ஜப்பானிலிருந்து திரும்பினோம்…

16-5-2019 அன்று காலை டோக்கியோவில் இருந்து கிளம்பினோம். இரவு 110 மணிக்கு சென்னை. காலவேறுபாட்டால் கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் மிச்சமானதனால் ஒருநாள் பயணம். விமானநிலையத்திற்கு சண்முகம் ரகு ஆகியோர் வந்திருந்தார்கள்.

டோக்கியோ பயணம் என் நண்பரும் ஜப்பான் முழுமதி அமைப்பின் பொறுப்பாளருமான செந்தில் தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தது. செந்தில் நெடுங்காலமாக என் நண்பர். விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்தவர். செரிபிளாஸம் பார்க்கச் செல்வதாக எண்ணம். ஆனால் அவர் அழைத்தபோது செல்லமுடியவில்லை. ஊட்டி நிகழ்ச்சி ஊடே வந்தது. இருமுறை தேதியை ஒத்திப்போட்டு மேமாதம் செல்வதுபோல ஆகிவிட்டது. ஜப்பானில் வசந்தகாலம். ஆனால் செரிபிளாஸம் பூக்கள் போய்விட்டன.

ஜப்பான் எல்லாவகையிலும் விழிகளை நிறைக்கும் நாடு. எனக்கு அங்கே இருந்த புத்தர் ஆலயங்களில் போதிசத்வர்கள் வஜ்ராயுதத்துடன் நிற்பதைக் கண்டபோது அது இந்திரனின் நிலம் என்னும் எண்ண்ம் உருவானது. போதிசத்வ பத்மபாணி, போதிசத்வ வஜ்ரபாணி இருவருமே இந்திரனின் இரு முகங்கள்தான். தாமரையும் மின்படையும் இந்திரனுக்குரியவை. யானையும் புலியும் அவன் ஊர்திகள். மழைமுகிலின் அரசன். குன்றாச் செயலூக்கத்தின் தலைவன்.

கிழக்கு இந்திரனின் திசை. ஓயாத மழை. ஜப்பானின் அழகுகளில் ஒன்று முகில்கணங்கள். ஜப்பானிய ஓவியங்கள் மற்றும் திரைப்படங்களில் முகில்களை விதவிதமாக வரைந்து பார்த்திருக்கிறார்கள். கறுப்புவெள்ளை ஓவியங்களிலேயே மழைமுகிலை வரையும் அழகியல்மரபுகள் அங்குள்ளன. அதேபோல வானவில்லும் ஜப்பானியக் கலையிலும் இலக்கியத்திலும் முதன்மை இடம் கொண்டது. ஜப்பானியத் தோட்டக்கலையை வேறெங்கும் உருவாக்க முடியாது என்பது அங்கு சென்றபின் உறுதியாயிற்று – ஊட்டியில் முயன்றிருக்கிறோம். அந்த அளவுக்கு நன்மழைப்பேறு வேண்டும்.

எங்கு நோக்கினாலும் விழி நிறைக்கும் பசுமை. பசுமையே வெயிலாகவும் உருக்கொண்டதுபோல. இளமழைச்சாரல். மென்குளிர். ஜப்பான் செயலூக்கத்தின் நிலம். முன்பு போராக வன்முறையாக அந்தச் செயலூக்கம் வெளிப்பட்டது. இந்திரன் போர்வீரத்தின் தெய்வமும்கூடத்தான்.அதே செயலூக்கம்தான் கலைகளில் இலக்கியத்தில் வெளிப்பட்டது. ஜப்பானிய இலக்கியமும் தத்துவமும் ஓவியமும் உலகப் பண்பாட்டின் வெற்றிகள் பாஷோவின், முரசாக்கி ஷிகிபுவின் ,மியமாட்டோ முசாஷியின் ஜப்பான்.

[இவற்றில் பலநூல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழில் வெளிவந்துள்ளன. செஞ்சிகதை கா.அப்பாத்துரை அவர்களால் அறுபதுகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோபோ ஆபின் மணல்மேடுகளில் ஒரு பெண், யசுநரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் போன்றவை மொழியாக்கம் செய்யப்பட்ட முக்கியமான ஜப்பானிய நூல்கள்]

நவீன உலகைச் சமைத்த பலர் ஜப்பானிலிருந்து எழுந்திருக்கிறார்கள். ஃபுகுவேகாவை விட்டு ஜப்பானை எண்ண இயலுமா என்ன? இன்று ஜப்பான் அச்செயலூக்கத்தை அறிவியல்தொழில்நுட்பத்திலும் வணிகத்திலும் குவித்து உலகின் பொருளியல் வெற்றிமையமாக திகழ்கிறது. டொயோட்டா முதல் நாம் அன்றாடவாழ்க்கையில் புழங்கும் ஜப்பானியப் பெயர்கள்தான் எத்தனை

ஜப்பான் சென்றபோது தோன்றியது முன்பு லண்டன் சென்றபோதும் தோன்றியது. அந்நிலத்தை அப்பண்பாட்டை நன்கறிந்திருக்கிறேன் என. இலக்கியம் உருவாக்கும் மாயம் அது. கவபத்தாவின் , மிஷிமாவின், கோபோ ஆபின் நிலம். அகிரா குரசோவாவின் கோபயாஷியின் ஒஸுவின் கண்கள் வழியாகவே நாம் அதைக் காணமுடியும்.

ஜப்பானைப்பற்றி எழுதவேண்டும்

 

முந்தைய கட்டுரைமரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்த் ராஜு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40