்துசெல்லமாட்டார் என்பதுபோல. மீண்டும் மீண்டும் அவர்களின் பசியை கவனிக்கிறார் மீரான். வயிற்றுப்பசி அளவுக்கே கூட உடலின் பசியைக்கூட. ஒரு கடலோரக்கிராமத்தின் கதையில் ஒரு பெண் கதாபாத்திரத்தின் தற்கொலை பற்றிய கேள்வி எழுந்தபோது மீரான் ‘அவளுக்க பசி அது… பசிய அடக்க அங்க வழியில்ல. அதனால செத்தா” என்று பதில்சொன்னதை நினைவுறுகிறேன்.

எளியமக்களின் வாழ்க்கை என்பது அன்றாடப்போராட்டம். உணவுக்காக, உறைவிடத்திற்காக, சமூக இடத்திற்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக. அந்த மக்களுக்கு அதற்கப்பால் பொருளுள்ள ஏதுமில்லை. கடவுள், மதம், அரசு ,சமூகம் எல்லாமே அதன்பொருட்டுத்தான். அவர்களின் எல்லா வேண்டுதல்களும் அதை எண்ணியே. எல்லா சார்புநிலைகளும் அதன்பொருட்டே. அந்த மக்கள்மேல் வரலாறுமுழுக்க செலுத்தப்படும் ஒடுக்குமுறையின், அதன்விளைவான வன்முறையின் சித்திரம் மீரானின் நாவல்களில் வெளிப்படுகிறது.

இருவகையானது அந்த வன்முறை. ஒன்று நேரடியான அடக்குமுறை. இன்னொன்று செயற்கையாக உருவாக்கப்படும் பூசல்கள் வழியாக அவர்கள் ஒருவரோடொருவர் மோதவிடப்பட்டு உருவாக்கப்படும் வன்முறை. ஒரு கடலொரக்கிராமத்தின் கதை முதல்வன்முறையைச் சித்தரிக்கிறது. துறைமுகம் இரண்டாவது வன்முறையைச் சித்தரிக்கிறது. மீரானின் கதாபாத்திரங்களில் அச்சூழலுக்கு அப்பால் பார்வை எழுந்து மெய்யை காணும் கண்கொண்ட கதைமாந்தர் சிலர் உண்டு. ஒரு கடலோரக் கிராமத்தின் கதையில் வரும் மஹ்மூது, மெஹ்பூப் முதலிய கதைமாந்தர் உதாரணம். அவர்களினூடாக மீரான் அம்மக்களை நோக்கிப் பேசுகிறார். அவர் கண்டவற்றை முன்வைக்கிறார்.

இஸ்லாமியச் சமூகத்தின் பழைமையான அதிகாரம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மீரான் ஒரு கடலோரக் கிராமத்தின் கதையில் காட்டுகிறார். பொருளியல் அதிகாரம் தன் சுரண்டலுக்காக மதத்தை கையாள்கிறது. மத அமைப்பை பொருளியல் மேலாதிக்க அமைப்பு கையடக்கி தன் கருவியாக ஆக்கிக் கொள்கிறது. வடக்கு வீட்டில் அகமதுக்கண்ணு முதலாளி அவ்வகையில் ஒரு உதாரண கதாபாத்திரம். அவருடைய அதிகாரம் முகம்மது முஸ்தபா இம்பிச்சிசிக்கோயாத் தங்ஙள் போன்ற மத அதிகாரம் கொண்டவர்களால் உருவாகிறது.

தங்கள் என்றால் முகமது நபியின் நேரடிக் குருதிவழியில் வந்தவர்கள் என்று கேரளத்தில் பொருள். முகமது நபியின் வழிவந்த மாலிக் தினார் இபுனு கேரளத்தில் 108 மசூதிகளை அமைத்த்தாக தொன்மம். அதிலொன்று தேங்காய்ப்பட்டிணத்திலும் அமைந்தது எனப்படுவதுண்டு. தங்கள்கள் அந்த குருதிமரபை சொல்லிக்கொள்வதனாலேயே மத அதிகாரம் கொண்டவர்கள். செல்வம், காமம் என திளைக்கிறார்கள். [இன்றும்கூட கேரளத்தில் இவர்களின் அதிகாரம் கேள்விக்கு அப்பாற்பட்டதுதான்] அவர்களை பயன்படுத்திக்கொண்டு நிலக்கிழார்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக்கொள்கிறார்கள். ஏழை மக்கள்மேல் தங்கள் சுரண்டலை நிகழ்த்துகிறார்கள். அகமதுகண்ணு முதலாளி மசூதியின் தொழுகைக்கு தன் தலைப்பாகையை கொடுத்தனுப்பும் காட்சியில் மதமும் நிலப்பிரபுத்துவ அதிகாரமும் இணைந்திருக்கும் நிலையை காட்டுகிறார் மீரான்.

இந்த அதிகாரத்தை எதிர்க்கும் இரண்டு குரல்கள் ஒரு கடலோரக்கிராமத்தின் கதையில் உள்ளன. ஒன்று, மஹ்மூது. சுறாப்பீலி வியாபாரம் செய்பவரான மஹ்மூது இஸ்லாமுக்குள் இருந்து எழும் சீர்திருத்தக் குரல். அவருடைய எதிர்ப்பு பெரும்பாலும் குரானையும் ஹதீஸுகளையும் அடிப்படையாகக் கொண்டது. சுரண்டலுக்கு இஸ்லாமிய மதம் பயன்படுத்தப்படுகிறது, இஸ்லாமிய மதத்தின் அடிப்படைகளில் அதற்கு இடமில்லை என மஹ்மூது நினைக்கிறார். பள்ளிவாசலின் இமாமைக்கூட ஓர் இஸ்லாமியன் சார்ந்திருக்கவேண்டியதில்லை, தொழுகை நிகழ்த்தக்கூட இஸ்லாமிய அமைப்பின் தேவை இல்லை, குர்ஆனின் ஆணைகளுக்கு அவன் கட்டுப்பட்டால்போதும் என வாதிடுகிறார். இமாம் இல்லாமல், ஊர்விலக்கு செய்யப்பட்ட நிலையில் தானே தன் மகளுக்கு மணம் செய்விக்கிறார். அப்படி செய்ய மத ஒப்புதல் உண்டா என நாகர்கோயில் கூட்டத்தில் கேட்கப்பட்டபோது ஹதீஸுகளில் அதற்கு ஒப்புதல் உண்டு என்றும் அந்நிகழ்ச்சி உண்மையில் நிகழ்ந்ததே என்றும் மீரான் பதில்சொன்னதை நினைவுகூர்கிறேன்.

இன்னொரு எதிர்ப்புக்குரல் மெஹ்பூப். அவர் இஸ்லாமியர்களுக்கு ஆங்கிலக் கல்வியை அளிக்க முன்வந்தவர். காஃபிர் பள்ளி என அழைக்கப்பட்டு அது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. எரிக்கப்படுகிறது. ஆனால் அந்த கல்வி அம்மக்களை வறுமையிலிருந்தும் மிடிமையிலிருந்தும் விடுதலைசெய்யும் என அவர் நம்புகிறார். அவர் மனைவி நாகரீக உடைகளை அணிகிறார். அவர் அச்சமூக மக்களின் எதிர்ப்பை மீறி அவர்களுக்காகப் போராடுகிறார்.

தனிப்பட்ட முறையில் மீரானிடம் இவ்விரு கதைமாந்தரின் பண்புநலன்களும் உண்டு.அவருக்கு ஆங்கிலக்கல்வி இஸ்லாமிய சமூகத்தை மேம்படுத்தும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. நவீனநாகரீக வாழ்க்கைதான் அவர் குடும்பத்திலும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அதேசமயம் அவர் பின்னாளில் மெல்லமெல்ல மஹ்மூது நோக்கி நகர்ந்தார் என்றும் தோன்றுகிறது. சாகித்ய அக்காதமி விருது பெற்றபின் அவரை இஸ்லாமிய சமூகம் ஒர் ஆளுமையாக ஏற்றுக்கொண்டு அவர் சொற்களுக்குச் செவிசாய்க்கத் தொடங்கியபோது இந்த மாற்றம் அவரில் உருவாகியிருக்கலாம்

ஆனால் மீரான் இஸ்லாமியப் பழைமைவாதத்திற்கு எதிராக எழுப்பிய விமர்சனக்குரல்கள் வழியாக இஸ்லாமியர்களுக்குள் பின்னாளில் உருவான சீர்திருத்தநோக்கம்கொண்ட அடிப்படைவாதப் பார்வைகளைச் சென்றடையவில்லை. குர்ஆனை ஆதாரநூலாக விளக்கி அதைக்கொண்டே இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, தனி அரசியலும் தனி செயல்பாடுகளும் கொண்டவர்களாக ஆக்கும் வஹாபிய- சலாஃபிய இயக்கங்களுக்கு எதிரானவராகவே அவர் இறுதிவரை திகழ்ந்தார். நான் இறுதியாக அவரைச் சந்தித்தநாளில்கூட கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வேறுபலரும் இதைப் பதிவுசெய்திருக்கிறார்கள்

நவீன அடிப்படைவாதத்திற்கு எதிரான மீரானின் குரல் அழுத்தமாக வெளிப்படும் ஆக்கம் அவருடைய பிற்கால ஆக்கமான ‘அஞ்சுவண்ணம் தெரு’ . அஞ்சுவண்ணம் தெரு தொன்மையான வரலாறு கொண்டது. பீரப்பா என்னும் சூஃபி ஞானியின் நினைவுகளைப் பேணுவது. அங்கே இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பேசும் தௌகீதுவாதிகள் வெளியிலிருந்து நுழைகிறார்கள். அஞ்சுவண்ணம் தெருவின் ஆன்மீகப் பொக்கிஷமாக இருக்கும் தக்கலை பீரப்பா பாடல்களும் ஆலீம்புலவரின் மொஹராஜ்மாலை என்ற காவியமும் அவர்களால் இறைவனுக்கு இணைவைப்பாக கருதப்படுகின்றன. அவற்றைப்பாடுபவர்கள் நெறிதவறியவர்களாக வசைபாடபடுகிறார்கள். தொழுகைகளை மாற்றுகிறார்கள். புதிய மசூதிகள் உருவாகின்றன.சமூகம் இரண்டு பிரிவாகப் பிரிந்து மோதுகிறது. மெல்லமெல்ல ஒரு காலகட்டமே மூழ்கி மறைகிறது.

அஞ்சுவண்ணம் தெரு நாவலில் மீரான் இந்தக் காலமாற்றத்தைச் சித்தரிக்கிறார். வாப்பா அஞ்சுவண்ணம் தெருவின் பழமைவாதத்தால் சலிப்புற்று வஹாபிய கருதுகோள்களை நோக்கிச் செல்கிறார். அல்லாஹ் அன்றி அஞ்சவேண்டியதொன்றுமில்லை என்ற வரியை தன் வழியாக கொள்கிறார். ஒரு உருவெளிக்காட்சி நாவலின் இறுதியில் வருகிறது உறுதியான வஹாபிய நோக்கு கொண்டவரான வாப்பா தன் ஆத்மாவுக்குள் மரபுவாதியான மோதினாரை காண்கிறார். அவருடன் இணைந்துகொள்கிறார். அதுவே அந்நாவலில் மீரான் சென்றடையும் இடம் எனலாம்.

மீரான் எப்போதும் தன்னை இஸ்லாமியர் என்றே அடையாளப்படுத்திக் கொண்டவர். மதத்தின் சாரமான ஆன்மிகம் மனிதாபிமானமே என நம்பியவர். பழமைவாதமும் அடிப்படைவாதமும் இரு எல்லைகளில் அதற்கு எதிரானவை என நினைத்தவர். அவருடைய காலண்டர் பாவா என்னும் கதையை ஓர் உருவகமாகச் சுட்டலாம். காலண்டர் பாவா என அழைக்கப்படும் பெரியவர்தான் ஊரில் பிறைநோக்கிச் சொல்பவர். “பொய் சொல்லாதவர், கண்ணால் கண்டதை ஒளிவுமறைவின்றிச் சொல்லக்கூடிய நேர்மையாளர். இவர் பேச்சுக்குச் சாட்சிகள் தேவையில்லை’ என கதைசொல்லி சொல்கிறார்

பெருநாளுக்கு பிறைபார்க்கவேண்டும். குன்று ஏறிச் செல்கிறார்கள். பிறை தெரியவில்லை. ஆனால் காலண்டர் பாவா ஊரின் ஏழை மக்களை எண்ணிப்பார்க்கிறார். அவர்களின் மகிழ்ச்சி ஒத்திப்போடப்படும். பலருக்கு இழப்புகள் ஏற்படும். உணவுக்காகக் கொல்லப்படுவதற்காக கட்டி வைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் துயரம் மேலும் ஒருநாள் நீளும். கொண்டாட்டத்தின் ஆசையில் குழந்தைகள் “பிறை கண்டாச்சே! பிறை கண்டாச்சே!” என கூச்சலிடுகின்றன. காலண்டர் பாவாவும் “ஆமா பிறை கண்டாச்சே” என்று சொல்லிவிடுகிறார்.

எளிய மனிதர்களுக்காக கடவுளிடமே ஒரு சமரசம் செய்துகொள்ளும் காலண்டர் பாவாவுடன் மீரானை இணைத்துக் கொள்கிறேன். அது மதத்தை மீறுவதுதான், மதத்தின் சாரம்நோக்கிய பயணமும்கூடத்தான். மனிதர்களின் காலண்டர்களை விட அல்லாவின் காலண்டர் மேலும் துல்லியமானது என காலண்டர் பாவா அறிந்திருந்தார்.

***

தடம் ஜூன் 2019 இதழ்
புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.
சாகித்ய அகாதமி விருதுகள்
=====================================================================
பஷீர் : மொழியின் புன்னகை
பஷீர்- புன்னகைக்கும் பெருவெளி
=======================================================================
வாசகர்களுடன் உரையாடுதல்
சாக்கியார் முதல் சக்கரியா வரை
எழுத்தாளனைப் புனைந்துகொள்ளுதல்…
எழுத்தாளரைச் சந்திப்பது…
தமிழில் சிறுபான்மை இலக்கியம்

 

முந்தைய கட்டுரைபி.ராமன் கவிதைகள், மேலும்
அடுத்த கட்டுரைஇன்று விருதுவிழாவும் கருத்தரங்கும்…