கனடா இலக்கியத்தோட்ட விருது போகனுக்கு

போகன்

கவிஞரும் சிறுகதையாசிரியருமான போகன் இவ்வாண்டுக்குரிய கனடா இலக்கியத்தோட்ட விருதை கவிதைக்காகப் பெறுகிறார். ’சிறிய எண்கள் உறங்கும் அறை’என்னும் தொகுதிக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது.

போகன் படைப்புலகு இரு அம்சங்களால் ஆனது. நெகிழ்வும் உருக்கமும் கனவும் கலந்த படைப்புகள். அவற்றை நிகர்செய்யும்பொருட்டோ என உருவாக்கப்படும் பகடிகள். கதைகளில் அந்நெகிழ்வுகள் நேரடியாக வெளிப்படுகையில் கவிதையில் உள்ளடங்கிய வெளிப்பாடு கொண்ட படிமங்களாக திகழ்கின்றன. தமிழ்க்கவிதையின் பரப்பில் நினைவுகொள்ளவேண்டிய பல வரிகளை போகன் எழுதியிருக்கிறார்

 

ஒலி

ஒலி
கேட்காதவரால் அழிகிறது

தீபங்களிடையே பேதம் என்ன?
தீபங்கள் சங்கிலியாகப் பூட்டப்பட்ட கண்கள்

இவ்வுலகத்தின் மீது
கண்கள் கொட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன

ஆகுதியில் விடாது சொரியப்படும்
நெய்த் துளிகள் போல..

சிறுமிகளின் கண்கள்
ஆட்டுக் குட்டிகளின் கண்கள்
கொடும் புலியின் கண்கள்
யானையின் சிறிய கண்களைவிடவும்
சிறிதான கிருமிகளின் கண்கள்

அத்தனைக் கண்கொண்டும்
இந்தப் பிரகிருதிப் பெண்ணைக்
காண
வந்துகொண்டேயிருக்கும்
ஈஸ்வரனை வணங்குகிறேன்.

விளக்கைக் கொண்டுவருகிற

விளக்கைக் கொண்டுவருகிற
நபர்தான்
இருளையும் கொண்டுவருகிறார்.

வேனில் காலங்களில்
மின்மினிப்பூச்சிகள் பெருகும்.

அவற்றின் ஒளியைக் காணத்
தனியாக இரு.

நாடகத்தின் நடுவில்

நாடகத்தின் நடுவில் வசனங்களை மறப்பவரே
திரை விழுந்த பிறகும்
பேசிக்கொண்டிருக்கும் நபராக இருப்பதை
அரங்கில் இருக்கும்
ஒரே ஒரு குழந்தை மட்டும்
புரிந்துகொள்கிறது.

 

முந்தைய கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-28