ஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.

அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள் -சுசித்ரா

இந்த வருட ஊட்டி அரங்கில் அறிவியல் புனைக்கதை சார்ந்த விவாதம் அரங்குக்குள்ளேயும் வெளியேயும் மூன்று நாட்களும் தொடர்ந்து ஒரு அடியோட்டமாக நடந்துகொண்டே இருந்ததை கவனிக்க முடிந்தது. தமிழுக்கு இவ்வகை எழுத்து எவ்வளவு புதியது என்ற புரிதல் இந்த சந்திப்பு வழியே தெளிவானது. ஒரு பக்கம் புதியதை பற்றிய பரவசமும் மற்றொரு பக்கம் புதிய வடிவங்களை நோக்கிய எச்சரிக்கையும் எரிச்சலும் வாசகர்களிடையே காணமுடிந்தது.

இம்முறை தற்செயலாகவே பல விவாத அரங்குகள் அறிவியல், அறிவியல் புனைவுகள் என்ற தலைப்புகளை தொட்டுச்செல்லும்படி அமைந்திருந்தன. அருணாச்சலம் மகாராஜன், கமலக்கண்ணன், நான் மூவருமே அறிபுனை கதைகளை பற்றி விரிவாக பேசினோம். வேணு வெட்ராயன் சினஸ்தீசியா போன்ற நரம்பியல் சார்ந்த கொள்கைகள் வழியாக குறுந்தொகை கவிதைகளை அணுகும் ஒரு பார்வையை முன்வைத்தார். இவ்வரங்குகள் வழியே புனைவுக்குள் அறிவியலின் இடமென்ன, அறிவியலைக்கொண்டு கவிதையை விளக்குவது ஒருவித குறைத்தல்வாதம் என்றாகுமே போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. மூன்று நாட்களில் இந்த தலைப்பில் நான் கவனித்த பங்கெடுத்த விவாதங்களையும் சுருக்கமாக தொகுத்தளிக்கிறேன்.

 இன்றைய அறிவியல் புனைகதைகளின் வடிவமும், சிறுகதை வடிவமும்

தமிழில் சமீபத்தில் எழுதப்பட்ட நவீன அறிவியல் புனைகதைகளின் வடிவம் சார்ந்து நிறைய விமர்சனங்கள் நேரடி உரையாடல்களில் முன்வைக்கப்பட்டன.

 1. ஒன்று, அக்கதைகளின் நீளமும் அன்னியத்தனமான மொழியும்.
 2. இரண்டு, அக்கதைகள் அறிவியலை விளக்க முன்னெடுக்கும் வழிமுறைகள். கதைக்குள் ஒரு அறிவியல் கருத்து வருவதே வாசிப்பில் ஒர் தோய்வை ஏற்படுத்துவதாக பல வாசகர்கள் கருதினார்கள்.
 3. மூன்றாவது, ஒரு இலட்சண சிறுகதையின் வடிவத்தை மீறி கதை வழியும் தன்மை. இது கதையை அணுக ஒரு தடையாக உணரப்பட்டது.
 4. நான்காவது, இக்கதைகள் பலவற்றில் தரிசனத்தளத்தில் வரும் நேரடியான ஆசிரியர் கூற்று அளிக்கும் ஒவ்வாமை. வாசகர் பங்கேற்பு, குறிப்புணர்த்துதல் என்ற அம்சத்தையே விலக்கும் விதமாக உள்ளதாக கூறப்பட்டது.

நான் என் உரையிலும் தனிப்பேச்சிலும் டெட் சியாங்கின் கதைகளை இன்றைய இலட்சிய அறிபுனையின் வடிவ உதாரணங்களாக முன்வைத்து பேசினேன். தற்செயலாக, அருணாச்சலம் மகாராஜன் அவர்களும் தன்னுடைய சிறுகதை விவாத அரங்கிற்கு  டெட் சியாங்கின் ஒரு கதையை தேர்ந்தெடுட்டிருந்தார். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் அனைத்துமே டெட் சியாங்கின் கதைகளுக்கும் பொருந்தும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக டெட் சியாங்கின் கதைகளில் நேரடி ஆசிரியர் கூற்றின் வழியே கதை தரிசனம் முனவிக்கப்படுவது ஒரு குறை என்று விஷால் ராஜா கருதினார். ஒரு சிறுகதை என்பது வாசக மனத்தை தூண்டி அதனுள் விரிவடையவேண்டும் (evocation) என்றும் அது இக்கதைகளில் நிகழவில்லை என்றும் சொன்னார். சிறுகதை வடிவு குலைவடைவதாக எண்ணினார். பிரபஞ்ச, மானுட தளத்திலான ‘பெரிய’ விஷயங்களை கதைக்குள் கையாண்டு பேசுவதன் வழியாக மட்டுமே அது ஒரு நல்ல கதை ஆகிவிட முடியாது என்றும், அந்த பெரிய விஷயம் கதைக்குள் எப்படி ‘உணர்த்தப்படுகிறது’ என்பதே அதனை கலையாக்குகிறது என்று சொன்னார்.

நான் ஆசிரியர் கூற்றை ஒரு பாதகமான அம்சமாக பார்க்கவில்லை என்று நினைத்ததாக சொன்னேன. மெல்லச் சொல்லல், குறைத்துச் சொல்லல், பூடகமாக சொல்லல் எல்லாமே கடந்த நூறு வருட கதை அழகியல் என்றும், இன்றைய அறிபுனை அதற்கு முந்தைய காலகட்டக் கதைகளுடன் இணையும் வடிவம் கொண்டவை என்றும், ஆகவே அதன் அழகியல் மாறுபடும் என்றும் சொன்னேன். இக்கதைகளில் அறிவியல் ஒரு கவித்துவ படிமமாக விரிவதன் வழியே evocation-ஐ நிகழ்த்துவதாக சொன்னேன்.

உதாரணமாக டெட் சியாங்கின் Exhalation கதையில், அமானுடனான கதைசொல்லி தன் மூளையை தானே ஆராயும் போது, அதனை இயக்கும் மூல விசை காற்று என்று கண்டடைகிறார். மூளைக்குள் காலம், நினைவு, இயக்கம் எல்லாமே காற்றழுத்தத்தின் வேறுபாடுகளே என்று கண்டடைகிறார். மூளைக்குள் அமைந்துள்ள மெல்லிய தங்கத்தகடுகள் அந்த காற்றில் நலுங்குவதை காண்கிறார். அந்த அசைவு என் வாசிப்பில் ஒரு பெரிய கவித்துவ படிமமாக அமைந்தது.

சிறுகதை வடிவிலேயே இன்று மாற்றங்கள் உருவாகி வருவதை நாம் கண்டு வருகிறோம். நவீனத்துவ சிறுகதைகள் கதைக்குள் ஒரு கணத்தை, ஒரு திருப்பத்தை சொல்ல எழுதப்பட்டன. இன்றைய சிறுகதைகள் மொத்த வாழ்க்கைகளை சொல்லும் இடத்துக்கு நகர்ந்துவிட்டன. கவிதைகளிடமிருந்து படிமங்களை பெற்றுக்கொண்டு படிமநகர்வுகளாக உருவாகி வருகின்றன. சிறுகதை வடிவ எல்லைகளை ஒரு விதத்தில் இந்த மாதிரி கதைகள் விஸ்தரிப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

இந்த விவாதத்தின் பகுதியாக, ஒரு அறிவியல் புனைகதை தன்னுடைய வடிவம் சார்ந்து வெற்றியடைந்திருக்கிறதா என்று கண்டடைய ஜெ அவர்கள் மூன்று அளவுகோல்களை முன்வைத்தார்.

 1. கதைக்குள் வாழ்க்கையும் அறிவியலும் சரியான விதத்தில் கூடி வருகிறதா? கதைக்குள் அறிவியல் தனியாக நின்றால் கதைக்கான ஒருமை குலையும்.
 2. அறிவியல் கதைக்குள் கவித்துவ படிமங்கள் தன்னியல்பாக உருவாகி வந்து வெளிப்படுகின்றனவா?
 3. கதைக்குள் அறிவியல் வருவதே ஒரு விதத்தில் கதையை இறுக்கமடையச்செய்கிறது. புனைவின் இயல்பான உணர்வுத்தளத்தை மழுங்கடிக்கச் செய்கிறது. கதை இந்த சவாலை கையாண்டு ஒரு புனைவுக்குறிய உணர்வுதளத்தை தக்கவைத்துக்கொள்கிறதா?
 • அறிபுனை அறிவியலுக்கு திரும்பளிப்பது என்ன?

புனைவுப்பறப்பில் தத்துவம் போன்ற மற்ற அறிவுத்துறைகளின் ஊடுப்பாவு பற்றிய பேச்சு எழுந்தது. பதினெட்டாம் நூற்றாண்டு புனைகதைகளில் இயல்பாக தத்துவம் கதைகளுக்குள்ளும் நாவல்களுக்குள்ளும் நுழைந்ததை ஜெ குறிப்பிட்டார். அதே போல் இன்று ஏன் அறிவியலால் நுழையமுடியவில்லை? அல்லது வாசகர்களால அதனை ஏன் இயல்பாக அனுமதிக்க முடியவில்லை? என்ற கேள்வியை முன்வைத்தார்.

அந்த கேள்விக்கு ஒரு பதிலாக, தத்துவம் இலக்கியத்துக்குள் வரும்போது தத்துவம் இலக்கியத்துக்கு அளிக்கும் அளவுக்கே இலக்கியம் தத்துவத்துக்கு எதையோ அளித்துக்கொண்டே இருக்கிறது என்றார். ஷோப்பனௌவர் தல்ஸ்தாய்க்கு அளித்த அளவுக்கே தல்ஸ்தாய் ஷோப்பனௌவருக்கு திரும்ப அளிக்கிறார். ஆனால் அறிவியல் இலக்கியத்துக்குள் வரும்போது அதே அளவுக்கு எதிர்பங்கீடு உள்ளதா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இந்த கேள்வியை பின்பு பரிசீலிக்கையில், இது பெரும்பாலும் நிகழாமல் போனதற்கு காரணம் அறிவியலுக்கும் இலக்கியத்துக்குமான அடிப்படை முரணே காரணம் என்று தோன்றியது. இவற்றின் அடிப்படை அறிதல் முறைகளே வேறு. உலகத்தை அவை எந்த அடிப்படையில் புரிந்துகொள்கின்றன என்ற புள்ளியிலேயே முரண் உருவாகிறது. அறிவியல் வையத்தை நேரடியான காரண-காரிய சரடாக காண்கிறது. இலக்கியம் வாழ்க்கையை தொடர்பற்ற உதிரி நிகழ்வுகளுக்கு அடியில் ஓடும் ஊற்றுநதியாக காண்கிறது.

தத்துவத்துக்கு இந்த பிரச்சனை இல்லை. தத்துவம் கற்பனையையும் உபமானங்களையும் தனதாக்கிக்கொண்டு ஏற்றுக்கொள்ளும். ஆகவே தத்துவம் இலக்கியத்துக்குள் இயைந்து வருவதுபோல் அறிவியலால் வர இயலாது.

அறிவியல் துறைகளில் கற்பனையும் உள்ளுணர்வும் முதல் ஊகத்தை முன்வைக்கும் இடத்தில் தான் பெரும்பாலும் தேவையாகிறது. அதுவும் நேர்ப்பார்வைத்தளத்தை ஒட்டியே உருவாக்கப்படவேண்டியது. அங்கு கற்பனை என்பது இயற்கையின் அமைப்பை அந்த அறிவியலாளர் எந்த அளவுக்கு ஒரு அறிவாக உள்வாங்கி உள்ளுணர்வாக்கி புரிந்துவைத்திருக்கிறார் என்ற இடத்திலிருந்து பிறக்கிறது. மாறாக இலக்கியத்தில் கற்பனை அனுபவத்திலிருந்தும் உணர்வுத்தளத்திலிருந்தும் உருவாகிறது.

ஆகவே அறிவியலுக்கு அறிபுனை ஊகங்களை அளிக்கவேண்டுமென்றால் அறிவியல் புனைவெழுத்தாளர் (1) அறிவியல் அறிந்தவராகவும் (2) அந்தத்தளத்தில் செல்லுபடியாகும் ஊகங்களை முன்வைக்கும் அளவுக்கு உள்ளுணர்வு கொண்டவராகவும், (3) அதே நேரம் அதை புனைவுக்குள் கொண்டுவந்து புனைவின் வழியே புதிய கண்டடைதலை நிகழ்த்துபவராகவும் இருப்பது அவசியமாகிறது. மறுபக்கத்தில் இதே தளத்தில் இயங்கும் வாசகர்களும் தேவையாகிறார்கள்.

இன்னொன்று, தத்துவவாதிகள் இலக்கியவாதிகளின் உள்ளுணர்வு சார்ந்த பார்வையை ஏற்றுக்கொள்வதுபோல் நவீன அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அடிப்படை கலாச்சார விரிசல் ஒரு காரணம். அசலான புதிய பயன்படும்படியான அறிவியல் ஊகங்கள் புனைவுக்குள் உருவாகி வராமல் இருப்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

ஆகவே இன்று எழுதப்படும் அறிவியல் புனைகதைகள் அறிவியலுக்கு தான் என்ன திரும்பக்கொடுக்கிறோம் என்ற கேள்வியை பரிசீலிப்பதுபோல் தெரியவில்லை. மாறாக அறிவியலின் வழியே தத்துவார்த்தமாக புனைவுக்குள் என்ன நிகழ்கிறது என்றே காண விழைகிறது. அதாவது, இன்றைய அறிவியல் கதைகளுக்குள் எழுதப்படுவதும் தத்துவம் தான். நேரடி அறிவியல் அல்ல. அறிவியலின் தத்துவார்த்த, கவித்துவத் தளம். அது அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் ஒரு பாலமாக இயங்குகிறது.

அரங்கின் வழியாக தமிழ் பரப்பில் அறிபுனை பற்றிய மற்ற சில விவாதப்புள்ளிகளும் உருவாகி வந்தன.

 • தமிழில் அறிபுனை எழுதுவதில், வாசிப்பதில் உள்ள சவால்கள்: அறிவியல் கதை எழுதுவதில் உள்ள சவால் அது அறிவியலை விளக்கித்தான் செல்ல வேண்டும். ஆகவே மொழி, கூறுமுறை இரண்டுமே மாறுபட்டிருக்கும். கதைக்குள் அறிவியலை விளக்க தனி மொழி தேவையாகிறது. அது இனிமேல் தான் வளர்ந்துவர வேண்டும். எழுத்தாளர் அதை சுவாரஸ்யமாக புனைவாக்கப் பயில வேண்டும். வாசகர்கள் அதை உள்வாங்கும் மனவிரிவோடு இக்கதைகளுக்குள் நுழைந்து அணுகவேண்டும். இவ்வாறு பேசப்பட்டது.
 • வாசகருள் அடிப்படை அறிவியல்சார் பயிற்சியின்மை: ஒரு பொது அறிதல்முறையாக தமிழ்ச்சூழலில் அறிவியல் இன்னும் பரவலாக அறிந்துகொள்ளப்படவில்லை. சாதாரண அறிவியல் கருத்துக்கள் (concepts) சார்ந்த உள்ளுணர்வு நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. இதனை ஈடுசெய்ய சுவாரஸ்யமான அடைப்படை அறிவியல் நூல்களுக்கான தேவையை பற்றி ஜெ பேசினார். வாசகர்கள் அறிவியல்சார் சிந்தனைக்குள் நுழையாமால் நல்ல அறிவியல் புனைவெழுத்து எழுத, வாசிக்கப்படமுடியாது என்று பேசப்பட்டது.
 • இன்றைய அறிபுனையில் கவித்துவம்: டெட் சியாங்க் கதைகள் மற்றும் அரூ கதைகளின் கவித்துவம் சார்ந்து பேசப்பட்டது. ஒரு கணக்கெடுப்பில் பாதிக்கு மேற்பட்ட அரங்குக்கு அக்கதைகள் நல்ல கதைகளாக பொருள்பட்டதாக தெரியவந்தது. தனி உரையாடலில் கவிஞர் தேவதேவன் அவர்கள் அறிவியலை கவித்துவப்படிமமாக மாற்றும் சாத்தியத்தை விதந்தோதி பேசினார். அதே நேரம், அறிபுனையின் வடிவ வேற்றுமைகள், வடிவ மீறல்கள் பற்றிய ஐயமும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.

 தமிழுக்கு அறிவியல் புனைகதைகள் தேவையா? 

இந்த சந்திப்பிம் வழியாக உருவாகி வந்த விவாதங்கள் அனைத்திலுமே பொதுவாக தமிழில் அறிவியல் புனைவெல்லாம் தேவையா? இவ்வளவு கடினமான நடையை படித்துத்தான் ஆகவேண்டுமா? அதனால் வாசகர் பெரும் பயன் என்ன? போன்ற கேள்விகள் பல வாசகர்களுக்குள்ளே அடிநாதமாக ஓடிக்கொண்டிருந்ததை உணர முடிந்தது. அறிவியலை இலக்கியத்தரப்பினரால் ஒரு வித ‘குறைத்தல்வாதமாக’ காணும் நோக்கும் மற்றொரு அரங்கில் விவாதிக்கப்பட்டது. புனைவுக்குள் அறிவியல் வருவது உடம்புக்குள் வைரஸ் ஊடுருவதைப்போல் பார்க்கப்படுகிறதோ என்று தோன்றியது.

ஆனால் சனி மாலை அரங்கு முடிவில் இந்தக்கேள்வி நேரடியாக முன்வைக்கப்பட்டபோது அரங்கில் ஓரிருவரைத்தவிர மற்றவர்கள் தமிழில் அறிபுனை தொடர்ந்து எழுதப்படலாம் என்று கருதுவதாக சொன்னார்கள். தொடர்ந்து நிகழ்ந்த விவாதங்களின் தாக்கமாக இதை காண்கிறேன். அதே நேரம், கதைகளின் நீளம், வடிவு, மொழி சார்ந்த புரிதல்கள் உருவாகிவருவதன் தேவையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

அறிவியல் புனைக்கதைகளை ஒரு ஊடுருவலாக, வரட்டு அறிவியத்தனமாக, குறைத்தல்வாதமாக காணாமல், மானுட கண்டடைதல்களுக்கு வழிவகுக்கும் மற்றுமொரு வலுவான இலக்கிய சாத்தியமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் என் அரங்கை நிறைவு செய்தேன்.

தொகுப்பு சுசித்ரா

அறிவியல் புனைகதைகள் பற்றி…
சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
அறிவியல்புனைகதைகள் – கடிதங்கள்
முந்தைய கட்டுரைஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசக்கரம் மாற்றுதல்