‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38

திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான். உடலெங்கும் பலநூறு நரம்புகள் சுண்டி இழுபட்டு வலி நிறைத்தன. தனித்தனியாக நூறுவலிகள். அவை ஒன்றெனத் திரண்டு ஒற்றை வலியாக ஆகாது போவது ஏன்? அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கிறது. ஒவ்வொரு செயல்முறை இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருமொழியில் அவனிடம் பேசிக்கொண்டிருந்தன.

மூச்சைத்திரட்டி கால் தூக்கி திண்ணையிலேறியபோது அவன் மீண்டும் தள்ளாடி தூணை பற்றிக்கொண்டான். உள்ளிருந்து எழுந்த வலியை உணர்ந்து பற்களை இறுகக் கடித்தான். ஒருகணம் போதும் இந்த நைந்த உடலிலிருந்து விடுதலை அடைந்துவிட வேண்டும் என்று தோன்றியது. இதை இன்னும் நெடுநாட்கள் சுமந்தலைய இயலாது. இது இங்கு இனி ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை. அவன் கண்களை மூடி உள்ளிருந்து குருதிக்குமிழிகள் எழுந்து கொப்பளித்து சுழன்றலைவதை பார்த்துக்கொண்டிருந்தான். பின்னர் விழிகளைத் திறந்து சூழ நோக்கியபோது உடல் வியர்த்திருந்தது. இரவின் மென்குளிர்காற்று வந்து தொட்டபோது குளிர்ந்தது.

அவன் மீண்டும் உடலைச் செலுத்தி உள்ளே சென்றான். வாயிலில் நின்றிருந்த சுருதகீர்த்தி தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டினான். உள்ளே சாத்யகியும் சிகண்டியும் பாண்டவமைந்தர்களும் மட்டும் அமர்ந்திருந்தார்கள். நகுலனும் சகதேவனும் யுதிஷ்டிரனை அழைக்கச் சென்றிருப்பார்கள் என்று அவன் எண்ணினான். பீமனும் அர்ஜுனனும் இறுதியில் வருவதே வழக்கம். ஒருவேளை அர்ஜுனன் வராதொழியவும் வாய்ப்புண்டு. அவனுக்கு அந்த அவையிலிருந்து தானும் ஏதேனும் சொல்லி ஒழிந்துவிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அங்கு பேசுவதோ படைசூழ்கை வகுத்தளிப்பதோ அன்றுபோல் பொருளற்றதென என்றுமே தோன்றியதில்லை.

சாத்யகி அவனிடம் “நோயுற்றிருக்கிறீர்கள், பாஞ்சாலரே” என்றான். “ஆம்” என்று வலியுடன் முனகியபடி கைகளை இருக்கையின் பிடியில் ஊன்றி மெல்ல உடல் தாழ்த்தி அமர்ந்து பெருமூச்சுடன் கால்களை நீட்டிக்கொண்டான் திருஷ்டத்யும்னன். “தாங்கள் சற்று ஓய்வெடுக்கலாம்” என்று சாத்யகி சொன்னான். சிகண்டி “ஓய்வெடுப்பதால் எந்தப்பயனும் இல்லை. எனது உடலிலும் ஏழு அம்பு முனைகள் பாய்ந்துள்ளன. அவற்றை பிழுதெடுத்தால் அந்தப்புண் எளிதில் ஒருங்கிணையாதென்பதனால் அப்படியே விட்டுவிட்டிருக்கிறார்கள். இரவில் படுத்தால் மொத்த உடலும் அந்த உலோகங்களுக்கு எதிராக போரிடத்தொடங்குகின்றது. ஓய்வெடுப்பது என்பது உடலை வலிக்கு அளிப்பது மட்டுமே” என்றார்.

திருஷ்டத்யும்னன் முனகலுடன் மீண்டும் உடலை எளிதாக்கி கண்ணை மூடிக்கொண்டான். சிகண்டி “உங்கள் உடலில் எத்தனை அம்பு முனைகள் நுழைந்துள்ளன, இளையபாஞ்சாலரே?” என்றார். அதிலிருந்த இளிவரலை புரிந்துகொண்டு “ஒன்பது” என்று விழிதிறக்காமல் திருஷ்டத்யும்னன் சொன்னான். சாத்யகி “எனது உடலிலிருந்தவற்றை பிழுது அகற்றிவிட்டார்கள். தசை சேர்த்து தையலும் இட்டிருக்கிறார்கள்” என்றான். “நன்று” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். சிகண்டி “தைத்த தசைகள் ஒவ்வொரு அசைவிலும் இழுபடுவதைவிட நான் அடையும் வலி குறைவானதே” என்றார்.

மீண்டும் அவர்களிடையே ஒரு சொல்லின்மை உருவாகியது. “இளையோர் எவருக்கும் ஆழ்ந்த புண் எதுவுமில்லையல்லவா?” என்று சிகண்டி கேட்டார். சுருதகீர்த்தி “சர்வதன் மட்டுமே ஓர் ஆழ்ந்த புண்ணை அடைந்திருக்கிறான்” என்றான். “இளையோர் விரைவிலேயே அவற்றை ஆற்றிக்கொள்வார்கள்” என்று சாத்யகி சொன்னான். ஒவ்வொரு உரையாடலாக தொடங்கி அது மேலும் தொடர இயலாது உடனடியாக சொல்லழிவதை அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தனர். எதை பேசுவதென்று தெரியவில்லை.

திருஷ்டத்யும்னன் தான் குடிகொள்ளும் அந்த உடலிலிருந்து அனைத்துச் சரடுகளையும் அறுத்துக்கொண்டு எழுந்து விலகிச்சென்றுவிடவேண்டுமென்று எண்ணினான். இந்த உயிர் தன் வலியுடன், நோயுடன் இந்தப் பீடத்தில் வீற்றிருக்க வேண்டும். அது இறுதியாக அமர்ந்த பீடம். அந்தப்பீடத்தை அது என்றும் விரும்பியிருந்தது. அங்கிருக்கையில் முழுமையடைந்ததாகவும் வெற்றியை அடைந்துவிட்டதாகவும் எண்ணிக்கொண்டிருந்தது. எழுந்து வெளியே சென்றால் உடலின்மை எடையின்மையாகி அனைத்திலிருந்தும் விடுதலை அடையச்செய்திருக்கும். அங்கு வீசிக்கொண்டிருக்கும் குளிர்ந்த காற்றில் கலந்து திசையின்மையாக மாறி சுழல முடியும்.

அவன் இமைகள் சரிந்தன. கைகள் தளர்ந்து கைப்பிடிகளில் முழுதமைந்தன. தலை தொங்கி மூச்சு சீரடைய அவன் தன் குறட்டையொலியை தானே கேட்டான். பின்னர் விழித்துக்கொண்டபோது உள்ளம் சற்று தெளிந்திருந்தது. அந்தச் சிறு பொழுதுக்குள் கனவில் தான் வேறெங்கோ சென்று ஒரு துளி வாழ்க்கையை நுகர்ந்து மீண்டதை அவன் உணர்ந்தான். அதில் காம்பில்யத்தின் தெருக்களினூடாக புரவியில் நகைத்தபடி பாய்ந்து சென்றான். பாஞ்சாலத்து இளைஞர்கள் புரவியில் அவனைத் துரத்தி வந்தனர். சென்ற விரைவிலேயே புரவியை இழுத்து விசை குறைத்து அதிலிருந்து தாவி ஆற்றின் பெருக்கில் குதித்து நீந்தத்தொடங்கினான். செல்லும்போதே தன் காலிலிருந்து இரும்புக்குறடுகளை கழற்றியிருந்தான். தொடர்ந்து வந்தவர்கள் சேற்றுப்பரப்பில் புரவிகளை இழுத்துச் சுழன்று நின்று நீந்திக் கடந்துசெல்லும் அவனை பார்த்தனர். பின்னர் காலணிகளைக் கழற்றிவிட்டு ஒவ்வொருவராக நீரில் குதித்தனர். அவன் நீந்தியபடியே மல்லாந்து திரும்பி அவர்களைப்பார்த்து வாயில் அள்ளிய நீரை ஓங்கி பீறிட்டு உமிழ்ந்து உரக்க நகைத்தான். அவனைச்சுற்றி நீர்த்துளிகள் பளிங்கு உருளைகளென எழுந்து ஒளிகொண்டு துள்ளிக்கொண்டிருந்தன.

வெளியே சங்கொலி கேட்டது. பிரதிவிந்தியன் அவைக்குள் நுழைந்து “அரசர் எழுந்தருள்கிறார்” என்றான். சற்று நேரத்தில் மீண்டுமொரு சங்கொலி எழுந்தது. இரு ஏவலர்க்ள் சங்கொலி எழுப்பியபடி முன்னால் வர ஒருவன் மின்கதிர்க்கொடியுடன் தொடர சால்வையை நன்றாகப் போர்த்தியபடி உடலைக்குறுக்கி கூன்விழுந்த முதுகுடன் யுதிஷ்டிரன் அவைக்குள் நுழைந்தார். எழுந்து நின்று வணங்கிய அனைவரையும் பார்த்து தானும் வணங்கிவிட்டு குறுகிய காலடிகளுடன் பறவை நடையில் சென்று தன் பீடத்தில் அமர்ந்தார்.

திருஷ்டத்யும்னன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். அவன் எழுந்து ஏதேனும் பேசுவான் என்று எதிர்பார்த்து சாத்யகி அவனை நோக்கிக்கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் அவையை சூழ்ந்து பார்த்தார். பின்னர் “இளையோர் எவருமே வரவில்லையா?” என்றார். அதற்கு அவையிலிருந்து மறுமொழி எழவில்லை. யுதிஷ்டிரன் திரும்பி வாயிலருகே நின்ற சுருதகீர்த்தியிடம் “எங்கே உன் தந்தை?” என்றார். சுருதகீர்த்தி “அவரை அழைத்து வருவதற்கு சுருதசேனன் சென்றிருக்கிறான். சிறிய தந்தையர் நகுலரும் சகதேவரும் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றான்.

“மந்தன் எங்கே?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவர் உணவருந்திக் கொண்டிருக்கிறார்” என்றான் சுருதகீர்த்தி. “உடனே சென்று அவனை வரச்சொல். இங்கு அவை கூடியிருக்கிறது என அவனுக்குத் தெரியாதா என்ன? அவை முடிந்தபின் சென்று உணவு கொள்ளலாம். செல்க!” என்றார் யுதிஷ்டிரன். சுருதகீர்த்தி தலைவணங்கி வெளியே சென்று ஏவலனை அழைக்கும் ஓசை கேட்டது. திருஷ்டத்யும்னன் அந்நிகழ்வுகளை வேறெங்கோ நிகழ்வதுபோல அரைக்கனவில் என அறிந்துகொண்டிருந்தான்.

யுதிஷ்டிரன் தாடையைக் கடித்து தலையை சலிப்புடன் அசைத்தார். “அவ்வாறெனில் இப்போரை தொடரவேண்டுமென எனக்கு மட்டுமே இன்று எண்ணம் உள்ளது. பிற அனைவரும் ஓய்ந்து சலித்துவிட்டார்கள்” என்றார். அவை சொல்லெடுக்காமல் துயில்வதுபோல் அமர்ந்திருந்த்து. அவர் அவர்களை சூழநோக்கிவிட்டு “எவருக்கும் இனி சொல்வதற்கொன்றுமில்லை அல்லவா?” என்றார். சாத்யகி முனகலாக “அவ்வாறல்ல, அரசே” என்றான். “பிறகென்ன? பிறகென்ன?” என்று அவர் உரக்க கேட்டார். “ஒவ்வொருவரும் இங்கே என்ன சொல்லவிரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. என் பொருட்டு படை நின்றீர்கள், சுற்றத்தை இழந்தீர்கள், புண்பட்டீர்கள், தன்நினைப்பு ஒழிந்தீர்கள் அல்லவா?”

அவையிலிருந்த எவரும் எதுவும் சொல்லவில்லை.  யுதிஷ்டிரன் மேலும் உரக்க “என்பொருட்டென்றால் இதோ இப்போதே போரை நிறுத்திவிடுகிறேன். எனக்கு எவரிடமும் கடப்பாடு எதுவும் இல்லை. நான் எவரிடமும் எதையும் கோரிப்பெறவுமில்லை. எவர் சொல்லுக்கு இந்தப்போர் தொடங்கியதோ அவர் சொல்லட்டும், போரை நிறுத்திவிடுவோம்” என்றார். அதற்கும் அவையிலிருந்து மறுமொழி எதுவும் எழவில்லை. “என்ன சொல்கிறீர்கள்?” என்று யுதிஷ்டிரன் கூவினார்.

அதற்குள் அறிவிப்பு ஏதுமில்லாமல் நகுலனும் சகதேவனும் அவையின் வாயிலில் வந்தனர். சுருதகீர்த்தி உள்ளே வந்து தலைவணங்க யுதிஷ்டிரன் திரும்பி சிவந்த விழிகளால் அவர்களை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் தலைதிருப்பிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் வந்து யுதிஷ்டிரனுக்கு தலைவணங்கியபின் சென்று தங்கள் பீடங்களில் அமர்ந்துகொண்டனர். யுதிஷ்டிரன் செருமியபடி தன் மேலாடையை சீரமைத்தார். மீண்டும் அவை அந்த உளமழுத்தும் சொல்லின்மையை சென்றடைந்தது.

சாத்யகி மெல்ல உடலை அசைத்து “மழை பெய்யுமென்று தோன்றுகிறது” என்றான். திருஷ்டத்யும்னன் அச்சொல்லால் உளம் எளிதாகி “இது ஆடி, மழை வழக்கமில்லை” என்றான். “ஆம், ஆனால் பதினெட்டாம் பெருக்கன்று மழை உண்டு என்ற சொல்லாட்சியை சிறு அகவையில் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் சாத்யகி. இது என்ன பேச்சு என்பதுபோல் முகம் சுளித்து அவனை நோக்கிய யுதிஷ்டிரன் “பெய்யட்டும், அதனால் என்ன?” என்றார். சாத்யகி “அரசே, நமது படை வீரர்களில் பெரும்பாலானவர்கள் புண்பட்டு மருத்துவ நிலையில் படுத்திருக்கிறார்கள். இப்போது மழை பெய்யுமென்றால் அவர்களில் சற்று ஆழ்ந்த புண்பட்ட அனைவருமே இருநாட்களுக்குள் நோயுற்று உயிர் துறப்பார்கள். புண்ணுக்கு மழையீரம்போல் எதிரி வேறில்லை” என்றான்.

யுதிஷ்டிரன் “அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? வானை மூடி கூரையிட முடியுமா என்ன?” என்றார். அவருடைய எரிச்சலை உணர்ந்து சாத்யகி ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் மேலும் சினம் கொண்டு உரத்த குரலில் “இங்கு அம்புகளால் கொல்லப்பட்டதைவிட மழையால் கொல்லப்பட்டவர்கள் மிகுதி என்பதை நான் அறிவேன். ஒவ்வொரு நாளும் களத்திலிருந்து தெற்குக்காட்டுக்கு செல்பவர்களைவிட மிகுதியானவர்கள் காலையில் மருத்துவநிலையிலிருந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றார்.

சாத்யகி “ஆம்” என்றான். அப்பேச்சை அப்படியே விட்டுவிட்டு நகுலனையும் சகதேவனையும் நோக்கிய யுதிஷ்டிரன் “எங்கு சென்றார்கள் உங்கள் உடன் பிறந்தோர்?” என்றார். அவர்களிருவரும் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தார்கள். சிலகணங்கள் அவர்களை நோக்கி விழிதிறந்து வாய் சினத்தில் சற்றே வளைந்திருக்க நிலைத்திருந்தபின் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “பாஞ்சாலரே, நீங்கள் ஏதேனும் படைசூழ்கை வகுத்துள்ளீர்களா? அல்லது இறப்புக்கு ஒருங்கி உடல் அமைத்து அமர்ந்திருக்கிறீர்களா? என்றார் யுதிஷ்டிரன்.

திருஷ்டத்யும்னன் “நான் ஏற்கனவே பாதி இறந்தவன்” என்றான். யுதிஷ்டிரன் உடல் நடுக்கு கொள்ள பற்களை இறுகக் கடித்ததனால் தாடை அசைய நீர்மை கொண்ட கண்களால் அவையை நோக்கிக்கொண்டிருந்தார். “இக்களத்தில் இனி நான் இயற்றுவதற்கோ அடைவதற்கோ ஒன்றுமில்லை” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் சொன்னான். ”ஆம், நீங்கள் மட்டுமல்ல நானும் இனி இயற்றுவதற்கும் எய்துவதற்கும் ஒன்றுமில்லை. எவருக்கும் இங்கு எதுவுமில்லை. எவர் பொருட்டு நிகழ்கிறதென்று இக்களத்திலுள்ள எளிய வீரனுக்குக்கூட தெரியாது. எனக்கும் தெரியாது” என்றார் யுதிஷ்டிரன்.

அவர் குரல் எண்ணியிராமல் மேலெழுந்தது. “அங்கே நூறு உடன் பிறந்தார்களை இழந்து அமர்ந்திருக்கிறானே வீணன், அவனுக்கும் தெரியாது. அவன் இழந்ததற்கு நிகராக இனி இப்புவியில் எதை அடையப்போகிறான்? அறிவிலிகள்! அனைவருமே அறிவிலிகள்! அறிவிலிகளில் முதலாமவன் நான். நான் செய்த முதற்பெரும் பிழை இவையனைத்தையும் அறிய முயன்றதே. அறியக்கூடுமென நம்பி நூல் பயின்றதே. அறிதோறும் அறியாமை காணும் இப்பெருக்கில் அறிவது அறியாமையை பெருக்குவதற்கன்றி பிறிதெதற்கும் அல்ல” என்றபின் எழுந்து “நான் கிளம்புகிறேன். நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதில் என்பொருட்டு சகதேவனிடம் ஆணை பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

எவரும் அவரை அமரும்படி சொல்லவில்லை. ஆனால் வாயிலில் பீமன் தோன்றி தலைவணங்கியதும் அவனை விழித்துப்பார்த்தபடி யுதிஷ்டிரன் நின்றார். பீமன் மெல்ல உடல் உந்தியபடி நடந்துவந்தான். “புண்பட்டிருக்கிறயா மந்தா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். சீற்றத்துடன் திரும்பிய பீமன் “நலம் உசாவுகிறீர்களா? என்ன செய்ய வேண்டும் நான்? மருத்துவ நிலைக்குச் சென்று பார்த்துக்கொள்ளவா? போரை நீங்கள் நடத்துகிறீர்களா?” என்றான். அந்தப் பொருளிலாச் சீற்றம் யுதிஷ்டிரனை சினம்கொள்ளச் செய்தது. “உன் உடல் நிலை பற்றி கேட்டேன், அரசனாக, மூத்தவனாக” என்றார்.

“ஆம், புண்பட்டிருக்கிறேன். என் உடலில் நூறு வலிகளை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இக்கணமே இறந்துவிடவேண்டுமென்று விழைகிறேன். என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று பீமன் மேலும் எரிச்சலுடன் கேட்டான். யுதிஷ்டிரன் தளர்ந்தவராக மீண்டும் பீடத்தில் அமர்ந்துகொண்டார். பீமன் இருக்கையில் அமர்ந்துகொண்டு “என்ன முடிவெடுப்பதாக இருந்தாலும் சற்று நேரத்தில் அதற்கு சொல்லெடுத்து முடிவெடுத்துவிடுங்கள். இங்கு நெடுநேரம் அமர்ந்திருக்க நான் விழையவில்லை” என்றான். யுதிஷ்டிரன் “இங்கு இப்போது இருக்க வேண்டியது இளைய யாதவன் மட்டுமே” என்றார்.

“அவர் இல்லாமலிருப்பதே மேல். இருந்தால் அனைத்து வினாக்களையும் அவரிடம் கேட்போம். அவரோ எப்பொழுதும்போல் எந்த வினாவுக்கும் எந்த மறுமொழியும் சொல்லப்போவதில்லை” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “மந்தா, இந்த அவையில் நாம் முடிவெடுக்க வேண்டியது ஒன்றே. இப்போரை தொடரவிருக்கிறோமா? எதன் பொருட்டு தொடரவேண்டும்” என்றார். பீமன் “தொடரவேண்டியதில்லை. இனி இங்கு வென்று அடைவதற்கு ஒன்றுமில்லை. நாம் அழைத்துவந்த படைகளில் எஞ்சுபவர் மிகச்சிலரே. இன்னும் ஒரு நாள் போர் நிகழ்ந்தால் எத்தனை பேர் உயிருடன் எழுந்து நிற்பார்கள் என்பதை சொல்ல இயலாது” என்றான்.

அவையை ஏளனத்துடன் விழியோட்டி நோக்கி “ஒருவேளை இங்கு அமர்ந்திருக்கும் நாம் சிலர் மட்டுமே இக்களத்தில் எஞ்சி நின்றிருப்போம்.  வீண்இறப்பு அன்றி வேறெதுவும் இப்போரில் இருந்து கிடைக்காதென்பது உறுதியாயிற்று” என்றான். பின்னர் திரும்பி திருஷ்டத்யும்னனிடம் “போரை நிறுத்தி விடுவோமா? என்ன சொல்கிறீர், பாஞ்சாலரே?” என்றான். திருஷ்டத்யும்னன் ஒரு சொல்லும் பேசாமல் அமர்ந்திருக்க சாத்யகி “இவ்வாறு ஒரு எண்ணம் இந்த அவையில் எழுமென்று உறுதியாக இளைய யாதவர் அறிந்திருப்பார். ஆகவே அவர் அவை புகுவார். அவர் முடிவெடுக்கட்டும்” என்றான்.

யுதிஷ்டிரன் “போரை நிறுத்திவிடுவதொன்றே என் விருப்பமும்” என்றார். “அக்கீழ்மகன் என் மணிமுடியை அறைந்து நிலத்திலிட்டான். செத்த முயலை என அதை அம்புகளால் அறைந்து அறைந்து சுழற்றினான். அக்கணத்தில் எனக்குள் எழுந்த அருவருப்பு இன்னும் என்னை குன்றச்செய்கிறது. இனி அதை தலையில் சூடமாட்டேன். இங்கிருந்தே வடபுலம் நோக்கி செல்கிறேன். முடிசூடும் குடியில் பிறந்ததை மறந்துவிடுகிறேன். வேட்டையாடியும் கனிதேர்ந்தும் அங்கே வாழ்கிறேன்.”

அவர் குரலில் கசப்பு நிறைந்தது. “என் தீயூழ் என்னவென்று இப்போது உணர்கிறேன். இக்குடியில் பிறந்தது. பெருவீரர்கள் என இரு இளையோரை கொண்டிருந்தது. அவை எனக்களித்த ஆணவத்தால்தான் இங்கு அனைத்திலும் என்னை தொடுத்துக்கொண்டிருந்தேன். ஒருபுறம் கற்றறிந்துகொண்டும் மறுபுறம் எண்ணி தருக்கிக்கொண்டுமிருந்தேன். இதிலிருந்து விடுபட்டால் ஒருவேளை கற்ற சொற்களில் ஓரிரண்டாவது எனக்கு பொருள்படக்கூடும். ஒன்றாவது உகந்த சொல்லாக மாறி என்னை விடுதலை நோக்கி கொண்டு செல்லக்கூடும். போதும்’’ என்றார்.

அச்சொற்கள் அவருக்கு அவர் சூடவேண்டிய தோற்றத்தை அளிக்க அவர் முகம் தெளிந்தது. குரல் கூர்கொண்டது. “மாலையிலேயே இவ்வெண்ணம் எனக்கு வந்தது. அரசர்கள் தெய்வங்களால் வாழ்த்தப்பட்டவர்கள். மணிமுடி சூடி பொன்னரியணையில் அமர்ந்து நாடும் குலமும் சூழ வந்து வாழ்த்த குடிகள் திறை கொடுத்து வணங்க வீற்றிருப்போர் வேறில்லை. உடல் கொண்ட தெய்வங்கள் அவர்கள். ஆனால் நூல்களை திருப்பிப்பார்த்தால் அரசர்களைப் போல எண்ணிச்சென்று அடையமுடியாத பேரிழிவுகளை அடைந்தவர்களும் வேறில்லை.”

“அரசர்களை வெறிகொண்டு அழித்துக்கொண்டிருக்கிறது காலம். போர்க்களங்களில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள். கைகால்கள் மாற்றி வைக்கப்பட்டு சிதையேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பற்கள் கொண்டு செல்லப்பட்டு கோட்டைகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன. மண்டையோடுகளை உணவுக்கலங்களாக ஆக்கியிருக்கிறார்கள். விரல் எலும்புகளைக் கோத்து மாலையாக்கி அணிந்திருக்கிறார்கள். முதுகெலும்பை சரமாக ஆக்கி கோட்டை வாயில்களில் சூட்டியிருக்கிறார்கள். அவர்களின் உடல்கள் முதலைகளுக்கும் நாய்களுக்கும் உணவாக போடப்பட்டிருக்கின்றன. அவர்கள் அடைந்ததுபோல் பெருந்துன்பங்களை யார் அடைந்திருக்கிறார்கள் இங்கு?”

“மகதமன்னன் உக்ரநாபன் முன்பு உயிருடன் தோலுரிக்கப்பட்டான். கலிங்க மன்னன் சூரியவர்மன் ஒவ்வொரு முடியாக பிடுங்கப்பட்டிருக்கிறான். கூர்ஜர மன்னன் பிரதிசத்ரன் யானைகளின் காலடியில் கட்டப்பட்டு பன்னிரு நாட்கள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். இருபுறமும் யானைகளைக் கட்டி கேகயனின் உடலை கூறு போட்டிருக்கிறார்கள். அனலிலும் புனலிலும் வீழ்த்தி கொல்லப்பட்டிருக்கிறார்கள் அரசர்கள். நீரின்றி உணவில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு மடிந்திருக்கிறார்கள். உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். மண்ணுக்குள் அமைந்த வாயில் இல்லாக் கல்லறைகளில் ஆண்டுக்கணக்காக அடைபட்டுக்கிடந்து புழுத்து செத்திருக்கிறார்கள். அவையினரே, மன்னர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உடல் கொண்டு வந்த எந்த உயிருக்கும் இப்புவியில் இழைக்கப்பட்டதில்லை.”

“நிகரான துயரை இன்று நான் அடைந்தேன். இனி ஒருபோதும் அத்துயரிலிருந்து என்னால் விடுதலை அடைய முடியாது. போதும், இவ்வொன்றே இதுவரை நான் ஈட்டிய உச்சமென்று அடைந்து இவையனைத்திலுமிருந்து விடுதலை பெற்றேன் எனில் நான் அறிவுள்ளவன். நான் கிளம்புகிறேன். இங்கே இதை நிறுத்திக்கொள்வோம்” என்றார் யுதிஷ்டிரன். பீமன் “ஆம், இங்கேயே நிறுத்திக்கொள்வோம்” என்றான். சாத்யகி “அது எவ்வாறு, இளைய யாதவர்…” என்று சொல்லத்தொடங்க யுதிஷ்டிரன் கையைத் தூக்கி “அரசனென இது என் ஆணை. இப்போரை தொடர்ந்து நடத்த எனக்கு எண்ணமில்லை” என்றார்.

சகதேவன் “இப்போரை எவர் தொடங்கினாரோ அவர்தான் முடிக்க முடியும். நாம் தொடங்கவில்லை” என்றான். நகுலன் “ஆம், அவர் இங்கு வரட்டும். அவர் முடித்துவைக்கட்டும்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், அவன் வரட்டும். எங்கே அவன்?” என்று சொல்லி திரும்பி சுருதகீர்த்தியிடம் “செல்க! உன் தந்தை எங்கிருந்தாலும் இங்கு கூட்டி வருக! உடன் இளைய யாதவன் இங்கு அவை வரவேண்டும். ஏன் அழைக்கிறார்கள் என்று கேட்டால் போரை நிறுத்துவதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், இறுதிச் சொல்லுரைக்க அவன் வரவேண்டுமென்று அரசரின் விழைவு என்றே சொல்” என்றார்.

சுருதகீர்த்தி வெளியே சென்று அரைக்கணம் நின்று பின்னர் திரும்பிப்பார்த்து “அவர்கள் வந்துவிட்டர்கள்” என்றான். திருஷ்டத்யும்னன் ஒரு சிறு உளஅசைவை உணர்ந்தான். இளைய யாதவரை பார்க்கும் பொருட்டு விழிதிருப்பி வாயிலை நோக்கிக்கொண்டிருந்தான். முதலில் அர்ஜுனன் அவைக்குள் நுழைந்து யுதிஷ்டிரனை வணங்கிவிட்டு தன் பீடம் நோக்கி செல்ல தொடர்ந்து உள்ளே வந்த இளைய யாதவரின் முகத்தில் என்றும் மாறா புன்னகை இருந்தது. கண்கள் கூசியதுபோல் திருஷ்டத்யும்னன் விழி விலக்கிக்கொண்டான். யுதிஷ்டிரனை வணங்கிவிட்டு பிற அனைவரையும் நோக்கி புன்னகைத்தபடி சென்று தன் பீடத்தில் அமர்ந்துகொண்டார் இளைய யாதவர்.

யுதிஷ்டிரன் உரத்த குரலில் “உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் யாதவனே. நீ இறுதிமுடிவு உரைக்கவேண்டும். இப்போர் இனி இவ்வண்ணம் தொடர இயலாது. ஒவ்வொருவரும் இழப்பனவற்றின் உச்சத்தை இழந்திருக்கிறோம். இன்று போர்க்களத்தில் நான் அடைந்த அவைச்சிறுமைக்குப்பின் இனி ஒரு துன்பத்தை இப்புவியிலிருந்து பெற இயலாது” என்றார். சலிப்புடன் கைவீசி “போதும். நான் துறந்து செல்கிறேன். மந்தனும் அவ்வாறே உரைக்கிறான். போரைத் தொடர்வதற்கு இந்த அவையில் அமர்ந்திருக்கும் எவருக்கும் விருப்பமில்லை” என்றார்.

யுதிஷ்டிரனை ஒருகணம் நோக்கிவிட்டு இளைய யாதவர் திரும்பி அர்ஜுனனை பார்த்தார். “கூறுக பார்த்தா, உன் எண்ணமென்ன? இப்போரை தொடர்ந்து நடத்த விரும்புகிறாயா? அன்றி முடித்துக்கொள்ளலாமா?” என்றார். அர்ஜுனன் “இப்போர் தொடங்குவதற்கு முன்பிருந்த உளநிலையை சென்றடைந்துவிட்டேன். இது என் போர் அல்ல, என் கடன் மட்டுமே. போரும் போரின்மையும் எனக்கு எவ்வகையிலும் வேறுபாடானவை அல்ல” என்றான்.

யுதிஷ்டிரன் “பிறகென்ன? எங்கள் ஐவருக்கும் இருந்த வஞ்சத்தை தீர்க்கும் பொருட்டும் எங்களுக்குரிய நிலத்தை பெறும்பொருட்டுமல்லவா இப்போர் தொடங்கியது? எங்களுக்கு வஞ்சமில்லை. எங்களுக்கு நிலம் வேண்டியதுமில்லை. ஐவரும் இப்போரை இப்போதே முடித்துக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் முன்பு உனக்களித்த சொல்லே எஞ்சியிருப்பது. அதிலிருந்து எங்களை விடுவிக்கும் பொறுப்பு உனக்குள்ளது. கூறுக, இப்போரை இங்கு நிறுத்திவிடலாம்” என்றார்.

“ஆம், இனி மற்றொன்று எனக்கும் சொல்வதற்கில்லை. இங்கு இப்போரை நிறுத்திவிடலாம்” என்று யுதிஷ்டிரனை நோக்கி இளைய யாதவர் சொன்னார். அவை நோக்கி புன்னகையுடன் விழி சுழற்றியபின் “உங்கள் அனைவரையும் நீங்கள் எனக்கு அளித்த சொல்லிலிருந்து விடுவிக்கிறேன். நீங்கள் உங்கள் முடிவுகளை எடுக்கலாம்” என்றார். முகம் மலர்ந்து பரபரப்பு கொண்ட யுதிஷ்டிரன் “பிறகென்ன? அமைச்சரை அழையுங்கள். போர் நிறுத்த ஓலை எழுதப்படட்டும். நான் சாத்திடுகிறேன். இன்றே அது படைமுகப்பில் முரசொலியாக முழங்கட்டும். புலரிக்குள் நமது படைகள் குருக்ஷேத்ரத்திலிருந்து விலகிச் செல்லட்டும்” என்றார்.

உளஎழுச்சியுடன் எழுந்து கூவினார். “நமக்கு நிலம் வேண்டியதில்லை. பாரதவர்ஷம் பெரியது. எங்கு காலூன்ற இடம் கிடைக்குமோ அங்கு தங்குவோம். இயற்றிய பிழைகள் அனைத்திற்கும் பழியீடு செய்வோம். ஈட்டிக்கொண்ட சிறுமைகள் அனைத்தையும் நற்செயல்களால் துளித்துளியாக மறப்போம். குருக்ஷேத்ரம் என்ற நிகழவே இல்லையென்று எப்போது நம் உள்ளம் எண்ணுகிறதோ அன்று விடுதலை பெறுவோம்.” திருஷ்டத்யும்னனும் உளமெழுந்தான். “சொல் மந்தா, நீ எண்ணுவதென்ன?” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆணை பிறப்பிக்கலாம், போதும் இப்போர்” என்று பீமன் சொன்னான். சகதேவன் எழுந்து “இது அறுதி முடிவென்றால் நான் ஓலை நாயகத்தை அழைக்கிறேன்” என்றான். “ஆம், அறுதி முடிவு. இதற்கு இனி மாற்றுச்சொல்லில்லை” என்றார் யுதிஷ்டிரன். அவை ஒன்றும் சொல்லாது அமர்ந்திருக்க சகதேவன் “நான் ஆணைகளை அமைக்கிறேன்” என்றபடி வாயில் நோக்கி சென்றான். அவையில் எழுந்த சிலிர்ப்பை உணரமுடிந்தது. விழிகள் மின்னிக்கொண்டிருந்தன. “இப்போர் இதோ முடிந்தது” என்றார் யுதிஷ்டிரன்.

“ஆம், உங்கள் போர் முடிந்தது” என்று இளைய யாதவர் சொன்னார். “எனது போர் ஒயவில்லை. குருக்ஷேத்ரம் எனது களம். இப்போரை நான் நிகழ்த்துவேன். என்னுடன் எவர் நின்றிருக்கப் போகிறீர்கள்?” சாத்யகி “தங்களுடன் எப்போதும் நின்றிருப்பவன் நான்” என்றான். அர்ஜுனன் “எனக்கும் பிறிதொரு சொல் இல்லை” என்றான். பீமன் “ஆம், யாதவரே இனி உயிர் மட்டுமே உள்ளது. அதையும் உங்களுக்கு அளிப்பதே எனக்கு உகந்ததென்று தோன்றுகிறது” என்றான். நகுலனும் சகதேவனும் தயங்கி நிற்க திருஷ்டத்யும்னன் அவர்களை மாறி மாறி பார்த்தான்.

யுதிஷ்டிரன் “என்ன சொல்கிறீர்கள்? இதென்ன பித்து?” என்றார். “உங்கள் போரை நீங்கள் முடித்துக்கொள்ளுங்கள். நான் தொடங்குகிறேன்” என்றார் இளைய யாதவர். “அறிக, மறுசொல் இல்லாத வெற்றி ஒன்றிற்குக் கீழாக எதையுமே என்னால் ஏற்க இயலாது. இது என் போர்…” சினத்தில் உதடுகள் நடுங்க “இத்தனை அழிவுக்குப் பின்னருமா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “ஆம், இத்தனை அழிவுக்குப் பின்னரும்தான்” என்றார் இளைய யாதவர். “புதிய உலகை சமைக்கும் சொற்கள் அனைத்துமே பழைய உலகை முற்றழித்துவிட்டே நிறுவப்பட்டிருக்கின்றன. என் வேதத்தின் ஒவ்வொரு சொல்லும் கடலென அலைபெறும் குருதியால் நிறுவப்படவிருக்கிறது.”

“வேறெதன் பொருட்டுமல்ல, என் சொல் மாற்றின்றி நிலைகொள்வதற்காகவே இப்போர். இம்முற்றழிவுதான் என் சொல்லை பிறிதிலா வல்லமை கொள்ளச்செய்கிறது. இனி இச்சொல்லை அகற்றவேண்டுமென்றால் இதற்கிணையான குருதி இங்கு ஒழுக்கப்படவேண்டுமென்று இதோ நிறுவப்பட்டுள்ளது. இனி யுகங்கள் தோறும் இச்சொல்லே இப்புவியை ஆளும். அதன் பொருட்டே நிகழ்கிறது குருக்ஷேத்ரம்” என்றபோது அவர் குரல் ஒலிக்கிறதா என்றே ஐயம் எழுந்தது. திருஷ்டத்யும்னன் மெய்ப்புகொண்டான். “குருக்ஷேத்ரத்தின் நினைவின்றி இனி எங்கும் எவரும் என் சொற்களை பயிலப்போவதில்லை.  இது நாராயண வேதம்” என்றார் இளைய யாதவர்.

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஅன்னியரும் மொண்ணையரும்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம் – கடிதம்