தன்மீட்சி – கடிதம்

தன்மீட்சி நூல் வாங்க

அன்புள்ள ஆசிரியருக்கு, மனமார்ந்த வணக்கம்.

என் பெயர் செந்தில் ஜெகன்நாதன், மயிலாடுதுறை எனது ஊர், தற்போது சென்னையில் அறை எடுத்து நண்பர்களுடன் வசித்து வருகிறேன், ‘நான் சினிமாவில் உதவி இயக்குனர். தொடர்ந்து உங்களின் படைப்புகளை வாசித்து வருகிறேன். ஒவ்வொரு முறையும் அவற்றை வாசித்து முடித்ததும் உங்களுக்கு கடிதம் எழுதலாம் என நினைத்து ஏதோ ஒன்று தடுக்க, வேண்டாமென இருந்துவிடுவேன். இது எனது முதல் கடிதம். பிழைகள் இருப்பின் பொருத்தருள்க.

கடந்த ஐந்து மாத காலமாக நான் இயங்கும் பணி சார்ந்து வரும் மன அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள், குடும்பத்தினரின் அடுத்தடுத்த உடல்நிலை கோளாறுகள் காரணமாக தொடர்ச்சியாக மருத்துவமனை வளாகங்கள் தந்த அச்சங்கள், இதனால் ஒரு வீழ்படிவைப்போல மனதில் தங்கிவிட்ட கழிவிரக்கம், என நீண்ட சோர்வுடனே நிறைந்திருந்தேன். அதன் விளைவாக எதிலுமே ஒரு மனக்குவிப்பு இல்லாமல் சுயவெறுப்பும்,பெரும் சலிப்புமாக கடுமையான மனத்தத்தளிப்பில் இருந்தேன். அப்போதுதான் குக்கூ நண்பர்களின் வெளியீடாக வந்திருக்கும் உங்களின் கட்டுரைகள், கடிதங்கள் அடங்கிய ‘தன்மீட்சி’ புத்தகத்தை வாசிக்கத் துவங்கினேன்..

இந்த கடிதங்களில் சிலவற்றை வெவ்வேறு சந்தர்பங்களில் ஏற்கனவே வாசித்திருந்தாலும்கூட ஒட்டுமொத்தமாக இவற்றை ஒரு புத்தகமாக வாசிக்கும்போது இவை அளிக்கும் ஆசுவாசமும், நம்பிக்கையும் அபரிமிதமானதாக இருந்தது.

எனக்கு மட்டுமே உரியதாகவும், நான் மட்டும் எதிர்கொள்வதாகவும் நம்பிக்கொண்டிருந்த பல அகச்சிக்கல்கள் குறித்தும், உளச்சோர்வு குறித்தும் இருந்த எண்ணங்களையெல்லாம் அடியோடு மாற்றி, அது ஒட்டுமொத்த மானுட சமூகத்துக்கும் பொதுவானதே, மனிதர்களுக்கு மனிதர்கள் வெவ்வேறு வடிவங்களில் நிகழக்கூடியதே அதை வென்றெடுக்க அல்லது அதைக்கடந்து மேலெழும்பி வர நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்த உங்களின் சொற்கள் பெரும் நம்பிக்கையை அளித்தன.

நான் என்னுடைய தன்னறத்தை எனது இருபத்தைந்தாவது வயதில் கண்டடைந்தேன், என் பயணம் சினிமாவாக இருக்கப்போகிறது என்றவுடன் அதன் அறிவு தளத்தில் என்னை மேம்படுத்திக்கொள்ள தேடலைத் தீவிரமாக்கினேன். எல்லா மொழி திரைப்படங்களையும் பார்த்தல், அது குறித்து ஒரே அலைவரிசைகொண்ட நண்பர்களோடு உரையாடுதல்,தொடர்ந்து வாசித்தல், பயணப்படுதல், புறச்சூழலை கூர்ந்து கவனித்தல், எழுதுதல் என எல்லா வகையிலும் என்னை கூர்மைசெய்துகொண்டே வருகிறேன். இருந்தபோதும் அவ்வப்போது எழும் அயர்ச்சியும், சோர்வும் என் சமநிலையை நடுங்க வைத்துவிடுகிறது. அதுபோன்ற தருணங்களில் உங்கள் கட்டுரைகளிலும் உரைகளிலுமே ஒரு ஆசுவாசம் உண்டாகும்.

நான் எந்தெந்த இடத்தில் பின்தங்கி அல்லது தொய்வடைந்து இருக்கிறேன் என்பதை ‘தன்னறமும் தனி வாழ்வும்’ கடிதத்தில் தெளிவுபடுத்திக்கொண்டேன். என் நெகிழ்வான குணத்தையும் தொழிலையும் சேர்த்து குழப்பி இத்தனைநாள் எனக்குள்ளேயே பல சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறேன். இனி அவ்வாறு இருக்கப்போவதில்லை, அதில் எனது அறம் என்ன என்பதை நான் அறிந்துகொண்டேன்.

மற்றொரு முக்கியமான கடிதமான ‘செயலின்மையின் இனிய மது’ கடிதம் எனக்கு பெரும் திறப்பாக இருந்தது. என்னைப்பற்றிய அதீத நம்பிக்கையே என்னால் இதுநாள் வரைக்கும் எதையும் செயல்புரியாமலே வைத்திருந்திருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். அறிவுத்திறனும், நுண்ணுணர்வும் வெறும் சாத்தியங்களே, சாத்தியங்கள் வெறும் அலட்சியத்தை மட்டுமே இதுநாள் வரையில் எனக்களித்திருக்கின்றன, என் மண்டையை எதிலும் மோதாமல் பத்திரமாக வைத்திருந்திருக்கிறேன்.  சாதனைகள் செயல்படுதலின் மூலமாகவே உருவாகின்றன. இனி மிகத்தீவிரமாக செயல்புரியவேண்டும், இந்த மண்டை மோதுவதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது என்பதை பரிபூரணமாக உணர்ந்தேன். “செயல் பரபரப்பில் இருக்கும் மனிதனுக்கு மனக்குழப்பம் தோன்றுவதில்லை” என்ற பா.சிங்காரத்தின் வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது. செயல்புரியாமல் இருக்கும்போது செயல்படாமை குறித்து வருத்தப்படுவதை விடவும் எது நம்மை செயல்படுவதிலிருந்து தடுக்கிறது அல்லது தயக்கம்கொள்ள செய்கிறது என்பதை கண்டறிய வேண்டும் என்ற பொறுப்பை இந்தக்கட்டுரை உணர்த்துகிறது.

‘விதி சமைப்பவர்கள்’ கட்டுரையில் மனித குலத்திற்கான பங்களிப்பின் அடிப்படையிலேயே மனிதர்களின் முக்கியத்துவம் அமைகிறது என்ற உங்களின் வரி எனக்குள் எதையோ உண்டாக்கி பொங்கி அழச்செய்தது. மனித குலத்தில் எனக்கான இடம் என்ன? என்பதை எனக்குள்ளே கேள்வியாக கேட்க வைத்தது.

‘நான்கு வேதங்கள்’ கடிதத்தில் ஆத்மானந்தா குறித்து வாசித்ததும் அறிவுத்தளத்தில், படைப்பாளிகள் சமநிலையோடு இருக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது. இதுநாள் வரையில் நேர்ந்த புறச்சிக்கல்களுக்கெல்லாம் இந்த சமநிலை புரிந்து கொள்ளாமல் இருந்ததே காரணம் என்பதை வாசித்துத் தெளிந்தேன்..

ஒரு பெரும் ஞான தரிசனத்தை, வெளிச்சத்தை இந்நூல் எனக்கு வழங்கியிருக்கிறது. உங்களின் எழுத்துக்கள் என்னை எனக்கே மீட்டுக் கொடுத்திருக்கிறது. “தன்மீட்சி” உங்களாலேயே எனக்குள் நிகழ்ந்தேறியிருக்கிறது.

இந்த சிறப்பான கட்டுரைகளை, கடிதங்களை, தொகுத்து நூலாக வெளியிட்ட குக்கூ நண்பர்களுக்கும், மனம் சோர்வுற்ற (சரியான?) நேரத்தில் இந்த நூலை அனுப்பிய குமார்சண்முகம் அவர்களுக்கும், எப்போதும் என்னை அன்போடு வழிநடத்திக்கொண்டிருக்கும் என் அண்ணன் குக்கூ சிவராஜ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அறம் சிறுகதைகள் தொகுப்பை வாசித்துவிட்டு பல இரவுகளை தூங்காமல் கழித்திருக்கிறேன். தூக்கம் அற்ற அந்த இரவுகளில் எல்லாம் கண்ணீரோடு உங்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லியிருக்கிறேன். அதே மன நிலையோடு இப்போது உங்களுக்கு விழிநீர் பெருக என் நன்றியை சொல்லிக்கொள்கிறேன்.

என்னைப்போன்ற பலருக்கும் ஆதர்சமாகவும், பெரும் நம்பிக்கையின் வடிவாகவும் இருக்கும் உங்களை ஒரு எழுத்தாளராக உருவாக்கிய உங்கள் அன்னையை நன்றியோடு மனமார வணங்குகிறேன்.

 

 

இப்படிக்கு

செந்தில் ஜெகன்நாதன்

 

அன்புள்ள செந்தில்

 

தன்மீட்சி பெரும்பாலும் ஒவ்வொருவரும் சற்றே தெளிவில்லாமல் அறிந்திருப்பதையே சொல்கிறது. ஆகவேதான் சொல்லப்படும்போதே அது சரி என ஏற்கப்படுகிறது. அதில் மேலதிகமாக இருப்பது சொல்பவனின் அனுபவத்தளமும் எழுத்தாளனுக்குரிய மொழியும்தான். எழுத்தாளனாக என் இடம் அவ்வளவே

 

என் சொற்கள் உங்களுக்கு உதவியது நிறைவளிக்கிறது. சொல் அனைவருக்கும் துணைவரட்டும்

 

ஜெ

 

தன்மீட்சி 

தன்மீட்சி -கடிதங்கள்

தன்மீட்சி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33
அடுத்த கட்டுரைஊட்டி சந்திப்பு – நவீன்