இஸ்லாமும் உபநிடதங்களும்

தாரா ஷிகோ

அன்புள்ள ஜெ.,

இந்திய தத்துவ ஞானத்தின் மிக உயர்ந்த கொடுமுடியான உபநிடதத்தை காளிதாசன் உட்பட பல இந்திய அறிஞர்கள் வியந்து போற்றியிருக்கிறார்கள்.  ஜுவான் மஸ்காரோ என்ற ஸ்பானிய அறிஞரோ ‘ஆத்மாவின் இமாலயம்’ என்று மிக அழகாகச் சித்தரிக்கிறார். வேதம் செறிந்த இமாலயத்திலிருந்து பாய்ந்தோடிய ஜீவ நதிகளாகத்தான் உபநிடதங்களைக் காண்கிறார் ஜெர்மானிய அறிஞர் கௌண்ட்கைசார்லிங்(1880-1946). ஒவ்வொரு வேதமும் பல்வேறு சாகைகளைக் கொண்டிருந்தன. ‘சாகை’  என்றால் கிளை. அப்போது வேதம் ஒரு மரம் என்கிற அர்த்தம் வருகிறதல்லவா? மாக்ஸ் முல்லரின் ‘Vedic Tree’ என்கிற பிரயோகம் பிரசித்தமானது. ‘நிகமகல்பதரு’ (வேத கற்பகத் தரு) என்று பாடிய பாகவத ஆசிரியரின் பார்வையில் இந்த மரத்தின் கனிதான் பாகவதம். ஆனால் பூ எது என்று அவர் கூறவில்லை. டோய்சன் கூறுகிறார் ‘இந்தியரின் ஞான விருட்சத்தில் மலர்ந்த மனோகரமான பூ உபநிடதம்’ என்று.

வெண்முரசு நாவலான ‘பிரயாகை’யில் சகுனியின் தலைமையில் நடக்கும் சதியாலோசனைக்கூட்டத்தில் பாண்டவர்களை கூண்டோடு ஒழிக்கும் கருத்துக்கு வலுச் சேர்க்கும்முகமாக எத்தனை வகையான கொலைகளை அரசன் செய்யலாம் என்றும் அதற்கான கழுவாய்கள் என்னென்னவென்றும் கணிகர் விளக்கமாகக் கூறுவார். அத்தனை கொலைகளையும் அதற்கு மேலும் செய்து பிற மதங்களை பூண்டோடு வேரறுக்க முயன்ற மொகலாய மன்னர்களை இன்றும் அவர்கள் ஏற்படுத்திய வழிபாட்டுத் தலங்களின் சிதிலங்களும், கொலைவெறியாட்டுக்களின் வரலாற்றுப் பதிவுகளும்   நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கின்றன. அவர்கள் செய்த ‘கழுவாய்’ என்பது கொலைவாளைக் கழுவியதுதான் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். இந்தக்கொடுமைகளுக்கெல்லாம் நிகர் செய்யும் (முடியுமா? என்பதை காலம்தான் சொல்லவேண்டும்) முகமாக சில முயற்சிகள் மேற்கொள்ளப்படாமலில்லை.அத்தகைய ஒரு முயற்சியை விவரிக்கிறது காலம் சென்ற எழுத்தாளர் சுகுமார் அழீக்கோடின் “தத்வமஸி – உபநிடத ஆய்வு நூல்”. (சாகித்ய அகாடமி வெளியீடு, மூலம் மலையாளம், தமிழில் ருத்ர.துளசிதாஸ்)

நேருவால் அவருடைய Discovery of India வில் அசோகச் சக்கரவர்த்தியை நினைவு படுத்துவதாகப் பாராட்டப்பட்ட அக்பர் காலத்திலேயே, உபநிடதங்களின் அடியொட்டி அல்லோபநிஷத்து மற்றும் அக்காபரோபநிஷத்து போன்றவை தோன்றின. அவை பெரும்பாலும் மத ஒற்றுமைக்கான செயல்பாடுகளும் அவற்றின் பகுதிகளுமே.    பதினேழாம் நூற்றாண்டின் மத்தியிலேயே உபநிடதத்தின் பெருமை உலகெங்கும் பரவத்தொடங்கி விட்டது. இதற்குக் காரணம் ஒரு மொகலாயர் என்றால் நம்புவீர்களா? ஆம். ஷாஜஹானின் மூத்த மகனும் ஒளரங்கசீப்பின் அண்ணனுமான தாரா ஷூகோவின் தலைமையில்தான்(1615-1659) ஒரு மகா யக்ஞமாகக் கருத்தப்படவேண்டிய இந்த மொழிபெயர்ப்பு முயற்சி நடந்தது.  கிழக்கு, மேற்கு நாடுகளின் பரஸ்பர விவாதத்திற்கும், ஆன்மீக இணைப்புக்கும் வழி ஏற்படுத்தப் போடப்பட்ட முதல் பாலமாக இன்றும் விளங்குகிறது. தாரா – காசியிலிருந்து டெல்லிக்கு வரவழைத்த சமஸ்க்ருத பண்டிதர்களின் உதவியோடு – மொழிபெயர்த்த ‘கிளாசிக் உபநிஷத்துகள்’ என்று கருதப்படுகிற பத்து உபநிடதங்களான ஈசாவாஸ்யம்(ஈசம்) , கேனம், கடம் (காடகம்), ப்ரச்னம், முண்டகம், மாண்டூக்யம், தைத்ரியம், ஐத்ரேயம், சாந்தோக்யம், பிரஹதாரண்யம் முதலியன உள்ளிட்ட ஐம்பது உபநிடதங்களின் பாரசீக மொழிபெயர்ப்பு ‘ஸீர்- உல் – அஸ்ரார் ‘ என்றழைக்கப்பட்டது மகாரகசியம் என்பது பொருள். உபநிடதத்தின் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருந்திருக்கிறார் தாரா.”அத்வைத வாதத்தின் சாரம் உபநிடதங்களில் அமைந்திருக்கும் அளவுக்கு வேறு மத கிரந்தங்களில் காணப்படவில்லை’ என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஷாஜஹானின் அரசவையிலிருந்த ஜெகன்னாதபண்டிதரிடமிருந்து வேதாந்த தத்துவங்களைப் பயின்றார் .’மஜ்மு – அ – உல் – பஹ்ரைன்’ (இரண்டு கடல்களின் சங்கமம்) என்றொரு நூலும் எழுதியிருக்கிறார். இவருடைய உபநிடத மொழிபெயர்ப்பினால் நிஜமாகவே கிழக்கும் மேற்கும் சங்கமித்தன.

தாரா பாரசீக மொழியில் 1657ல் மொழிபெயர்த்த ஐம்பது உபநிடதங்களின் கையெழுத்துப் பிரதி, அப்போது இந்தியாவில் பயணம் செய்து கீழை மதங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஆன்க்வட்டில் து பெறோன் (Anquatil  Du Parron) என்ற பிரெஞ்சு அறிஞரின் கையில் 1775ல் கிடைத்தது.(அவர் முதலில் பிரெஞ்சில்தான் மொழிபெயர்த்தார். ஏனோ பிரசுரமாகவில்லை.) அதன் அடிப்படையில்  அவர் செய்த இரண்டு பாகங்களாகப் பிரசுரிக்கப்பட்ட லத்தீன் மொழிபெயர்ப்பான ‘ஒளப்னகாத்’ (Oupnekhat on Theologis et Philosophia) ஐரோப்பாவின் கவனம் உபநிடதங்களை நோக்கி – அல்ல இந்தியாவை நோக்கி – திரும்பக் காரணமாக இருந்தது. இதைப் படித்துத்தான் ஷோப்பன் ஹோவர் உபநிடதத்தின் அபூர்வ ஆராதனையாளராக மாறினார். பண்பாட்டு ரீதியாக இவ்வளவு மகிமை வாய்ந்த கதை வேறு எதுவும் தென்படும் என்று தோன்றவில்லை என்கிறார் ஆசிரியர். இவ்வாறாக இந்திய தத்துவ ஞானத்தின் ஆதிசம்பத்து, இஸ்லாத்தின் கைகளிலிருந்து ஐரோப்பாவால் பெருமகிழ்வோடு பெற்றுக்கொள்ளப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த லத்தீன் மொழிபெயர்ப்பு, படைப்பு என்ற நிலையில் மிக மோசமானது என்றே அதைப் படித்த அறிஞர்கள் கருதினார்கள். ‘இந்தப் படைப்பை வாசித்து உபநிடதத்தின் இணையில்லா மகிமையை ஷோப்பன் ஹோவர் புரிந்துகொண்டாரென்றால் அது அவருடைய ஆன்ம வைபவத்தின் மேன்மையாகத்தான் இருக்கவேண்டும்’ என்று டோய்சன் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். உபநிடதங்களின் மூலம் சமஸ்க்ருதம். தாரா மொழி பெயர்த்தது பாரசீகத்தில். ஐரோப்பியர்கள் கையில் கிடைத்தது லத்தீன் மொழியில்.  மொழி பெயர்த்தவர் பிரெஞ்சுக்காரரான பெறோன்என்று எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிழை மலிந்த படைப்புக்குப் பல காரணங்கள். எனினும் அதை ஐரோப்பாவில் வாசிக்கவேண்டியவர்களெல்லாம் வாசித்தார்கள். ஒரு உபநிடதயுகமே ஐரோப்பாவில் தொடங்க வழி செய்தது இந்நூல். ஒரு மூலநூலின் மேன்மையை, அதன் பரவலை, அந்த மோசமான மொழிபெயர்ப்பாலும் தடுக்கமுடியவில்லை. ஐரோப்பா முழுவதும் பல அறிவு தீபங்களை ஏற்ற இந்தச் சிறுஅகல் விளக்கே போதுமானதாக இருந்தது. அதன் பின்னர் முக்கியமான பத்து ‘கிளாசிக்’ உபநிடதங்களின் மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவின் எல்லா நாடுகளிலிருந்தும் வர ஆரம்பித்தன. பெரும் சமஸ்க்ருத அறிஞர்களாக விளங்கிய ஐரோப்பியர்கள் பலர் அதன் பின்னர் மூல நூல்களிலிருந்தே மொழிபெயர்க்க ஆரம்பித்தனர். ஜெர்மானிய அறிஞர்களான ரோவரின் பிப்லியோதிகா இண்டிகாவும்(Bibliotheca Indica), பெரும்புகழ் பெற்ற   வேத விஞ்ஞானி மாக்ஸ்முல்லரின் கிழக்கத்திய கிரந்தாவளியும் (Sacred Books of the East), ராபர்ட் எர்னனஸ்ட் ஹ்யூம் ஆக்கிய ”முக்கியமான பதிமூன்று உபநிடதங்கள்” முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

தாரா பாபாலான், லால்தாஸ் ஆகிய அறிஞர்களின் மாணவராக இருந்தார். கீதாவையும், யோகவாசிஷ்டத்தையும் மொழி பெயர்த்திருந்தார்.  கிழக்கிற்கும் மேற்கிற்குமான மாபெரும் கலாச்சாரத் தூதுவரராகத் திகழ்ந்திருக்க  வேண்டிய தாராஷுகோவ் ஒளரங்கசீப்பின்அதிகார மமதையால் கொலை செய்யப்பட்டார். நிக்காலோவ் மானுச்சி (Niccolao Manucci) என்னும் இத்தாலியப்பயணியின் நினைவுக்குறிப்புகளில் தாராவின் பரிதாபமான முடிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பேரரசர் தாராதான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், தனது தந்தை ஷாஜஹானைச் சிறையிலிட்டு, தாராவின் தலையைக் கொண்டுவர ஆணை பிறப்பிக்கிறார் ஒளரங்கசீப்.  தாராவின் தலையை கொய்து ஒளரங்கசீப்பின் முன் வைக்கின்றனர் வீரர்கள். அது தன் மூத்த சகோதரன் தாராவினுடையதுதான் என்று உறுதி செய்துகொண்ட பிறகு தன்னுடைய வாளால் கொடூரமாகச் சிதைத்து மூன்று துண்டுகளாக்கி, ஒரு பெட்டியிலிட்டு  “பெரியவர் ராத்திரி சாப்பாட்டுக்கு ஒக்காரும்போது, பேரரசர் ஒளரங்கசீப்,உங்க மகன், இன்னும் உங்களை மறக்கலைன்னு சொல்லி இதைக் கொடு ”  என்று காவலரிடம் கொடுத்தனுப்புகிறார். அவ்வாறே சொல்லி வீரர்கள் பெட்டியைக் கொடுக்க ‘இன்னும் என்னை அவன் மறக்கலையா, என்னே இறைவனின் கருணை’ என்றவாறு பெட்டியைத் திறந்து பார்க்கிறார் ஷாஜஹான். அது தராதான் என்று புரிந்த கணத்தில் ‘ஐயோ!’ என்று அலறிச் சாய்கிறார். நினைவு திரும்பியபின்  தாங்கொண்ணாத் துயரத்தில் பலவாறாக அரற்றியவாறு தன் முகத்திலிருந்து ரத்தம் வடிய வடிய, தன்னுடைய தாடியைப் பிய்த்து வீசிக்கொண்டிருந்தார் அந்த முதிய தந்தை..தாராவின் தலையற்ற முண்டம் ஹூமாயூன் கல்லறையில் ஒரு ஓரத்தில் புதைக்கப்பட்டது. எதிர்த்தவர்கள் அனைவருடைய தலைகளையும் கொய்து, தனக்கு பேரரசராக மகுடம் சூட்டிக் கொள்கிறார் ஒளரங்கசீப்.

உபநிடதம், ஒளரங்கசீப் என்றவுடன் திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் திரு.சுப்பிரமணியம் ஞாபகத்திற்கு வருகிறார். எங்கள் ஆங்கில ஆசிரியர். சிவந்த நிறம். நடை, உடை(எப்போதும் வெள்ளை வேட்டி,சட்டைதான்), பாவனை அப்படியே நம்ம நடிகர்திலகம் தான் ‘ஓவர் ஆக்ட்டிங் ‘ தவிர. பிரவாகமாய்ப் பொழியும் ஆங்கிலம். எப்போதாவது தமிழில் வெள்ளைக்காரர்களைப்போலப் பேசுவார். முதல் வரிசையில் தரையில் அமர்ந்துகேட்க அவர் வகுப்புகளுக்கு ஆவலாகக் காத்துக்கொண்டிருப்பேன். ஏ.கே.ராமானுஜனை சந்தித்ததைப் பற்றிக் கூறுவார்.உபநிடதங்களைப் பற்றிய முதல் அறிமுகம் கிடைத்தது எனக்கு அங்குதான். நமது கல்லூரியில் ஒவ்வொரு கூட்டமும் ‘சஹானாவாவது'(கடம்) வில் ஆரம்பித்து ‘பூர்ணமதஹ’ (ஈசம்) வில் முடியும் (In our college every meeting begins with Sahanavavathu and ends with Purnamathaha) என்ற அவர் முழக்கம் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை வகுப்பில் அவர் கூறினார். ஒளரங்கசீப் பதவி வெறியால் படுகொலைகள் புரிந்துவிட்டு ரத்தம் தோய்ந்த மகுடமணிந்தபோது “Kingship knows no Kinship” என்று கூறியதாக.(பின்பு அது அலாவுதீன் கில்ஜி சொன்னதாக இணையத்தில் படித்தேன். ஒருவேளை மூதாதையை மேற்கோள் காட்டியிருப்பாராயிருக்கும்.)  ஒருவேளை தாரா பேரரசராக ஆகியிருந்தால், இந்தியவரலாற்றின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருந்திருக்கும் என்பது விவாதத்துக்குரிய ஒன்று. யதுநாத சர்க்காரின் ‘History of Aurangazeb’ தாராவைப்பற்றி விரிவாகப் பேசுகிறது.

அன்புடன்,

சங்கரன் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைச. துரை கவிதைகள்
அடுத்த கட்டுரைமலைகளை அணுகுவது