‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27

பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள். திருஷ்டத்யும்னனின் ஆணை காற்றில் அலைமோதியது. “ஒருங்கிணையுங்கள்! ஒருங்கிணையுங்கள்! ஒவ்வொருவரும் பிறருடன் ஒருங்கிணைந்துகொள்ளுங்கள். வேல்முனைச்சூழ்கை திரள்க! நூற்றுவரும் ஆயிரத்தோரும் வேல்முனையின் கூர் ஆகுக! முதன்மை வீரர் பின் பிறர் திரள்க!”

ஆனால் கௌரவப் படையினர் முதலை வடிவை அகற்றி பிறைவடிவை மேற்கொண்டனர். பிறையின் வலது எல்லையில் கிருதவர்மனின் படைத்துணையுடன் சல்யரும் இடது எல்லையில் அஸ்வத்தாமன் துணையுடன் கிருபரும் தங்கள் தேர்ப்படைகளை நடத்த பிறை நடுவே கர்ணன் மைந்தருடன் திகழ்ந்தான். சிறு துண்டுகளாகச் சிதறி ஒன்றுடன் ஒன்று முட்டி இலக்கழிந்து கொந்தளித்துக்கொண்டிருந்த பாண்டவப் படையை இரு கைகளையும் விரித்து அள்ள முயல்வதுபோல் கௌரவப் படை அணுகி வந்தது. பாண்டவப் படை அதன் அணைப்பில் சிக்கி முற்றாக சிதறி அழியக்கூடுமென்று தேர்மேடையில் நின்று தலைதிருப்பி நோக்கினாலே உணரமுடிந்தது.

வெற்றுத்திரளாக கூச்சலிட்டுக்கொண்டிருந்த பாண்டவப் படையிலிருந்து மிக அரிதாகவே அம்புகள் எழுந்தன. ஆனால் கௌரவப் படையிலிருந்து கடல்அலையிலிருந்து துமியென அம்புகள் எழுந்து வளைந்து விழுந்துகொண்டிருந்தன. அவை தொட்ட இடங்களிலெல்லாம் பாண்டவப் படைவீரர்கள் நிலம் தொட விழுந்து வெற்றிடம் உருவாகியது. அவ்வெற்றிடத்தில் நிலைதடுமாறிக்கொண்டிருந்த பிற வீரர்கள் ததும்பி வந்து நிரப்பினர். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டிமோதி நிலையழிந்தனர். கால்கள் சிக்கியே பலர் விழுந்தனர். விழுந்தவர்கள் மேல் பிறர் நடக்க புரண்டு எழுவதற்குள் யானைகளின் கீழ் மிதிபட்டனர்.

“பாண்டவர்களை நடுவே உடையுங்கள்… இரு பகுதிகளாக்குங்கள்…” என்று சகுனி கர்ணனைச் சூழ்ந்து முன்னெழுந்துகொண்டிருந்த கௌரவப் படையினருக்கு ஆணையிட்டார். “நாம் அவர்களை நடுவே உடைக்கவேண்டும். அது ஒன்றே வழி” என்று பீமன் சொன்னான். “அவர்களது சூழ்கையின் நடுவே இடைவெளி உருவானால் இருமருங்கும் எழுந்து சுற்றிவளைக்க முயலும் அஸ்வத்தாமனும் சல்யரும் நின்றுவிடுவார்கள். இல்லையேல் இன்னும் சிறுபொழுதில் நாம் வளைக்கப்பட்டுவிடுவோம்.” ஆனால் அங்கே கொப்பளித்துக்கொண்டிருந்த பாண்டவப் படைகளை எவ்வண்ணம் ஓர் அணியென்றாக்கி வழிநடத்துவது என்று சர்வதன் திகைத்தான்.

கர்ணன் அர்ஜுனனால் நிறுத்தப்பட்டுவிட்டான் என்று அறிவித்தன முரசுகள். அதை வெறும் விழிகளாலேயே நோக்கமுடிந்தது. அர்ஜுனனின் அம்புகள் கர்ணனின் மைந்தர்களை அறைந்து பின்னகர்த்த கௌரவப் படை விசையழிந்து கர்ணனுக்குப் பின்னால் அரைவட்டமாக அரண் அமைத்துச் சூழ்ந்தது. அவ்வாறு ஒரு தேக்கம் உருவானபோது கௌரவப் படை இரு பக்கமும் பிதுங்கி நீளம் மிகுந்தது. சல்யரும் கிருபரும் நடத்திய ஓரத்துப்படைகளில் செறிவு மிகுந்தது. அவர்கள் பாண்டவப் படையை வளைக்கும் விசை கூடிச்சென்றது.

அவர்களை துணைத்துச்சென்ற கிருதவர்மனின் யாதவப் படைகளும் அஸ்வத்தாமனின் பாஞ்சாலப் படையினரும் பாண்டவர்களை பக்கவாட்டில் தாக்க திரும்பி அவர்களை எதிர்கொண்டமையால் பாண்டவப் படை ஒரு பெரிய வட்டமாக ஆகியது. எந்த வட்டத்திலும் என மையம் உருவாகியது. எந்த இயக்க மையமும் என அது சுழியானது. எச்சுழியையும்போல அது அவ்வட்டத்தை தூக்கிச் சுழற்றியது. அதன் விளிம்பு அழிந்துகொண்டே இருக்க இயல்பாக உருவான சுழிமையத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றே அறியாத வீரர்கள் தடுமாறிக்கொண்டிருந்தனர்.

திருஷ்டத்யும்னனின் ஆணை பதறிக்கொண்டிருந்தது. “ஒருங்கு சேர்க! ஒவ்வொருவரும் பிறிதொருவருடன் இணைந்துகொள்க! ஆணைகளை செவி கூர்க! அருகிருக்கும் நூற்றுவரின் ஆணைகளை ஒவ்வொருவரும் செவி கூர்க! ஒருங்கிணைக!” ஆனால் எவரும் அதை கேட்டதுபோல் தெரியவில்லை. பொருளில்லாமல் அங்குமிங்கும் ஓடினர். அம்புபட்டு விழுந்தனர். பாண்டவர்களின் அம்புகள் பாண்டவர்கள் மீதே விழுந்து அவர்களை கொன்றன. “பேரழிவின் கணம், தந்தையே” என்றான் சர்வதன்.

பீமன் தன் இடையிலிருந்து சங்கை எடுத்து மும்முறை ஊதினான். எங்கிருந்தோ “காற்றின் மைந்தர் வெல்க! பெருந்தோள் மல்லர் வெல்க! பீமசேனன் வெல்க!” என்று ஒரு குரல் எழுந்தது. அதைத் தொடர்ந்து “பீமசேனன் வெல்க! இளைய பாண்டவர் வெல்க! மாருதர் வெல்க!” என படைவீரர்களிடம் வாழ்த்தொலி எழுந்தது. அவ்வொலிக்காக செவிகூர்ந்தவர்கள்போல வீரர்கள் ஒற்றைக்குரலில் அவ்வாழ்த்தொலியை ஏற்றொலிக்க கடலில் அலை உருவாவதுபோல் பாண்டவப் படையிலிருந்து ஓர் முன்னெழுச்சி தோன்றியது. சிதறிப்பரந்திருந்த பாண்டவப் படையினர் போர்க்குரல் எழுப்பியபடி ஒருங்கிணைந்து ஒற்றைச்சரடென்றாயினர்.

விழிநோக்கவே அச்சரடு பருமன்கொண்டு திரண்டு கோட்டைச்சுவர் வடிவாகியது. சுவர் மடிந்து குவிந்து கூர்முனையாகி வேல்முனை வடிவை அடைந்தது. விண்ணில் பறக்கும் பறவைக்கூட்டங்களுக்குரியது அச்சூழ்கை. அதுவே ஒரு பறக்கும் பறவை வடிவம். அதன் முகப்பில் நீட்டிய அலகு என பீமன் சென்றான். பாண்டவப் படையினர் ஊக்கம்கொண்டு வாழ்த்துரைத்தபடியும் கூச்சலிட்டபடியும் நாணோசை எழுப்பியபடியும் அவன் பின்னால் பெருகிச் சென்றார்கள். அவர்கள் ஆணைகளால் அன்றி தங்கள் தன்னியல்பான உணர்வெழுச்சியினால் அவ்வடிவை அடைந்திருந்தார்கள்.

பீமன் தன் தேரை விரைந்து செலுத்தி அப்பெருக்கின் முன்னால் சென்றான். அவ்வாறு படையின் ஒரு பகுதியில் ஓர் உணர்வெழுச்சி தோன்றியமை முழுப் படையினருக்கும் ஊக்கமூட்டுவதாக இருந்தது. உளச்சோர்வின் எல்லையில் ஊக்கத்திற்காச் செவிகூர்வதும் ஊக்கத்தின் உச்சியில் உளச்சோர்வின் துளிக்காக துழாவி அலைவதும் மானுட இயல்பென்பதால் ஒவ்வொருவரும் அதில் இணைந்துகொண்டனர். பீமன் முதன்மைகொண்டு எழுந்து கௌரவப் படையை சந்தித்தபோது அவனுக்குப் பின்னால் மழைநீர் மலையிறங்குவதுபோல பல திசைகளிலிருந்தும் திரண்ட பாண்டவப் படைப்பெருக்கு விற்களும் வேல்களுமாக ஒழுகி வந்தது.

“அணிவகுக்கப்படாத திரள், தந்தையே” என்றான் சர்வதன். “ஆம், ஆனால் எதிரிகளும் அணிவகுக்கப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்” என்றான் பீமன். “இத்தருணத்தில் ஒரு செறுத்துநிற்பு மட்டுமே இயல்வது. அது நிகழட்டும்.” அம்புகளைத் தொடுத்தபடி பீமன் கௌரவப் படைக்குள் புகுந்தான். மிக அப்பால் மறு எல்லையில் சாத்யகி அஸ்வத்தாமனை எதிர்கொள்ளும் செய்தியை அறிவித்தன முரசுகள். ஒவ்வொருவரும் தங்கள் தருணத்திற்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப போர்த்திட்டங்களை வகுத்துக்கொண்டு போரிட்டனர். எங்கும் ஒருங்கிணைக்கும் ஆணைகள் எதுவும் செவிகொள்ளப்படவில்லை. திருஷ்டத்யும்னன் என்ன நிகழ்கிறதென்றே தெரியாதவன்போல் “ஒருங்கிணைக! ஒருங்கிணைக!” என்று கூவிக்கொண்டிருந்தான். நோய்ப் படுக்கையில் எழும் அரற்றலென அது ஒலித்தது.

பீமன் தொலைவில் அரவுக்கொடியை கண்டான். “செல்க! செல்க!” என்று கைகாட்ட அவன் தேர் எழுந்து சென்று துரியோதனனையும் துச்சாதனனையும் சந்தித்தது. அம்புகளைத் தொடுத்தபடி சென்று அவன் துரியோதனன் முன்னால் எழுந்தான். துரியோதனன் பீமன் அவ்வண்ணம் எழுந்து வருவான் என்பதை எதிர்பார்க்கவில்லை. சற்று முன்பு வரை அவனை வந்தடைந்த செய்தி பீமன் உடல்குலைந்து உளம்சிதைந்து எங்கோ விழுந்திருக்கிறான் என்பதே. பாண்டவப் படை அலைசுருண்டு தன்னை நோக்கி வருவதைக் கண்டபோதுகூட தேர்களில் சர்வதனும் சுதசோமனும் இருக்கக்கூடும் என்றே அவன் எண்ணினான். சங்கை முழக்கியபடி விசைகொண்டு எழுந்த தேரில் அலைமேல் எழுவதுபோல் அணைந்த பீமன் அவன் உள்ளத்தை மலைக்கச்செய்தான்.

பீமன் வருவதைக் கண்டதும் கை செயலிழக்க துரியோதனன் வில் தாழ்த்தினான். அவன் பின்னால் நின்ற துச்சகன் “இவர் இறந்துவிட்டார் என்றார்களே!” என்றான். துச்சாதனன் “இழிவிலிருந்து மேலும் சீற்றம் கொண்டிருக்கிறான்” என்றான். துரியோதனன் உளம் மீண்டு உரக்க நகைத்து “நம் கையால் இறப்பது போலும் இவன் ஊழ்… தொடர்க என்னை!” என்று ஆணையிட்டு அம்புகளால் தாக்கியபடி முன்னால் எழுந்தான். அம்புகளின் எல்லைகள் தொட்டுக்கொண்டபோது விண்ணில் உலோக மின்னல்களாலான வளைவு ஒன்று உருவாகியது. சிலைக்கும், சிலம்பும், சிறகு துடித்து உதிரும், ஒளிர்ந்தெழும் சிறு பறவைகளினாலான வளைவுக்குக் கீழே விலங்குகள்போல் பொருளிலாது கூச்சலிட்டபடி அவர்கள் போரிட்டனர்.

துச்சாதனன் உரத்த குரலில் “மந்தனே, நீ அடைந்த சிறுமை போதவில்லை என்று தேடி வந்தாயா? இக்களத்தில் உன்னை இனி என்ன சிறுமை செய்யவேண்டியிருக்கிறது? சொல், அதை செய்கிறேன்” என்றான். துரியோதனன் “பேடி என்றானான். இனி பெண்ணென்றாக்கி திருப்பி அனுப்புவோம்” என்றான். ஆனால் பீமனின் முகத்தில் அச்சொற்கள் எந்த அலையையும் எழுப்பவில்லை என்று அவர்கள் கண்டார்கள். புன்னகையுடன், பதறாத கைகளுடன் அவன் போரிட்டான். அவன் அம்புகள் வந்து கௌரவர்களின் தேர்களை அதிரவைத்தன. துச்சகனின் தேர்த்தட்டை அறைந்து அதை நிலைபிறழவைத்து அதை திருப்பும் பொருட்டு திரும்பிய பாகனின் தலையை கொய்தெறிந்தது பீமனின் அம்பு. அடுத்த அம்பு வந்து தேர்த்தட்டில் பாய்வதற்குள் துச்சகன் பின்னடைந்தான்.

துர்முகனின் கொடி அறுந்தது. அவன் வெறிகொண்டு கூவியபடி எடுத்த பேரம்பு நாணை அடைவதற்குள் உடைந்தது. சீற்றத்துடன் அவன் ஆவநாழிக்கு கை நீட்டியபோது நாண் அறுந்தது. அவன் தேர்த்தட்டில் முழந்தாளிட்டு அமர்ந்து பிறிதொரு வில் தேர்வதற்குள் வில்லும் உடைந்தது. இன்னொரு வில்லுடன் அவன் எழுந்தபோது தோள்கவசம் உடைந்தது. தன்னை காத்துக்கொள்ள தேர்த்தூணருகே ஒதுங்க நெஞ்சக் கவசம் பிளந்து விழுந்தது. “இளையோனே!” என்று கூவியபடி துச்சாதனன் அவன் உதவிக்கு வந்தான். அதற்குள் சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் நின்று துரியோதனனை தாக்க அவன் பின்னடைந்தான். எக்கணமும் பீமன் திரும்பி துரியோதனனை பின்னின்று தாக்கும் நிலை எழுந்தது. அவன் புறத்தைக் காக்கும்பொருட்டு துச்சாதனன் முன்னகர்ந்தாக வேண்டியிருந்தது.

நிலைதடுமாறி இருமருங்கும் நோக்கியபின் முடிவெடுத்து வில்லுடன் முன்னேறும்போதே சுஜாதனை நோக்கி “செல்க… மூத்தவரை புறம் காத்துக்கொள்க!” என்று துச்சாதனன் ஆணையிட்டான். சுஜாதன் அம்புகளைத் தொடுத்தபடி துச்சகனின் பின்புறம் வந்தான். மறுஎல்லையில் வில்லுடன் போரிட்ட விகடானனனை நோக்கி “மூத்தவரை புறம் காக்க… வில்லவர் இன்றி புறம் அமையலாகாது” என்று கூவியபடி துச்சாதனன் அம்புகளால் சர்வதனை அறைந்தான். விகடானனன் வந்து துர்முகனின் புறத்தை காத்தான். சுபாகு மிக அப்பால் பீமனைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த உதிரி வீரர்களை அம்புகளால் அறைந்து அவர்கள் சூழ்ந்துகொள்ளாமல் தடுத்தான்.

மிக விரைவிலேயே இணைநிலை கூடிவிட்டது. அதுவரை அங்கிருந்த மேலேகலும் கீழிறங்கலும் நிலைத்து அவர்கள் வெல்வதும் வீழ்வதுமின்றி அம்புகளை அம்புகளால் அறைந்துகொண்டு என்றுமென அங்கேயே நின்றிருந்தனர். இமைப்பில்கூட தோல்வி அணுகிவிடக்கூடும் என்பதுபோல, நரம்புகள் அனைத்தும் உச்சத்தில் இறுகிநின்றிருக்க, ஒவ்வொரு கணமும் முழு வாழ்வென்றே விரிய, ஒவ்வொரு புலனும் வானுருக்கொண்டு அகல, ஒவ்வொரு அம்பையும் அதன் ஒவ்வொரு கணத்தையும் கண்டு, ஓர் அம்புவீச்சை ஓராயிரம் அம்புகளின் நீள்தொடரெனக் கண்டு, அதன் எய்துதலையும் இழிதலையும் உளம்சென்று தான் நடித்து மீள, அங்கே அவர்கள் திகழ்ந்த அக்கணமே மானுடருக்கு தெய்வங்கள் மெய்யென அருளியது.

தோழரே அறிக, அவ்வுச்சத்தை அஞ்சியே சிறியவற்றை இயற்றுகிறார்கள்! உளம்ஒன்றாச் செயல்களாலான அன்றாடத்தைச் சமைத்து சூழப் பரப்பி அதில் திளைக்கிறார்கள். சலிப்பென்பது உச்சத்தை நாடும் உளஆழம் கொள்ளும் விழைவே. உச்சங்களுக்காகவே மானுட உள்ளமும் உடலும் படைக்கப்பட்டுள்ளன. உச்சங்களிலேயே மானுடன் கொண்டுள்ள திறன்கள் அனைத்தும் எழுந்து பொருள் சூடுகின்றன. உச்சங்களில் வாழும் வாழ்க்கையை மட்டுமே மானுடர் தாங்களும் வாழ்வென கணக்கிடுகிறார்கள். நூறாண்டு வாழ்பவர்கள்கூட வாழ்ந்ததை ஒருசில நாட்களென்றே கருதிக்கொள்கிறார்கள். போர் உச்சம். ஏனென்றால் அதனருகே இறப்பு நின்றிருக்கிறது. ஊழ்கம் பிறிதொரு உச்சம். அதனருகே முடிவிலி நின்றிருக்கிறது. இறப்பு என்பது முடிவிலியின் இருட்தோற்றம்.

துர்முகன் எண்ணியிராக் கணத்தில் புது விசை ஒன்றை அடைந்து அம்புகளை மேலும் வீச்சுடன் செலுத்தியபடி பீமனை நோக்கி சென்றான். அந்தச் சிறுமுன்னேற்றத்தால் பீமன் நிலைகுலைந்தான். முழு நிகர்நிலையை அடைந்த பொருள் ஒரு மணற்பருவால் அலைக்கழிவதுபோல. அவன் அம்புகள் இலக்கழிய துரியோதனனின் அம்புகள் வந்து அவன் தேர்மகுடத்தையும் கொடியையும் உடைத்தன. அதைக் கண்டு பாண்டவப் படையினர் கூச்சலிட்டார்கள். அவ்வோசை மேலும் அவர்களை தளர்த்த அவர்களின் நெஞ்சக் கவசங்களை அறைந்து உடைத்து ஆழப் பாய்ந்து தேரிலிருந்து தூக்கி வீசின துச்சாதனனின் அம்புகள்.

துச்சாதனனின் பேருருவ அரக்கர்களுக்கு நிகரான தோள்வல்லமை ஒவ்வொரு அம்பிலும் இருந்தது. அவனுடைய அம்புகள் முழுவாரை அளவு நீளம் கொண்டிருந்தன. அவை சென்று பட்ட வீரர்களின் உடல்களைக் கடந்துசென்று நிலத்திலோ தேர்த்தட்டிலோ ஊன்றி நின்றன. அவர்கள் அவற்றால் தாங்கப்பட்டு தலைதொய்ந்து கைகள் தளர்ந்து குருதி ஊறி மூக்கிலும் வாயிலும் வழிய கால் நிலம் தொடாது நின்றனர். அவன் அம்பு இரண்டு குதிரைகளை ஒன்றாகக் கோத்தது. அணுகி நின்று போரிட்ட மூன்று காலாள்வீரர்களை சேர்த்து மண்ணில் அறைந்தது. தேர்களின் இரு தூண்களை உடைத்தெறிந்தது. யானைகளையும் கடந்து அப்பால் சென்று குருதிதோய்ந்த கழுகின் அலகென எட்டிப்பார்த்தது.

பீமன் பின்னடையத் தொடங்கினான். அவனுக்கு பின்துணை அளித்தபடியே சர்வதனும் சுதசோமனும் பின்னடைந்தார்கள். எக்கணமும் கதையுடன் துரியோதனன் பாய்ந்தெழுந்து பீமனின் தலையை உடைக்கக் கூடும் என்று தோன்றியது. ஆனால் பீமன் தேரிலிருந்து பாய்ந்து யானையொன்றின் மருப்பின் மேல் ஏறி மறுபுறம் சென்று விகடானனனின் தேரின் மேல் தாவி அவன் அமரத்தில் குதித்து ஒரே அடியில் அவன் தேர்ப்பாகனின் தலையை உடைத்தெறிந்தான். தேர் சரிந்தபடியே செல்ல விகடானனன் அலறியபடி தேரிலிருந்து பாய்ந்து ஓட முயன்றான். தன் கதையை சுழற்றி வீசி அவனை நிலத்தில் வீழ்த்திய பீமன் விட்டில் எனத் துள்ளி அவன் மேல் பாய்ந்து அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தான். விலாவெலும்புகள் உடைந்து தசைகிழித்து வெளியே தெரிய மூக்கிலும் வாயிலும் கொழுங்குருதி குமிழியிட்டுத் தெறிக்க உடல் உலைந்து துள்ளி எழுந்தமைய விகடானனன் உயிரிழந்தான்.

அந்தத் தாக்குதலை எதிர்பாராத துரியோதனன் “கொல்க அவனை… கொல்க!” என உடைந்த குரலில் கூவினான். துச்சாதனன் “இளையோனே!” என்று கூவியபடி தேரிலிருந்து ஓடிவருவதற்குள் பீமன் பாய்ந்து பின்னடைந்து பிறிதொரு யானையின் காலுக்கு அடியில் புகுந்து எழுந்து தன் தேரிலேறிக்கொண்டு அதே விசையில் வில்லை எடுத்து துரியோதனனை தாக்கத் தொடங்கினான். கைகள் நடுங்க “என்ன ஆயிற்று? என்ன ஆயிற்று? நோக்குக! நோக்குக!” என்று துரியோதனன் பதறிக்கொண்டிருக்க அவன் கவசங்களை உடைத்தன பீமனின் அம்புகள். துர்முகனும் துச்சகனும் இருபுறமும் வந்து அம்புகளால் திரையிட்டு துரியோதனனை காத்தனர். தேரை பின்னடையச் செய்த துரியோதனனின் பாகன் பீமனின் அம்புபட்டு சரிந்து நிலத்தில் விழுந்தான்.

யானையை சுற்றிக்கொண்டு அப்பால் சென்ற துச்சாதனன் “இளையோனே” என்று கூவினான். விகடானனன் களம்பட்டான் என அறிவிக்கும் முரசுகள் முழங்கத்தொடங்கின. துரியோதனன் தேர்த்தட்டில் தளர்ந்து அமர துச்சகனும் துர்முகனும் கண்களில் நீர் வழிய “இழிமகனே! இழிவிலங்கே!” என்று கூவியபடி வெறியுடன் பீமனை தாக்கினர். அவர்களில் நுரைகொண்டெழுந்த அந்தச் சீற்றத்தை ஒப்புக்கொண்டபடி வில்லுடன் மெல்லமெல்ல பின்னடைந்தான் பீமன். சர்வதனும் சுதசோமனும்கூட கை தளர்ந்தவர்களாக தோன்றினர். பீமன் தளர்ந்து பின்னடையும்தோறும் மேலும் சீற்றம்கொண்ட துர்முகன் “கீழ்மகனே, இன்று உன் சாவு… என் உடன்பிறந்தாருக்காக நான் அளிக்கும் குருதிக்கடன் இன்று” என்று கூவினான்.

தன் தேரிலிருந்து பறந்தவன் என எழுந்த பீமன் யானை ஒன்றைக் கடந்து தேர்மகுடங்களினூடாகச் சென்று துர்முகனைக் கடந்து பின்னால் இறங்கி அதே விசையில் குதிரைகளின் முதுகுகளில் மிதித்துப் பாய்ந்து சுஜாதனின் தேரிலேறிக்கொண்டான். சுஜாதன் தன் வில்லை தேர்த்தட்டில் வைத்து முழந்தாளிட்டு அமர்ந்தான். “ஆம் மூத்தவரே, நீங்கள் என்னை கொல்வதே முறை. ஒருகணம்கூட அவையில் அன்று நிகழ்ந்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிக!” என்றான். ஒருகணம் பீமனின் கதை தழைந்தது. “இங்கு பொருளிலாது வாழ நான் விழையவில்லை. என் உடன்பிறந்தாரின் உலகையே நாடுகிறேன்” என்று சுஜாதன் சொன்னான்.

பீமன் கண்ணெதிரிலிருந்து மறைந்ததைக் கண்டு திகைத்த துர்முகன் தொடுத்த அம்புடன் சுற்றி நோக்கிய கணத்தில் கௌரவப் படையில் ஓசை எழுந்தது. அவன் திடுக்கிட்டு உடல்திருப்பி நோக்கியபோது சுஜாதனின் தலையை அறைந்து உடைத்து கதையுடன் கைதூக்கி நின்ற பீமனை கண்டான். அவன் கை தளர்ந்து வில் தேரில் விழுந்தது. “எஞ்சியிருப்போர் நால்வர். நால்வரையும் இன்றே கொல்வேன். இது தெய்வங்கள் எனக்களித்த ஆணை!” என்று பீமன் கூவினான். துர்முகன் கால்கள் தளர்ந்து தேரின் பீடம் நோக்கி சரிந்து அமர அவன் தேரை வளைத்து அப்பால் கொண்டுசெல்ல பாகன் முயன்றான்.

துச்சகன் “கீழ்பிறப்பே… அரக்கனே” என்று கூவியபடி அம்புகளைத் தொடுத்து முன்னால் பாய்ந்து வந்தான். பீமனைச் சூழ்ந்து வந்தறைந்த நீள்அம்புகளின் விசையால் காற்று கிழிபட்டு ஊளையோசை எழுப்பியது. பீமன் துள்ளி எழுந்து நிலத்தில் பாய்ந்து குனிந்து யானைகளின் கால்களினூடாக தேர்களின் நடுவினூடாக ஓடினான். நிலத்தில் விழுந்து இறந்து குவிந்திருந்த உடல்களினூடாக ஊடுருவிச்சென்று பாய்ந்து எழுந்து தன் தேரை அடைந்தான். துச்சகன் “நில்… இழிவிலங்கே! ஆண்மையிருந்தால் நில்! என்னுடன் போர் புரிக… நில்!” என்று கூவினான். பீமனின் ஆணைக்கேற்ப அவன் தேரை பாகன் பின்னடையச் செய்ய சர்வதனும் சுதசோமனும் அம்புகளால் துச்சகனை தடுத்தனர்.

பின்னாலிருந்து துரியோதனனும் துச்சாதனனும் நாணோசை எழுப்பியபடி முன்னால் வந்தனர். துரியோதனன் விழிகளில் இருந்து நீர்வழிய, துடிக்கும் உதடுகளுடன் கடித்து இறுகிய பற்கள் வெளித்துத் தெரிய தேர்த்தட்டில் நின்றான். துச்சாதனன் மூத்தவனின் வடிவென்றே தோன்றினான். “தெய்வங்களே! என் தெய்வங்களே!” என்று துரியோதனன் கூவினான். “என்னை துணைசெய்யுங்கள்… என்னுடன் இருங்கள்… இத்தருணத்தில் என்னை ஆளுங்கள்…” நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு “இன்று உன்னை கொல்லாமல் மீள்வேன் என்றால் நான் அரசன் அல்ல, ஆண்மகனும் அல்ல!” என்று அலறினான். கைவீசி சர்வதனிடமும் சுதசோமனிடமும் “விலகிச் செல்க! விலகிச் செல்க, மைந்தர்களே! என் அம்பால் நீங்கள் உயிர்துறக்கலாகாது… விலகிச் செல்க!” என்று கூவினான்.

சர்வதனும் சுதசோமனும்கூட விழிநீர் வடித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் அம்புகள் துரியோதனனையும் துச்சாதனனையும் தடுத்து நிறுத்தின. துர்முகனும் துச்சகனும் மூத்தவர்களுக்கு படைத்துணையென பின்னால் சென்றனர். அவர்களின் போர் முழு விசையை அடைந்து நிகர்நிலை கொண்ட பொழுதில் இரு தேர்கள் நடுவே பீமன் யானையில் தோன்றினான். அதை எதிர்பாராத துரியோதனன் தேரை பின்னடைய ஆணையிட்டான். இரும்புக் கவசம் அணிந்திருந்த பெரிய போர்யானையாகிய பிரசண்டன் துதிக்கையில் ஏந்திய மிகப் பெரிய இரும்பு முழைத்தடியை வீசிச்சுழற்றியபடி பிளிறிக்கொண்டு களம் நடுவே எழுந்தது. நான்குவாரை நீளமும் ஆளுடல் தடிமனும் யானையளவு எடையும் பன்னிரு முள்முழைகளும் கொண்டிருந்த அந்த முழைத்தடி ஒரே வீச்சில் நான்கு தேர்களை அறைந்து துண்டுகளாக தெறிக்கச் செய்தது. அதன் அடிபட்ட யானைகள் உடல்சிதறிச் சரிந்தன. புரவிகள் துண்டுகளாகத் தெறித்தன.

“பின்னடைக! பின்னடைக!” என்று கூவியபடி துரியோதனன் தேரில் நின்று அம்புகளை தொடுத்தான். பிரசண்டனின் இரும்புக் கவசங்கள் மேல் மணியோசை எழுப்பியபடி அம்புகள் முட்டி முட்டி உதிர்ந்தன. துரியோதனனும் துச்சாதனனும் தேர்களை பின்னுக்கு கொண்டுசென்றனர். சர்வதனும் சுதசோமனும் இடையறாது செலுத்திய அம்புகளால் நிலையழிந்திருந்த துச்சகனாலும் துர்முகனாலும் அதே விசையில் தேர்களை பின்னடையச் செய்ய இயலவில்லை. கௌரவப் படையை சிதறவைத்துக்கொண்டு முன்னெழுந்த பிரசண்டன் தன் முழைத்தடியால் துர்முகனின் தேரை அறைந்து புரவிகளின் உடல்களை தசைத்துண்டுகளாக தெறிக்கச் செய்தது. தேர் பலகைச்சிம்புகளாகப் பறந்து நிலம் படிந்தது.

தேரிலிருந்து பாய்ந்து நிலத்தை அடைந்த துர்முகன் புரவிகளின் வெம்மை நிறைந்த குருதி அருவித்திவலைகள் என உடலெங்கும் தெறித்து முழுக்காட்ட முகத்தை கைகளால் வழித்து நோக்கு திருத்தியபடி ஏறிட்டுப் பார்ப்பதற்குள் அவன் முன் கதையுடன் பாய்ந்து வந்து நின்றான் பீமன். துர்முகன் “வணங்குகிறேன், மூத்தவரே” என்று முழங்கால் மடிந்தான். அவன் தலையை அறைந்து மண்டைக்கலம் திறந்து செங்குருதியுடன் வெண்நிணம் சிதறச்செய்த பின்னர் பீமன் பாய்ந்து யானையின் உடல் ஒன்றின்மேல் ஏறி சுழன்றுவந்த பிரசண்டனின் முழைத்தடி மேலேயே தொற்றி அதன் மத்தகம் மேல் சென்று எழுந்து நின்றான்.

முழைத்தடியால் அறையுண்ட துச்சகனின் தேர் உடைந்து பரவியது. அவன் பாய்ந்து குருதிச்சேறு மண்டிய நிலத்தை நிரப்பிக்கிடந்த மானுட உடல்களின்மேல் விழுந்து கையூன்றி எழுந்தபோது கால்கள் தடுக்கி மீண்டும் விழுந்தான். “அமைக. இனி உன்னால் போரிட இயலாது!” என்றான் பீமன். “கீழ்மகனே, இறுதிக்கணம் வரை போரிடுவேன்! வா, ஆண்மையிருந்தால்!” என்று துச்சகன் கூவினான். பீமன் யானையிலிருந்து பாய்ந்திறங்கி கதையுடன் அவனை அணுகி ஓங்கி அறைய தலைசுழற்றி தப்பி அருகே கிடந்த கதையை அவன் கையிலெடுத்துக்கொண்டான்.

இருவரும் கதை சுழற்றிப் பொருத அவர்களை துணைக்கும்பொருட்டு முன்னெழுந்து வந்த துரியோதனனையும் துச்சாதனனையும் பிரசண்டன் முழைத்தடியைச் சுழற்றியபடி சென்று தடுத்தது. சூழ முயன்ற கௌரவப் படையினரை சர்வதனும் சுதசோமனும் செலுத்திய அம்புகள் தடுத்தன. துச்சகன் உச்ச விசையில் வாயால் மூச்சுவிட்டபடி அமர்ந்தும் எழுந்தும் துள்ளியும் சுழன்றும் போரிட்டான். அவன் அடிகளை தடுத்தபடி அவன் கால்களிலேயே நோக்கு நிலைக்க பீமன் சுற்றிவந்தான். கீழே கிடந்த உடைந்த சகடம் ஒன்றில் கால்பட்டு துச்சகன் அரைக்கணம் நிலையழிய பீமனின் கதை சுழன்று அவன் நெஞ்சை அறைந்தது. எலும்பு முறியும் ஒலியுடன் துச்சகன் மல்லாந்து விழுந்தான். அவன்மேல் பாய்ந்தேறி அவன் தலையை அறைந்து உடைத்தான் பீமன்.

துரியோதனன் தன் சிறு அம்பால் பிரசண்டனின் வலக்கண்ணை அடித்தான். அது அலறியபடி முழைத்தடியை கீழே போட்டுவிட்டு தன்னைத்தானே சுழன்றது. நோக்கழிந்த அதன் விழியின் பக்கம் நின்றபடி தானும் சுற்றிவந்த துரியோதனன் அதன் கவசங்களுக்கு நடுவே கழுத்தில் பிறைவாளியால் அறைந்தான். நரம்பு அறுபட பிரசண்டன் திகைத்து நின்று முன்னும் பின்னும் ஊசலாடியது. அக்கணம் துச்சாதனன் பாய்ந்து தேரிலிருந்து எழுந்து அதை நோக்கி ஓடி அதன் கவசமணிந்த துதிக்கைமேல் கால்வைத்து ஏறி மேலே சென்று முதுகின்மேல் நின்றபடி அதன் மத்தகத்தின்மேல் கதையால் ஓங்கி அறைந்தான். தலைமுழையில் விழுந்த அடியால் பிரசண்டன் நிலைதடுமாறி அசைய மேலும் மும்முறை அந்த முழைகளில் அறைந்தான் துச்சாதனன்.

பிரசண்டனின் துதிக்கையினூடாக குருதி ஊற்றுப்பெருக்கென கொட்டத் தொடங்கியது. அது துதிக்கையை தூக்கிச் சுழற்ற குருதித்துளிகள் சரம்போல வானில் அரைவட்டமாக பறந்தன. வயிற்றுக்குள் எழுந்த உறுமலுடன் பிரசண்டன் அசைந்தாடி பக்கவாட்டில் சரிந்து விழ துச்சாதனன் பாய்ந்து மறுபக்கம் குதித்து தன் தேரை நோக்கி சென்றான். துரியோதனன் அப்போதுதான் துச்சகனும் துர்மதனும் உடல்சிதைந்து கிடப்பதை கண்டான். “இளையோனே! இளையோனே!” என்று கூவியபடி அவர்களை நோக்கி பாய்ந்துசெல்ல முயல பீமனின் அம்புகள் வந்து அவன் கவசங்களை அறைந்தன. “மூத்தவரே, விலகுக… மூத்தவரே, அம்புகளை ஒழிக!” என துச்சாதனன் கூவினான். கவசப் படை வந்து துரியோதனனை மூடிக் காத்து பின்னெடுத்துச் சென்றது.

முந்தைய கட்டுரைமறுபக்கத்தின் குரல்கள்
அடுத்த கட்டுரைஅறிபுனை- இரு கடிதங்கள்