‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41

புலரிச்சங்கொலி எழுந்தபோது கௌரவப் படைகளுக்குள் எந்த அசைவும் ஏற்படவில்லை. சுபாகு  தலையில் பாயாலான மழைமூடியை கவிழ்த்துக்கொண்டு காவல்மாடத்தின்மீது சாய்ந்த மழைச்சரடுகளுக்கு சற்றே குனிந்து உடல்கொடுத்து நின்றிருந்தான். புலரிமுரசு அமைந்த பின்னரும் படை அசைவிலாதிருக்கக் கண்டு ஒருகணம் அவன் உளம் துணுக்குற்றது. ஒருநாள் காலையில் அங்குள்ள படைவீரர்கள் அனைவரும் உயிரிழந்திருப்பார்கள் என்று அவனுள் ஒரு எண்ணம் முன்பொருநாள் வந்தது. உண்மையாகவே அது நிகழ்ந்துவிட்டதா?

பல படையெடுப்புகளில் கொடிய நோய்கள் உருவாகி முழுப் படையும் அழிந்த கதையை அவன் அறிந்திருக்கிறான். ஒருவரோடொருவர் நெருங்கி வாழும் படைகளில் தொற்று நோய்கள் எளிதில் பரவுகின்றன. நோய்களுக்கு தங்களை கொடுக்கும் உளநிலையும் படைநிலைகளில் எளிதில் உருவாகிவிடுகிறது. நோய்கண்டவர்களை அப்படியே விட்டுவிட்டு அப்படியே இடம் பெயர்வதையே பெரிய படைகள் செய்வது வழக்கம். அவ்வுடல்களை மறைவு செய்தாலோ எரித்தாலோ அச்செயலாலேயே மேலும் நோய் தொற்றும். ஆனால் மழைக்காலம் என்றால் அவர்கள் விலகிச்செல்லுந்தோறும் நீரினூடாகவும் காற்றினூடாகவும் நோய் அவர்களை தொடர்ந்து வரும்.

சதகர்ணிகளின் நிலத்திற்குள் சென்ற கலிங்கமன்னன் ஜோதிவர்மனின் பெரும்படை முழுமையாகவே நோயில் அழிந்து அவன் உடலை மட்டும் அவர்கள் மெழுகு பூசிய துணியில் சுற்றிக்கொண்டு வந்து எரித்த கதையை கலிங்க விஜயம் எனும் காவியத்தில் அவன் பயின்றிருந்தான். அவன் மைந்தன் அது சதகர்ணிகளின் தெய்வங்கள் அளித்த தீச்சொல் என எண்ணி விஜயபுரியின் அத்தனை ஆலயங்களையும் இடித்தும் எரித்தும் அழித்தான். ஆனால் அவர்கள் திரும்பி வரும்போது மீண்டும் நோய் பரவி படைவீரர்கள் மறைந்தனர். இறந்த உடல்கள் அனைத்திலும் உடல் வலிப்பு கொண்டு முகம் இளித்து பெருநகைப்பு ஒன்று உறைந்திருந்தது.

சதகர்ணிகளின் தெய்வங்களின் நகைப்பு அது என்றது கலிங்க விஜயம். அதன்பின் அந்நகைப்புடனேயே அத்தெய்வங்களை கலிங்கநாட்டு எல்லையில் நிறுவி குருதிபலி கொடுத்து தடுத்து நிறுத்தினர். ஆண்டுதோறும் பலிகொடுத்து நிறைவுசெய்தனர். கலிங்கப் படை பின்னர் சதகர்ணிகளின் மண்ணுக்குள் நுழையவே இல்லை. அவர்களின் எல்லைக்கோயில்களில் கழுத்துநரம்பு தெறிக்க வாய்விரித்து இளித்துநிற்கும் தெய்வங்களின் சிலைகளை அவன் கண்டதுண்டு. உக்ரஹாஸர்கள் என அத்தெய்வங்கள் அழைக்கப்பட்டன.

எதை எதிர்பார்க்கிறோம் என்று அவன் வியந்துகொண்டிருக்கையிலேயே படையின் ஒரு மூலையில் மெல்லிய அசைவு தெரிந்தது. ஒவ்வொருவராக எழுந்து நின்றனர். மழைக்கு உடலை மடக்கி ஒடுக்கியிருந்த மெழுகுப்பாய்களையும் பாளைகளையும் மரப்பட்டைகளையும் அகற்றினர். குளிரில் அனைவரும் உடலொடுக்கி நின்றிருப்பதை அவனால் காண முடிந்தது. அவர்களின் குரல்கள் மழைச்சாரலைக் கடந்து வரவில்லை. வானில் இடியோசையும் மின்னல் தெறிப்புகளும் நின்றுவிட்டிருந்தன. நீரே அவன் விழிதுலங்கச் செய்யும் ஒளியாக மாறியதுபோல் தோன்றியது.

படைகள் அணிவகுக்கும்படி ஆணையிட்டபடி கொம்புகள் முழங்கின. ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொண்டு அவைகள் படைக்களம் எங்கும் பரவின. சுபாகு கயிற்றேணியின் வழியாக இறங்கி கீழே வந்தான். அங்கு நின்ற தன் புரவியை அணுகி அதன்மேல் ஏறிக்கொண்டு மரப்பட்டைப் பலகைகளினூடாக சென்றான். படைகள் குறுகி சிறு எல்லைக்குள் ஒடுங்கிவிட்டிருக்க படையெல்லைக்கு அப்பாலிருந்த பாதைப்பலகைகளையும் கைவிடப்பட்ட காவல் மாடங்களையும் உடைத்து அந்த மரங்களை விறகுக்காக எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள்.

அவன் புரவி அந்த வண்டிகளைக் கடந்து சென்றது. அடுமனை நெருப்புகள் அனல் வழிந்தோடும் ஆறென நெடுந்தொலைவுக்கு தெரிந்தன. படைவீரர்கள் விசையற்ற அசைவுகளுடன் துயிலில் நடமாடுபவர்கள்போல் தோன்றினார்கள். பெரும்பாலானவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளவில்லை. மிக மெல்ல நடந்து நீரள்ளி முகம் கழுவினார்கள். அவர்களின் படைக்கலங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அவர்கள் எவரும் இரவில் நன்கு துயின்றிருக்கவில்லை என்று அண்மையில் தெளிந்த முகங்களிலிருந்து தெரிந்தது.

மழை மட்டுமல்ல, அதற்கப்பால் அவர்களை துயிலவிடாத வேறு ஒன்றும் இருந்தது. முந்தைய நாள் அந்தியிலேயே அது ஒரு நோயென அவர்கள் மேல் படர்ந்திருந்தது. எதிரே வந்த வீரனின் விழிகளிலிருந்த ஒளிமங்கலில் அதை அவன் கண்டான். அது என்ன என அவன் அறிந்திருந்தான். அவர்கள் அனைவரையும்போல அவனும் அதை சொல்லென உளமாக்க விழையவில்லை. அதை ஒவ்வொரு உளச்சொல்லாலும் உந்தி அகற்றிவிடவே முயன்றான்.

அஸ்வத்தாமனின் குடிலை அடைந்து புரவியை நிறுத்திவிட்டு இறங்கி முற்றம் நோக்கி சென்றான். குடில் வாயிலில் அமர்ந்திருந்த காவலன் அவனைக் கண்டதும் எழுந்து நின்று நடுங்கினான். அவன் இரவெல்லாம் சாரல் அடித்த ஈரத்தை காலில் வாங்கி உடலில் நடுக்கெனச் சூடியிருந்தான். குடிலுக்குள் சிறு அகல் விளக்கின் ஒளி இருந்தது. குறடுகளை கழற்றிவிட்டு “வணங்குகிறேன், பாஞ்சாலரே” என்றபடி சுபாகு உள்ளே நுழைந்தான். அஸ்வத்தாமன் நிலத்தில் அமர்ந்து மென்தோல் இழுத்து ஆணியறையப்பட்ட பலகையில்  முள்ளம்பன்றி முள்ளால் கடுக்காய் அரைத்து உருவாக்கப்பட்ட மையைத் தொட்டு வரைந்துகொண்டிருந்தான்.

அந்தக் களத்தை சுபாகு நோக்கினான். படைசூழ்கை என்ன என்று உய்த்துணரக்கூடவில்லை. குடில்கூரைமேல் மழையின் ஓசை பெருகியிருந்தது. “படைசூழ்கை இன்னும் முடிவாகவில்லையா?” என்றான் சுபாகு. “படைசூழ்கை ஒருபோதும் முடிவடையாது. இது பொற்கொல்லர்கள் நகை செய்வதுபோல் செய்யச் செய்ய பெருகும் பணி” என்றான் அஸ்வத்தாமன். “படைசூழ்கையே தேவையில்லை என்று நேற்று சொன்னீர்கள்” என்றான் சுபாகு. “ஆம். ஆனால் ஒன்றை அமைக்கத் தொடங்கும்போது அது முழுமை பெறாது உள்ளம் நிறைவடைவதில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“இனி நமக்கு பொழுதில்லை” என்றான் சுபாகு உடல் தாழ்த்தி சிறிய பீடத்தில் அமர்ந்தபடி. “இப்போது கருக்கிருள். ஆயினும் இன்னும் சற்று நேரத்திலேயே விடிந்துவிடும் என்று தோன்றுகிறது. இந்த மென்மழைச்சாரல் விண்ணிலிருந்து ஒளியை இறக்குவது. நாம் எண்ணுவதைவிட விரைவாகவே ஒளியெழும். ஒளியெழுந்த பின்னர் படையினரை சூழ்கைக்குச் செலுத்தும் வழக்கமில்லை.” அஸ்வத்தாமன் விழிதூக்காமல் “ஆம், ஆனால் அதெல்லாம் முன்பு. அன்று எதிரிப் படையினர் காவல்மாடத்திலிருந்து நமது படையை அறிந்துவிடுவார்கள் என்று எண்ணினோம். அதெல்லாமே வெறும் நடிப்புகளென்று இன்று தோன்றுகிறது” என்றான்.

“நாம் இருளுக்குள் எவருமறியாது படைகளை நகர்த்தி சூழ்கை அமைத்தபோதுகூட நமது சூழ்கையை அவர்கள் அறியாமல் இருந்ததில்லை. அவர்களது சூழ்கையை நாமும் அறியாமலிருந்ததில்லை. ஏனெனில் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் அவ்வாறு கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறோம். இங்கிருப்பவர்கள் அங்கிருப்பவர்களின் உறவினர்கள். அங்கிருப்பவர்கள் நமக்கு அவ்வாறே. இது உண்மையில் போரல்ல, காதலனும் காதலியும் கொள்ளும் காமம்போல அணுக்கமானது. ஒருவரையொருவர் நன்கறிந்து ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டு தாங்கள் விழைந்ததை அடையும் திளைப்பு இது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

அஸ்வத்தாமன் அன்று காலையில் நன்கு துயின்று புத்துணர்வு கொண்டு எழுந்தவன் போலிருந்தான். “பாஞ்சாலரே, இந்தப் போர் வெல்லக்கூடுவதா? இன்று போரில் நாம் எதை எய்துவோம் என்று எண்ணுகிறீர்?” என்று சுபாகு கேட்டான். “வெல்வதென்றால் இன்று வெல்வோம். நேற்றே அங்கர் அவர்கள் படைகளின் பெரும்பகுதியை அழித்துவிட்டார். இன்று எஞ்சியிருப்பவற்றை அவரால் அழிக்க முடியும். இன்று அவர்கள் தங்கள் இறுதி எல்லையை அறிவார்கள்” என்றான் அஸ்வத்தாமன்.

சுபாகு “இன்னும் அவர்களில் எவரும் கொல்லப்படவில்லை” என்றான். “உண்மை. அவர்கள் எவரையும் கொல்லும் எண்ணம் அங்கருக்கு இல்லை என்று நேற்று தெரிந்துகொண்டேன். எண்ணியிருந்தால் அவர் நேற்று யுதிஷ்டிரனையும் பீமனையும் கொன்றிருக்க முடியும். அர்ஜுனனையன்றி எவரையும் அவர் கொல்ல முயலவும் இல்லை என்பது தெளிவு” என்றான் அஸ்வத்தாமன். “ஏன்?” என்று சுபாகு கேட்டான். “அவர்களைக் கொல்லும் பழி தனக்கு வேண்டாம் என்று எண்ணுகிறார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“இங்கு நாங்கள் நூற்றுவரில் இருவர் எஞ்ச பிறர் கொல்லப்பட்டோம்” என்று சுபாகு சீற்றத்துடன் சொன்னான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். “பாஞ்சாலரே, நானும் இறந்துவிட்டேன்” என்று சுபாகு சொன்னான். “மெய். அதன்பொருட்டு அவர்களை கொன்றால் நாளை நாம் நாடாள இயலாது. அவர்கள் நிலம்நாடி போரிட்டு சாக எண்ணுகிறார்கள். நாம் வென்று நாடாள திட்டமிடுகிறோம். பழிகொண்ட மன்னனை மக்கள் துறப்பார்கள். அதை அங்கர் கருதுகிறார்” என்றான் அஸ்வத்தாமன். “நேற்றே அந்த மணிமுடியை நிலத்திலிட்டு உருட்டி அது தனக்கு எத்தனை எளிய ஒன்று என்று காட்டிவிட்டார். சற்றேனும் நுண்ணுணர்வு அவர்களுக்கு இருக்குமென்றால் அவர்கள் அதை எண்ணிச்சூழ்ந்து அம்மணிமுடியை கொண்டு வந்து அங்கருக்கு அளிக்கவேண்டும்.”

அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “நன்று. எஞ்சியிருக்கும் தினவால் இன்று அவர்கள் போருக்கு வருவார்கள் என்றால் இறுதி எல்லையை அவர்கள் இன்று காண்பார்கள். இன்று ஆணவம் உடைந்து அடிபணிவார்கள். ஐயமே இல்லை. அங்கர் ஒருவேளை அவர்கள் கோரும் சிறு நிலப்பகுதியை அளித்து அவர்களை துரத்திவிடக்கூடும். இன்று போர் முடிந்துவிடும். இன்று இச்சூழ்கையை அமைக்கும்போதே அந்த நம்பிக்கையை நான் அடைந்தேன். இப்போதும் அவர்களைவிட இருமடங்கு இருக்கிறது நமது படை. அவர்களைவிட வில்லவரும் தலைமைத் திறன் கொண்டோரும் நம்மிடையே மிகுதி.”

சுபாகு “நன்று நடக்கட்டும்” என்றான். “ஏன், நீங்கள் ஐயம் கொண்டிருக்கிறீர்களா?” என்றான் அஸ்வத்தாமன். “நம்பிக்கை கொள்வதை நான் விட்டுவிட்டேன். ஆகவே ஐயம் கொள்வதற்கான உரிமை எனக்கில்லை” என்றபின் சுபாகு எழுந்தான். பின்னர் “நான் கிருதவர்மனை இங்கு வரச்சொல்கிறேன். இப்படைசூழ்கையை அவர் படையில் நிகழ்த்தட்டும்” என்றான். “ஆம், நானே அவரை வரச்சொல்லியிருக்கிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“மூத்தவர் எழுந்துவிட்டாரா என்று பார்க்கவேண்டியிருக்கிறது” என்றான் சுபாகு. “அவர் நேற்று நன்கு துயின்றார். ஆகவே இன்று தெளிந்த உள்ளத்துடன் எழுவார். ஐயமில்லை, சென்று நோக்குக!” என்று அஸ்வத்தாமன் சொன்னான். சுபாகு வெளிவந்து தன் புரவியை நோக்கி சென்றபோது ஒருகணத்தில் எடைமிக்க சேற்றுப் பரப்பொன்று அவன் மீது விழுந்து மண்ணோடு மண்ணாக அழுத்துவதுபோல் துயில் வந்து தாக்குவதை உணர்ந்தான்.

இமைகளை உந்தி மேலே தூக்கி உடற்தசைகளை இறுக்கி மெல்ல விட்டு அத்துயிலை கடந்தான். புரவியிலேறி அமர்ந்து அதை கிளம்பும்படி ஆணையிட்டதை உணர்ந்தான். பின்னர் விழித்துக்கொண்டபோது புரவி சீரான குளம்படிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அவனைச் சூழ்ந்து கௌரவப் படை துயிலெழுந்து காலைக்கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓசை கேட்டது. அவன் செலுத்தாமலேயே புரவி துரியோதனனின் குடில் நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. அது அவன் உள்ளத்தை அறியத்தொடங்கி நெடும்பொழுதாகிறது என எண்ணினான். விழித்திருக்கையில் உள்ளம் கொள்ளும் அலைக்கழிவுகளை புரவிகளால் தொடர இயல்வதில்லை. துயில்கையில் உடலிலிருந்து தெளிவான ஆணை அவற்றுக்கு கிடைக்கிறது போலும்.

துரியோதனனின் பாடிவீட்டின் முகப்பில் அவன் இறங்கி புரவியின் கடிவாளத்தை ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு நடந்தபோது குடிலின் முகப்பில் கர்ணன் அமர்ந்திருப்பதை கண்டான். அருகே சென்று அவனை வாழ்த்த எண்ணிய பின்னர் தயங்கி நின்றான். அங்கிருந்து கர்ணனை பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே துரியோதனன் இன்னும் துயில் விழிக்கவில்லை என்று தெரிந்தது. கர்ணன் அமர்ந்திருக்கும் உடல் அமைப்பில் சற்று முன் அவ்வாறு அமர்ந்ததுபோல் தோன்றினான். உடற்தசைகள் தளர்ந்திருக்கவில்லை. உடல் எங்கும் சாய்வு தேடவுமில்லை. இரவு முழுக்க அவ்வாறு உடல் திரட்டி அமர்ந்திருக்கிறாரா என்ன? உள்ளம் அவ்வாறு எழுந்து நிலை கொள்கிறதா?

உள்ளிருந்து ஏதோ ஓசை கேட்டதுபோல கர்ணன் திரும்பிப்பார்த்தான். பின்னர் எழுந்து நின்று தன் கைகளை நீட்டி உடலை இறுக்கி தளர்த்தினான். துரியோதனன் துயிலெழுந்த ஓசை அது என்பதை சுபாகு உணர்ந்தான். கர்ணன் திரும்பி ஏவலனை நோக்கி கைகாட்ட ஏவலன் குடில் படலைத் திறந்து உள்ளே சென்றான். கர்ணனும் தொடர்ந்து உள்ளே செல்வான் என்று சுபாகு எதிர்பார்த்தான். ஆனால் கர்ணன் திரும்பி முற்றத்தில் இறங்கி நீண்ட கால்களை எடுத்து வைத்து நடந்து அவனை நோக்கி வந்தான். சுபாகு தலைவணங்கியதை அவன் உளம் பார்க்கவில்லை. அவனைக் கடந்து சென்று அங்கு நின்றிருந்த புரவிமேல் ஏறி அதை கிளப்பிக்கொண்டு மரப்பாதையில் ஏறி குளம்புகள் விசைத் தாளமிட விரைந்து அகன்றான்.

சுபாகு அவனை நோக்கிக்கொண்டு நின்றிருந்தான். ஏவலன் வெளியே வந்து “அரசர் விழித்தெழுந்துவிட்டார்” என்றான். சுபாகு குடில் வாயிலை சென்றடைந்து குறடுகளை கழற்றியபின் மெல்ல உள்ளே சென்று “வணங்குகிறேன், மூத்தவரே” என்றான். கையூன்றி எழுந்து அமர்ந்த துரியோதனன் இரு கைகளாலும் முகத்தை அழுத்தி துடைத்தபின் நிமிர்ந்து அவனை பார்த்தான். “இளையோனே” என்றான். “ஆம், இங்குள்ளேன்” என்றான் சுபாகு. “சற்று முன் உன்னைத்தான் கனவில் கண்டேன்” என்றான் துரியோதனன். அவன் முகம் நன்கு தெளிந்திருந்தது.

துரியோதனன் புன்னகைத்தபடி படுக்கையை கையால் தட்டி “விழிப்பதற்கு சற்று முன் உன்னை பார்த்தேன். இரவெல்லாம் அவர்கள் அனைவரையும் பார்த்தேன். அவர்கள் என்னிடம் சொன்னார்கள், இன்று அவர்களும் போரில் இருப்பார்கள் என்று. இன்று நாம் வெல்வோம். அது உறுதி. இன்றுடன் போர் முடியும். இன்றுடன் நாம் மூதாதையருக்கு அளித்த சொல் நிறைவேறும்” என்றான். சுபாகு துரியோதனனின் மலர்ந்த கண்களை பார்த்துக்கொண்டு அசையாமல் நின்றான்.

சுபாகு புரவியில் அமர்ந்து கௌரவப் படைகளினூடாகச் சென்றான். அவன் புரவியின் ஒவ்வொரு குளம்படியும் எடைமிக்கதாக இருந்தது. எதிரே வந்த கௌரவப் படைத்தலைவர்கள் தலைவணங்கி வாழ்த்துச்சொல் உரைத்ததை அவன் அறியவில்லை. அவர்கள் அவன் முகத்திலிருந்த பதைப்பைக் கண்டு வியப்படைந்தனர். அவன் சாவுநோக்கி செல்பவனின் விழிகள் கொண்டிருந்தான். அல்லது பெருவிடாயோ பசியோ கொண்டவன் போலிருந்தான். அவன் உதடுகள் அழுந்தி தாடை அசைந்துகொண்டிருந்தது. வாய்க்குள் ஏதோ ஒன்றை இறுக மென்றுகொண்டிருப்பவனைப்போல. அல்லது அவன் மெல்வது ஓர் உளச்சொல்லை என்பதுபோல.

கௌரவப் படைகள் ஒருங்கிக்கொண்டிருந்தன. மிக அப்பால் கிருதவர்மனின் ஆணைகள் கொம்போசையாக எழுந்து படைகளை மூடியிருந்த கருக்கிருளுக்குள் ஊடுருவி ஒலித்தன. அதற்கேற்ப படைத்தலைவர்கள் எழுப்பிய சிறுகொம்போசைகளும் முழவோசைகளும் கேட்டன. ஆனால் படையினர் ஒருவருக்கொருவர் முட்டிமோதினார்கள். மாறிமாறி ஆணைகளையும் எச்சரிக்கைகளையும் கூவிக்கொண்டார்கள். சிறுதலைவர்கள் வசைக்கூச்சலிட்டனர். படையினர் தங்களவரை கூவி அழைத்தனர். இருளுக்குள் இருளலைகளாக படை ததும்பிக்கொண்டே இருந்தது.

பயிற்சிபெற்ற படையினரிடம் உள்ள ஒழுங்கும் அமைதியும் கலந்த சிறுசலிப்பு அவர்களிடையே இருக்கவில்லை. பெரும்பாலானவர்கள் ஏவல்பணியினர் என்பதனால் ஆணைகளை புரிந்துகொள்வதில் அவர்களுக்கு இடர் இருந்தது. புரிந்துகொண்டதும் உருவாகும் கிளர்ச்சியும் இருந்தது. அதை அவர்களால் கூச்சலிட்டு பிறரிடம் உரைக்காமலிருக்க இயலவில்லை. ஒருவரோடு ஒருவர் உடல்முட்டிக்கொண்டார்கள். பழகாத கால்கள் ஒன்றுடனொன்று உரச குறடுகள் ஒலித்தன. படைக்கலங்கள் ஒருவரை ஒருவர் குத்த எச்சரிக்கைச் சொற்களுடன் வசைபாடினார்கள்.

அந்தப் பதற்றத்திலும்கூட அவர்கள் புதிய ஒன்றைச் செய்வதன் உவகையை கொண்டாடினர். நகையாடலும் இளிவரலும் செய்தனர். உறவுமுறை பேசி இழிசொற்கள் வீசி விளையாடினர். நெடுங்காலமாக அவர்கள் ஏவலர்களாக படைவீரர்களுக்கு பணிசெய்தவர்கள். படைபயின்ற வீரர்கள் அவர்களை கீழாகவே நடத்துவார்கள். ஆணையிடுவார்கள், வசைபாடுவார்கள், அவ்வப்போது அடிப்பதுமுண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கனவில் படைவீரர்களாக ஆகி களம்சென்று வீரம்விளைத்து மீள்வதை கண்டுவந்தவர்கள். அந்த நாள் வந்தது அவர்களை நிறைவடையச் செய்தது.

முதல்முறை மேடையேறிய நடிகன் என தங்கள் கவசங்களையும் கச்சையையும் படைக்கலங்களையும் நோக்கி நோக்கி மகிழ்ந்தார்கள். அவற்றை எத்தனை முறை சீரமைத்துக்கொண்டாலும் அவர்களின் உள்ளம் நிறைவடையவில்லை. ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டி நகையாடினர். ஒருவரை ஒருவர் சீரமைத்துக்கொண்டார்கள். அவை உரிய முறையில் அமைந்தாலே போதும், போர் என்பது அந்தத் தோற்றம் மட்டுமே என்பதுபோல. அந்த மாற்றுருவுக்குள் ஒளிந்திருக்கும் உணர்வை அவர்கள் அடைந்தமையால் அனைவர் முகங்களிலும் ஓர் அறிவின்மையின் நகைப்பு இருந்தது.

சாவு மிக அண்மையிலிருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால் அது எவருடைய உள்ளத்திலும் அப்போது இருக்கவில்லை. அவர்கள் களத்திற்குச் சென்று அணிவகுத்து நின்றிருக்கையிலும்கூட அத்தருணத்தின் நடிப்பில் மகிழ்வுற்றிருந்தனர். போர்முரசு ஒலிக்கத்தொடங்குவதற்கு முந்தைய பொழுதின் ஆழ்ந்த அமைதியில்தான் அவர்கள் ஒரு கடுங்குளிர் அலையென அச்சத்தை உணர்ந்தனர். அது அவர்கள்மேல் எடையுடன் ஏறி அமர்ந்து மூச்சை திணறச்செய்தது. கால்களை எடைதாளாமல் வளைய வைத்தது. நெஞ்செலும்புக்கூடு வெடித்துவிடுவதுபோல் அக்கணங்களை அறிந்தனர்.

ஒவ்வொருவரும் அங்கிருந்து தப்பியோட, மைந்தர்களையும் மனையாட்டியரையும் காண விழைந்தனர். அது இயலாதென்று உணர்ந்து உளமுருகி விழிநனைந்தனர். சிலர் வெளிப்படையாகவே விழிநீர்விட்டு விசும்பி அழுதனர். ஒவ்வொரு படைக்கலத்தின் கூரும் அவர்களை நோக்கி வஞ்சத்துடன் திரும்பியிருப்பதாகத் தோன்றியது. மண்ணில் மானுடர் எத்தனை கோடி படைக்கலங்களை கூர்தீட்டி வைத்திருக்கிறார்கள் என வியந்தனர். அவை மானுடர் பிற மானுடர்மீது கொண்ட அச்சமும் ஐயமும் பருவுருக்கொண்டு எழுந்தவை.

படைக்கலம் தீட்டுபவனுக்குள் இருந்து தன்னை கூர்கொள்ளச் செய்வது ஒன்றுண்டு. அது குருதிவிடாய் கொண்டது. அணையாத சினமும் தளராத வஞ்சமும் கொண்டது. அது மானுடரை அழித்துக்கொண்டே இருக்கிறது. பல்லாயிரமாண்டுகாலமாக. அதன் விசை குறையவே இல்லை. வேல்முனைகளை நோக்கியதுமே அவற்றின் கூரின் குளிர் நெஞ்சில் பாய்வதுபோல, வாள்களின் கூரின் ஒளி வயிற்றைப் பிளந்துசெல்வதுபோல தோன்ற அவர்கள் மெய்ப்பு கொண்டனர். பலர் நிலம் நோக்கினர். சிலர் வானை. சிலர் அப்பால் ஏதேனும் இலக்கை. சிலர் கொடிகளை.

கொடிகளைப்போல அத்தனை பொருளில்லாத எதையும் அவர்கள் அதற்குமுன் கண்டதில்லை என உணர்ந்தார்கள். அந்தக் கொடிகளை வணங்கவும் அவற்றின் ஆணைகளுக்குப் பணியவும் அவற்றுக்காக உயிர்விடவும் அவர்கள் நினைவறிந்த நாள் முதலே பயிற்றுவிக்கப்பட்டிருந்தார்கள். அவற்றை நோக்கி களிவெறிகொண்டு கூச்சலிட்டார்கள். அவற்றை நோக்கி நோக்கி மெய்ப்பு கொண்டார்கள். கொடிக்கென வாழ்வதாக உறுதிபூண்டவர்கள், தங்கள் நினைவின் வாழ்வின் மீட்பின் குறி என கொடியை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

கொடி அரசனின் நேர்த்தோற்றம். அரசன் என எழுந்த குருதிநிரையின் அடையாளம். அவர்களுக்கு அன்னமும் அன்னையும் ஆன நிலத்தின் துளி அது. மூதாதையரின் சொல் எழுந்து விழிநோக்க வானில் துடிப்பது. ஆனால் களத்தில் கிழிந்த வெற்றுத் துணியாகவும் ஒவ்வொரு கணமும் குருதிப்பசிகொண்ட கொடிய விலங்கொன்றின் விடாய்கொண்ட நாவாகவும் இரக்கமேயற்ற அரசாணை ஒன்று பொறித்த ஏடாகவும் பலிநாடும் இருள்தெய்வமொன்றின் முகப்புப்படாமாகவும் அது தோன்றியது. கொடிகளை நோக்கிய அனைவரும் திடுக்கிட்டு விழிதாழ்த்திக்கொண்டார்கள்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையைப்பற்றி எண்ணும் கணம் அது. தாங்கள் எய்தியவற்றை நினைவுகூர்ந்தனர். அவையனைத்தும் முதிரா இளமையிலேயே என்பதை மெல்ல உணர்ந்ததும் ஏக்கம் கொண்டனர். தாங்கள் வாழவே இல்லை என, வாழ்வுக்கு அப்பால் என சிலவற்றைக்கொண்டு அவற்றை நோக்கி செல்வதையே வாழ்வாக எண்ணி மயங்கி நாள்கடத்தியிருக்கிறோம் என உணர்ந்தனர். அவை அனைத்தும் பிறரால் உருவாக்கி அளிக்கப்பட்டவை. அவற்றை தங்கள் அகம் முழுமையாக நம்பியதுமில்லை. ஆயினும் அவற்றுக்காக வாழ்க்கையை அளித்திருந்தனர்.

ஏனென்றால் வாழ்க்கை முடிவற்றது என்னும் மாயை அவர்களுக்குள் இருந்தது. நாட்கள் நெடிது நீண்டு முன்னால் கிடக்கின்றன என்றும் அள்ள அள்ளக் குறையாதவை காத்திருக்கின்றன என்றும் அவர்களின் ஆழம் நம்பியது. அந்நம்பிக்கை குழந்தைப்பருவத்தில் வந்தமைந்தது. அதை பின்னர் எண்ணி நோக்கியதே இல்லை. தொடப்படாததாக அது அங்கிருந்தது. கையிடுக்கினூடாக காலம் ஒழுகுவதை உணர்ந்திருந்தபோதும்கூட அவர்கள் எண்ணிய அனைத்தையும் அடையும் பொழுது எழவிருப்பது என்றே மயங்கினர்.

அந்நினைப்பு சிலரை விழிகசிய, நெஞ்சுலையச் செய்தது. சிலரை நெடுமூச்சுடன் தளரவும் சிலரை எவர் மேலோ என வஞ்சம்கொண்டு பல்லிறுக்கவும் செய்தது. சிலர் மட்டும் கசப்புடன் சிரித்துக்கொண்டார்கள். அச்சிரிப்பை அருகிருந்தோர் ஐயத்துடன் நோக்க அவர்கள் நோக்குபவர்களின் உள்ளத்தை எண்ணி மேலும் சிரித்தனர். அச்சிரிப்பு அவர்களை அத்தருணத்தின் இறுக்கத்திலிருந்து முற்றாக விடுவித்தது.

போர்ப்பறை முழங்கிய கணம் அவர்கள் திகைத்து செயலற்று நின்றனர். உள்ளமும் உடலும் தனித்தனியாக பிரிந்துவிட்டதுபோல. மீண்டும் மீண்டும் போர்ப்பறை அறைகூவியது. “செல்க! செல்க!” என ஆணையிட்டது. “உயிர்கொடு! உயிர்கொடு!” என அது ஒலித்தது. தங்களை முந்தைய கணத்திலிருந்து அறுத்துக்கொண்டு அவர்கள் அந்த உச்சக்கொந்தளிப்பு நோக்கி பாய்ந்தார்கள். அடியிலா ஆழம் நோக்கி பாய்பவர்கள்போல. இருண்ட ஆழம். வெறுமையின் முடிவிலி.

முரசொலிகள் ஆணையிட்டுக்கொண்டே இருந்தன. இருளில் சென்றுகொண்டிருந்த சுபாகு தன் எதிரில் வந்த பெண்ணைக் கண்டு நின்றான். அவள் கரிய ஆடை அணிந்திருந்தாள். விழிகள் கனிவு கொண்டிருந்தன. ஒரு கையில் அமுதகலமும் மறுகையில் கொடியும் சூடியிருந்தாள். சுபாகு தன் புரவியை இழுத்து நிறுத்தினான். அவள் அருகணைந்து தன் கையிலிருந்த கலத்தை அவனை நோக்கி நீட்டினாள். அவன் அதை வாங்கியபின் அவள் விழிகளை நோக்கினான். அவள் முகத்தில் புன்னகை இல்லை. உதடுகள் இறுகியிருந்தன. ஆனால் விழிகளின் ஒளி கனிவுகொண்டிருந்தது. வைரங்கள்போல. வைரங்கள் கனிவுகொண்டு ஒளிசூடிய கூழாங்கற்கள்.

அவன் அந்தக் கலத்தைத் தூக்கி அதிலிருந்த குளிர்ந்த இனிய மதுவை அருந்தினான். அது நரம்புகளில் ஓடும் மெல்லிய அதிர்வாக உடலெங்கும் பரவியது. கைவிரல்நுனிகளை அதிரச்செய்தது. இனிப்புண்ணும் நாக்கு என காதுமடல்கள் தித்தித்தன. அவன் முகம் மலர்ந்தது. அக்கணம் வரை அவனை அழுத்திய அனைத்துத் துயர்களும் விலகின. அவன் முகம் மலர்ந்தது. “வாழ்த்துகிறேன், அன்னையே! என்னை மீட்டீர்கள்” என்றான். அவள் கலத்தை வாங்கிக்கொண்டு புரவியில் கடந்துசென்றாள். அவன் உள்ளம் உவகையில் திளைக்க புரவியில் படைநடுவே சென்றான்.

முந்தைய கட்டுரைடோக்கியோ உரை பற்றி…
அடுத்த கட்டுரைமலைக்காட்டுப் பிச்சாண்டி