அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். உங்கள் அறம் சிறுகதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது (எம்.ஏ.சுசீலா சிலாகித்து எழுதியிருந்தார்).
படித்தேன். சுவாரசியமாக மூக்கு நோண்டிக்கொண்டிருந்தவன் முதுகில் சாட்டையடி விழுந்த மாதிரி உணர்ந்தேன். என்னமா எழுதியிருக்கிறீர்கள்!
உங்கள் எழுத்தை இது வரை நான் படித்ததில்லை. நண்பர்கள் சொன்னதன் பேரில் இதற்குமுன் உங்கள் தளத்திற்கு ஒன்றிரு முறை வந்திருக்கிறேன். எனக்குப் புரியாதக் காரணத்தால், மேல்தட்டு எழுத்து என்று ஒதுங்கிவிட்டேன். அறம் கதையைப் படித்ததும் இனி உங்கள் எழுத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும் என்ற வேகம் வந்துவிட்டது.
உங்கள் எழுத்து பல்லாண்டு வாழவேண்டும்.
அன்புடன்
-அப்பாதுரை
அன்பு:ள்ள அப்பாத்துரை
நாம் பழகாத எதுவும் நமக்கு அன்னியமாகத் தெரியும்… உணவு இசை மனிதர்கள் எதுவானாலும். எழுத்தும்…
நீங்கள் மேலும் வாசிப்பீர்கள் என நினைக்கிரேன்
ஜெ
http://nasivenba.blogspot.com
அன்புள்ள ஜெ
சோற்றுக்கணக்கு அன்பு,மானுடம் என்பதற்கு இலக்கணமாக விளங்கும் சிறுகதை.என் பார்வையில் தஙகளின் மிகச்சிறந்த சிறுகதை. நான் கூட நல்லவன் வாழ்வான் கெட்டவன் அழிவான் போல் ரொமான்டிஸ முடிவைத் தரப் போகிறீர்களோ என்று எதிர் பார்த்தேன். ஆனால் பிரதி பலன் பாராது காட்டும் அன்பின் வெளிப்பாட்டில் தங்கள் ஆதர்ச நாயகர் லெவ் தோல்ஸ்தாயின் கதா பாத்திரம் போல் ஆகிறான் கதை சொல்லி.
படிக்கையில் கண்கள் கலங்கின என்று சொல்ல எனக்குக் கூச்சம் ஒன்றுமில்லை
எனக்குத் தெரிந்த அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் இக்கதையை அனுப்பியிருக்கிறேன்.அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்றாலும் கூட.
அன்புடன்
ராமானுஜம்
நன்றி ராமானுஜம்…
தேவதேவனின் ஒரு வரி உண்டு ‘எங்கோ யாரோ விதைத்துக்கொண்டே செல்கிறார்கள்’
ஜெ
தன் சொந்தக்கணக்கில் இருந்து அவன் சற்றே மேலெழுவதுதான் கதையின் உச்சம்.அந்த எழுச்சியை அக்கணம் கெத்தேல்சாகிப் அளிக்கிறார்.அதற்கு கெத்தேல் சாஹிப்தான் கிரியா ஊக்கி
ஆம் .இந்த உச்சம் நாடகீயத்தன்மை இல்லாமல் போகிறபோக்கில் ஒரு வரியில் சொல்லியிருப்பது ஒரு ஆழத்தையும் அழகையும் தருகிறது .
கெத்தேல்சாகிப் யாருக்கும் எந்த போதனையும் அளிப்பதில்லை ,காந்தி சொன்னது போல அவரது வாழ்வே அவர் அளித்த மிகப்பெரும் போதனை அதை நமது நாயகன் நேரடியாக உணர்ந்து உள்வாங்கிக்கொள்வது ஒரு குரு சிஷ்ய உறவை எந்த அலங்காரமும் இல்லாமல் முன் வைக்கிறது.
ஒரு வகையில் சொல்லப் போனால் கெத்தேல்சாகிப் அவனை சோற்றாலேயே அடித்து அவனை ஒரு வகையில் கனிய வைக்கிறார்.
This part I felt has been poignant.
-Karthik
திரு ஜெ,
சோற்றுக்கணக்கு அருமை. எனது லாபம் கீழே.
வாழ்வின் யதார்த்தங்களை, உச்சங்களை, தாழ்வுகளை நேர்கோட்டு அளவு கோல்களை வைத்துத் தீர்மானிக்க இயலாது. அது அனுபவங்கள், அறிதல்கள் வழியாக ஏற்படும் நம்பிக்கைகள், உணர்வுகள் மற்றும் வாய்ப்புகள் இவற்றின் வெளிப்பாடு.
உங்கள் கதைகளில் எதிர் எதிர்க் கருத்துக்களை வைத்து ஒரு விவாததன்மையை மெலிதாக ஊடுருவ விட்டு இருப்பது அருமை. பல மனிதர்களின் பலவித மனவோட்டங்களை அவர்களின் யதார்த்தத்துக்கும் செம்மைக்குமான தடுமாற்றங்களை பதிவு செய்து இருக்கும் விதம் அருமை.
இலக்கியம், உடனடி வாசிப்பு அனுபவம் மட்டும் இன்றி, அடிப்படை சிந்தைனைகளைத் தூண்டி, கதைப்பற்றியும், அதைத்தாண்டியும் யோசிக்க வைத்து எம்மைச் செம்மை படுத்த உதவும் என நம்புகிறேன்.
முத்துக்குமார்
அன்புள்ள முத்துக்குமார்
மனிதர்கள் அவர்களின் ஆழ்மனதின் மிகமெல்லிய தளிர்முனையால் பற்றுகொம்பு தேடி துழாவிக்கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். அந்த நம்பிக்கை தேவையாகிறது வாழ்க்கைக்கு.
ஜெ
அன்புள்ள ஜெ,
அறம், சோற்றுக்கணக்கு இரண்டுமே எளிய அழகிய கதைகள். எந்தக்கதை மனதைச்சென்று தொடுகிறதோ அதுதான் உண்மையான இலக்கியம் என்பதை இந்தக்கதைகளின் மூலம் காட்டியிருக்கிறீர்கள். இனிமேலாவது நம்முடைய எழுத்தாளர்கள் வாசித்த உத்திகளை வைத்துக்கொண்டு படம் காட்டமல் சுற்றிலும் நடக்கும் வாழ்க்கையை கொஞ்சம் காட்டினார்கள் என்றால் நன்றாக இருக்கும்
சேதுராமன்
அன்புள்ள சேதுராமன்
என்றும் எக்காலத்திலும் இலக்கியம் வாழ்க்கையாலேயே அளவிடப்படுகிறது. வாழ்க்கையின் சில பகுதிகளைச் சற்றே திருகிய வழியில்தான் சென்றடைய முடியும் என்பதனால்தான் உத்திகள்
நன்றி
ஜெ
அன்புள்ளஜெ
அறம், சோற்றுக்கணக்கு இரண்டு கதைகளையும் பலமுறை விரும்பி வாசித்தேன். பலவகையான உத்திகளை எழுதிப்பார்த்து சலித்து ஐரோப்பிய இலக்கியம் இன்று வந்து சேர்ந்திருக்கும் இடம் இதுதான். இந்தியா வந்திருந்த போது என்னிடம் என் முன்னாள் மாணவர் ஒருவர் இன்றைய இலக்கியப்போக்குகள் என்னென்ன என்று கேட்டார். அவருக்கு நான் புதிய இலக்கிய உத்திகளை சொல்லுவேன் என்று எண்ணம். நான் இன்றைய அதிநவீன இலக்கிய போக்கை ஒரே வரியிலே சொன்னால் ‘வாழ்க்கைய சொல்லுங்கப்பு’ என்று சொல்லலாம் என்றேன். கிண்டல் என்று நினைத்துவிட்டார்
வாழ்த்துக்கள் ஜெ
சிவராமன்
அன்புள்ள சிவராமன்
நன்றி
நான் என்றுமே வாழ்க்கையைத்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். பரிணாமம் என்றால் அவநம்பிக்கையை எழுத ஆரம்பித்து நம்பிக்கை நோக்கி வந்தேன்
ஜெ