அன்னியரும் மொண்ணையரும்

வெள்ளையானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்

சுரேஷ் பிரதீப் அவருடைய தளத்தில் எழுதியிருந்த இக்கட்டுரையை வாசித்தேன். வெள்ளை யானை நாவல் குறித்த ஒரு விவாதத்திற்கு இலக்கியத்துடன் சம்பந்தமில்லாத ஒரு கும்பல் அளித்த எதிர்வினைக்குப் பதிலாக எழுதியிருக்கிறார்.

வெள்ளையானை – தஞ்சைகூடல் – சில விளக்கங்கள்- சுரேஷ் பிரதீப்

கடந்த ஏப்ரல் 27ல் நடந்த தஞ்சைகூடல் இலக்கிய வட்டத்தின் இருபத்தைந்தாவது நிகழ்வு குறித்த சில சர்ச்சைகள் முகநூலில் ஓடியது கவனத்துக்கு வந்தது. நிகழ்வில் பேசிய அருள் கண்ணன் என்கிற ஆய்வு மாணவர் கூட்டத்தில் தான் முன்வைத்த கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே வழக்கம் போல அதை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் வசைபாடக் கிளம்பிவிட்டது.

முதலில் அருள் கண்ணன் முன்வைத்த கேள்விகள். இந்த நாவலை வரலாறாக அணுகுவதா அல்லது புனைவாக அணுகுவதா என்பது அவரது முதல் கேள்வி. அவருடைய மற்றொரு கேள்வியை சுனில் கிருஷ்ணனும் வேறு வகையில் முன்வைத்தார். இந்த நாவலில் ஏன் பிராமணர்களின் தரப்பு சரியாக முன்வைக்கப்படவில்லை என்பது. இவ்விரு கேள்விகள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாகவே நினைக்கிறேன். நாவல் குறித்து பேசுபவர்கள் பேசிக்கலைவதாக இல்லாமல் அனைவரும் பேசி முடித்த பிறகு அரைமணி நேரம் நாவல் குறித்த விவாதமும் நடந்தது. அருள் கண்ணன் அந்த விவாதத்தின் போது தன் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லை என்று நினைவுபடுத்தி இருக்கலாம். எனினும் அவர் கேள்விக்கான என் விளக்கம்.

வெள்ளையானை உட்பட எந்த வரலாற்று நாவலையும் வரலாறாக அணுக இயலாது. வரலாறு ஆய்வாளர்களால் வரலாற்று ஆவணங்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படுவது. அங்கு ஆய்வாளனின் சொந்த அலைகழிப்புகளோ விருப்பங்களோ பொருட்டல்ல. ஆய்வு நோக்கத்துக்கு மட்டுமே அவன் கட்டுப்பட்டவன். சுரேந்திரநாத் சென் 1857 என்ற நூலினை எழுதினார். முதல் இந்திய சுதந்திரப் போர் அல்லது சிப்பாய் கலகத்தைப் பற்றிய சித்திரத்தை கொடுக்கும் நூல் அது. அந்த நூலினை வாசித்தால் சிப்பாய் கலகத்தின் மீது நமக்கிருக்கும் மிகை கற்பனைகளும் “இந்திய வீரம்” குறித்த மிகை மதிப்பீடுகளும் தகர்ந்துவிடும். அந்த நூல் இந்திய அரசு சிப்பாய் கலகத்தை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் சுரேந்திரநாத் சென் அவர்களை கேட்டுக்கொண்டு எழுதச் செய்தது. அவரும் தனக்கு கிடைத்த ஆவணங்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். ஆனால் சிப்பாய் கலகம் குறித்த ஒரு எதிர்மறை பார்வையை அந்த நூல் உருவாக்குவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் அது ஜனநாயக இந்திய அரசால் எழுதப்படுவது. வன்முறை வழியாக சுதந்திரம் சாத்தியமில்லை என்று நம்பும் ஒரு அரசு அந்த நூலினை எழுதப் பணிக்கிறது. மேலும் பெரும்பாலான எழுத்துப்பூர்வ ஆவணங்கள் பிரிட்டிஷ் ஆவண காப்பகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆகவே அந்த நூல் இயல்பாகவே ஒரு சாய்வினை வெளிப்படுத்தவே செய்யும். அது சுரேந்திரநாத் சென்னின் மனச்சாய்வு சார்ந்தது அல்ல. அவரது ஆய்வு முறைமை அந்த நூலினை எழுதச் செய்யும் அரசின் நோக்கம் மற்றும் கருத்தில் கொள்ளும் ஆவணங்களால் உண்டாகும் சாய்வு. ஆனால் வரலாற்றுப் புனைவு முழுக்க எழுத்தாளனின் அலைகழிப்பு சார்ந்தது. மேலும் புனைவு தகவல்களின் இருந்து உணர்வுகளை கட்டமைப்பது. அந்த உணர்வுகள் சரியான தகவல்களின் மேல் கட்டப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே வரலாற்று புனைவினை வாசிக்கும்போது கவனிக்க வேண்டும். இந்த நாவல் ஆவணமாக்கப்படாத ஒரு போராட்டத்தை தன்னுடைய அடிப்படையாகக் கொண்டுள்ளது.

வரலாற்றினை அல்ல “வரலாறின்மையையே” இந்த நாவல் பேசுவதாக நான் கூட்டத்தில் பேசினேன். இன்றுவரை தலித்திய ஆய்வாளர்களும் தலைவர்களும் கட்டமைக்க முனைவது இந்த வரலாற்று தொடர்ச்சியைத்தான். ஸ்டாலின் ராஜாங்கம் அதில் முக்கியமானவர். சென்னையில் நடைபெற்ற தலித்திய போராட்டங்களின் தொடர்ச்சி குறித்து ஸ்டாலின் சமீபத்திய உரை ஒன்றில் பேசினார். அப்படி ஒரு வரலாற்றின் முதல் புள்ளி உருவாவதற்கான வாய்ப்பினையும் அந்த வாய்ப்பு அதன் எதிர் தரப்பால் முற்றழிக்கப்படும் அவலத்தையும் இந்த நாவல் பேசுகிறது. அதன்பிறகான பல உண்மை நிகழ்வுகளில் இந்த வரலாற்று புனைவில் செயல்படும் அதே தர்க்கம் செயல்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். ஆகவே வெள்ளையானையை “வரலாறு” என்று கொள்ள முடியாது. ஆனால் வரலாற்றின் தர்க்கங்களை கற்பனை செய்து விரித்தெடுத்துக் கொள்ள உதவும் ஒரு கருவியாகக் காணலாம். வரலாற்று புனைவுகளை வரலாற்றில் இத்தகைய இடையீடுகள் நிகழ்த்தி வரலாற்றினை மேலும் துலக்கம் பெறச் செய்வதாகக் கொள்ளலாம்.அவருடைய இரண்டாவது கேள்விக்கு கூட்டத்திலேயே விரிவாக பதில் சொல்லப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.

இனி இது குறித்து நடக்கும் சர்ச்சைகள் பற்றி.

எழுத்தாளர் அசோக்குமார் கே.ஜே. இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தஞ்சைகூடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். நானும் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்வுகள் உள்நோக்கம் கொண்டவை என்று ஒரு சிலர் தொடர்ந்து கூச்சல் இடுகிறார்கள். தஞ்சைகூடல் மட்டுமல்ல எல்லா இலக்கிய கூட்டங்களுக்கும் இருக்கும் ஒரே உள்நோக்கம் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. நண்பர்களை அழைப்பது, நூலினை தேர்வு செய்வது, கூட்டம் நடத்த இடம் தேர்வது என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று மனதை எளிதாக கசப்டடையச் செய்துவிடும் தமிழ் சூழலில் ஒருவர் தொடர்ந்து இரண்டாண்டுகள் கூட்டங்களை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நதிக்கரை இலக்கிய வட்டத்தின் கூடுகைகளை ஓராண்டாக ஒருங்கிணைப்பதால் அவரின் சிரமங்களை நன்கறிய முடிகிறது.

ஏதாவது ஒரு கருத்தியல் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதற்கு வெளியே இருப்பதெல்லாம் இலக்கியமே அல்ல என மறுதலித்து அதற்கு வெளியே இருப்பவர்களால் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் சதிவேலைகளாகவே பார்க்கும் உளக்குறைபாடு இன்று பலரிடம் பெருகி இருக்கிறது. அத்தகையவர்களை பொழியும் கீழ்தரமான வசைகளை பொறுத்துக் கொண்டே அசோக்குமார் இந்த கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் நூல்கள் மீது விமர்சனம் இருப்பவர்கள் நேரடியாக அவரிடம் அதைச் சொல்லலாம் அல்லது அந்த நூலின் குறைப்பாட்டை விளக்கி எழுதலாம். ஆனால் தொடர்ந்து வசைகளையும் எளிய முன் முடிவுகளுடன் கூடிய கேலிகளையும் மட்டுமே அவர்களால் முன்வைக்க முடியுமெனில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

எழுத்தாளர் அசோக்குமார் இதுபோன்ற கூச்சல்களை பொருட்படுத்தாது தஞ்சையில் அவர் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சியை தொடர வேண்டும். இலக்கியத்தின் வழியாக அறிதலை மேற்கொள்ள நினைக்கும் ஒருவனாக அவர் உடன் நிற்கிறேன்.

இதை எனக்கு அனுப்பிய நண்பர் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என வேதனைப்பட்டிருந்தார்.  சுரேஷ் இப்போதுதான் இலக்கியத்திற்குள் நுழைகிறார். இவர் சொல்லியிருக்கும் இவ்விஷயங்கள் நவீன இலக்கியச் சூழலில் நிகழத்தொடங்கி முக்கால்நூற்றாண்டு ஆகிறது. நானே இவற்றை முப்பதாண்டுகளாக கண்டுகொண்டிருக்கிறேன்.

இதிலுள்ள உளநிலைகள் மாறாதவை. இலக்கியம் என்பது வரலாறு,சமூகவியல், அரசியல், தத்துவம், மதம் ஆகியவற்றைச் சார்ந்து செயல்படும் ஓர் அறிவுத்துறை அல்ல. அதன் வழிகள் வேறு. அது கற்பனையையே தன் வழிமுறையாகக் கொண்டது. கற்பனையினூடாக அறிதல் என்பதே அதன் இலக்கு. அது வரலாற்றை, சமூகவியலை, அரசியலை, தத்துவத்தை, மதத்தை கற்பனை செய்துகொள்கிறது. அக்கற்பனையை நிகழ்த்துவதற்கு முகாந்திரமான தரவுகளை மட்டுமே பிற அறிவுத்துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது.  எந்தக் கலையையும்போல இலக்கியத்திலும் அடிப்படை அலகு என்பது படிமமே. பிற அறிவுத்துறைகளில் அடிப்படை  அலகு என்பது வரையறை. படிமம் வாசகனால் முழுமை செய்யப்படுவது.

ஆகவே இலக்கியத்தின் கண்டடைதல்கள் பிற அறிவுத்துறைகளைக்கொண்டு மதிப்பிட முடியாது. இலக்கியத்தின் தரவுகளை நேரடியாக பிற அறிவுத்துறைகளின் தரவுகளாகக் கொள்ளவும் முடியாது. உதாரணமாக, சங்க காலத்தைய உளநிலைகளை, தரிசனங்களை  சங்கப்பாடல்கள் வழியாக அறியலாம். ஆனால் சங்கப்பாடல்கள் ’காட்டுவது’ அன்றைய சமூக அரசியல் சூழல்களை அல்ல. நேரடியாக அப்படிக் கொள்வதைப்போல பிழை பிறிதில்லை. இதை பலவாறாக நானும் எழுதியிருக்கிறேன்.

இதை பொதுவாக இலக்கியம் வாசிக்கும் எவரும் புரிந்துகொள்ள இயலும். இலக்கியத்தின் வழி  கற்பனையினூடாக செயல்படுவது. ஆனால் இலக்கியம் மொழியில் அமைந்துள்ளது – இசை போல ஓவியம் போல ஓசையையோ வண்ணத்தையோ அது ஊடகமாகக் கொள்ளவில்லை. அனைத்து அறிவுத்துறைகளும் மொழியையே ஊடகமாகக் கொண்டுள்ளன. ஆகவே இலக்கியத்தையும் ஓர் அறிவுத்துறை எனக்கொண்டு மொழியிலுள்ள பிற அறிவுத்துறைகளுடன் அதை இணைத்துக்கொண்டு குழப்புவதை எப்போதுமே வெவ்வேறு அறிவுத்துறையினர் செய்துவருகிறார்கள்.

அவர்களில் மிகச்சிலர் கற்பனைத்திறனும் கொண்டவர்கள். அவர்கள் இலக்கியத்தின் எல்லையையும் இயல்கைகளையும் அறிந்தவர்கள். தமிழில் சிறந்த உதாரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை. வரலாற்றாய்வில் டி.டி.கோஸாம்பி.எஞ்சியவர்களிடம் ஒருபோதும் இலக்கியத்தின் செயல்முறையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. இலக்கியம் மொழியில் இருப்பது, மொழியால் செயல்படுவது அல்ல என்பதை புரிந்துகொள்ளவே அவர்களால் இயல்வதில்லை.

இவர்கள் அவ்வப்போது இலக்கியவிவாதங்களுக்குள் நுழைவார்கள். கேள்விகள் கேட்பார்கள். அக்கேள்விகள் அவர்கள் அறிந்த அறிவுத்துறை சார்ந்தவையாக இருக்கும். அவற்றுக்கு இலக்கியத்தளத்தில் நின்று சொல்லப்படும் பதில்களும் விளக்கங்களும் அவர்களுக்குப் புரிவதில்லை. அதை மழுப்பல்களாகவே எடுத்துக்கொள்வார்கள். இலக்கியம் அகவயமான பதில்களையே சொல்லும். அவர்கள் புறவயமாக விவாதிக்கும் அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே தங்களுக்குப் பதில் அளிக்கப்படவில்லை என நம்பி கொக்கரிப்பார்கள். வெற்றிப்பெருமிதம் கொண்டு திரும்பிச் செல்வார்கள்.

இவர்கள் வேறு அறிவுத்தளத்தில் ஏதேனும் அறிந்தவர்கள், நிகழ்த்தியவர்கள் என்றால் அவர்களின் எல்லை அது என எண்ணி பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் நம் இலக்கியச் சூழலில் நாம் பொதுவாகச் சந்திப்பவர்களுக்கு எந்த அறிவுத்தளத்திலும் தொடக்கக் கட்டப் பயிற்சிகூட இருப்பதில்லை.  மிகமேலோட்டமான ஓரிரு வரிகளை எங்கிருந்தேனும் கற்று வைத்திருப்பார்கள். அவற்றை ஆணித்தரமாக நம்பி முன்வைத்துக் கூச்சலிடுவார்கள். அறியாமை மட்டுமே அளிக்கும் அளவில்லா தன்னம்பிக்கையுடன் அவற்றை எங்கும் சொல்வார்கள். எவரையும் சிறுமைசெய்வார்கள். இந்த மூர்க்கம் மதநம்பிக்கையாளர்களிடம் இருப்பதைக் காணலாம். இதுவும் ஒரு மதநம்பிக்கையே.

இலக்கியத்தின் பதில்கள் நுட்பமானவை, அகவயமானவை, ஆகவே சிக்கலானவை. அவற்றை இந்த இரும்புமண்டைகளுக்குள் புகுத்தவே முடியாது. எந்த விளக்கத்தையும் மழுப்பல், சொதப்பல் என்றே இவர்கள் புரிந்துகொள்வார்கள். வெற்றிக்கொக்கரிப்பு செய்வார்கள். 1958ல் நெல்லையில் ஒர் இலக்கியக்கூட்டத்தில் “இலக்கியம் மக்களுக்கா இலக்கிய ரசிகர்களுக்கா?” என்னும் ‘ஒண்ணாப்பு’ கேள்வியை ஒருவர் கேட்டு அதற்கு அளிக்கப்பட்ட எந்தப்பதிலையும் புரிந்துகொள்ளாமல் ஆவேசமாக வெளியேறி தனக்குப் பதில் சொல்லப்படவில்லை என பத்தாண்டுக்காலம் மேடை மேடையாக எகிறினார் என்பதை சுந்தர ராமசாமி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

“ஏதாவது ஒரு கருத்தியல் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதற்கு வெளியே இருப்பதெல்லாம் இலக்கியமே அல்ல என மறுதலித்து அதற்கு வெளியே இருப்பவர்களால் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் சதிவேலைகளாகவே பார்க்கும் உளக்குறைபாடு இன்று பலரிடம் பெருகி இருக்கிறது.” என்கிறார் சுரேஷ். இது உளக்குறைபாடு அல்ல. மூளைக்குறைபாடு மட்டும்தான். அது உண்மையில் மன்னிக்கத்தக்கது. அது அவர்களின் பிழை அல்ல. அவர்களால் அதை கடக்க முடியாது.

ஒரு சாரார் அந்நியர்கள். இன்னொருவர் மொண்ணையர்கள். இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை. முழுமுற்றாக இவர்களைப் புறக்கணித்தே இங்கே செயல்படவேண்டியிருக்கிறது. முந்தையவர்களை மதிப்புகலந்த விலக்கத்துடன். இரண்டாம் தரப்பினரை எரிச்சலை ஒத்திவைத்த கனிவுடன். வேறுவழியில்லை

ஆனால் இதை ஏன் இவ்வளவு விரிவாக எழுதவேண்டும்? ஒரே காரணம்தான், காலம்தோறும் இந்தக்குரல் அச்சு அசலாக மீளமீள எழுந்தபடியேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தந்த தலைமுறையினர் இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும், அவ்வளவுதான்

 

எஸ்.வையாபுரிப்பிள்ளை

முந்தைய கட்டுரைஊட்டி சந்திப்பு- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38