நிமித்தநூலில் திரளும் அறுதிப் பொருளின்மையை நிமித்திகர் சென்றடைவதற்கு அறுபது ஆண்டு முதிர்வு தேவைப்படும் என்பர். ஆனால் குருக்ஷேத்ரப் போர்க்களத்திற்கு வந்த இளைய நிமித்திகர் பதினாறு நாட்களுக்குள் அறுபது ஆண்டு முதுமையை அடைந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அந்தியில் போர்நிறுத்த அறிவிப்பை எழுப்பிய பின்னர் அங்கிருந்து தனித்து தலைகுனிந்து தங்கள் இல்லங்களுக்கு மீண்டனர். அப்போது தங்கள் கைகள் மூதாதையர் இறுதி மூச்சுவிடுகையில் விட்ட அதே முத்திரையைக் காட்டி அசைந்துகொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டனர். தங்கள் கைகளை தாங்களே நோக்க அஞ்சினர்.
இரவில் துயில்வதற்காக படுக்கையில் எவரும் பிறருடன் சேர்ந்து படுக்கவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கான சிற்றிடத்தில் முற்றிலும் தனித்தவர்களானார்கள். மூடிய அறைகளுக்குள் எந்த நிமித்திகனும் துயில்கொள்ளவில்லை. விண்மீன்கள் விரிந்த வானைப் பார்த்தபடி மல்லாந்து படுத்திருப்பதை அவர்கள் விரும்பினர். அப்போது ஏனென்றறியாமல் தங்கள் விழிகள் நிறைந்து காதுகளை நோக்கி சொட்டிக்கொண்டிருப்பதை, அறியா விம்மலொன்று எழுந்து தங்கள் துயில் கலைப்பதை, துயிலுக்குள் பல்லாயிரம் மூதாதையர் முகங்கள் பொருள் விளங்காத உணர்வுகளின் சொல்லின்மையுடன் வந்து மறைவதை கண்டனர். மண்நீத்தபின் மூத்தோர் தங்கள் கனவிலெழுவதை அவர்கள் எப்போதும் உணர்வதுண்டு. எந்த விண்வாழ் நிமித்திகனும் எப்போதும் எச்சொல்லையும் பேசியதாக எவரும் கூறியதில்லை.
மண்நீத்தோர் ஏன் பேசுவதே இல்லை என்று இளையோர் முதியோரிடம் கேட்பார்கள். நிமித்திகன் வாழ்நாளெலாம் இங்கு பேசிக்கொண்டே இருப்பவன். பேசிப் பேசி பேச்சை மடித்து புதியனவற்றை கண்டறிபவன். பீதர் நாட்டு கலையொன்று உண்டு. பட்டுத்துணியை பல்லாயிரம்முறை பலநூறு வகைகளில் மடித்து மடித்து உருவங்களை உருவாக்கிக்காட்டுவது அது. நிமித்திகன் மொழியை அவ்வண்ணம் மடிப்பவன். அதில் சலிப்புற்றே அவன் இங்கிருந்து செல்கிறான். விண்ணில் எழுந்ததுமே அதன் பொருளின்மையைத்தான் உணர்கிறான். முக்காலத்தையும் உணர்ந்தவன் என்னும் ஆணவம் தன்னை இப்புவியில் எவ்வண்ணம் அலைக்கழித்ததென்று அவன் உணர்ந்தபின்னர் எவ்வண்ணம் சொல்லெடுப்பான்? “சொல்லிச் சொல்லி நிமித்திகன் சென்றடைவது சொல்லின்மையை. காலம் கணித்து கணித்து அவன் அமர்ந்திருக்கும் இடம் அகால பீடம்” என்றார் முதுநிமித்திகர்.
ஒவ்வொருவரும் அவர்கள் இளமையிலிருந்தே குருக்ஷேத்ரப் போரை எதிர்பார்த்திருந்தார்கள். அவ்வண்ணம் ஒரு போர் நிகழுமென்று அவர்களின் நூல்கள் சொல்லத்தொடங்கி ஏழு தலைமுறைகள் கடந்துவிட்டன. ஏழு தலைமுறைக்கு முன்னர் அஸ்தினபுரியின் அரசர் ருக்ஷனின் அவையில் அமர்ந்திருந்த முதிய நிமித்திகராகிய பார்க்கவ பிரபாகரர் இரவில் தன் சுவடிகளை அடுக்கி ஆராய்ந்துகொண்டிருக்கையில் விந்தையானதோர் தன்னுணர்வுக்கு ஆளானார். அந்தக் குலம் பெரும்போர் ஒன்றால் தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் என்று. வீரத்தில், பண்புகளில் உச்சம்கொண்ட அக்குருதிவரிசை அந்த நற்பண்புகள் குறித்த பெருமிதத்தையே தன்னை அழிக்கும் நஞ்சென உண்டு உள்ளுடலில் வளர்த்துக்கொண்டிருக்கிறது என. குருக்ஷேத்ரப் பெரும்போரை அவர் அக்கணம் கண்முன் எனக் கண்டார். அந்தக் காட்சியை உள்வாங்க இயலாமல் உள்ளம் மலைத்து மயங்கி விழுந்தார்.
இளமையில் ஓர் அறியா அழைப்பை பிரபாகரர் அடைந்தார். பிறரிடமிருந்து அவரை பிரித்தது அது. ஒவ்வொரு நிமித்திகரும் அன்று அரசர்களுக்குரிய கனவுகளுக்கு விளக்கம் சொல்வது, நல்நிகழ்வுகளுக்கும் போருக்கும் நாள் குறித்தளிப்பது என நாள்கழித்துக்கொண்டிருந்தனர். அவையில் பரிசுபெறும் நிமித்திகன் என்றாகி நிமித்திகர் தெருவில் மாளிகையில் பல்லக்கிலூரும் பெருமையும் பெற்று தலைப்பாகை சூடி அவைகளில் அமர்ந்து முதிர்ந்து மைந்தருக்கு குலக்கோலை அளித்துவிட்டு மறைவதே ஒவ்வொரு நிமித்திக இளைஞனுக்கும் கனவாக இருந்தது. ஆனால் எப்போதும் தன்னை பிறிதொருவர் நோக்கிக்கொண்டிருக்கும் உணர்வை அடைந்தார் பிரபாகரர். தந்தையிடம் பலமுறை அதை அவர் சொன்னார். தந்தை அதைக் கேட்டு திடுக்கிட்டார். ஏனெனில் நிமித்திகர்களில் பலருக்கு அவ்வண்ணம் விந்தையான உளமுடிச்சுகள் விழுவதுண்டு. அவற்றை அவிழ்த்து விடுபட்டவர்கள் சிலரே.
தாங்கள் இருவரென்று உணர்பவர்கள் உண்டு. தங்களுக்குள் ஓயாது முரண்பட்டு சமராடுவார்கள். தங்களில் ஒருவர் செய்யும் எச்செயலையும் பிறிதொருவர் அதே விசையுடன் மறுப்பதை அவர்கள் உணர்வார்கள். எவ்வண்ணம் எவராக அவர்கள் வெளிப்படுவார்கள் என்பதை அவர்களே அறிந்திருக்கமாட்டார்கள். பேருவகையுடன் எழுந்து உலகை வெல்லும் ஊக்கத்துடன் கொப்பளிப்பு கொண்டு விண் தொட எக்களித்து நின்று மலை உச்சியிலிருந்து தாழ்வரை நோக்கி உருளும் பாறையென பின்னர் சரிந்து சரிந்து இறங்கி கழிவிரக்கத்தின், தனிமையின் ஆழங்களுக்குச் சென்று அமைந்து அங்கு குளிர்ந்திறுகி நாட்கணக்கில் கிடந்து மீண்டும் எரி பற்றிக்கொண்டதென வெடித்துக் கிளம்பி வானில் பொலிவார்கள். அந்த அலைக்கழிப்பில் குறுவாளை எடுத்து கழுத்தை வெட்டிக்கொண்டவர்கள் உண்டு. நெய்யை குடத்துடன் தலைமேல் கவிழ்த்து ஆடையை பற்றிக்கொள்ளச்செய்து தழல் கொழுந்தாட சுழன்று கரிந்து விழுந்தவர்கள் உண்டு.
காதுகளுக்குள் அறியாக் குரல்கள் ஒலிக்கத் தொடங்குவதை இளநிமித்திகர்கள் பலர் நிமித்தநூல் கற்கத் தொடங்குகையிலேயே சொல்வார்கள். ஒரு நிமித்தநூலை விரித்து அங்கிருக்கும் சொல்லொன்றை படித்துக்கொண்டிருக்கையிலேயே “ஆம்!” எனும் ஆழ்ந்த குரலொன்று காதுகளுக்குள் ஒலிக்கும். சில தருணங்களில் அது இருள்தேவதையின் குரலென முழக்கமும் சீற்றமும் கொண்டிருக்கும். பிறிது தருணங்களில் வானிலிருந்து எழும் மெல்லிய இறகுபோல் இனிமையும் தண்மையும் கொண்டிருக்கும். “ஆம்” என்பதே எப்போதும் எழும் குரல். “ஆம்! ஆம்!” என அது ஒலிக்கையில் கேட்பவன் தன்னைக் குறித்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க இயலாது. விண்ணிலிருந்தோ ஆழங்களிலிருந்தோ எவரோ தன்னை ஆதரிக்கிறார்கள். தன்னுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அவன் அக்குரலுக்கு செவிகொடுக்கத் தொடங்கியதுமே அது மெல்ல முரண்பட்டு அவ்வாறல்ல எனும் ஒலியாக மாறும். “அவ்வாறல்ல! அவ்வாறல்ல! அவ்வாறல்ல!” என்று அது வீறிடத் தொடங்கும். “நிறுத்து! நிறுத்து! அகல்! அகன்று செல்!” என்று அவன் கூவும்தோறும் அக்குரலின் சீற்றமும் பிடிவாதமும் மிகுந்து வரும். கூரிய வேலொன்றை முதுகில் மெல்ல ஊன்றியபடி எதிரி ஒருவன் பின்னால் வருவதுபோல் அவர்கள் நடை மாறுபடும். எதிரில் வரும் அனைவருக்கும் பின்னால் பேருருவப் பேய்வடிவொன்று நின்றிருப்பதுபோல் நோக்கு பதைப்பு கொண்டிருக்கும். பேசிக்கொண்டிருக்கையிலேயே ஊடே புகுந்தொலிக்கும் அக்குரலுக்கும் செவி கொடுப்பதனால் சொற்கள் குழறும். செவியில் ஒலிக்கும் அக்குரலை அஞ்சி மெழுகாலும் பஞ்சாலும் காதுகளை மூடிக்கொள்பவர் அது உள்ளிருந்து ஒலிப்பதென்று அறிந்து தலையை சுவர்களில் முட்டிக்கொள்வார்கள். துயின்றுகொண்டிருக்கையில் உடல் அதிர எழுந்தமர்ந்து “யார்? என்ன?” என்று கூச்சலிடுவார்கள்.
எண்ணியிராக் கணத்தில் காதுக்குள் வெடித்தெழும் ஓசையைக் கேட்டு இருக்கைகளிலிருந்து துள்ளி எழுந்துநின்று நான்குபுறமும் பார்ப்பார்கள். சவுக்கென அறைந்து அறைந்து துரத்தும் குரலிலிருந்து தப்பும் பொருட்டு தெருவிலிறங்கி ஓடுவார்கள். குரல் கேட்கத்தொடங்குபவர்கள் நிமித்தநூல் கலையிலிருந்து மிக விரைவில் விலகிச்செல்வார்கள். அதன் பின்னர் அவர்களால் எந்த நூலையும் ஒழுங்குடன் பயில இயலாது. பயின்றவை மறக்கும். ஆனால் பயிலாதவையும் நினைவிலிருந்து எழுவது பெருவிந்தை. அவர்களால் கணித்து குறி சொல்ல இயலாது. எனினும் ஊசிமுனைக் கூர்மையுடன் கணித்து முதுநிமித்திகன் சொல்லும் சொல்லுக்கு அப்பால் உள்ள ஒன்றை புதிதென அவர்களால் சொல்ல இயலும். அவர்களில் கூடும் தெய்வம் நிமித்தநூலை எள்ளி நகையாடுகிறது என்பார்கள்.
அவர்களில் எழும் குரலில் எப்போதும் சொல்வனவற்றைக் கடந்து நின்றிருக்கும் ஓர் அகல்வு தென்படும். மறுகணமே அது பெரும் பதற்றமென்றாகி கண்ணீரும் திணறலுமாக வெளிப்படும். பிரபாகரரின் நுண்ணுணர்வு அத்திசைக்கு அவரை கொண்டுசெல்கிறது என்று தந்தை அஞ்சினார். “இந்த நகரின் அலைக்கழிவுகளே உன்னை அவ்வாறு எண்ணச் செய்கின்றன. நகரிலிருந்து நிமித்திகநூல் பயில்பவன் புரவியில் சென்றபடியே ஊசியில் நூல் கோக்க முயல்பவன் என்று சொல்வதுண்டு. நிமித்தநூல் மேலும்மேலும் உள்ளே புகுந்து அறிவதற்குரியது. இந்நகரமோ ஒவ்வொருவரையும் பல்லாயிரம் கைகளாலும் கண்களாலும் வெளியே பிடித்திழுத்துக்கொண்டிருக்கிறது. காற்றில் ஆடைகள் பறப்பதுபோல் இங்கே சித்தம் நிலைகொள்ளாதிருக்கிறது. நீ காட்டிற்குச் சென்று நம் குலத்து முதுமுனிவராகிய பார்க்கவரிடம் கல்வி கற்று திரும்பு” என்று அவரை கங்கைக்கரை காட்டிலிருந்த தப்தவனம் என்னும் சோலைக்கு அழைத்துச்சென்றார். அங்கே பார்க்கவ குலத்து முனிவராகிய சுஃப்ரரிடமிருந்து சொல்பெற்று துறவு பூண்டு முனிவராகி குடிலமைத்து தங்கியிருந்த பார்க்கவ உத்தீப முனிவருக்கு மாணவரானார் பிரபாகரர்.
ஆனால் அங்கும் அவரிடம் அந்த நோக்குணர்வு இருந்துகொண்டே இருந்தது. அங்கு குளிர்ந்தோடும் கங்கையிலும், தழைத்து தளிர்சூடி நின்ற மரங்களிலும், இனிய இலைக்குடில்களின் இருண்ட அணைப்பிலும் நிமித்தநூலின் அனைத்து ஆழங்களையும் அவர் கற்றுக்கொண்டிருந்தார். ஆனால் எப்போதும் அந்நோக்குணர்வை அடைந்தார். அவர் அடிக்கடி திரும்பி எவரையோ பார்ப்பதை உடன் பயின்ற மாணவர்கள் உணர்ந்து ஆசிரியரிடம் சொன்னார்கள். ஒருநாள் ஆசிரியர் அவரை அழைத்து அருகமரச்செய்து குழல் நீவி “மைந்தா, என்ன உணர்கிறாய் நீ?” என்றார். “எவரோ என்னை பார்க்கிறார்கள்” என்று பிரபாகரர் சொன்னார். “என்னிடம் எதையோ சொல்ல முயல்கிறார்கள். என்னவென்று உணரக்கூடவில்லை” என்றார்.
சிலகணங்கள் அவர் விழிகளை கூர்ந்து நோக்கியபின் பார்க்கவர் சொன்னார் “நீ அக்குரலை அஞ்சாதே. அதை தவிர்க்க எண்ணாதே. எவ்வகையிலும் அதிலிருந்து விலக்கம் கொள்ளாதே. அதை நோக்கி திரும்பி இன்னுள்ளத்துடன் அதை வருக என அழை. உன் அகத்தில் அதற்கொரு பீடம் அமைத்துக்கொள். நிமித்தநூல் கற்று தேர். உன் வழியாக இப்புவியில் அழியாச் சொல்லொன்று எழக்கூடும். இப்பிறப்பும் நீ கற்கும் இக்கல்வியும் அதன்பொருட்டே ஊழால் வகுக்கப்பட்டதாக இருக்கக்கூடும்.” பிரபாகரர் தலைவணங்கினார். “நீ என் பெயரை சூடிக்கொள். என் மாணவனாக சென்று அஸ்தினபுரியில் அமைக! இனி இங்கு நீ கற்பதற்கொன்றுமில்லை” என்று சொல்லி அவர் தலைதொட்டு வாழ்த்தினார்.
தன் அரசவையில் வந்து நின்ற இளம் நிமித்திகனின் தகுதி கணித்து சொல்லும்படி அரசர் ஆணையிட்டார். ஏழு முதுநிமித்திகர் குழு ஒன்று பிரபாகரரை நடுவே நிறுத்தி நிமித்தநூல் குறித்த வினாக்களை உசாவத்தொடங்கினர். அவர்கள் நூற்றெட்டு வினாக்களை கேட்டார்கள். பதினெட்டு வினாக்களுக்கு மட்டுமே சரியான மறுமொழி சொல்ல அவரால் இயன்றது. ஒவ்வொரு பிழையாக அவர் இயற்ற இயற்ற நிமித்திகர்களின் முகங்கள் மாறிக்கொண்டிருந்தன. முதலில் திகைப்பும், பின்னர் சலிப்பும், பின்னர் இளிவரலும், அறுதியாக எரிச்சலும் சினமும் அவர்களிடம் தோன்றியது. “நீ எங்கு நிமித்தநூல் கற்றாய்?” என்று ஒருவர் உரக்க கேட்டார். பிறிதொருவர் “பார்க்கவர் என்று பெயர் சூடியிருக்கிறாய். பார்க்கவ குலத்து முனிவரிடம் கற்றதாகவும் சொன்னாய். அதற்கான தகுதிகள் உன்னிடம் இல்லை. அறிக, அரசவையில் நீ பொய்யுரைத்திருந்தால் கழுவேற்றுவதே அதற்குரிய தண்டம்!” என்றார்.
“நான் பொய் கூறவில்லை. அவரிடம் பயின்றேன். அவரது சொல்லென அப்பெயரைப் பெற்றே இங்கு வந்தேன்” என்று பிரபாகரர் சொன்னார். “ஏற்றுக்கொள்ள இயல்வதல்ல உனது கல்வி” என்று தலைமை நிமித்திகர் சொன்னார். திரும்பி அரசரிடம் “ஆர்வத்தால் அவை புகுந்த இளைஞன் இவன். இந்த அத்துமீறல் குற்றமெனினும் இளமை கருதி இவனை விடுவித்து திரும்பச் சொல்லலாம். இவ்வார்வத்தாலேயே ஒருவேளை ஐயமின்றி நிமித்தநூல் கற்கவும் தேர்ச்சி பெறவும் மீண்டும் இந்த அவைக்கு திறன் கொண்ட நிமித்திகன் என வரவும் வாய்ப்புள்ளது. அறிவு மிக அரிதானது. அறிவுக்கு உரிய ஆர்வம் எந்நிலையிலும் அறிவை கொண்டுவந்துவிடும் என்பார்கள். ஆர்வமே இவனை இவ்வண்ணம் செய்யவைத்தது என்று கருதுவதே முறையானது” என்றார்.
ருக்ஷன் ஐயத்துடன் பிரபாகரரை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் விழிகளை சந்திக்கும்போதெல்லாம் தன்னுள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தார். மிக அருகில் வந்து எவரோ தன் உள்ளத்தைக் கடந்து நோக்குவதுபோல, கரந்து வைத்த ஒன்றை கண்டெடுப்பதுபோல அவர் உணர்ந்தார். நிமித்திகர்களிடம் “நீங்கள் அவைக்கு வெளியே இருங்கள். இவ்விளைஞனிடம் நான் தனியாக ஓரிரு சொற்கள் பேச வேண்டும்” என்றார். நிமித்திகர்கள் எழுந்து தலைவணங்கி வெளியே சென்றனர். அவர்கள் அனைவருமே விந்தையுணர்வுடன் இருவரையும் மாறி மாறி நோக்கியபடி அகன்றனர். அரசர் “சொல்க இளைஞரே, அவை புகுந்து தலைமை நிமித்திகர்களின் முன் அமர்ந்து உங்களை முன்வைக்கும்படி உங்களை பணித்தது எது?” என்று கேட்டார்.
“நான் நிமித்திகன் என்பதனால்” என்றார் பிரபாகரர். “நான் இங்கு இவர்கள் பேசும் இந்த அன்றாடத் தொழில் சார்ந்தவன் அல்ல. என்னுள் பிறிதொன்று நிகழுமென்று என் ஆசிரியர் சொன்னார். அதன்பொருட்டு என் கல்வியை பீடமென ஒருக்கிவைத்து காத்திருக்கிறேன். அதை பேணிக்கொள்ளவே இங்கு வந்தேன்” என்றார். அரசர் களைத்த கண்களூடாக அவரைப் பார்த்தபின் பெருமூச்சுவிட்டு “என் விழிகளினூடாக நீங்கள் உள்ளே நோக்குவதுபோல் தெரிகிறது. அது என்னை பதற்றம் கொள்ளச்செய்கிறது” என்றார். “ஆம், உங்களை பார்த்ததும் ஒருகணம் நான் துணுக்குற்றேன்” என்றார் பிரபாகரர். “ஏன்?” என்று அரசர் கேட்டார். “நேற்றிரவு நீங்கள் கண்ட கனவை நான் அறிந்தேன்” என்றார்.
அரசர் அறியாது இருக்கையிலிருந்து எழுந்து “என்ன கனவு?” என்று பதறிய குரலில் கூவியபடி படிகளில் இறங்கி அணுகி வந்தார். “சொல்க, என்ன கனவு?” என்று கூவினார். “ஒரு பெரும்போர்க்களம். அதில் நீங்கள் உங்கள் உடன்பிறந்தவர் ஒவ்வொருவரையாக கதையால் அறைந்து தலையை உடைக்கிறீர்கள். உங்கள் உடன்பிறந்தார் நூற்றைவர். அவர்கள் உங்கள் முன் மண்டியிட்டு இறைஞ்ச நகைத்தபடி கதை சுழற்றி அவர்களைக் கொன்று அவர்களின் குருதியை தலைமேல் விட்டுக்கொண்டு கொண்டாடுகிறீர்கள். அறுதியாக ஒருவன் முன் அமர்ந்து அவன் நெஞ்சை அறைந்து பிளந்து துடிக்கும் குலையை வெளியே எடுத்து அழுத்தி அக்குருதியை அருந்தினீர்கள்” என்றார்.
“ஆம்” என்றார் ருக்ஷன். மேலும் ஏதோ கேட்க விழைந்தார். ஆயினும் “போதும்” என்றார். “எனக்கும் அக்கனவு புரியவில்லை, அரசே. அக்கனவு உங்களுக்குள் ஏன் வந்தது என்றும் தெரியவில்லை” என்றார் பிரபாகரர். “மும்முறை இத்தகைய கனவுகள் வந்துள்ளன” என்று ருக்ஷன் சொன்னார். “ஆம், இதற்கு முன்னால் வந்த கனவில் நீங்கள் உங்கள் மூத்தவரை ஒரு குளத்திற்குள்ளிருந்து கயிற்றில் கொக்கியைப் பொருத்தி நீருக்குள் வீசி இழுத்து வெளியே எடுத்து அவர் இடத்தொடையை கதையால் அறைந்து உடைத்துக் கொன்றீர்கள். அதற்கு முன்…” என பிரபாகரர் சொல்லத் தொடங்க ருக்ஷன் கை நீட்டி தடுத்தார்.
மூச்சிளைக்க தவித்த பின் ருக்ஷன் “அக்கனவின் பொருளென்னவென்று அறிவீர்களா, நிமித்திகரே? என் தமையன் தன் இடத்தொடையில் அரசபிளவை நோய்வந்து எட்டு மாதம் வலியில் துடித்து இறந்தார். அவர் காலடியில் அமர்ந்து இரவும்பகலும் நான் மருத்துவம் செய்தேன். அவர் இறப்பில் உடன் இருந்தேன். என்னை அருகழைத்து என் தலையில் கையை வைத்து இம்மணிமுடியை எனக்களித்துவிட்டு அவர் மறைந்தார்” என்றார். “ஆம், அறிந்திருக்கிறேன்” என்று பிரபாகரர் சொன்னார். “எனில் இக்கனவு ஏன் எனக்கு வந்தது?” என்றார் ருக்ஷன்.
“அரசே, அதற்கு முன் ஒரு கனவு தங்களுக்கு வந்தது” என்று பிரபாகரர் சொன்னார். “தங்கள் தந்தை காட்டிற்குச் சென்றபோது அங்கிருந்த யாதவப் பெண்ணின்மேல் மையல் கொண்டு அவள் ஒரு மைந்தனை ஈன்றாள். தங்கள் தந்தையின் தனிஉருவாகவே நிமிர்வும் பேரழகும் கொண்ட மைந்தன்.” ருக்ஷன் “ஆம்” என்று சொல்லி தளர்ந்து மீண்டும் அமர்ந்தார். “நான் என் இளமையில் அவரை கண்டேன். அவருக்கு என் அரசின்மேல் விருப்பிருந்தால் அதை அளிக்காமலிருக்க எனக்கு வழியில்லை என்று முதலில் தோன்றியது. பெருந்தோள்களுடனும் பேரழகுடனும் அவர் இந்நகர் புகுந்து எந்தையின் மைந்தன் என்று சொன்னால் மறுத்துரைக்க ஒருவரும் இந்நகரில் இல்லை. அன்று துயருடன் திரும்பி வந்தேன். என் அரண்மனையில் படுத்து துயிலிழந்து புரண்டுகொண்டிருந்தேன்” என்று சொல்லத் தொடங்கினார்.
புலரியில் ஒரு கனவு கண்டேன். எந்தை என்னை நோக்கி சொற்களில்லாத அசைவுகளால் ஏதோ சொன்னார். விழித்துக்கொண்ட பின்னர்தான் அவ்வசைவை நான் சொல்லென மாற்றிக்கொண்டேன். அவரே நான் என்று அவர் சொன்னார். அதன்பின் நான் தயங்கவில்லை. தேரை பூட்டச்சொல்லி மீண்டும் காட்டுக்குச் சென்றேன். என் மூத்தவரை சென்று கண்டு அவர் கால்களில் தலைவைத்து இவ்வரசையும் குடிகளையும் ஏற்றுக்கொள்க, என் மூத்தவரென அமர்ந்து எனக்கு அருள் புரிக, என் தந்தையென என்னை காத்தருள்க என்று கோரவேண்டுமென்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் அங்கு சென்றால் முந்தைய நாள் இரவில் அவர் எங்கோ சென்றுவிட்டார் என்றார்கள். அவருடைய கனவில் எந்தை எழுந்து அவ்வாணையை இட்டதாகவும் அவ்வாணையின் பொருட்டு விலகிச் செல்வதாகவும் நான் தேடிவந்தால் என்னிடம் கூறவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
அவரைத் தேடிச் செல்ல ஒற்றர்களை அனுப்பினேன். நான்காண்டுகளுக்குப் பிறகு அவர் பார்க்கவ ராமனின் மாணவராக அவரது குடிலில் உடனிருப்பதை ஒற்றர்கள் வந்து சொன்னார்கள். பரசுராமரின் பன்னிரண்டு மாணவர்களில் அவரே நான்காமவர். பரசுராமரைப் போலவே நீண்ட குழல் வளர்த்து வில் பயில்வதையே ஊழ்கமெனக் கொண்டு அக்காட்டில் அவர் தனித்திருந்தார். அவரிடம் சென்று வணங்கி என் உள்ளத்தை சொல்லவேண்டுமென்று விழைந்தேன். அமைச்சர்கள் துறந்து சென்றவரிடம் துரத்திச் சென்று உலகியல் விழைவை ஊட்டுவதென்பது பெரும்பழி என்று என்னிடம் அறிவுறுத்தினார்கள். ஆனால் அவரிடமிருந்து இந்நாட்டை நான் பறிக்கவில்லை என்று அவருக்கு தெரிவிக்க வேண்டும், அன்றி எனக்கே அதை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று நான் விழைந்தேன். ஆகவே எவருமறியாது தேர்பூட்டச் செய்து தன்னந்தனியாக பார்க்கவ ராமனின் குடிலுக்குச் சென்றேன்.
நான் சென்றபோது பார்க்கவ ராமன் காட்டுக்குள் சென்றிருந்தார். உடன் அவரும் சென்றிருப்பதாக அறிந்தேன். குடிலிலிருந்து தனியாக நானும் காட்டுக்குள் ஒற்றையடிப் பாதையில் நடந்தேன். அங்கு கங்கையில் நீராடிக் களித்துக்கொண்டிருந்த பார்க்கவ ராமனை பார்த்தேன். கரையில் வில்லுடன் அவர் அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து அவரை பார்த்துக்கொண்டிருந்தேன். விழிகள் நிறைந்து வழிந்தன. எந்தையை மீண்டும் பார்ப்பதுபோல் உணர்ந்தேன். எந்தை தன் வாழ்நாளெல்லாம் துறவுபூண்டு கானேக வேண்டுமென்று எண்ணியிருந்தார். மூத்தவருக்கு பதினெட்டு அகவை நிறைந்த அக்கணமே முடிதுறப்பதாக அமைச்சரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவருக்கு அகவை நிறைவதற்குள்ளாகவே அவர் உயிர்துறக்க வேண்டியிருந்தது. துறவுபூண்டு எந்தை காட்டில் இருந்திருந்தால் அவர் அவ்வண்ணம் இருந்திருப்பார் என எண்ணினேன்.
நான் நோக்குவதை உணர்ந்து அவர் என்னைப் பார்த்து புன்னகைத்து அருகே அழைத்தார். நான் அருகணைந்து எட்டுறுப்பும் நிலம்பட அவர் முன் விழுந்து வணங்கி “மூத்தவரே, நான் ஆற்ற வேண்டியதென்ன?” என்று கேட்டேன். “தந்தையின் புகழை வளர்க்கும் மைந்தனாக அமைக! இந்த நிலம் உன்னால் பொலிவுறுக! விண்ணில் தேவர்களும், மூத்தவர்களும் உன்னால் பெருகி வளர்க!” என்று அவர் வாழ்த்தினார். பிறிதொன்றும் கூறாமல் அவர் கால்களில் தலை வைத்து வணங்கி புறம்காட்டாது மீண்டேன். சொற்பெருக்கு உடைந்து ருக்ஷன் நிறுத்திக்கொண்டார்.
“மீண்டும் அக்கனவு வந்தபோது நீங்கள் காட்டிற்குள் இறுகியெழும் அம்புகளுடன் செல்கிறீர்கள். விலங்குகள் உங்களைக் கண்டு அஞ்சி ஓடுகின்றன. நாணொலி கேட்டு யானைகள் செவி அசைத்து தலை குலுக்கி பிளிறி கலைகின்றன. காட்டுப்பாதையினூடாக சென்று அங்கே கங்கைக்கரையில் நீராடிக்கொண்டிருக்கும் உங்கள் மூத்தவரை பார்க்கிறீர்க்ள். உங்களைக் கண்டதும் அவர் புன்னகையுடன் அணைக்கும்பொருட்டு நீட்டிய கைகளுடன் கரைநோக்கி வந்தார். அவரது கால் சேற்றில் புதைந்து அவர் அசைவிழந்தபோது ஏழு கூரிய அம்புகளால் அவர் நெஞ்சை பிளந்தீர்கள்” என்றார் பிரபாகரர். “ஆம்” என்றபின் தளர்ந்து பின்னடைந்து பீடத்தில் அமர்ந்து கைகளால் தலை பற்றி அரசர் அழத்தொடங்கினார். “ஏன் அந்தக் கனவு எனக்கு வந்தது? உண்மையில் இத்தகையவனா நான்?” என்றார்.
“நாம் எத்தகையவர் என்பதை இங்கு வாழ்ந்து எவரும் ஒருபோதும் முழுமையாக அறிந்துவிடமுடியாது. ஏனெனில் நாம் வாழும்தோறும் உருமாறிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கணத்திலும் புதிதாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவரை வெளிப்பட்டதைக் கொண்டு நம்மை நாம் வகுத்திருக்கிறோம். அதை பொய்யென ஆக்குவது அடுத்த கணமென நிகழ்கிறது” என்றார் பிரபாகரர். “நான் என்ன செய்யவேண்டும்? அரசு துறந்து காட்டுக்குச் செல்லவா? அன்றி உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கவா? இத்தீக்கனவுகளை சூடிய பின்னர் எதை நம்பி இங்கு கோலெடுத்து அமர்ந்து அறம் புரப்பேன்? பிழை செய்து என் முன் வந்த ஒருவனை எவ்வாறு தண்டிப்பேன்? என்றார் அரசர்.
“அரசே, அக்கனவுகள் உங்களுடையவை அல்ல” என்று பிரபாகரர் சொன்னார். “இங்கு நிகழ்வன அல்ல அவை. நாமறியாது பிறிதொரு வெளியில் அவை நிகழ்கின்றன. யவன மது இருந்த கலம் எத்தனை நன்கு பூட்டப்பட்டிருந்தாலும் துளியினும் துளி கசிந்து நறுமணமென காற்றில் அலையுமென்பார்கள். வரவிருப்பது தெய்வங்களால் மானுடர் அறியமுடியாதபடி ஏழுமுறை இறுக்கி மூடப்பட்டுள்ளது. எனினும் அது கனவுகளாக, நிமித்தக்குறிகளாக வந்துகொண்டுமிருக்கிறது. எவ்வளவு என்றும் எவ்வாறு என்றும் எங்கு என்றும் அறியமுடியாது. உள்ளது என்று மட்டுமே உணரமுடியும். நீங்கள் பழிகொள்ளப் போவதில்லை. இவ்வாழ்வில் ஒருகணமும் திறம்பா கோலுடன் வாழ்ந்து விண் புகுவீர்கள்.”
“எனில் எனக்கு இந்தக் கனவு ஏன் வந்தது?” என்றார் அரசர். “ஆனால் அங்கிருந்து நீங்கள் பார்க்கையில் உங்கள் குருதிவழிகளில் இவையனைத்தும் நிகழ்வதை அறிவீர்கள். அதன் பொருட்டு துயருறுவீர்கள்” என்றார் பிரபாகரர். “அரசே, இப்பழிகள் அனைத்தையும் செய்யும் கொடிவழியினரின் கைகளால் எள்ளும் நீரும் பெற்று விண்ணுலகிலிருக்கும் தீப்பேறு உங்களுக்கு அமையும். அதன் முன்னறிவிப்பே இக்கனவு.” அரசர் திகைப்பும் பதைப்புமாக பார்த்து சற்றுநேரம் தன்னுள் ஆழ்ந்து இருந்துவிட்டு “இங்கு என் தலைமை நிமித்திகராக அமைக, இளைஞரே!” என்றார். பின்னர் “பிறிதொன்று…” என்றார். “உங்கள் கனவில் நெஞ்சுபிளந்து குருதி குடித்த நீங்கள் உங்கள் மைந்தர் பீமனின் உருவில் இருந்தீர்கள்” என்றார் பிரபாகரர். “ஆம்” என்றார் அரசர்.
இருபதாண்டுகள் நிமித்திகராக அஸ்தினபுரியில் இருந்த பிரபாகரர் ஒருநாள் தன் தலையோடு வெடித்து எழுவதுபோல் போரின் பெருங்காட்சியை கண்டார். அங்கிருந்து கங்கைக்கரைக்கு அவர் ஓடினார். அங்கே வாழ்ந்த இருபதாண்டுகளில் பன்னிருமுறை முற்றிலும் உளப்பிறழ்வுக்கு ஆளானார். ஒவ்வொரு உளப்பிறழ்வுக்கு முன்னும் அவர் நிலைமறந்து உரைத்த குறிகளை அவருடைய மாணவர்கள் எழுதிச் சேர்த்து ஒரு நூலாக்கினர். அந்நூல் அவருடைய மாணவர்களால் மட்டுமே பயிலப்பட்டது. மூன்றாம் தலைமுறையில் அந்நூலை அவர்கள் கைவிட்டனர். பின்னர் பொருளிலாச் சொற்களின் தொகுதி என அது மூத்த நிமித்திகர் குலத்தவரின் கைகளில் இருந்தது.
நெடுங்காலம் கடந்து தொல்நூல் தேடித் தொகுக்கும் விழைவுகொண்டிருந்த இளம்நிமித்திகனாகிய அஜபாகன் என்பவன் அச்சுவடிக்கட்டை கண்டடைந்தான். மூன்றாண்டுகாலம் புறவுலகு ஒழிந்து அந்நூலைப் பயின்ற அவன் ஒருநாள் அங்கிருந்து மறைந்தான். மீண்டும் அவன் திரும்பிவந்தபோது எதையும் தொகுத்துப் பேசமுடியவில்லை. அழுகையும் சிரிப்புமாக அவன் ததும்பிக்கொண்டே இருந்தான். அழுகைக்கு பதில் அவன் சிரிப்பதாகவும் சிரிப்புக்கு பதில் அவன் அழுவதாகவும் மக்கள் நினைத்தார்கள். நிமித்திகர்கள் அவனை அழைத்துச்சென்று தங்கள் குலகுருவான பிருஹஸ்பதியின் ஆலயத்தில் அமரச்செய்தனர். அங்கே அமர்ந்து மடிந்து அவன் கோயில்கொண்டமைந்தான்.
நோக்குமேடை மேல் அமர்ந்திருந்த முதுநிமித்திகர் அஜபாகனின் சொற்களை நினைவுகூர்ந்தார். “அறத்தின் மேல் விழைவின் கொடி ஏறிவிட்டது” என்று அவர் சொன்னார். பிற அனைவரும் திடுக்கிட்டு திரும்பி நோக்கினர். “வெற்று விழைவு ஆற்றலை கோடைக்கால நதிபோல மெலியச் செய்கிறது. உயிரிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று அவர் மேலும் சொன்னார். அவர்கள் திகைப்புற்ற விழிகளுடன் நோக்கி அமர்ந்திருந்தனர்.