அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
லண்டனிலிருந்து வெளிவரும் எகானாமிஸ்ட் வார இதழ் பெரும்பாலும் வணிகத்துக்கும், அரசியலுக்கும் ஆனது. ஆனால் சில பக்கங்கள் இலக்கியத்திற்கும், கலைகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அண்மையில், The Tallest Story, Can the novel handle a subject as cataclysmic as climate change? என்ற கட்டுரை படித்தேன். நான் உங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருவதால் உங்கள் வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள் என்று தோன்றியது. என்னுடைய மூலத்தை சற்று மாற்றிய சுமாரான தமிழ் வடிவம்:
வைகுண்டம்
https://en.wikipedia.org/wiki/Climate_fiction
வானிலைப்புனைவு – [cli-fi The Tallest Story]
இலக்கிய நாவலுக்கு பிரம்மாண்டத்துடன் ஓர் ஒவ்வாமை உள்ளது. நாவல் அன்றாடத்தையே கொண்டாடுகிறது. பேரதிர்வுகளையும், பேரழிவுகளையும் பேசுவதில்லை. ஹோமருடைய Odyssey ஐயும் ஜேம்ஸ் ஜாய்ஸுடைய Ulysses ஐயும் ஒப்பிட்டால், காவியத்தில் கடவுளர்களையும், படுகொலைகளையும், நாடுகளின் தலைவிதியையும் காணலாம். நாவலில், அந்நியோன்னியத்தையும், அன்றாடத்தையும் மட்டுமே.
நாவல் இலக்கியம் காலத்தையும் புரிந்து கொள்ளவில்லை. நிகழ்காலத்தை அவதானிக்க கடந்த காலத்தின் கூறுகளை கையாள்கிறது. வருங்காலத்தை நோக்குவதில்லை. தொழில் மயமாகிக் கொண்டிருந்த, சமூக ஏற்றத் தாழ்வுகள் உருமாறிக் கொண்டிருந்த விக்டோரியன் காலகட்டத்தின் பெரும் படைப்புகள் அன்று சரித்திரமாகி விட்ட கால கட்டத்தை கதை களமாக கொண்டுள்ளன. (Middlemarch, A Tale of Two Cities) தற்கால நாவலாசிரியர்களும் உலகப் போர்களிலோ, அதற்கும் பிந்தைய காலத்திலோ தங்கள் கதை பொருட்களை தேடுகிறார்கள்.
பருவநிலை மாறும் தறுவாயில், இந்த வரப் போகும் – வந்து விட்ட, நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டிய காலத்தில், இந்த போக்கு ஒரு குறையே. நாவலாசிரியர் அமிதாவா கோஷ் The Great Derangement என்ற கட்டுரைத் தொகுப்பில் (2016 ) இதை கவனத்திற்கு கொண்டு வருகிறார். சுற்றுச்சூழல் பேரழிவை எழுத வந்து, பண்பாட்டில் நாவலின் இடம் என்ன என்று ஆராய்கிறார். அறிய முடியாதவற்றை, அநிச்சயமானவற்றை, சுருங்கச் சொன்னால் எதிர்காலத்தை கண்டு உள்ளூர அஞ்சும் கலை வடிவம் நாவல். பருவநிலை மாற்றத்தின் பேரளவையும், நிச்சயமின்மையையும், அருவ வடிவையும் நாவல் என்ற கருவியால் எதிர்கொள்ள முடியுமா என்று சந்தேகிக்கிறார். மனித இனம் எதிர் கொள்ளும் இந்த பெரும் பேரிடரை நாவல் வடிவத்தால் எடுத்தாள முடியாவிட்டால், நாவலால் தன்னுடைய அத்தியாவசியத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா?
காலம் ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணத்தில் காரணியாகிறது. ஜேம்ஸ் ஜாய்ஸும், வர்ஜீனியா வூல்ப்வூம் அன்றாடத்தை கூறிட்டு அலசத் தொடங்கிய நவீனத்துவ காலத்திலிருந்து நாவலில் காலத்தின் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது – அதாவது கதாபாத்திரத்தின் வாழ்நாள். நாவலில் காலம் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளது. பருவநிலையின் போக்கை சொல்லுவதற்கு ஒரு தாவல் தேவை. அந்த தாவலுக்கு இன்னும் நெகிழ்வான கூறுகள் தேவை.
எல்லாப் புனைவுகளும் இவ்வாறு ஊனமுற்றிருப்பதாக சொல்ல முடியாது. அறிவியல் புனைவுகள் பருவநிலை மாற்றத்தை நேரடியாக எதிர் கொள்கின்றன. இலக்கியத்திற்கும் அறிவியல் புனைவுகளுக்குமிடையே பாகுபாடு உண்டா என்பது தெளிவற்றது, விவாதத்திற்குரியது).
1962 இல் ஜே ஜி பல்லார்ட் எழுதிய The Drowned World பருவநிலை மாற்றத்தின் அச்சங்களை கையாண்ட முதல் அறிவியல் புனைவு.
ஆசிரியரின் புகழ் கூடக்கூட ஆக்கம் மறு ஆய்வு செய்யப்பட்டு பாகுபாடு மாறி இலக்கியம் ஆனது. ஆனால், அடிப்படையில் நாவல் மற்ற புனைவுகளிலிருந்து வேறுபடுத்தியே தன்னுடைய இடத்தை வரையறை செய்துள்ளது. வருங்காலமும் , அதன் பயங்களும், மாற்றுப் புனைவுகளுடன் இணைத்து நோக்கப்பட்டதால், அத்தகைய புனைவுகள் மேல் உள்ள ஒவ்வாமை வருங்காலத்தை கருப்பொருளாக்குவதன் மேலும் உருவாகியது. அண்மைக்காலம் வரை இவ்வாறு இருந்தது எனலாம்.
இலக்கியத்திற்கும், பிற புனைவுகளுக்கும் இடையேயான பாகுபாடு மேலும் மேலும் நீர்த்துப் போக, இலக்கியத்தளமும் பருவநிலைமாற்றத்தின் கற்பனை சாத்தியங்களை கவனிக்கத் தொடங்கியுள்ளது. கோர்மக் மெக்கார்த்தியின் The Road (2006) நாவலைஆரம்பமாகச் சொல்லலாம். நாவல் ஒரு பிரளய நிகழ்வுக்குப்பின் ஒரு தந்தையும், மகனும் சாம்பல் படிந்த பெரும் பரப்பை கடப்பதைசொல்லுகிறது. அணு ஆயுதங்களையும், உலகப்போர் அழிவுகளையும் எண்ணி அஞ்சிய தலைமுறைக்கும், உருகும் பனிப்பிரதேசத்தையும், பரவும் காட்டுத்தீக்களையும் எண்ணி அஞ்சும் அடுத்த தலைமுறைக்கும், நாவல் களம் பாலமாக அமைகிறது.
50 வயதிற்கு மேல் தந்தையான மெக்கார்த்தி, தன் காலத்திற்கு பிறகு தன் மகன் கருகிக் கருத்த குன்றுகளைத்தான் காணப்போகிறான் என்று அஞ்சுகிறார். தன் சந்ததிகளைத் தனியாகத் தவிக்க விட்டுப் போகிறோமோ என்ற பெற்றோருக்கே உரிய அச்சத்தை உருவகமாக நாவல் சொல்வதாகவும், மனித குலம் புவியை அழித்து விட்டதோ என்ற பெரும் அச்சத்தை புனைவாக்கியிருப்பதாகவும் சொல்லலாம். எல்லா நாவல்களும் ஒரு விதத்தில் வருங்காலத்தை பற்றியவையே. ஏனெனில், இன்றைய இலக்கியம் நாளைதான் படிக்கப்பட போகிறது என்ற உண்மையை படைப்பு சுட்டுகிறது.
இந்த நாவலின் வழியில் பிறகு பல எழுத்தாளர்களும் பருவ நிலையை மையப்படுத்தி எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த வடிவம் cli-fi என்றும் பெயர் பெற்றுள்ளது. The End We Start From என்ற நாவல் நீரில் மூழ்கிய பிரிட்டனில் தன் மகனுடன் குழந்தையின்தந்தையையும், பாதுகாப்பையும் தேடும் ஒரு தாயின் கதையை சொல்கிறது. பல கலாச்சாரங்களில் உயிர்களின் படைப்பு பெரும் பிரளயத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்லப்படும் படிமத்தையும், பருவநிலை மாற்றத்தில் எழும் அழிவு வெள்ளத்தையும், புராணங்களிலிருந்து மேற்கோள் காட்டி, ஒரு சுழற்சியில் இணைக்கிறது நாவல்.
‘Future Home of the Living God’ தன் பிறக்கப் போகும் குழந்தைக்கு அது வாழப்போகும் உலகத்தைப் பற்றி ஒரு தாய் எழுதுவதாக அமைகிறது. தாய் தன் இளமையின் பனிப்பொழிவை நினைவு கூர்கிறாள்: “அடுத்த பனிக்காலம் மழை பெய்தது. குளிர் இதமாக, புத்துணர்ச்சியுடன் இருந்தது. ஆனால், மழை மட்டுமே. அந்த வருடத்துடன் குளிர் காலத்தை இழந்தோம்.”பருவநிலை மாற்றத்தோடு பிற அச்சங்களையும் இணைத்த புனைவுகளும் உள்ளன, “The Wall” பிரிட்டனைச் சுற்றி அலைகளைத்தடுக்கவும், வேண்டாத வந்தேறிகளைத் தடுக்கவும், கடற்கரையை மறைத்து கட்டப்பட்ட உயரமான சுவரை சொல்லுகிறது.
இலக்கிய நாவலாசிரியர்கள் பருவநிலை மாற்றம், ஒரு பெரும் பேரிடர் மட்டுமல்ல, பல கதைக்கருக்களின் களஞ்சியம் என்று புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால், விரைவிலேயே இது அறிவியல் புனைவு தளத்திலிருந்து யதார்த்த நிலை தளத்துக்கே வந்து விடலாம்.
*********************************************************************************
ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள சுட்டியை அணுகலாம். சந்தா உள்ள பத்திரிகை ஆனாலும், சில கட்டுரைகள் எவரும் படிக்கலாம்.
நன்றி
வைகுண்டம்
***