பொன்பரப்பி – கடிதங்கள்

பொன்பரப்பி கண்டனக்கூட்டம் -உரை

சென்னை கண்டனக்கூட்டத்தில்…

பொன்பரப்பி தலித்துகள் மீதான தாக்குதல்-கண்டனக் கூட்டம்

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

அறவாழி லஷ்மி மணிவண்ணன் அவர்களையும் தங்களையும் வாழ்த்துகிறேன்.  இன்றும் கூட தாம் உயர்வென்று கருதி மற்றவர் அடி பணிய வேண்டும் என்று கருதும் சாதிவெறி என்னும் அறிவிலிகளைப் பீடிக்கும் மனநோய் மிகுந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.  சாதிவெறி நோய் தம்மைத் தாமே அழித்துக் கொள்வது என்று அவர்கள் அறிவதில்லை.  கும்பல் உணர்வு தரும் போலி வீரமும் பெறும் சில்லறைகளும் அவர்கள் கண்களை மறைக்கிறது.  அறிவுடையோர் அறத்தின் குரல் செவிமடுக்கவும் அறம் உணரும் அறிவை அனைவரும் பெறவும் விழைவை பேரறத்தின் முன் வைக்கிறேன்.

 

வெயில் போல் காயும் அறம் என்பிலதனை அஞ்சுவதில்லை.  தங்கள் அற விழைவில் நானும் இருக்கிறேன்.

 

 

அன்புடன்,

விக்ரம்,

கோவை.

 

அன்பு ஜெயமோகன்,

 

உங்களின் பொன்பரப்பி உரை மிகச் சுருக்கமானதாக இருந்தது. அதற்கான காரணத்தை நீங்களே குறிப்பிட்டிருந்தீர்கள். அக்கண்டணக்கூட்டத்தில் உங்களின் பங்கேற்பு இருந்தமைக்காக பெரிதும் மகிழ்கிறேன். வி.சி.கவுக்கு ஆதரவாக அல்லது பா.ம.கவுக்கு எதிராக எனும்படியான நிலைப்பாட்டில் அக்கண்டணக்கூட்டம் நடைபெறவில்லை என்பதை இணையத்தமிழ்ச்சமூகம் புரிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும்.

 

பொன்பரப்பி கண்டணக்கூட்டத்தில் என்னை அதிகம் ஈர்த்தது தொல். திருமா அவர்களின் செறிவான உரைதான். நூல் வெளியீட்டு நிகழ்வுகள், அரசியல் கருத்தரங்குகள் போன்றவற்றில் அவரின் பல உரைகளை முன்னரே செவிமடுத்திருக்கிறேன். எனினும், பொன்பரப்பி கண்டண உரையில்(கலைஞர்கள் ஒருங்கிணைத்தது) நான் கண்ட அதிகப்படியான நிதானம் என்னை ஆச்சர்யப்படுத்த வைத்தது.

 

இப்படியான் நெருக்கடிச்சூழலில் உணர்ச்சிவய அரசியலையே பெரும்பாலான தலைவர்கள் கையில் எடுப்பர். திருமா அவர்களோ மிக நிதானமாக, ஆற்றொழுக்காக தனது அரசியல் தரப்பைத் தெளிவுபடுத்திப் பேசிக்கொண்டு இருக்கிறார். உடனடி காரணிகள், அடிப்படைக் காரணிகள் என்பதான அவரின் விளக்கங்கள் தமிழகத்தலைவர்களிடம் காண முடியாதவை. ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகத் தங்களைச் சொல்லிக் கொள்ளும் பலர் முன்வைக்கும் காழ்ப்பரசியலை திருமா அவர்கள் ஆதரித்ததே இல்லை. அதேநேரம், அரசியல் சூழலுக்குத் தகுந்தவாறு தான் எடுக்கும் தற்காலிக நிலைப்பாடுகளையும் தெளிவாகவே முன்வைக்கிறார். தமிழ்ச்சமூகத்தில் இப்படியான ஆளுமைகளை அபூர்வமாகத்தான் நாம் காண முடியும்.

 

ஒரு குறிப்பிட்ட சாதிக்கு வக்காலத்து வாங்கும் சாதிக்கட்சித்தலைவராக மட்டுமே திருமா அவர்களைப் பார்க்கும் அவலச்சூழல் இங்கு இருக்கிறது. அவர் சாதிக்காக நிற்கவில்லை; சாதி, மதம் போன்ற காரணிகளால் ஒடுக்கப்படும் எளிய மக்களின் பிரதிநிதியாகவே நிற்கிறார். சித்தாந்த அரசியலைத் தேர்தல் அரசியலுக்குப் பலி கொடுத்து விடாத ஆளுமையாகவும் அவரைப் பார்க்கலாம்.

 

ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் தொல்.திருமா இருக்கிறார். அதையே வலிந்து வாழ்த்துவது போன்றே சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைமை.

 

எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்வகையிலும் யாரும் ஒடுக்கப்பட்டு விடக்கூடாது என்பதை உரக்கச் சமூகத்துக்கு அறிவிப்பதே பொன்பரப்பி கண்டணக் கூட்டத்தின் அடிப்படை. அவ்வகையில், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வணங்குகிறேன்.

உயிர்நலத்தை விரும்பும்,

சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.

 

முந்தைய கட்டுரைவாசிப்புச் சவால் -கடிதங்கள்
அடுத்த கட்டுரை101 மலையாளத் திரைப்படங்கள்