மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவள். உங்களுடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஈடாக உங்களுடைய துணிச்சலும் நேர்மையும் என்னை கவர்ந்த பண்புகள். குறிப்பாக நீங்கள் திராவிட இயக்கம் பற்றிய கருத்துகள் மிக முக்கியமானவை. திராவிட இயக்கத்தின் போலித்தனம், முரட்டுத்தனம், மோசடித்தனம் பொய் பித்தலாட்டங்கள் என்னைப் போன்றவர்களை விலகி நிற்க வைக்கின்றன.
என் பணியிடத்தில் இதை அனுபவித்து உள்ளேன். ஆண் ஆசிரியர்கள் (குறிப்பாக தமிழ்) திராவிட இயக்கத்தின் மேல் எந்த விமர்சனத்தையும் ஏற்க மாட்டார்கள். குடும்பத்திலும் இதே நிலைமை. இது ஏன் எனப்புரியவில்லை? பள்ளி பாட நூல்களில் இவர்கள் வரலாற்றை திருத்தும் விதம் மற்றும் மிகையுணர்ச்சியுடன் தலைவர்களை சித்தரிக்கும் விதம் அருவெறுப்பூட்டவை. நிற்க. என் மகன் இந்த அபத்த சூழலிருந்து தப்பித்து வெளிநாட்டில் வசிக்கிறான். அவன் எனக்கு பல சுட்டிகளை அனுப்பியுள்ளான். முகநூலில் காரசாரமான விவாதம் நடக்கிறது என்கிறான்.
இதெயெல்லாம் படித்துப்பிறகு விரக்திதான் மிஞ்சுகிறது. தர்க்கபூரவமான எந்த கேள்விக்கும் திராவிட இயக்கத்தினர் பதில் அளிக்கமாட்டார்கள். எல்லாமே பார்ப்பன சதியாக பார்ப்பது என்பது நரி தந்திரம். தங்களின் தவறுகளை, இயலாமைகளை, மோசடிகளை மறைக்க இந்த தந்திரத்தை கையாள்கிறார்கள். நான் படித்த எந்த பிராமண ஆசிரியர்களும் ஒருபோதும் என்னை சாதி ரீதியாக வேற்றுமை காட்டியதில்லை. திராவிட இயக்கத்தினர் தமிழ்நாட்டின் மொத்த வரலாற்றையும் தங்கள் வசதிக்கேற்ப மாற்றுகிறார்கள். இணையதள்ம், முகநூல் முழுவதும் இவர்களின் கொட்டம் தலை விரித்தாடுவதாக என் மகன் மட்டுமல்ல என் மாணவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், வரலாறு என அனைத்து துறையையும் கைப்பற்றி மிகை உணர்ச்சியுடன் திரித்து எழுதி குவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பின பக்கமெல்லாம் திராவிட போற்றிப்பாடிகள்.(மன்னிக்கவும் உங்கள் வார்த்தையை பயின்றுள்ளேன்). 1967க்குப்பிறகு தமிழ்நாட்டில் எவ்வளவு கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளார்கள்? எனக் கணக்கிட்டால் தலை சுற்றும். ரியல் எஸ்டேட், தனியார் கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரைப்பட தயாரிப்பு, மருத்துவமனைகள், தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், ஆடை தொழிற்சாலைகள், சாராய கம்பெனிகள், கட்டுமான நிறுவனங்கள், உணவு விடுதிகள், ஊடகம், பத்திரிக்கைத்துறை என இந்தப் பட்டியல் நெடியது. இதன் பங்குதாரர்கள்/உரிமையாளர்கள் முழுக்க முழுக்க திராவிட இயக்கத்தினர். நீங்கள் குறிப்பிடுவதுபோல், இதற்கு இன்னொரு பெயர் இடைநிலை சாதியினர்.
பெரியார் பெரும் பகையையும் வெறுப்பையும் தமிழ்நாட்டு மண்ணில் விதைத்து விட்டு போய்விட்டார். பிராமணர்களை தமிழ்நாட்டிலிருந்து விரட்டி, அதிகாரத்தை கைப்பற்றியதுதான் திராவிட இயக்கம் செய்தது, தொடர்ந்து அதிகார மையத்தில் இருப்பதற்கு என்னென்ன மோசடித்தனங்களை கையாள வேண்டுமோ அனைத்தையும் செய்து வருகிறது. (அவ்வபோது பார்ப்பன சதி என ஓலமிட வேண்டும்). திராவிட இயக்கம், அதன் தலைவர்கள் மிதமிஞ்சிய பொய் புரட்டு பிம்புகளால் கட்டப்பட்டுள்ளது.இவர்களின் பொய் பித்தலாட்டங்கள் ரொம்ப நாள் தாக்குப்பிடிக்காது.. இப்போதே தமிழ்நாட்டில் என் மகன் தலைமுறையினர் இவர்களின் உண்மையான முகம் தெரிந்து புறக்கணிக்கிறார்கள். கீழே உள்ள சுட்டியை படித்துப்பாருங்கள். பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கியுள்ளது என வரலாற்றை திரித்துள்ளார்கள். பாடப்புத்தக்ங்களிலும் இதே நிலை.
கூடுதலாக வீரமணி, “யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்” என்ற நூலையும் எழுதியுள்ளார். யாரோ திராவிட அபிமானி யுனெஸ்கோ மன்றம் என்ற பெயரில் வழங்கியதை, யுனெஸ்கோ வழங்கியது என புரட்டியது மட்டுமல்லாமல் அதைப்பற்றியும் ஒரு நூல் வெளிவந்துள்ளது எவ்வளவு பச்சை மோசடித்தனம். யுனெஸ்கோவின் இணையதளத்திலும் இம்மாதிரியான எந்தக் குறிப்பும் இல்லை. வழக்கம்போல், வீரமணி கொதித்தெழுந்து’ பார்ப்பன சதி” என வசை பாடியுள்ளார். என் மாணவர்கள் சொன்னது சரியென்றே படுகிறது.. திராவிட இயக்கத்தினர் படிக்கமாட்டார்கள்.. வழிபடுபவர்கள். கற்பிதங்களை கேள்விக்கேட்காத “பகுத்தறிவாதிகள்”. இதேபோல்தான், சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலியாவில் கருணாநிதிக்கு ஸ்டாம்ப் அடிக்கப்பட்டுள்ளது என்ற புரளியை கிளப்பினார்கள். இதெல்லாம் இப்போது ஒவ்வொன்றாக வெளிவருவது நல்லது. திராவிட பிம்பம் உடையட்டும். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் இந்தக் கடிதத்தை உங்கள் தளத்தில் பிரசுரிக்கலாம்.
அன்புடன்
கிருஷ்ண ப்ரியா குமரேசன்