வசைகள் -கடிதங்கள்

இந்தநாளில்…

 

அன்புள்ள ஜெ

 

கண்டன உரைக்குப் பிறகு தங்களுக்கு நேர்ந்தது போலவே இப்பொழுது திரு முத்தரசன் அவர்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. பெரிய அரசியல் கட்சிகளின் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அவர்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒரளவு கண்ணியத்தை கடை பிடிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

 

திரு கருணாநிதி உயிரோடு இருந்த போதே ” நீ செத்துத் தொலை” கட்டுமரம்” என நாகரீகமற்ற வசவுகளை ஊடகங்களில் கண்டிருக்கிறேன்.  ஸ்டாலின் மற்றும் கனிமொழி குறித்தும் நாகரீகமற்ற சொற்களில் விமர்சனம் செய்யப்படுகிறது. இதைப் போலவே ஈபீஎஸ் ஓபிஎஸ்ஸு பற்றியும் மிக மிக தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அரசியலில் எவ்வளவு மாறுபாடு இருந்தாலும் ஒரு பெண்ணாகத் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தன் மீதான நாகரீகமற்ற விமர்சனங்களை மிக கண்ணியமான முறையில் எதிர் கொள்கிறார்.

 

 

காங்கிரஸ் தலைவர்கள் மீதும் வசை பாடப்படுகிறது. ஆனால் இந்தத் தலைவர்களோ அவர்களது தொண்டர்களோ மேடைகளில்தான் அந்த விமர்சனங்களுக்கான பதிலை முன் வைக்கிறார்களேத் தவிர (சில சமயங்களில் சற்றுத் தரக் குறைவாகக் கூட) தனிப் பட்ட முறையில் அலைபேசியில் அழைத்து யாரும் மிரட்டுவதில்லை. ஆனால் இப்பொழுது புதிய மாற்றங்களை தரப்போவதாக கூறிக் கொள்ளும் கட்சிகளின் தொண்டர்கள் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லாதவர்களாய் இருப்பது வருத்தமடைய செய்கிறது.

 

 

இந்த கட்சிக்கு மூன்று சதவீதம் வாக்குகள் தான் கிடைக்கும் என்று ஒரு அரசியல் கணிப்பாளர் ஒரு தொலைகாட்சி பேட்டியில் தெரிவித்திருந்தார். அவ்வளவுதான் ஏய் சொட்டைத் தலையா அவங்கிட்ட நீ காசு வாங்கிட்டியா நீ பெரிய இவனா இன்னும் பல கெட்ட சொற்களுடன்  அவர் மீது அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த மன நிலையை அவர்களது தலைவர்களும் ஏன் கண்டிப்பதில்லை என்று புரியவில்லை. இத்தகு மன நிலையில் உள்ளத் தொண்டர்களை வைத்துக் கொண்டு என்ன விதமான மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும்?.புரியவில்லை…..

 

கொ.வை. அரங்கநாதன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

 

இன்று நீங்கள் எழுதிய ‘இந்தநாளில்’ கட்டுரையை படித்தேன். நகைச்சுவையாய் நீங்கள் உணரும் உணர்ச்சிகளை, எங்களுக்கும் கடத்துகிறீர்கள். உங்கள் வாழ்வில் மிகு தூரம்  சென்றுவிட்டிர்கள்,ஆனாலும் வெளிச்சத்தை நோக்கி நடப்பவர்களுக்கு ஒரு கை கொகுடுத்து, நீங்கள் பார்க்கும் பார்வையை கொண்டு வலி காட்டுகிறீர்கள்.

 

மதியம் வேளைக்கு நடுவில் வேகமாக ‘இந்தநாளில்’ கட்டுரை வாசிக்க ஆரம்பித்தேன். முதல்ல சிரிப்பு, பின்பு விட்டு நீங்க முடியாத ஒரு மௌனம். ஒரு வித மூச்சு திணறல் போல் இருந்தது. நல்லதும் தீங்கும் நாம் எடுத்துக்கொள்வதில் தான்  உள்ளது என வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நம் மனித தன்மையின் மீது கேள்வி எழும்போது, அதற்கு பதிலாய் உங்கள் வாழ்க்கை அனுபவங்கள்  இருக்கின்றனர் என தோன்றியது.

 

வீட்டிற்கு வந்து மீண்டும் அதே கட்டுரையை மீண்டும் படித்தேன். கூடவே  ‘தலைமறைவு’,’சார் பெரிய ரைட்டர்’ என்ற கட்டுரைகளையும். முகம் முழுக்க சிரித்தேன். உங்களை பார்க்க வேண்டும் என தோன்றியது.  உங்களை வசை பாடுபவர்கள்  10 பேர் என்றால், 1000 பேர் உங்களால், உங்கள் எழுத்துக்களால் பயன்பட்டுள்ளார்கள். இந்த வாரம் உங்களுக்கு எதிர் எண்ணங்கள் உள்ளவர்கள், உங்களை காயப்படுத்த நினைத்தவர்களிடம் இருந்து அழைப்பும், கடிதமும் அதிகம் வந்திருக்கும். என் மின்னஞ்சல் அதை எதையும் சமன் செய்யாதுதான், இருந்தாலும் அப்பாக்கு தலை வலிக்கும் போது, பிஞ்சு கைகளால் அழுத்தி கொடுக்கும் குழந்தையின் பாசம் போல், இதை எண்ணிக்கொள்ளவும்.

 

நிகிதா

 

 

முந்தைய கட்டுரைஅன்றைய முகம்
அடுத்த கட்டுரைஇரவைத் தொடுதல் -சந்தோஷ்