தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி கதை சொல்லத் தொடங்கியது. கதையின் ஆர்வத்தில் குழவிகளின் வால்கள் நாகக் குழவிகளென நெளிந்தன. அந்த ஒன்றுதலை அப்பாலிருந்து கண்ட பிற குரங்குகள் அருகணைந்து செவிகூர்ந்து மரக்கிளைகளில் அமர்ந்தன. சற்று நேரத்தில் கதை சொல்லும் குரங்கைச் சுற்றி கூடின.
மிக அப்பால் கும்போதரன் கிளையில் நன்கு சரிந்து விழி சரித்து துயின்றுகொண்டிருந்தது. “அந்தத் தாதை ஏன் கதை கேட்க வரவில்லை?” என்று புஷ்பகர்ணி கைசுட்டி கேட்டது. “சிலநாளில் அவரும் கதையாகிவிடுவார்” என்றது பீதகர்ணி. ஆவலுடன் “அப்போது அவர் எங்கிருப்பார்?” என்றது புஷ்பகர்ணி. “பேசாதே” என்று கதை சொல்லும் அன்னைக் குரங்கு அதை செல்லமாக அதட்டிவிட்டு “நடுவே பேசக்கூடாது. இது தொல்கதை. தொல்கதைகள் நடுவே நம் குரல் எழுந்தால் கதையை நிகழ்த்தும் தெய்வங்கள் விலகிச்சென்றுவிடும்” என்றது.
“நான் ஒன்றுமே சொல்லமாட்டேன்” என்று சொன்ன மூர்த்தன் “ஆனால் இவன் பேசுவான்” என்றது. “நீயும் பேசக்கூடாது” என்று அக்குரங்கின் வாயை சுட்டுவிரலால் சுண்டியபின் தூமவர்ணி கதை சொல்லத் தொடங்கியது. “மைந்தர்களே கேளுங்கள், இக்கதை நெடுங்காலத்துக்கு முன்பு சரயு நதியின் கரையில் இருந்த பிரம்மவர்த்தம் என்னும் காட்டில் நிகழ்ந்தது. அன்று அந்தக் காடு செறிந்த மரங்களால் ஆனதாகவும், நடுவே யானை நின்றால் மறையும் அளவுக்கு உயரம் கொண்ட பெரிய சிதல்புற்றுகள் நிறைந்ததாகவும் இருந்தது. அக்காட்டில் வாழ்ந்தார் நமது மூதாதையான கபீந்திரர்.”
“அவர் ஒருநாள் மரக்கிளையிலிருந்து கூர்ந்து கீழே நோக்கியபோது அங்கிருந்த பெரிய சிதல்புற்றுகளின் நடுவே ஒரு மனிதன் நின்றிருப்பதை கண்டார். மெல்ல மரக்கிளைகளினூடாக இறங்கி சற்று அப்பால் சென்று நின்று எச்சரிக்கையுடன் அந்த மனிதரை பார்த்தார். நெடுந்தொலைவிலிருந்து அவர் தனித்து நடந்து வந்திருப்பது தெரிந்தது. கால்கள் புழுதி படிந்து வேர்கள்போல் இருந்தன. இடையில் மான் தோலாடை அணிந்திருந்தார். விழிகள் கலங்கி நீர் உதிர்த்துக்கொண்டிருந்தன. கைகளைப் பார்த்தால் வில்லேந்திய தடங்கள் தெரிந்தன. ஆனால் அவர் ஷத்ரியர் அல்ல என்று நமது மூதாதை புரிந்துகொண்டார். ஷத்ரியர்கள் பொன்னோ வெள்ளியோ அணிந்திருப்பார்கள். எனில் வேடன். வேடர்கள் இக்காட்டிற்கு தனியாக வருவதற்கு தேவையெதுவும் இல்லையே என்று எண்ணினார்.”
“மலைவேடர்களை நமது மூதாதையர் அஞ்சுவதில்லை. ஏனெனில் அவர்கள் குரங்குகளை கொல்வதில்லை. இன்றும் வேடர்கள் நம்மை தேவர்கள் என்று எண்ணி வணங்குகிறார்கள். ஆயினும் அவர் உரிய எச்சரிக்கையுடன் மேலும் அருகணைந்து அந்த மனிதரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் தன் கையிலிருந்த சிறிய இரும்பு அம்பால் அச்சிதல்புற்றின் ஒருபக்கக் கூம்புச் சரிவை குத்திப் பொளித்து வாயில் ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தார். உள்ளே இருந்த சிதல்அறைகளை தூர்த்து வெளியாக்கினார். அவ்வாயிலில் நுழைந்து மேலும் மண்ணைப் பொளித்து வெளியே அகற்றி ஒரு சிறு இல்லமென ஆக்கிக்கொண்டார். அது சிதல்கள் கைவிட்டுவிட்ட கூம்பு. அது எப்படி அவருக்குத் தெரிந்தது என கபீந்திரர் வியந்தார்.”
“அந்த மானுடர் தழைகளை பறித்துச்சென்று உள்ளே பரப்பி அமர்விடம் உருவாக்கி அதில் கால் மடித்து அமர்ந்தார். அவரை நோக்கிக்கொண்டிருந்த கபீந்திரர் அவர் “மரம்! மரம்!” என்று சொல்வதை கேட்டார். கபீந்திரர் அவர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தார். நம் குலத்திற்கே உரிய இயல்பால் அதைப்போலவே தானும் அமர்ந்து அவ்வாறே உதட்டை அசைத்தார். ஆனால் அம்மனிதர் தன்னை நோக்கவோ உணரவோ இல்லை என்று கண்டதும் மேலும் அருகணைந்து பலவகையான உடல்விளையாட்டுக்களை காட்டினார். இறந்தவர்போல் அருகே விழுந்து கிடந்தார். இளித்துக்காட்டி குர்ர் என்று ஓசையிட்டார். பற்களைக் காட்டி கடிப்பதுபோல நடித்தார். பலவகையாக புரண்டும் துள்ளி உருண்டும் வேடிக்கை காட்டினார். இறுதியாக அருகே சென்று கிள்ளிவிட்டு வால் விடைக்க தாவி விலகி ஓடினார்.”
“அவர் எதையுமே உணரவில்லை. அச்சொல் மட்டுமே அவர் நாவில் இருந்தது. ஆகவே கபீந்திரர் சில கணங்கள் உடல்குவித்து கூர்ந்துநோக்கி நின்றபின் அருகிருந்த மரத்தின் மேலேறி அங்கிருந்து கனிகளைப் பறித்து கொண்டுவந்து புற்றின் வாயிலில் வைத்தார். மிக அகன்று நின்று அந்த மனிதர் கனிகளையும் கிழங்குகளையும் எடுத்து உண்கிறாரா என்று பார்த்தார். நெடுநேரம் கழித்து விழித்துக்கொண்ட அவர் உணவு படைக்கப்பட்டிருப்பதை அறிந்து அதை எடுத்துப் பார்த்தார். சூழ விழியோட்டியபோது நோக்கிநின்ற கபீந்திரரை பார்த்தார். “நீயா?” என்றார். கபீந்திரர் புன்னகைத்து அருகணைந்து “நான் இங்கு கொண்டுவந்து வைத்தேன்” என்றார்.
அந்த மனிதர் திடுக்கிட்டு “நீ பேசுவது எனக்கு புரிகிறது” என்றார். “இன்று வரை விலங்குகள் பேசுவது எனக்கு புரிந்ததில்லை.” கபீந்திரர் “நீங்கள் அம்பை ஒழிந்துவிட்டீர்கள். படைக்கலமில்லாதவர்களுடன் மட்டுமே எங்களால் பேச முடியும்” என்றார். “இல்லையே, என் கையில் இப்போதும் அம்பிருக்கிறது” என்றார் அம்மனிதர். “ஆம், அதை இக்கூம்பை செதுக்கும்பொருட்டு எடுத்தீர்கள். ஆனால் உள்ளத்திலிருந்து அம்பை முற்றாக ஒழிந்துவிட்டீர்கள்” என்று கபீந்திரர் சொன்னார். “ஆம், இருக்கலாம்” என்று அவர் சொன்னார். “இங்கென்ன செய்யப்போகிறீர்கள்? புற்றுக்குள் இவ்வாறு மனிதர்கள் நுழைவதை நான் பார்த்ததே இல்லை” என்றார் கபீந்திரர்.
மலைவேடர் மீண்டும் துயருற்று விழி கலங்கி தலை குனிந்தார். “இங்கு ஏன் வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. என் கால் போன வழியில் இவ்விடத்தை அடைந்தேன். இந்தப் புற்றுகளைக் கண்டதும் இங்கு தங்கலாம் என்று முடிவெடுத்தேன்” என்றார். “புற்றுகளுக்குள் நாகங்களே தங்கும். ஆகவே மனிதர்கள் புற்றுகளை ஒழிகிறார்கள். நாங்களும் புற்றுகளுக்கு அருகே செல்வதில்லை” என்றார் கபீந்திரர். “இத்தகைய பெரிய புற்றுகளில் நாகங்கள் நுழைவதில்லை” என்று மலைவேடர் சொன்னார். “கிழக்குமலைச்சரிவில் வால்மீகம் என்றொரு காடு இருக்கிறது. அங்கே பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான மாபெரும் சிதல்புற்றுகள் உள்ளன. அவற்றை இவ்வாறு சற்றே செதுக்கி வாயில் அமைத்து உட்புறம் திருத்தி வீடுகளாக்கி வாழும் குலமொன்று உள்ளது. அவர்களை வால்மீகிகள் என்கிறார்கள். நான் அக்குலத்தைச் சார்ந்தவன்.”
“மெய்யாகவா?” என வியந்தபடி கபீந்திரர் அவர் அருகே சென்று அமர்ந்தார். “எங்கள் இல்லங்கள் இத்தகைய சிதல்புற்றுகளுக்குள் இறங்கி உள்ளே செல்லக்கூடியவையாக இருக்கும். மண்ணுக்குள் பலர் தங்கும் அளவுக்கு இடமுள்ள புற்றுகளும் கூட உண்டு” என்று மலைவேடர் சொன்னார். “உங்கள் பெயரென்ன?” என்று கேட்டபடி கபீந்திரர் அவர் முன் கால் நீட்டி அமர்ந்தார். “என்னை எந்தை ரத்னாகரன் என்று அழைத்தார். என் அன்னை வால்மீகி குலத்தை சார்ந்தவர். அவள் பெயர் பிருகதை. தந்தை தொல்முனிவராகிய பிரசேதஸ் என்று அவள் என்னிடம் சொன்னாள்” என்றார் மலைவேடர்.
இளமையில் ஒருமுறை அவள் காட்டிற்குள் கனி தேடச் சென்றிருந்தபோது அங்கு தவம் செய்து கொண்டிருந்த மாமுனிவரான பிரசேதஸை பார்த்தாள். அவர் உடலின் ஒளியால் கவரப்பட்டு காய் கனிகளுடன் சென்று அவரை பணிந்தாள். தனக்கு ஒரு மைந்தனை அளிக்கும்படி அவரிடம் கோரினாள். எங்கள் குடியில் பெண்ணின் மதிப்பென்பது நன்மைந்தனைப் பெறுவதிலேயே. காமத்தின்பொருட்டு எங்கள் குடிப்பெண்கள் உறவுகொள்வதில்லை. முனிவர் தன் தவத்திற்கு உதவி செய்யும்படியும் அவள் பணிவிடைகளில் மகிழ்ந்தால் அவளை மனைவியாக ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார்.
ஏழாண்டுகள் அவள் அவருக்கு பணிவிடை செய்தாள். ஒவ்வொரு நாளும் கனியும் தேனும் காய்களும் கொண்டுவந்து படைத்தாள். ஏழாம் ஆண்டு தன் நோன்பை முடித்து விழி திறந்த பிரசேதஸ் அவளைக் கண்டு புன்னகைத்து அருகணைந்து “என் கனவுக்குள் உன்னை நான் கண்டேன். முற்பிறவிகளில் நீ எனக்கு மனைவியாக இருந்திருக்கிறாய். இனியவளே, நமக்கு புகழ்மிக்க மைந்தன் ஒருவன் பிறப்பான்” என்றார். அவர்கள் அந்தக் காட்டிலேயே கூடினார்கள். சித்திரை மாதம் முழுக்க வேனிலைக் கொண்டாடியபடி அவர்கள் அக்காட்டில் மகிழ்ந்திருந்தார்கள்.
அவரை அவள் தன் குடிக்கு அழைத்து வந்தாள். அங்கே சிதல்புற்றுக்குள் அமைந்த வீட்டில் அவர் அவளுடன் ஓராண்டுகாலம் வாழ்ந்தார். அப்போது ஒருநாள் அவர் கனவில் என்னை கண்டார். நான் ஒளிமிக்க உடல்கொண்ட குழவியாக ஓர் ஆற்றங்கரையில் இலைப்பரப்பின் மீது கிடப்பதைக் கண்டு எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டார். கனவிலிருந்து விழித்துக்கொண்டு தன்னருகே படுத்திருந்த என் தாயை அழைத்து “சற்று முன் நான் ஒரு கனவு கண்டேன். ஒளி மிக்க உடல் கொண்ட ஒரு குழந்தையை நீ பிறப்பிப்பாய். அவனுக்கு நீ ரத்னாகரன் என்று பெயரிடு” என்று சொன்னார்.
அன்னை “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டாள். “இக்கனவு எனக்கு வந்தது எனது பணி முடிந்துவிட்டது என்பதை காட்டுகிறது. இன்னும் அடுத்த நோன்புக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. வடமலை நாடிச் செல்கிறேன். என் வடிவென மைந்தன் உன்னுடன் இருப்பான். புகழ்மிக்கவனாவான். சொல் அவனை தொடரும், சொல்லை அவன் தொடர்வான். பெருந்துயரங்களிலிருந்து பேரழகை கண்டடைவான் . வடமலைகளைப்போல் இந்நிலத்தின் மேல் குளிர்முடி என எழுந்து என்றும் இங்கு நின்றிருப்பான். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
அவள் அவரை வணங்கினாள். அவள் செவியில் அவர் ஒரு ஊழ்கநுண்சொல்லை உரைத்தார். அவ்விரவிலேயே கிளம்பி வடதிசை நோக்கி சென்றார். என் அன்னை அவர் செல்லும் திசை நோக்கி கைகூப்பி நின்றிருந்தாள். அவரை தன் கணவனாக ஏற்றதனால் தன் குலத்தால் அவள் மதிப்புடன் நடத்தப்பட்டாள். ஆனால் அவள் மேல் பிறருக்கு விலக்கமும் இருந்தது. அவளுக்கு அவர்கள் தனி புற்றுக்குடிலொன்றை அமைத்துக் கொடுத்தனர். அவள் அங்கு தன்னந்தனியாக தங்கினாள். அந்த ஊழ்கநுண்சொல்லை விழிப்பிலும் துயிலிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
எட்டுமாதம் நிறைவுற்றபோது அவள் ஒரு கனவு கண்டாள். நடந்து செல்கையில் தரையிலிருந்து ஒளிரும் கல் ஒன்றை அவள் எடுத்தாள். அது விண்மீன் உதிர்ந்து கிடந்ததுபோல் தோன்றியது. கையில் எடுத்துப் பார்த்தபோது கனிபோல் அழுந்தியது. உதட்டில் வைத்துப் பார்த்தபோது இனிமையும் நறுமணமும் நாசியை வந்தடைந்தன. அந்த ஒளிரும் கனியை அவள் விழுங்கினாள். அந்த ஊழ்கநுண்சொல் அது என அக்கல் உள்ளே நுழைந்தபோது உணர்ந்தாள். விழித்துக்கொண்டபோது தன் வயிற்றைத் தொட்டு கணவர் தன் குழவிக்கு ரத்னாகரன் என்று பெயரிட வேண்டுமென்று சொன்னதை நினைவுற்று விழி நீர் உகுத்தாள். ரத்னாகரா ரத்னாகரா ரத்னாகரா என மும்முறை அழைத்தாள்.
மாதம் திகைந்து நான் பிறந்தபோது எங்கள் வால்மீகக் குடியினரின் வழக்கப்படி காட்டுவிலங்குகளின் பெயர்களைத்தான் இடவேண்டுமென்று மூத்தோர் சொன்னார்கள். ஆனால் எனக்கு ரத்னாகரன் என்று பெயரிடுவதில் அன்னை உறுதியாக இருந்தாள். ஆகவே அப்பெயரை நான் அடைந்தேன். ஆனால் என் குலத்தோர் எவரும் அப்பெயரில் என்னை அழைக்கவில்லை. தாங்கள் ஒருவருக்கொருவர் வால்மீகிகள் என்றே அழைத்துக்கொள்வது வழக்கம். ஆகவே நான் வால்மீகியாகவே வளர்ந்தேன்.
என் அன்னை எனக்கு எதையும் கற்றுத்தரவில்லை. எந்தையின் பெயரை மட்டுமே சொன்னாள். நான் வளர்ந்து வில்லவனும் வேட்டைத் திறன் கொண்டவனுமாக மாறினேன். எங்கள் குலத்தில் எவருக்கும் சொல்பயிலும் வாய்ப்பில்லை. மூத்தோர் சொல்லும் குலக்கதைகளும் வேட்டைக்கதைகளும் அன்றி பிறிதெதையும் செவிகொள்ளவும் கூடவில்லை. வேட்டையில் நான் என்னை கண்டுகொண்டேன். வேட்டையை பசிக்காகத்தான் நிகழ்த்துவதாக வேடர்கள் சொல்வதுண்டு. அது பொய். இங்கே எந்த உயிரும் பசிக்காக மட்டும் வேட்டையாடுவதில்லை. எல்லா செயல்பாடுகளும் விளையாட்டுகளும் கூடத்தான்.
எந்த இளைஞனும் பசிக்காகவோ சுவைக்காகவோ மட்டும் வேட்டையாடுவதில்லை. வெல்லும் பொருட்டும் தன்னை அதில் கண்டடையும் பொருட்டும் மட்டுமே அவன் வில்லேந்துகிறான். பிறரைவிட மேலானவனாக, தான் முன்பு அடைந்ததைவிட ஒருபடி மேலே சென்றவனாக, தன்னைப் பற்றி பிறர் எண்ணுவதை ஒவ்வொரு முறையும் கடந்து செல்பவனாக உணரும் பொருட்டே விற்தொழில் பயில்கிறான். நானும் அவ்வாறே. பறக்கும் பறவையை அறைந்து வீழ்த்தி அது நிலம் தொடுவதற்குள் மீண்டும் வில் எடுத்து அம்பால் அறைந்து வானில் எழுப்புவேன். அம்புகளாலேயே அதை வானில் பறக்க வைப்பேன். நீர்நிழல் பார்த்து பறவைகளை வீழ்த்துவேன். நீருக்குள்ளிருக்கும் மீனை எய்து பிடிப்பேன். பறக்கும்போதே பறவையின் விழிகளை அம்பால் துளைப்பேன்.
என் வில்லால் இயலாதது ஒன்றில்லை என்று தருக்கினேன். பின்னர் ஏதோ ஒரு கணத்தில் வில்லில் சலிப்புற்றேன். வில்லென்பது நம் உள்ளில் எழும் விசையில் ஒரு சிறு பகுதியை மட்டுமே பெற்றுக்கொள்கிறது. வில்லேந்துவதற்கு முன் நம்மில் எழுவதில் ஒரு பகுதியே அம்பெடுக்கையில் கூடுகிறது. நாணில் அமைவது அதிலொரு பகுதி. அம்பென எழுவது இன்னும் ஒரு சிறு பகுதி. இலக்கடைவது பிறிதொரு துளி. ஒவ்வொரு முறை இலக்கடையும்போதும் ஏமாற்றம் கொள்ளத்தொடங்கினேன். பின்னர் நான் அம்பையும் வில்லையும் தொடுவதை வெறுத்தேன். வேட்டைக்கு மட்டுமே அம்புகளை தொட்டேன். என் வெளி சுருங்கி என் உடலுக்குள் மட்டுமானதாகியது.
பறவைகளை வேட்டையாடி கொண்டுசென்று வழியோரம் நின்று அவ்வழி செல்லும் வணிகர்களிடம் விற்று அவர்களிடமிருந்தே பொருட்களை வாங்கி குடிக்கு மீள்வது என் குலத்து ஆண்களின் வழக்கம். சாலைகளில் முழுக்க நாங்கள் இருபுறமும் நின்றுகொண்டிருப்போம். அவ்வழி செல்லும் வணிகர்களை கூவிக்கூவி அழைப்போம். ஆடைகளும் படைக்கலக் கருவிகளும் இனிப்புணவும் அவர்களிடம் இருந்தன. ஒரு நாள் முழுக்க காட்டில் உலாவி வேட்டையாடி கொண்டுவந்த மான்தோலோ புலித்தோலோ ஒரு முறை உண்ணும் அளவுக்கு இனிப்பாக மாறியது. ஒருமுறை தொடுக்கும் அம்பு அளவுக்கே மதிப்பு கொண்டது. ஆனால் வாழ்க்கை அவை இன்றி நிகழவும் இயலவில்லை. முன்பெல்லாம் எங்களுக்கு ஒருநாள் வேட்டை என்பது ஒரு வார காலம் ஓய்வும் களியாட்டும். மெல்ல மெல்ல ஒவ்வொருநாளும் இரவும் பகலும் வேட்டையாடியாகவேண்டும் என்றாயிற்று.
ஒவ்வொன்றிலும் நான் சலிப்புற்றுக்கொண்டிருந்தேன். இங்கல்ல, இவையல்ல என்றொரு விளி என்னில் எழுந்தது. என் குலத்திலிருந்து நான் அகன்றகன்று சென்றேன். அவர்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் பொருளற்றவையாக தோன்றலாயின. ஏதோ ஒரு கணத்தில் என் அன்னையே ஒரு பண்படா விலங்கெனத் தோன்ற திடுக்கிட்டு தன்னுணர்வு கொண்டு என்னை நானே வெறுத்துக்கொண்டேன். அன்று அன்னையிடம் சென்று எனக்கு ஒரு பெண் தேரும் படி ஆணையிட்டேன்.
அன்னை நான் என் குலத்தில் மணம்செய்வேன் என்பதையே எண்ணியிருக்கவில்லை . “என்ன சொல்கிறாய்? உணர்ந்துதான் சொல்லெடுக்கிறாயா?” என்று என்னிடம் கேட்டாள். “நம் குடிப்பெண் ஒருத்தியை மணந்துகொள்ள விழைகிறேன். இங்கே எனக்கொரு குடி உருவாகவேண்டும்” என்றேன். “உனக்கான பெண்ணை நீ தேடிக்கொள்” என்றாள் அன்னை. “எனக்கான பெண் இங்கேயே வரவேண்டும்… இப்போதே. ஒருநாள் பொறுக்க என்னால் இயலாது” என்றேன். “அறிவிலிபோல் பேசுகிறாய்” என்று அன்னை சொன்னாள். “இல்லையேல் நான் அம்பால் என் கழுத்தை அறுத்துக்கொள்வேன்” என்று கூவினேன்.
அன்னை திகைப்புடன் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய கற்பனையில் நான் வில்லுடன் வால்மீகத்திலிருந்து கிளம்பி அறியா நிலங்களுக்குச் சென்று வீரர்களை வென்று நகரங்களுக்குள் புகுந்து இளவரசிகளை மணம்புரிந்துகொண்டு வருவேன் என வளர்த்திருந்தாள். என் வில்லிலிருந்து என் குடி புகழ்பெற்று எழும், வான்மீகத்தின் புற்றுவீடுகள் ஏழடுக்கு மாளிகைகளாகும், இரவும் பகலும் ஒளி நிறைந்திருக்கும் நகரமொன்று அக்காட்டிற்குள் எழும் என கனவு கண்டாள். அப்படி எத்தனையோ கதைகளை அவள் கேட்டிருந்தாள். அவள் முனிவரை சந்திப்பதற்கு முன்னரே அக்கனவுகள் அவளுக்குள் இருந்தன.
பல நாட்கள் அவளால் அந்த ஏமாற்றத்திலிருந்து வெளிவர இயலவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின் என்னிடம் மீண்டும் “நீ மெய்யாகவே இங்கு மணம்புரிந்து தங்க எண்ணுகிறாயா?” என்றாள். “ஆம், உடனே எனக்கு பெண் வேண்டும்” என்று சொன்னேன். “நீ இப்போதெல்லாம் வில்லை எடுப்பதே இல்லை. காட்டில் இருந்து கிழங்குகளை மட்டும் அகழ்ந்துகொண்டு வருகிறாய். உன் கண்ணெதிரில் மான்கூட்டம் கடக்கும்போது கை ஓய்ந்து அமர்ந்திருக்கிறாய் என்று உன் தோழர் சொன்னார்கள். நீ வேட்டையில் ஆர்வமிழக்கிறாய் என்பதுகூட எனக்கு ஒருவகையில் உவப்பாகவே இருந்தது. இங்குள்ள வாழ்க்கையை விட்டு விலகுகிறாய், பிறிதெங்கோ செல்லவிருக்கிறாய் என்று எண்ணினேன்” என்றாள்.
“இல்லை, நான் பிறிதெங்கும் செல்ல எண்ணவில்லை. செல்லும் தொலைவுகள் எனக்கு மேலும் சலிப்பை அளிக்கின்றன. இங்கு மீண்டும் அமிழ்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுவரை சென்ற தொலைவுகள் அனைத்தையும் கரைத்தழிக்க விரும்புகிறேன்” என்று அன்னையிடம் சொன்னேன். அவளால் என்னை புரிந்துகொள்ள இயலவில்லை. மீண்டும் மீண்டும் “மெய்யாகவா சொல்கிறாய்? இங்கேயே இருக்கத்தான் எண்ணுகிறாயா?” என்று கேட்கத்தான் முடிந்தது. பின்னர் அவள் வழக்கம்போல் ஊழை அடைக்கலம்கொண்டாள். சொல்லவிந்தாள். ஆனால் என் விழிநோக்குவதை தவிர்த்தாள். தன்னை மேலும் இறுக்கி உடையாத தனிமைக்குள் புகுந்துகொண்டாள்.
என் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்துகொண்டேன். என்னைவிட நான்காண்டு முதியவள். முன்னரே அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் பாம்பு கடித்து உயிர்துறந்திருந்தான். எங்கள் குலமுறைப்படி வரிசையில் அடுத்த ஆணேற்புக்கு உரியவள் அவளே என்பதனால் அவள் எனக்கு மனைவியானாள். அவள் பெயர் விரூபாக்ஷி. எனக்கு அவளில் மேலும் ஏழு குழந்தைகள் பிறந்தன. என் குடியின் மிகமிக அழகற்ற பெண் அவள்தான். அவளுக்கு அவள் அன்னை இட்ட பெயர் அது அல்ல. ஊரார் இளிவரலாக விளித்தது, அவ்வண்ணமே ஆகியது.
ஆனால் எனக்கு பெண் உடலே போதுமென்றிருந்தது. அவளிடம் நான் பேசியதுண்டா, நேராக விழிகொண்டு நோக்கியதுண்டா என்றே ஐயுறுகிறேன். அவள் வெறும் தசை. ஆனால் உடல் திரண்ட விலங்கு. காட்டுவிலங்கின் ஆற்றலும் விசையும் கொண்டவள். விலங்குகளுக்குரிய கெடுமணம். விலங்குகளுக்குரிய கட்டற்ற உணர்வுகள். என்னில் எழுந்த விலங்குக்கு உரிய இணை அவளே. விலங்குகள் கெடுமணத்தையே விரும்புகின்றன.
ஏழாண்டுகள் நான் வெறிகொண்ட காமத்தில் என்னை முற்றாக அழித்துக்கொள்ள இயலுமா என்று பார்த்தேன். காமம் கொள்ளுந்தோறும் பெருகுவது, விலக எண்ணுகையில் பேருருக்கொள்வது, ஒருபோதும் மானுடனை தன் பிடியிலிருந்து விட்டுவிடாதது என்று மூத்தோர் சொல்லி கேட்டிருந்தேன். அதன் ஆயிரம் கைகள் என்னைப் பற்றி நிறுத்துமெனில் நன்றென்றே எண்ணினேன். ஆனால் மிக விரைவிலேயே காமம் என்னை கைவிடத் தொடங்கியது. அச்செயலிலிருந்த விலங்கியல்பு என் கருத்தை அடைந்ததும் காமம்கொள்ளும் ஒவ்வொரு முறையும் என் நினைவில் எழுந்து அவள் உடல்மேல், என் உடல்மேல் ஒவ்வாமையை உருவாக்கியது. நான் மீண்டும் கசந்து தனியனானேன். என் உள் உலர்ந்து தக்கையாகி உடலோட்டுக்குள் பிரிந்து நின்றது.
மீண்டும் காடுகளில் இருளில் வழி தவறி அலைந்தேன். என் கால்களில் மூதாதையரின் வழிகள் இருக்கையில் ஒருபோதும் வழி தவற இயலாதென்று உணர்ந்து மேலும் கசப்பு கொண்டேன். காமத்தை சென்று பற்றிக்கொள்ள முயன்றபோது முலைகுடி மாறிய குழந்தையை அன்னை விலங்கு என சீறி உதைத்து விலக்கியது அது. ஆகவே வஞ்சத்தில் திளைக்க முயன்றேன். சினத்தை வளர்த்துக்கொண்டேன். அனைவரிடமும் பூசலிட்டேன். ஆகவே அனைவராலும் விலக்கப்பட்டேன். விலக்கப்பட்டமையால் வெறுக்கப்பட்டேன். வெறுக்கப்பட்டமை என்னில் வெறுப்பெழுவதற்கு வழியமைத்தது. ஆனால் சில நாட்களிலேயே அதுவும் சலித்தது. ஏனென்றால் என் வஞ்சம் வெறும் நடிப்பென நான் அறிந்திருந்தேன். காமத்தையும் வஞ்சத்தையும் எவரும் முடிவிலாது நடிக்க முடியாது. ஏனென்றால் அதில் வேறுவேறு வாய்ப்புகளும் வடிவங்களும் ஊடுவழிகளும் இல்லை.
ஆனால் என் காமத்தின் விளைவென ஒன்பது குழந்தைகள் என் இல்லத்தில் இருந்தனர். ஒன்பதின்மரும் வேட்டை விலங்குகளுக்குரிய வெறிகொண்ட பசியுடன் விளங்கினர். என் மனைவி நான் காமத்தை இழந்ததுமே என்மேல் கசப்பு கொண்டவளானாள். நான் அவள் குழந்தைகளுக்குரிய உணவுடன் மீளாமலானபோது அது வெறுப்பென வெளிப்பட்டது. எப்போதும் என்னை வேட்டைக்கும் உணவுக்கும் துரத்தினாள். “என்ன செய்கிறாய்? பித்தனா நீ? சென்று எங்களுக்கு உணவு கொண்டு வா. உணவின்றி நாங்கள் இறந்தால் மண்ணுக்கடியில் உறங்கும் மூதாதையருடன் நீ சென்றுசேர இயலாது. மண்ணை துளைத்துத் துளைத்து ஆழுலகுக்குச் செல்ல முயன்று சலித்து உயிர்விடும் மண்புழுவாக பிறப்பாய்” என்று அவள் என்னை முனிந்தாள்.
மண்புழுக்களை பார்க்கையில் எல்லாம் இளமையிலிருந்தே உடம்பில் ஒரு நடுக்கை உணர்வதுண்டு. மண்ணில் முட்டி முட்டி துளையிட்டு தோற்று அந்நெளிவையே வாழ்வெனக்கொண்ட பிறவி. எத்தனை பெரிய தீச்சொல் வாழ்நாளெல்லாம் மூடிய வாயில்களில் தலையால் தட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்பது! மண்ணில் நெளியும் கோடானுகோடி மண்புழுக்கள் அனைத்தும் மூதாதையரின் தீச்சொல் பெற்றவை. அவர்கள் அளித்த நெறிகளிலிருந்து வழுவியவை. அவர்களுக்கான கடனை இயற்றாமல் ஒழிந்தவை.
ஒரு நாள் சேற்றுக்கரையொன்றில் அமர்ந்திருந்தபோது முழு உடலையும் நெளித்து நெளித்து மண்ணில் புக முயன்றுகொண்டிருந்த மண்புழு ஒன்றை கண்டேன். கைநீட்டி அதை எடுத்து நோக்கினேன். விழியில்லை, செவியில்லை, மண்ணின் உள்ளே நுழையும் விழைவன்றி வேறெந்த எண்ணமும் அதிலிருப்பதாக தெரியவில்லை. அதை வீசிவிட்டு எழுந்து ஓடினேன். உடம்பெங்கும் முட்கள் கீறின. மூச்சிரைக்க வணிகச்சாலை ஓரமாக வந்து நின்றேன். வெறுங்கையுடன் அங்கு நின்றிருப்பதன் பொருளின்மை அப்போதுதான் தெரிந்தது. அப்போது நான் இறந்தேன். மறுகணம் மற்றொருவனாகப் பிறந்தேன்.