துச்சகனும் துர்முகனும் வீழ்ந்ததை தொலைவிலிருந்தே சுபாகு கண்டான். “தேரை திருப்புக… மூத்தவரிடம் செல்க!” என்று ஆணையிட்டான். அவனுடைய தேர் அணுகிவருந்தோறும் அங்கே நிகழ்ந்திருந்த அழிவு மேலும் துலங்கியபடி வந்தது. பீமனும் மைந்தரும் விசைகொண்டு கௌரவப் படையை தாக்கிக்கொண்டிருந்தார்கள். கௌரவப் படை உளமழிந்து பல துண்டுகளாக சிதறி அவர்களின் அம்புகள் முன் எளிய விலங்குகள் என விழுந்து உயிர்துறந்தது. மேலிருந்து கட்டிய கயிறு அறுந்து ஓவியத்திரைச்சீலை விழுந்து சுருள்வதுபோல ஒரு படைப்பிரிவே அவர்களின் அம்புகளால் விழிமுன் இருந்து மறைவதை சுபாகு கண்டான். “விரைக! விரைக!” என தன் தேர்ப்பாகனை விசைகூட்டினான்.
துச்சாதனன் பீமனுடனும் மைந்தருடனும் போரிட்டுக்கொண்டிருந்தான். சுபாகு உடன்சென்று இணைந்து கொண்டான். ஆனால் விற்பூசல் தொடங்கிய சற்று நேரத்திலேயே அது பொருந்தாப் போர் என சுபாகு புரிந்துகொண்டான். சர்வதனும் சுதசோமனும் பீமனும் ஓர் உடலின் மூன்று வடிவெனத் தோன்றினர். அவர்களுக்கிடையே மிகச் சிறந்த ஒருமை கூடியது. உடலசைவாலேயே உரையாடிக்கொண்டார்கள். முத்திரை காட்டி நடனமாடும் கையின் மூன்று விரல்கள்போல. அவர்களின் அம்புகள் ஒன்றுடன் ஒன்று இசைவுகொண்டிருந்தன. ஓர் அம்பு எண்ணி எய்தாததை இன்னொரு அம்பு அக்கணமே நிகழ்த்தியது. ஓர் அம்பு தொடங்கியதை பிற அம்புகள் நிரைகொண்டு வந்து முடித்தன. அவர்களால் கௌரவ வில்லவர்கள் அலறி விழுந்துகொண்டே இருந்தனர்.
ஒவ்வொரு கணமும் பீமனின் ஆற்றல் மிகுந்தபடியே வந்தது. அவன் வில்லை கண்களால் பார்க்கக்கூடவில்லை. களத்தில் விழுந்துகிடந்த துர்முகனையும் துச்சகனையும் கொக்கிகளால் இழுத்து பின்னால் கொண்டு சென்றனர். அந்தக் காட்சியை நோக்கலாகாது என்று சுபாகு எண்ணினாலும் விழிகள் அரைக்கணத்திலும் ஒரு துளியில் அதை நோக்கி மீண்டன. துர்முகனின் சிதைந்த தலை ஓர் உடைந்த தேர்ச்சகடத்தில் முட்டி அசைந்த தருணம் அது. அவன் எதையோ ஏற்பது போலிருந்தது. அவன் விழிகளை மூடிமூடித் திறந்தான். அந்தக் கணம் அவ்வண்ணமே அழிவின்மை கொண்டுவிட்டிருந்தது. எதை ஏற்றுக்கொண்டார் மூத்தவர்? எதையேனும் எப்போதேனும் அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்ததுண்டா? வாரணவத நிகழ்வை, அஸ்தினபுரியில் அரசி அவைச்சிறுமை செய்யப்பட்டதை? அவற்றை ஏற்றதுபோல் அவ்விறப்பையும் மறுப்பின்றி ஏற்றுக்கொண்டாரா?
துர்முகன் எப்போதுமே அமைதியானவன். பெரும்பாலும் தலையசைவே அவன் மொழி. இளமையில் அவனுக்கு இடப்பட்ட பெயர் ஊர்மிளன். அவனுடைய சொல்லின்மையால் அது துர்முகன் என்று மாறியது. அப்பெயரைச் சொல்லி அவனை அழைத்தவர் தந்தை. பின்னர் அனைவரும் அதையே ஏற்றனர். எப்பெயரும் பொருட்டல்ல என அதை ஏற்றுக்கொண்டான் துர்முகன். தாளமுடியாத ஒருவன்போல, பெருமதம் கொண்ட ஒருவன்போல, ஆணையிடப்பட இயலாத ஒருவன்போல, முகமில்லாத ஒருவன். முகம்கொள்ளாதவன். உண்மையில் எதையேனும் அவர் எண்ணினாரா? எவரிடமேனும் எண்ணத்தை பகிர்ந்துகொண்டாரா? இப்போது அவர் உடன் கொண்டுசெல்வதுதான் என்ன?
“மூத்தவரே, நீங்கள் ஏன் பேசுவதே இல்லை?” என்று சுபாகு பலமுறை கேட்டிருக்கிறான். பெரும்பாலும் அவன் புன்னகை மட்டுமே பூப்பான். ஒருமுறை மட்டும் “நாம் நூற்றுவர். சொற்களை பகிர்ந்து பேசுவதே நன்று. நமக்காக மூத்தவர் பேசுகிறார். நீ பேசுகிறாய். அனைவரும் பேசினால் இங்கே பேச்சு நிகழாது, கூச்சலே எஞ்சும்” என்று துர்முகன் சொன்னான். “நாம் கூறாத சொற்களுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்குமே?” என்று சுபாகு கேட்டான். “எவ்வகையிலாயினும் இங்குள்ளோர் அவர்கள் அறியாச் சொற்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்பவர்களே” என்று சொல்லி துர்முகன் புன்னகைத்தான். அவன் புன்னகையும்கூட மிக மென்மையானது. நிழலில் தேங்கிய சுனைநீரின் ஒளிபோல.
கவசப்படை பிளந்து துரியோதனன் தோன்றினான். துச்சாதனன் “மூத்தவரே, அகல்க! இப்போரை நான் முடிக்கிறேன். நீங்கள் உளத்தொகுப்புடன் இல்லை” என்று கூவினான். “இது என் போர்” என்றான் துரியோதனன். “வேண்டாம், அகல்க! இப்போரை நாங்களே முடிக்கிறோம்” என்றான் சுபாகு. மறுசொல் உரைக்காமல் துரியோதனன் அம்புகளைச் செலுத்தியபடி சென்று பீமனை எதிர்கொண்டான். பீமன் அவன் முகத்தை கூர்ந்து நோக்குவதை சுபாகு கண்டான். அவன் உள்ளத்தை கொந்தளிக்கச் செய்யும் எதையேனும் பீமன் சொல்வான் என எதிர்பார்த்தான். அவனை நிலையழியச் செய்வான். அதன் பின்னரே அவனை நேரில்நின்று தாக்குவான்.
எண்ணியதுபோலவே பீமன் “தார்த்தராஷ்டிரனே, உன் நூறு கைகளில் இனி எஞ்சுவன எவை?” என்று கூவினான். “ஆயிரம் கையறுத்து கார்த்தவீரியனைக் கொன்ற பரசுராமனை நினை. உனக்கும் அந்தச் சாவுதான் எஞ்சியிருக்கிறதென்று கொள்!” துரியோதனன் “என் இளையோரின் குருதிக்கு ஈடுபழி கொள்ளாமல் இன்று களம்விட்டு அகலப்போவதில்லை, கீழோனே” என்று கூவினான். “உன் குருதியினரின் உடல்கள் நீறாகி மண்ணில் கலந்துவிட்டன. விண்பரப்பில் அவர்கள் திகைத்தலைகிறார்கள்!” என்று பீமன் உரக்க நகைத்தான்.
கண்ணீர் வழியும் முகத்துடன், பொருளற்ற வெறிக்கூச்சலுடன் துரியோதனன் கதையுடன் பாய்ந்து சென்று பீமனை தாக்கினான். அவன் கதையை தன் கதையால் தடுத்து சிட்டுக்குருவியென தேர்த்தட்டிலிருந்து துள்ளி அகன்று நிலத்தை அடைந்தான் பீமன். இருவரும் கதைகளால் வெறிகொண்டு அறைந்தபடி போரிட்டனர். அமர்ந்து எழுந்தும் கதைவீசித் துள்ளியும் சுழன்று விரிந்து படர்ந்து மீண்டும் எழுந்தும் இருவரும் போரில் விசை மிகுந்தபடியே வந்தனர். துரியோதனனின் உதவிக்கு கதையுடன் எழுந்த துச்சாதனனை சர்வதன் தடுக்க, சுபாகுவை சுதசோமன் தடுக்க, கௌரவப் படையினர் படைக்கலம் தாழ்த்தி நின்று நோக்க, பாண்டவர்கள் வெறிக்கூச்சலிட்டு பீமனை ஊக்க அந்தப் பூசல் நிகழ்ந்தது.
சுதசோமனின் அம்புகளின் விசை தாளாது சுபாகு பின்னடைந்தான். கதையுடன் முன் பாய்ந்தெழுந்த சுதசோமன் சுபாகுவின் தேர்த்தட்டில் பாய்ந்தணைந்து அவன் விலாவில் கதையால் அறைய அவன் இரும்புக் கவசம் உடைபட்டது. இருமி குருதியுடன் கோழை துப்பியபடி அவன் நிலத்தில் விழுந்தான். அவன் மேல் பாய்ந்து கதையால் தலையை அறைய முயன்ற சுதசோமனின் காலை தன் காலால் ஓங்கி அறைந்து நிலையழியச் செய்து அந்த இடைப்பொழுதில் உருண்டு பாய்ந்தெழுந்து பின்னடைந்து ஒரு கதையை கையில் எடுத்துக்கொண்டான் சுபாகு. சுதசோமன் கதையை வீசியபடி மீண்டும் பாய்ந்து வந்தான்.
சுபாகுவால் கதையை சுழற்ற முடியவில்லை. நெஞ்சுக்குள் நரம்பு ஒன்று அறுபட்டு நின்றுதுடிப்பது போலிருந்தது. அவனுடைய கதை வீச்சை அறைந்த சுதசோமனின் கதையின் எடை உடலின் எல்லாத் தசைகளையும் வலியுடன் அதிரச்செய்தது. கால்கள் தள்ளாட விழிகள் ஒளிகுன்ற அவன் சுதசோமனின் கதையை மட்டுமே நோக்கியபடி போரிட்டான். சுதசோமன் மேல் ஓர் அடியை செலுத்தக்கூட அவன் முயலவில்லை. அவனைச் சுற்றி வஞ்சம்கொண்டு தாக்கவரும் மிகப் பெரிய கருவண்டு என கதையின் இரும்புக்குமிழ் முனகியபடி பறந்தது. அவன் கதையைச் சுழற்றி மீண்டும் தூக்க முயல வயிற்றுத்தசை ஒன்று அறுபடுவதுபோல் வலி எழுந்தது. அக்கணம் சுதசோமனின் கதை வந்து அவன் தோளை அறைந்தது. அவன் மல்லாந்து விழுந்தான். அவனைக் கொல்ல கதையுடன் துள்ளி எழுந்த சுதசோமன் கதை சுழற்றுவதற்கு முன்னரே கவசப்படையினர் பின்னிருந்து கொக்கிகளை வீசி இழுத்து சுபாகுவை அப்பால் கொண்டு சென்றனர். கேடயப்படைகள் வந்து தடுக்க சுதசோமன் பீமனைப் போலவே நெஞ்சில் இரு கைகளால் ஓங்கி அறைந்து பெருங்குரலெழுப்பியபடி திரும்பினான்.
அங்கே பீமன் துரியோதனனின் கதை வீச்சுக்கு கைதளர்ந்து பின்னடி எடுத்துவைக்கத் தொடங்கியிருந்தான். துரியோதனனின் மூன்று கதை வீச்சுகள் பீமனின் அருகே மண்ணில் விசையோசையுடன் விழுந்தன. குருதிச்சேறு தெறித்து பீமனின் உடலில் வழிந்தது. துரியோதனன் கதையை ஓங்கி தரையில் அறைந்து அவ்விசையிலேயே மண்ணிலிருந்து துள்ளி மேலெழுந்து கதையை மண்ணிலிருந்து எடுத்த விசையில் தலைக்குமேல் சுழற்றி பீமனை ஓங்கி அறைந்தான். பீமனின் கதையைவிட மும்மடங்கு எடைகொண்டது துரியோதனனின் கதை.
பீமன் நெஞ்சில் விழுந்த அறையில் வலிமுனகலுடன் பின்னால் ஆடி நிலையழிந்து மல்லாந்து தரையில் ஓசையுடன் விழுந்தான். துரியோதனனின் கதையின் அடுத்த அடி வந்து அவன் தலை அருகே நிலத்தில் விழ உருண்டு தப்பினான். மீண்டும் மூன்று முறை அறைந்தபின் பிறிதொரு பெரும் பிளிறலுடன் காற்றிலெழுந்த துரியோதனன் பீமனின் நெஞ்சில் கால் வைத்து கதையை ஓங்கி அவன் தலையை உடைக்க முயல பாய்ந்து வந்த சுதசோமன் துரியோதனனின் கதையை தன் கதையால் அறைந்து விலகச்செய்தான்.
அவர்களிருவரும் கதை கோத்துக்கொள்ள பீமன் தன் கதையை ஊன்றி புரண்டெழுந்து தவழ்ந்து அப்பால் சென்றான். அவனை நோக்கி ஏவலர் ஓடி வந்தனர். இருமியபடி அவர்களை கைகளால் விலக்கினான். இருமுறை உடல் அதிர தசைகள் இழுபட்டு நெளிய அவன் இருமியபோது தசைக்குழம்பு என வாயிலிருந்து குருதி வெளிவந்தது. மேலும் மேலும் இருமி துப்பி உடல் அதிர்ந்துகொண்டிருந்தான். “அரசே, பின்னடைக! உள்ளே எலும்புகள் முறிந்துள்ளனவா என்று நோக்கவேண்டும்” என்றான் மருத்துவஏவலன். இருமியபடி செல்க என பீமன் கையை அசைத்தான். மீண்டும் கையூன்றியபடி எழ முயல நெஞ்சு அதிர்ந்து குருதிச்சேற்றில் முகம் புதைய விழுந்தான். பற்களைக் கடித்தபடி இரு கைகளையும் ஊன்றி எழுந்து அமர்ந்தான். இருமியபடி தலையை உலுக்கிக்கொண்டான். பின்னர் வெறியுடன் தன் நெஞ்சிலேயே ஓங்கி அறைந்தபடி முழு உயிரால் உடலை உந்தி எழுந்து நின்றான்.
துச்சாதனன் சர்வதனை கதையால் அடித்து பின்னடையச் செய்துகொண்டிருந்தான். துச்சாதனனின் அடிகளில் இருந்த எடையும் விசையும் சர்வதனால் தாளமுடிவதாக இருக்கவில்லை. முதல் சில அடிகளை கதையால் தடுத்த பின்னர் அவன் கதையைச் சுழற்றி ஒழிவதையே போர்முறையெனக் கொண்டான். துச்சாதனனின் கதையின் எடையாலேயே விரைவு சற்றே குறைவதை உணர்ந்து அந்த இடைவெளியில் கதைசெலுத்தி அவனை அடிக்கமுயன்றான். இருமுறை துச்சாதனனின் தோளை அடிக்கவும் அவனால் இயன்றது. ஆனால் துச்சாதனன் அத்தகைய அடிகளால் நிலைபிறழக்கூடியவனாக இருக்கவில்லை. அவனுடைய எடையே ஆற்றலென வெளிப்பட்டது.
துள்ளிச்சுழன்று துச்சாதனன் நிலம்தொடுவதற்கு முன் விலாவில் பட்ட அடியால் சரிந்து கீழே விழுந்து கையூன்றி எழுந்தான் சர்வதன். தொடர்ந்து வந்த துச்சாதனனின் மூன்று அடிகளை உடலொழிந்தான். மீண்டும் எழுந்து தாக்கியபோது அவன் நிலையில் ஒத்திசைவு கூடவில்லை. அடிபட்ட விலாவிலிருந்து காலுக்கு ஒரு சரடு அறுபட்டு துடித்தது. காலை இழுத்து இழுத்து வைத்தபடி அவன் கதைவீசி முன்னால் சென்றான். துச்சாதனன் “செல்க… செல்க, மைந்தா… என் கையால் இறவாதொழிக!” என்று கூவியபடி அவனை தாக்கினான். வேண்டுமென்றே அவன் இருபுறங்களிலும் நிலத்தில் கதையால் ஓங்கி அறைந்தான். உடைந்த தசைகளிலிருந்து குருதி தெறித்தது. விழுந்துகிடந்த யானையின் மத்தகம் ஒன்றை ஓங்கி அறைந்து சிதறடித்தபின் “ஓடு… ஓடி உயிர்காத்துக்கொள்” என்று துச்சாதனன் கூவினான்.
துரியோதனனிடம் பொருதிய சுதசோமனும் அந்த எடைமிக்க அடிகளை தாளமுடியாது திணறினான். ஒவ்வொரு அடியையும் துள்ளி ஒழிவதில் மட்டுமே அவனால் உளம் செலுத்த இயன்றது. அடிகள் விழ விழ நிலம் நெளிந்து பள்ளங்கள் மிக்கதாக ஆகியது. அந்தப் பள்ளங்களிலேயே கால்சிக்கி அவன் நடை நொடித்தான். துரியோதனனின் கதை வந்து அறைந்தபோது சுதசோமனின் கதை சிறுமணிபோல தெறித்து மறுசுழற்சி கொண்டது. அடிகளுக்கு இயைய நடனமென பின்காலடி எடுத்து வைத்து பின்னால் சென்றான். அவன் உடல் அடிவிழுவதற்காகக் காத்து துடிப்பு கொண்டது. தன் இறுதிக் கணம் அதுவென எண்ணி மெய்ப்புகொண்டான். ஆனால் அது ஒருவகை களிப்பையும் உள்ளத்தில் நிறைத்தது. அவன் விசையை அது கூட்டியது.
சர்வதன் துச்சாதனனை எதிர்கொள்ளும் வழி அவன் விழிமுன் நிலைகொள்ளாமல் துள்ளிக்கொண்டிருப்பதே என்று கண்டுகொண்டான். தரையில் கால்பரப்பி அமர்ந்து துச்சாதனனின் கதைவீச்சை தன் தலைக்குமேல் பறந்து செல்லச்செய்தான். அது சுழன்று மீண்டும் எழுவதற்குள் துள்ளி எழுந்து காற்றில் கால் விரித்து நின்று அதன் வீச்சை தன் கீழே கடந்து செல்லும்படி செய்தான். அவன் காலூன்றி மீண்டும் எழும் கணத்தில் துச்சாதனனின் அடி அவன் தோளில் விழுந்தது. அலறியபடி சர்வதன் நிலத்தில் விழுந்தான். அவன் கதை தெறித்து அகன்றது. கையை ஊன்றி அவன் புரண்டு எழுவதற்குள் துச்சாதனன் வெறிகொண்டு கதையைத் தூக்கி அவனை தலையில் அடிக்கப் போனான். ஆனால் ஒருகணம் அந்தக் கதை காற்றில் நின்றது. காலால் சர்வதனை ஓங்கி உதைத்து “செல்க… இனியொருமுறை என் முன் எழாதே!” என்று கூவினான்.
அத்தருணத்தில் எப்படி அம்முடிவை எடுத்தோம் என்று பீமனுக்குத் தெரியவில்லை. அவன் பெரும்கூச்சலுடன் முன்னால் சென்று சர்வதனை அறைய ஓங்கிய துச்சாதனனின் கதையை அறைந்தான். துச்சாதனன் கதை தெறித்து அகல வெறும் கையுடன் அவன் திகைத்து பின்னகர்ந்தான். விழிகள் வெறிப்புகொள்ள உதடுகள் ஒரு சொல்லுக்கென அசைய துச்சாதனன் இரு கைகளையும் செயலற்றவைபோல் விரித்தான். மீண்டும் ஒரு கூச்சலுடன் காற்றில் துள்ளி எழுந்த பீமன் துச்சாதனனின் நெஞ்சில் உதைத்தான். நிலை தடுமாறி விழுந்த அவன் உடல்மேல் தாவிச்சென்று நின்று கதை சுழற்றி அவன் தலையை ஓங்கி அறைந்து உடைத்து குருதிக்கூழும் வெண்கதுப்பும் தெறிக்கச்செய்தான்.
சூழ்ந்திருந்த கௌரவர்களின் பேரொலி சுதசோமனை கொல்லும் பொருட்டு எழுந்த துரியோதனனை திகைக்கச் செய்தது. அவன் திரும்பி நோக்கியபோது துச்சாதனன் தலை உடைந்து உடல் துடித்துக்கொண்டிருப்பதை பார்த்தான். கையிலிருந்து கதை நழுவ ஓங்கி நெஞ்சில் அறைந்து “இளையோனே!” என்று கூவினான். அக்கணத்தில் சர்வதனும் சுதசோமனும் பாய்ந்து சென்று அவனை இருபுறத்திலாக தாக்கினர். இருதோள்களிலும் கதைகளின் அடிகள் விழ கால் தளர்ந்து துரியோதனன் மல்லாந்து விழுந்தான். அவர்கள் பாய்ந்து சென்று அவனை மேலும் அறையத் துவங்க கைகளையும் கால்களையும் ஊன்றி தவழ்ந்து அவ்வடிகளை ஒழிந்து மீண்டும் பின்னால் செல்ல அவனை அப்பாலிருந்து காவல்படையினர் கொக்கிகளால் இழுத்துத் தூக்கி பின்னால் கொண்டுசென்றனர்.
துரியோதனன் “இளையோனே! இளையோனே!” என்று கதறியபடி எழுந்துவர முயன்றான். திமிறி எழுந்தவன் ஏந்து சரடு அறுபட்டவன்போல் மயங்கி துவண்டு பக்கவாட்டில் விழுந்தான். அவனை வீரர்கள் பற்றிக்கொண்டார்கள். இருபுறத்திலிருந்தும் கவசப்படையினர் வந்து அவனை முழுமையாக மூடிக்கொண்டனர். மீண்டு வந்த சுபாகு தன் தேரிலிருந்து இறங்கி கௌரவப் படையை நோக்கி ஓடி கவசங்களுக்குள் புகுந்தான். விழுந்து கிடந்த துரியோதனனை ஏவலர் மரவுரியில் தூக்கிக்கொண்டு சென்றனர். சுபாகு உடன் ஓடி “என்ன ஆயிற்று மூத்தவருக்கு? நலமாக இருக்கிறாரா? அடிகள் விழுந்தனவா?” என்றான். மருத்துவஏவலன் “நலமாக உள்ளார். மூச்சு சீராகவே உள்ளது. நெஞ்சக்குழியின் துடிப்பும் சீர்நடைகொண்டிருக்கிறது. உளமழிந்துள்ளார்” என்றான். சுபாகு தலையைப் பற்றியபடி கால்தளர்ந்து களத்திலேயே சரிந்தான்.
பீமன் தன்னைச் சுற்றி எழுந்த கௌரவர்களின் பெரும் கூச்சலை கேட்டான். அப்போதுதான் துச்சாதனனை கொன்றுவிட்டிருப்பதையே முழுதுணர்ந்தான். துச்சாதனனின் நெஞ்சில் கால்வைத்து எழுந்து நின்று சூழ அலைகொண்ட முகங்களை பார்த்தான். கௌரவர் முகங்களும் பாண்டவர் முகங்களும் ஒன்றுபோலவே திகைப்பில், அச்சத்தில் வெறிப்பு கொண்டிருந்தன. சொற்களில்லாத வெற்றொலிகளின் திரளாக முழங்கியது படை. ஒவ்வொருவர் விழிகளிலும் தெரிந்தது அச்சம் மட்டுமே என உணர்ந்தபோது அவன் தன்னை விலகி நின்று நோக்கினான். அவ்விலக்கம் அளித்த தவிப்பு ஒருகணம் அவன் முகத்தில் வெளிப்பட்டது. மறுகணமே அதிலிருந்து தன்னை முற்றறுத்துக்கொண்டு மீண்டு இரு கைகளாலும் நெஞ்சை ஓங்கி ஓங்கி அறைந்து தலை தூக்கி மலைக்குரங்குகளின் அரசன் என பேரொலி எழுப்பி ஊளையிட்டான்.
அந்த ஊளை கௌரவர்களையும் பாண்டவர்களையும் மீண்டும் விலக்க அவர்கள் அகன்று அவ்வட்டம் பெரிதாயிற்று. கௌரவர்களின் தரப்பிலிருந்து எவரும் பாய்ந்து வந்துவிடா வண்ணம் சர்வதனும் சுதசோமனும் சென்று அப்பகுதியை நோக்கி கதை சுழற்றி அவர்களை அப்பால் ஒதுக்கினர். ஆனால் எவரும் செலுத்தாமலேயே ஒருவரோடொருவர் முட்டி தோள் உரசி ததும்பியது கௌரவப் படை விளிம்பு. பாண்டவப் படைகளும் ஏனென்றறியாமலேயே விலகி விலகி பின்னடைந்து அகன்றன. அவர்களைச் சூழ்ந்து அம்புகளோ வேல்களோ இல்லாத பெரிய வெளி ஒன்று உருவாகியது. நிகழவிருப்பதை அவர்கள் ஒவ்வொருவரும் எண்ணமறியாமலே உள்ளுணர்ந்தனர். கொடுந்தெய்வம் என அத்தருணத்தில் உடலெங்கும் குருதி வழிய வெறிக்களிப்பு எழுந்த முகத்துடன், துறித்த விழிகளுடன் நின்ற பீமனை முற்றொழியலாயினர்.
பீமன் குனிந்து கீழே கிடந்த துச்சாதனனை பார்த்தான். தலை உடைபட்டுத் தெறித்ததும் அவ்வுடல் மெய்யிழந்து வெற்றுப் பொருளென்றாகிக் கிடந்தது. இரு கைகளும் அறியேன் என்பதுபோல் விரித்து வான்நோக்கி மலர்ந்திருந்தன. கால்கள் அகன்று சரிந்திருந்தன. நெஞ்சக்குழியில் சிறிய துடிப்பொன்று எஞ்சியிருந்தது. உடைந்த தலையிலிருந்து தெறித்த ஒற்றைக்கண் சிப்பியிலிருந்து எடுத்த தசை உருளைபோல் கிடந்தது. பிறிதொரு விழி நசுங்கிய தலையிலிருந்து பிதுங்கி நின்றது. திறந்த வாய்க்குள் எருமை மாட்டுக்குரியவைபோல் பெரிய பல் நிரைகள் அகன்று பல்லுக்கு அடியிலிருக்கும் மஞ்சள் தடம் தெரிய விரிந்திருந்தன. நாக்கு உள்மடங்கி தொண்டையை அடைத்திருந்தது. அதில் ஊற்றின் நொதிப்பு என மெல்லிய அசைவு எஞ்சியிருந்தது. இரு காதுகளிலிருந்தும் குருதி வழிந்து தரையை அடைந்திருந்தது.
பீமன் ஒருகணம் அனைத்து ஆற்றலையும் இழந்தான். இந்த வெறும் சடலத்தை இனி என்ன செய்யப்போகிறேன்? இவ்வுடலிலிருந்த அவனுடனான பகைமை முடிவுற்றது. இது பிறிதொன்று. இது வேறு தெய்வங்களுக்குள்ளது. மிக அருகே எங்கோ அவன் நின்று என்னை நோக்கிக்கொண்டிருக்கிறான். எனக்கிருக்கும் அதே தொலைவு அவனுக்கும் இவ்வுடலுடன் உள்ளது. உள்ளம் உறைந்து எவ்வுணர்ச்சியுமற்று இடத்தொடை மட்டும் துள்ளிக்கொண்டிருக்க, இரு கைகளும் அறியேன் என விரிந்து காற்றில் அசைவிழக்க, பீமன் நின்றான் அக்கணம் ஓர் இறுதி வலிப்பு துச்சாதனன் உடலில் நிகழ்ந்தது. வலக்காலும் வலக்கையும் இழுத்து துடிக்க உடல்முறுகி பின் விடுபட்டது. அவ்வசைவு கால் வழியாக பீமனின் உடலில் நுழைய அத்தருணம் வரை கொண்டிருந்த அனைத்து உணர்வுகளிலிருந்தும் மீண்டு வந்து மீண்டும் தன் இரு கைகளையும் மாறி மாறி நெஞ்சில் அறைந்து உரக்க வெறிக்கூச்சலிட்டான்.
முழங்கால் மடித்து துச்சாதனனின் உடல் மேல் அமர்ந்தான். வெறுங்கைகளை குவித்து வியாஹ்ர முத்திரையாக்கி ஓங்கி அவன் வெற்று மார்பின் நெஞ்சக்குழியில் குத்தி இறக்கினான். சூடான குருதிக் குழம்பிற்குள் இறங்கிய விரல்கள் உள்ளே செல்ல வழுக்கியபடி விலா எலும்புகள் தட்டுப்பட்டன. நான்கு விரல்களால் அவற்றை பற்றிப் பிடித்து முழுமூச்சு கொண்டு இழுத்து விரிசலாக்கி மீண்டுமொரு உறுமல் ஒலி எழுப்பியபடி விலாக்கூட்டை இருபுறமும் பிடித்திழுத்து உடைத்து திறந்தான். நீருக்குள் மண்கலம் உடையும் ஓசையென எலும்புகள் நொறுங்குவது கேட்டது. நெஞ்சு விரிந்து அகல உள்ளே சிறுநுரைக்குமிழியென கொப்பளித்து கொண்டிருந்தது குலை. அதை வலக்கைவிரலால் பற்றி வேர்ச்சுருள்கள் நீண்டு வர இழுத்தெடுத்தான்.
சேற்றிலிருந்து தாமரை மொட்டை தண்டுடன் பறித்தெடுப்பதுபோல் உணர்ந்தான். அதனுடன் வந்த குருதிக் குழாய்களைச் சுழற்றி அறுத்து அதை பிரித்தெடுத்து தலைக்குமேல் தூக்கினான். எழுந்து கையில் தூக்கி நான்குபுறமும் காட்டி வெறிகூச்சலெழுப்பினான். கௌரவப் படைகளிலிருந்து கதறல்களும் ஓலங்களும் ஒலித்தன. பாண்டவர்களும் அழுகைக் குரலெழுப்பியபடி சிதறி ஓடினர். விழிதொடும் தொலைவில் எங்கும் எவரும் இருக்கவில்லை. அக்குமிழை தன் தலைக்குமேல் தூக்கி அதிலிருந்து சிறு விழுதென இறங்கிய கொழுங்குருதியை தன் முகத்திலும் தோள்களிலும் விட்டுக்கொண்டான். வாய் திறந்து அதை நாவில் ஊற்றினான். ஒவ்வா சளியொன்றை வாயில் உணர்ந்ததுபோல் உளம் கூசியது. கண்களை மூடி ஒரே மிடறாக அதை குடித்தான்.
அது உடலுக்குள் இறங்குவதை உணரமுடிந்தது. அமைதியான பயணமாக அது அவன் உடலுக்குள் வழுக்கிச் சென்றது. புழு ஒன்று ஊர்ந்து செல்வதுபோல். கையிலிருந்து அக்குலை அதிர்ந்தது. மீண்டும் அதை தூக்கி கனி எனப் பிழிந்து நாவில் விட்டான். மும்முறை அருந்தியபின் அதைத் தூக்கி அப்பால் வீசினான். சுற்றுமுற்றும் நோக்கியபோது அப்பால் விழுந்துகிடந்த கலம் போன்ற தலைக்கவசத்தை கண்டான். அதை எடுத்துக்கொண்டு வந்து துச்சாதனனின் பிளந்த நெஞ்சின் பள்ளத்திற்குள் ஊறி தேங்கத்தொடங்கியிருந்த குருதியை இரு கைகளாலும் அள்ளி அதில் விட்டான். இரு தோல்பைகள்போல் துடித்துக்கொண்டிருந்த மூச்சுக்குலைகளைப் பற்றிப் பிடுங்கி வெளியே எடுத்தான். அது தேன்கூடுபோல தோன்றியது. அழுத்தியபோது அதிலிருந்து தேன்போல் கருமை கலந்த குருதி வழிந்து கலத்தில் விழுந்தது.
அந்தக் கணத்தில் தன் உள்ளம் அத்தனை அமைதிகொண்டிருப்பதை, ஒவ்வொன்றையும் புலன்கள் உணர்வதை, ஒவ்வொரு அறிதலையும் நினைவுகளுடன் இணைத்து கூர்மையாக பின்னிக்கொள்வதைக் கண்டு வியந்தபடி அவனுள் ஒரு பகுதி தனித்து நின்றது. குருதிச்சரடு குருதிப்பரப்பில் விழும் மெல்லிய ஒலியை அவன் கேட்டான். குருதிக்குமிழியில் அலை விலகும் செம்மையை கண்டான். எழுந்து துச்சாதனனின் உடலை கழுத்திலும் இடையிலும் பற்றித் தூக்கி திருப்பி காற்றில் நிறுத்தி இருமுறை அசைத்தபோது உள்ளிருந்து அக்கலம் நிறையுமளவுக்கு குருதி கொட்டியது. துச்சாதனன் உடலை தலைக்குமேல் தூக்கி நாற்புறமும் நோக்கியபடி சொல்லில்லாது கூச்சலிட்டு பீமன் அறைகூவினான்.
பின்னர் அதை கௌரவப் படைகளை நோக்கி எறிந்தான். குனிந்து கீழே இருந்த குருதி நிறைந்த கலத்தை கையில் எடுத்தபடி திரும்பி பாண்டவப் படைகளை நோக்கி நடந்தான். அவன் நடந்து செல்கையில் பின்புறம் ஓசைகள் கேட்டன. பாண்டவ வீரர்கள் அங்கே ஓடிச்செல்வதை கண்டான். திரும்பி நோக்கலாகாதென்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான். ஆனால் பாண்டவப் படைகளை அடைந்து அவர்கள் விலகி வழி விட அவர்களூடாக சென்றுகொண்டிருக்கையில் ஒருகணம் உள்ளம் ஓர் ஐயத்தை அடைந்தது. அவன் திரும்பிப்பார்த்தபோது சர்வதனும் சுதசோமனும் மயங்கி கீழே விழுந்திருக்க அவர்களை படைவீரர்கள் அள்ளி தூக்கிக்கொண்டுவருவதை கண்டான்.
சீற்றத்துடன் அருகே நின்ற படைத்தலைவனிடம் “என்ன ஆயிற்று? அவர்களை எவரேனும் தாக்கினார்களா?” என்றான். “இல்லை, அவர்கள் கால்நடுங்கி நினைவிழந்து விழுந்தார்கள்” என்று அவன் சொன்னான். அதுவரை இருந்த சினமும் வெறியும் அகல பீமன் உடல் தளர்ந்தான். குனிந்து கையிலிருந்த குருதிக் கலத்தை பார்த்தான். அதை அவ்வண்ணமே வீசி எறிந்துவிட்டு திரும்பி வடபுலக் காட்டிற்குள் ஓடி மீளாத வண்ணம் மறைந்துவிட வேண்டுமென்று தோன்றியது. உடல் உலுக்கி வாயுமிழ வந்தது. கண்களை மூடி தன் உடலுக்குள் புரண்டெழுந்த அனைத்தையும் எண்ணங்களால் பற்றி அங்கங்கே அடக்கி தொகுத்து தன்னை மீட்டு விழிதிறந்தான். கையிலிருந்து சரிந்து சற்றே சிந்தத் தொடங்கியிருந்த கவசக்கலத்தை நேராகப் பிடித்தபடி நடந்தான்.