வேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும் கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள். சிறைத்துறை அதிகாரி நேரில் வாசலுக்குச்சென்று மரியாதையுடன் அவர்களை வரவேற்கிறார்கள். அவர்கள் அங்கே சிறையில் இருக்கும் ஒருவரைக் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர் அமைச்சரின் மகளின் கணவர்.
சிறையில் அமைச்சரின் மகள் தன் கணவனுக்கு ஒரு பழக்கூடையை அளிக்கிறாள். கடுமையான கண்காணிப்புக்கு உரிய அந்தக்கைதிக்கு அப்படி ஏதும் கொடுக்கலாகாது என்பது அதிகாரிக்குத்தெரியும். ஆனால் வேறு வழியில்லை. அந்தக்கூடைக்குள் அமைச்சரின் மகள் சில தடைசெய்யபப்ட்ட ரகசிய ஆவணங்களை மறைத்து தன் கணவருக்குக் கொடுக்கிறார். தன் மகளை அணைத்து முத்தமிட்டு கொஞ்சுகிறார் கைதி. அவர்கள் கிளம்பிச்செல்கிறார்கள்.
இப்படி ஒரு திரைக்கதை எழுதினால் சினிமாவில் அதை செயற்கையானது, நம்பமுடியாதது என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இது கற்பனையே கலக்காத நேரடியான சுயசரிதை ஒன்றில் வரும் நிகழ்ச்சி. இந்தியக் கம்யூனிஸ்டுக்கட்சியின் மூத்த தலைவரான என்.கெ.கிருஷ்ணனின் சுயசரிதை அது. அவரது மனைவி பார்வதி கிருஷ்ணன் புகழ்மிக்க குமாரமங்கலம் ஜமீன் குடும்பத்தைச்சேர்ந்தவர். அந்தக்குடும்பமே அரசியலாலும் கல்வியாலும் உயர்பதவிகளாலும் இந்தியதேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பதில் பங்கு கொண்டது. பார்வதி கிருஷ்ணனின் தந்தை டாக்டர் சுப்பராயன் ராஜாஜியை ஆதர்சமாகக் கொண்ட காங்கிரஸ் தலைவர்.
கேரளத்தில் இரிஞ்ஞாலக்குடா அருகே உள்ள நடவரம்பு என்ற கிராமத்தில் ஒரு நடுத்தர தமிழ்ப் பிராமணக் குடும்பத்தில் 1913ல் பிறந்த கிருஷ்ணன் சிறுவயதிலேயே படிப்பில் மிகச்சூட்டிகையானவராக இருந்தார். நான்காம் வகுப்பு படிக்கும்போது கொச்சி அரசாங்கத்திலேயே முதல் மாணவராக வந்து உதவித்தொகை பெற்றார். பின்னர் உதவித்தொகைகள் பெற்றே படிப்பை தொடர்ந்தார்.
1930ல் பள்ளியிறுதியை முடித்தபின்னர் மேற்கல்வி கற்பதற்காக சென்னைக்கு வந்தார். பிரசிடென்ஸி கல்லூரியில் கணிதவியலில் எம்.ஏ படிக்க ஆரம்பித்தார். அங்கேதான் தேசிய இயக்கத்தொடர்பு ஏற்படது. சுதந்திரப்போராட்டம் உண்மையான வீச்சைப்பெற ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. கணிதப்படிப்பில் ஆய்வுசெய்யும் கனவுடன் 1934ல் அவர் லண்டனுக்குப்பயணமானார்.
லண்டனில் படிக்கும்போது இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடினார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ண மேனனின் உறவு உருவாயிற்று. கிருஷ்ண மேனனின் இந்திய தேசிய லீகில் அவரது வழிகாட்டலில் பணியாற்றினார். தொடர்ச்சியாக அரசியல் கொந்தளிப்புகள் நடந்துகொண்டிருந்த அந்தக்காலத்தில் விரைவிலேயே அவர் கம்யூனிஸ்டாக உருமாறினார். 1936ல் அவர் கம்யூனிஸ்டுக்கட்சியின் உறுப்பினரானார். அதன்பின் 1988 ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் எல்லா பதவிகளிலிருந்தும் விலகும்வரை ஐம்பத்துமூன்று வருடங்கள் அவர் தொய்வில்லாது பொதுவுடைமைப்பணியாற்றினார்.
கிருஷ்ணனின் தன்வரலாற்றில் பெரும்பாலும் அவரது சொந்த வாழ்க்கை இல்லை. ஏனென்றால் அப்படி ஒரு வாழ்க்கையை அவர் பிரித்துப்பார்க்கவில்லை. அவரது வரலாறென்பது இடதுசாரி இயக்கத்தின் வரலாறேதான். 1939ல் அவர் இந்தியா திரும்பினார். இந்தியச் சுதந்திரப்போராட்டத்தினூடாக உலகப்போரின் பின்னணியில் இந்தியாவில் கம்யூனிஸ்டுக் கட்சி மெல்லமெல்ல உருவாகி வலுப்பெறுவதை, சுதந்திரத்துக்குப் பின்னர் அது காங்கிரஸ் கட்சியால் தடைசெய்யப்படுவதை, தடை மீண்டு ஜனநாயகப்பாதைக்குத் திரும்புவதை, தொழிற்சங்க இயக்கம் மூலம் மெல்ல மெல்ல அது பரவுவதை, வலதுசாரி இடதுசாரியாக பிளவுபட்டு பலவீனமடைவதை அவரது சுயசரிதை வாயிலாக விரிவான தகவல்களுடன் காண்கிறோம்.
கிருஷ்ணனின் இரும்பாலான வரலாற்றில் ஒரு மெல்லிய சரிகைஇழையாக அவருக்கும் பார்வதிக்கும் இடையேயான காதல் ஊடாடிச்செல்வதைக் காணலாம். அவர் பார்வதியை லண்டனில்தான் சந்திக்கிறார். ஆனால் அந்தச் சந்திப்பு குறித்து அவர் எதுவும் எழுதவில்லை. எழுபத்தி ஆறாம் வயதில் தன் வாழ்க்கையைப்பற்றிச் சொல்லும்போதுகூட அவரது நினைவில் இனிமையை நிறைக்கும் அனுபவமாகவே அது இருக்கிறது, என்றாலும் அதை விரிவாக எழுத அவரது கம்யூனிஸ்டுமனம் ஒப்புவதில்லை. அவர்களிடையே தோழமையும் பின்பு காதலும் உருவாகி வலுப்பெறுகிறது.
ஒரு காட்சி அவரது நேரடியான, சுருக்கமான குறிப்புகள் வழியாக ஒற்றை வரியாக மின்னிச்செல்கிறது. வி.கெ.கிருஷ்ணமேனன் அக்காலத்தில் லண்டனில் இந்தியாவுக்கு ஆதரவான அனல் கக்கும் பேச்சாளராக இருந்தார். ‘பிரிட்டனின் ஆட்சியில் சூரியன் அஸ்தமிப்பதேயில்லை, ஏனென்றால் இரவில் பிரிட்டிஷாரை நம்பமுடியாதென அவன் அறிவான்’ போன்ற நகைச்சுவைத்துணுக்குகளை அவர் அள்ளி இறைப்பார். அவரது கூட்டங்களுக்குச் செல்லும் பார்வதிக்கும் கிருஷ்ணனுக்கும் அவர் எந்த இடத்தில் எந்த நகைச்சுவையை சொல்வாரென நன்றாகவே தெரியும். அவர்கள் அதற்கு முன்னதாகவே கண்களால் பார்த்துச் சிரித்துக்கொள்கிறார்கள்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய கிருஷ்ணன் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து தீவிரமாகக் கட்சிப்பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பார்வதி லண்டனில் ஆக்ஸ்போர்டில் படித்துக்கொண்டிருந்தார். 1941 இறுதியில்தான் அவர் நாடுதிரும்பினார். இந்த வருடங்களில் கிருஷ்ணன் தொடர்ச்சியாக பார்வதிக்குக் கடிதங்கள் எழுதிக்கோண்டிருந்தார். அலுவலகப்பணியாற்றிய இன்னொரு தோழரான சாந்தாராம் என்பவர்தான் அந்தக்கடிதங்களை கட்சிப்பணியில் அலைந்து திரிந்த கிருஷ்ணனிடமிருந்து பெற்று பார்வதிக்கு அனுப்பி வைப்பார்.
இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயலாதலால் கிருஷ்ணனுக்கு குற்றவுணர்ச்சி இருந்தது. ஆனால் சாந்தாராம் அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு கட்சிக்கட்டுப்பாட்டை மீறியது பெரிய தவறல்ல என்று கிருஷ்ணனை தேற்றினார். பின்னர் 1942ல் பார்வதியை கிருஷ்ணன் திருமணம் செய்துகொண்டபோது பார்வதியை சாந்தாராம் ‘இரக்கமற்ற சொற்களால்’ தாக்கினார் என்கிறார் கிருஷ்ணன். கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய ஒரு செயலாக அதை அவர் வர்ணித்தார்.
அந்த உணர்ச்சியை ஐம்பதாண்டுக்காலம் கழிந்தும் கிருஷ்ணனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கு ஒரே விளக்கம்தான் இருக்க முடியும். ஆரம்பத்தில் ஒரு எளிய ஆண்பெண் ஈர்ப்பாக மட்டுமே சாந்தாராம் அந்தக் காதலைக் கண்டிருப்பார். ஆனால் பின்னர் அது சமூகத்தடைகளை எல்லாம் தாண்டி முழுவாழ்நாளையும் ஒளிமயமாக்கியபடி நீடிக்கக்கூடிய அமரத்துவம் வாய்ந்த ஒரு காதல் என்பதை அவர் புரிந்துகொண்டபோது அவரது எளிய மனத்தால் கிருஷ்ணனின் அந்த அதிருஷ்டத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவ்வளவுதான்.
பார்வதியை மீண்டும் சந்தித்ததை முடிந்தவரை சாதாரணமாகச்சொல்ல கிருஷ்ணன் முயன்றாலும் அதில் உணர்ச்சி கலக்கிறது. சிறையிலிருந்து விடுபட்டு அலுவலகம் திரும்பியதும் ராஜாஜியைச் சந்திக்கும்படி அப்போதைய கட்சித்தலைவர் பி.ஸி.ஜோஷி ஆணையிடுகிறார். ஆகவே கிருஷ்ணன் சென்னைக்கு வந்தார். அங்கே அந்தச் சந்திப்புக்கு பார்வதி ஏற்பாடுசெய்தார். அப்போது சோவியத் நண்பர்கள் சங்கம் என்ற அமைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன், மணலி கந்தசாமி ஆகியோருடன் இணைந்து அவர் மாணவர் மத்தியில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
“அச்சந்திப்பு குறித்த நினைவுகள் என்றும் மங்காதவை. சென்னையில் நான் தங்கியிருந்த காலம் முழுவதும் நாங்கள் முடிவற்று பேசிக்கொண்டே, மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்தோம். அரசியல் பற்றி, இன்னும் பல விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டே இருந்தோம். 1939 ஜூனில் லண்டனில் நாங்கள் பிரிந்ததில் இருந்து கழிந்துபோன ஏராளமான சம்பவங்கள் நிரம்பிய அக்காலகட்டம் குறித்தும் எங்களது பல்வேறு அனுபவங்கள் குறித்தும் நாங்கள் எங்களிடையே பரிமாறிக்கொள்ள வேண்டியிருந்தது” என்று கவனமாகச் சொல்கிறார் கிருஷ்ணன். என்ன பேசினால் என்ன, பேசப்படுவது காதல்தானே?
ராஜாஜி தன் நுண்ணுணர்வால் பார்வதிக்கும் கிருஷ்ணனுக்குமான உறவை உய்த்துணர்ந்து அதை அப்போதே பார்வதியின் தந்தை டாக்டர் சுப்பராயனிடம் சொல்லவும்செய்தார் என்கிறார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ணனும் பார்வதியும் தாங்கள் காதலிப்பதை தாங்களே ஒப்புக்கொள்ளவில்லை, மணம்புரிய முடிவும் எடுக்கவில்லை! ராஜாஜி என்ன, அப்போது அவர்களைப்பார்த்த வழிப்போக்கர்களுக்குக்கூட அது தெரிந்த ரகசியமாகத்தான் இருந்திருக்கும்.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளுக்கும் காங்கிரஸ¤க்கும் இடையே பெரிய அளவில் முரண்பாடுகள் இருக்கவில்லை. இருசாராரும் இணைந்து பணியாற்றும் களங்களும் இருந்தன. குறிப்பாக தொழிற்சங்க நடவடிக்கைகள், பாஸிஸ எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில். 1942ல் சேலத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாடுதான் தமிழகத்தில் கட்சி வளர்ச்சிக்கு வழிவகுத்த திருப்புமுனை. அதில் கலந்துகொள்வதற்காக கிருஷ்ணன் சேலம் வருகிறார். அங்கிருந்து திருச்செங்கோட்டுக்குச் செல்கிறார். அங்கே டாக்டர் சுப்பராயனுக்குச் சொந்தமான பெரிய பூர்வீக மாளிகையில் தங்கினார். சுப்பராயனின் மனைவி திருமதி ராதாபாய் அவர்கள் அவர் அங்கே தனியான குடியிருப்புப் பகுதி ஒன்றில் தங்கியிருந்து கட்சிப்பணி ஆற்ற உதவினார்.
சுப்பராயனின் குடும்பத்தைப்பற்றி கிருஷ்ணன் விரிவாகச் சொல்கிறார். டாக்டர் சுப்பராயன் வசதியான ஜமீன்தார் குடியில் பிறந்தபோதிலும் காந்தியின் கொள்கைகளாலும் ராஜாஜியின் ஆளுமையாலும் பெரிதும் கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமகாக சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார். பலமுறை அதற்காகச் சிறைசென்றார். மங்களூர் கொங்கணி பிராமணக் குடும்பத்தில் பிறந்தவரான ராதாபாயின் தந்தையார் ஹரிஜன நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அவரை காந்தி வியந்து பாராட்டியிருக்கிறார்.
ராதாபாய் அவரது சமூகத்தில் முதல் பட்டதாரிப்பெண். சென்னை பல்கலையின் முதல் செனெட் உறுப்பினர் அவரே. பின்னர் முதல் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்தார். முதலாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொண்ட இரண்டுபெண்மணிகளில் ஒருவர் அவர். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய தூதுக்குழுவின் முதல் பெண் உறுப்பினரும் அவரே. 1928ல் மத்திய சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அவர்தான்.
தமிழகத்து காங்கிரஸில் பல பதவிகளை வகித்த டாக்டர் சுப்பராயன் பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார். நேருவின் மந்திரிசபையில் அமைச்சராக இருந்தார். மகாராஷ்டிரத்தின் கவர்னர் பதவி வகித்தார். பொதுவாக அவர் இடதுசாரிகளுக்காக நேருவிடம் வாதாடக்கூடியவராக இருந்தார். ராதாபாய்-டாக்டர் சுப்பராயன் திருமணம் காந்தியின் ஆசியுடன் ராஜாஜி தலைமையில் நடந்த ஒன்று. அவர்களின் மகள்தான் பார்வதி.
சுப்பராயன் குடும்பமே உயர்பதவிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒன்று. பார்வதியின் மூத்த சகோதரர் பரமசிவம் ராணுவ அதிகாரியாகப்பணியாற்றி இந்திய ராணுவத்தளபதி பதவியை அடைந்து ஓய்வுபெற்றார். இரண்டாவது அண்ணாவாகிய கோபால் இறுதிவரை உறுதியான கம்யூனிஸ்டாக இருந்தார். நிலக்கரித்தொழிலை நாட்டுடைமை ஆக்கியவர் அவரே. இந்தியப்பொதுத்துறையின் சிற்பி என்று அவர் மதிப்பிடப்படுகிறார். பார்வதியை கம்யூனிஸ்டுக்கட்சிக்குக் கொண்டுவந்தவரும் அவரே.
பார்வதியின் தம்பி மோகன் குமாரமங்கலம் கம்யூனிஸ்டுக்கட்சியில் பணியாற்றினார். பின்னர் காங்கிரசில் சேர்ந்து மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்தார். இந்திராகாந்தியின் அமைச்சரவையில் இரும்பு உருக்குத்துறை அமைச்சராக இருந்தபோது விபத்தில் மரணமடைந்தார். மோகன் குமாரமங்கலத்தின் மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் மத்திய அமைச்சராக இருந்தார்.
1942ல் திருச்செங்கோட்டில் தங்கியிருந்த நாட்களில் கிருஷ்ணனும் பார்வதியும் திருமணம்செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். தன் முடிவை கிருஷ்ணன் தந்தையிடம் தெரிவித்தபோது ”உன் விருப்பம், ஆனால் பெரும்பணக்கார வீட்டுப்பெண்ணான பார்வதி உன்னுடைய வறுமையான வாழ்க்கைச்சூழலுக்கு ஒத்துவருவாளா என்று யோசித்துக்கொள்” என்றுமட்டும் அவர் சொன்னார். ஆனால் பார்வதியும் தன்னுடன் முழுநேரக் கட்சிப்பணிக்குத்தான் வருகிறார் என்று கிருஷ்ணன் சொன்னார். சுப்பராயன் குடும்பத்திலிருந்து எந்த ஆட்சேபணையும் எழவில்லை. முழுமையாக கருத்துச் சுதந்திரம் நிலவிய குடும்பம் அது.
1942ல் காங்கிரஸ் ”வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை அறிவித்தது. ஃபாஸிசத்துக்கு எதிரான போரில் பிரிட்டனின் கரங்களை வலுப்படுத்தவேண்டும் என்று எண்ணிய கம்யூனிஸ்டுக் கட்சி அதை எதிர்த்தது. காங்கிரஸ் கட்சிக்கும் கம்யூனிஸ்டுக்கட்சிக்கும் இடையேயான நிரந்தரமான மனக்கசப்புக்கான தொடக்கம் இதுவே. இக்காலகட்டத்தில் பி.ஸி.ஜோஷி தலைமையில் பம்பாயில் ஒரு கம்யூன் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஜோஷி, பி.டி.ரணதிவே ஜி.அதிகாரி போன்றவர்கள் அதில் தங்கி வாழ்ந்தார்கள்.
ஏறத்தாழ 90 தோழர்கள் அங்கே தங்கியிருந்தார்கள். நிதிவசதி மிகக்குறைவாக இருந்தது. பார்வதியும் கிருஷ்ணனும் மோகன் குமாரமங்கலமும் பல தொழிலாளர்குடியிருப்புகளுக்குச் சென்று நன்கொடைகளையும் தேவையான தானியங்களையும் மலிவான துணிகளையும் சேகரித்துக்கொண்டு வந்து சேர்ப்பார்கள். அங்கேதான் கிருஷ்ணன் பார்வதியை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். 1942 டிசம்பர் ஏழாம் தேதி மிக எளிமையான முறையில் அவர்களின் மணம் நடைபெற்றது
”அது ஒரு இனிமையான குளுமை வாய்ந்த காலைப்பொழுது என்பதை நான் நினைவில் கொண்டுள்ளேன். எங்கள் மீது சூரிய ஒளி பிரகாசித்தது. அந்நிகழ்ச்சியினைக்கண்டு இயற்கை இறும்பூது எய்தியதுபோலும். எங்களுடைய மூன்றுசாட்சிகளுடன் நேராக நாங்கள் இருவரும் பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றோம். ஏ.எஸ்.ஆர்.சாரி, ஏ.எஸ்.வைத்யா மற்றும் மோகன் குமாரமங்கலம். இறுதிக்கட்டத்தில் திருமணப்பதிவுக் கட்டணத்தைக் கட்ட என்னிடம் பணமில்லை என்று அறிந்து மிகவும் கையறுநிலையில் இருந்தேன். பின்னர் அப்பணத்தை மோகனிடமிருந்து கைமாற்றாக வாங்கினேன் திருமணப்பதிவுக்குப் பின்னர் நாங்கள் ஐவரும் ஒரு ஈரானி டீக்கடைக்குச் சென்று ஐஸ்கிரீமும் டீயும் அருந்தினோம். அதுதான் எங்கள் திருமண விருந்து…” என்று அந்நிகழ்ச்சியை சித்தரிக்கிறார் கிருஷ்ணன்.
”அடுத்தநாள் ராஜ்பவனில் இருந்த பொது அறையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அங்கு நாங்கள் இருவரும் கட்சி உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் டீயும் பிஸ்கெட்டும் வழங்கப்பட்டன” அந்த கம்யூனில் அவர்கள் தங்குவதற்கு ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அவர்களின் குடும்பவாழ்க்கை அவ்வாறாகத் தொடங்கியது. கிருஷ்ணனின் நினைவில் கடும் உழைப்புடன் நெருக்கியடித்துக்கொண்டு வாழ்ந்த அந்த கம்யூன் வாழ்க்கையே பொற்காலமாக துலங்குவதை அவரது தன்வரலாற்றில் காண்கிறோம்.
பார்வதி அப்போது ஜோஷியின் தட்டச்சு உதவியாளராக இருந்தார். கட்சி துடிப்புடன் இயங்கிய தருணம் அது. ஆகவே கடுமையான வேலை. தினமும் 11 மணிக்கு கிருஷ்ணனும் பார்வதியும் டீ குடிக்கச்செல்வார்கள். அருகே உள்ள ஈரானி கடைக்குச்சென்று ஒரு கோப்பை தேநீர் வாங்கி அதை இருவருமாகப் பகிர்ந்து குடிப்பார்கள். இரண்டு கோப்பை தேநீர் வாங்க பணம் இருக்காது. அதன்பின் அரைமணிநேரம் இருவரும் அரட்டை அடிப்ப்பார்கள்.
1943ல் அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது. அதற்கு இந்திரா என்று பெயரிட்டார்கள். கிருஷ்ணனின் நேரு மீதான மனச்சாய்வு அதற்குக் காரணமாக இருக்கலாம். பிரசவத்துக்காக பார்வதி சென்னைக்கு வந்திருந்தார். குழந்தையைக் காணச்செல்ல கிருஷ்ணுக்கு அவகாசம் கிடைக்கவில்லை. சற்று பிந்தித்தான் அவர் சென்னைக்குச்செல்ல முடிந்தது. கடுமையான மழையால் சென்னையே வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்த நாட்கள் அவை. ஆகவே ஆவடியோடு ரயில்கள் நின்றுவிட்டன. கிருஷ்ணன் ரயிலிறங்கி பேருந்தில் ஏறி முழங்கால்வரை நீரில் நடந்து பார்வதி தங்கியிருந்த அவரது அண்ணாவின் இல்லத்துக்கு வந்தார்.
”அவர்களின் இல்லத்தை அடைந்தபோது குடும்பத்தினர் அனைவரும் கதவை தாழிட்டுக்கொண்டு உள்ளே இருந்தார்கள். ஆனால் வெளியே இருந்த தோட்டத்தின் புல்வெளியில் பிரகாசமான சூரிய ஒளியில் அழகிய பெண்குழந்தை தனியாக தூங்கிக்கொண்டிருந்தது. கம்பீரத்தோற்றமுடைய செயல்திறன் கொண்ட சாலி என்ற நாய் அக்குழந்தையை விசுவாசமாக பாதுகாத்து நின்றது. அந்த சாலி என்ற நாய் பார்வதியின் அண்ணா பரமசிவத்துடையது. அவர் யுத்தப்பணிகளுக்காக வெளிநாடுசென்றிருந்தார். அங்கே பிடிபட்டு இத்தாலியில் யுத்தக்கைதியாக இருந்தார்… எனது குழந்தையை முதன்முதலாகப் பார்த்தபோதே மயங்கிவிட்டேன்…” என்கிறார் கிருஷ்ணன்.
1944 முதல் குழந்தையுடன் பார்வதி மீண்டும் கம்யூனில் தங்குவதற்காக வந்தார். இருவருக்கும் தொடர்ச்சியாக கடும் கட்சிப்பணிகள் இருந்தமையால் அப்போது அலுவலகத்தில் எந்த தோழர்கள் இருக்கிறார்களோ அவர்கள் இந்திராவை வளர்த்தார்கள். தன் ஐந்துவயதுவரை இந்திரா அந்த கம்யூனில்தான் வளர்ந்தாள்.
இந்திராவின் இளமைப்பருவத்து வாழ்க்கையை அவ்வப்போது சிறிய தகவல்கள் வழியாக சொல்லிச்செல்கிறார் கிருஷ்ணன். கிருஷ்ணனும் பார்வதியும் சிறையில் இருக்கும்போது இந்திராவை சிலமுறை கேரளத்தில் அவரது தாய்தந்தையரின் வீட்டில் விட்டுச்செல்கிறார்கள். அங்கே பக்கத்துவீட்டுப்பெண்கள் ”உன் அம்மா அப்பா எங்கே?” என்று கேட்டு குழந்தையை வதைக்கிறார்கள். ஏற்கனவே பெற்றோரைப்பிரிந்து ஆழமான அதிர்ச்சியில் இருக்கும் குழந்தை அழுகிறது. பின்னர் அதுவே மூர்க்கமான ஒரு பதிலை உருவாக்கிக்கொள்கிறது ”என் அப்பா அம்மா ரெண்டுபேரும் செத்துப்போயிட்டாங்க”
நாற்பதுகளின் இறுதி என்பது கம்யூனிஸ்டுக்கட்சிக்கு கடுமையான காலகட்டம். காங்கிரஸில் வலதுசாரிகளின் குரல் ஓங்கியது. கம்யூனிஸ்டுக்கட்சி தடைசெய்யப்பட்டு பெரும்பாலானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வேலூர் சிறையில் கிருஷ்ணன் இருந்தார். அப்போது சென்னை மாநிலத்தில் அமைச்சராக இருந்த சுப்பராயன் தன் பேத்தி இந்திராவுடன் சிலமுறை கிருஷ்ணனைச் சந்திக்க வருகிறார். இந்திராவை பார்ப்பது தனக்கு மிக வேதனையூட்டும் அனுபவமாக இருந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன். சிறையில் இருக்கும் தன் அப்பாவைப்பார்க்கும்போது இந்திராவுக்கும் துயரம். தன்னையும் அப்பாவுடன் சேர்த்துஅடைத்துவிடும்படி அவள் கேட்கிறாள்.
காமராஜ் ஒருமுறை சுப்பராயன் வீட்டுக்கு வந்து இந்திராவைக் கொஞ்சும்போது ”என் அப்பாவை என் தாத்தா ஜெயிலில் அடைத்து வைத்திருக்கிறார். என் அப்பா ஏழை. அப்பாவை தினமும் ராத்திரி கட்டிப்போடுகிறார்கள்” என்று இந்திரா காமராஜிடம் சொல்கிறாள். காமராஜ் பின்னர் பார்வதியைச் சந்தித்தபோது அதைச் சிரித்தபடிச் சொன்னார்.
தீவிரமான அரசியல் தகவல்களின் நடுவே பார்வதியும் கிருஷ்ணனும் வாழ்ந்த வாழ்க்கையின் சித்திரம் ஆங்காங்கே மெல்லிய குறிப்புகளாக வந்துகொண்டே இருக்கிறது இந்நூலில். அவர்கள் பலவருடங்கள் கட்சி அளித்த உதவித்தொகையை ஏற்கவில்லை. பார்வதியும் கிருஷ்ணனும் கோவையில் ஆங்கிலமும் கணிதமும் கற்றுக்கொடுக்கும் தனியார்பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி அந்த குறைந்த வருமானத்திலேயே வாழ்ந்தார்கள். கட்சிப்பணி அதிகமாகும்போது அந்த வேலையையும் குறைத்துக்கொண்டு செலவுகளைச் சுருக்கிக் கொண்டார்கள். பார்வதி பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக ஆனபோது அந்த வருமானத்தில் வாழ்ந்தார்கள்.
ஒருமுறை டாக்டர் சுப்பராயனின் நண்பரான ஜி.டி.நாயுடு அவர்களின் இல்லத்துக்கு வந்தார். அப்போது அவர்கள் வீட்டில் அமர்வதற்கான நாற்காலி பெஞ்ச் ஏதும் கிடையாது. ஜி.டிநாயுடு உடனடியாக அவர்கள் இல்லத்துக்குத்தேவையான மரச்சாமான்களை வாங்கி ஒரு லாரியில் அனுப்பி வைத்தார். அவர்கள் வாழ்க்கையில் எப்போதும் அன்புகொண்ட தொடர்ந்து உதவிசெய்கிற நண்பராக ஜி.டி.நாயுடு இருந்தார். அதேசமயம் மிக உறுதியான கம்யூனிஸ எதிர்ப்பாளர் அவர். 1974ல் ஜி.டி.நாயுடு இறப்பதற்கு முன்னர் கடைசியாக பார்வதியைப்பார்க்க அவர் டெல்லிக்கு வந்திருந்தபோது அவர்கள் வசித்த சின்னஞ்சிறு வீட்டின் மாடிப்படி ஏறமுடியாமல் தெருவில் காரிலேயே அமர்ந்து பேசியதாக கிருஷ்ணன் எழுதுகிறார்.
உறவுகளுக்கும் கடமைக்கும் இடையேயான நுண்மையான நூல்பாலம் வழியாக வாழ்க்கை கடந்துசெல்லும் பல தருணங்களை கிருஷ்ணனின் சுயசரிதை சுட்டிச்செல்கிறது. கட்சி தடைசெய்யப்பட்ட காலகட்டத்தில் தேடப்பட்டுவந்த கிருஷ்ணன் ஒரு தலைமறைவிடத்தில் வைத்து கடுமையான நிமோனியா நோய்க்கு ஆளானார். அதன் உச்சத்தில் மனச்சமநிலை இழந்து அவர் தெருவில் இறங்கி ஓடினார். அவரை தொழிலாளர்கள் கண்டுபிடித்து அலுவலகத்துக்குக் கொண்டுசென்றார்கள். அப்போது சென்னையில் பணியாற்றிக்கொண்டு கம்யூனில் வாழ்ந்துகொண்டிருந்தார் பார்வதி. அவருக்குத்தகவல் சொல்லப்பட்டது. மிகத்துணிச்சலாக கிருஷ்ணனை ரகசியமாக தன்னுடைய தந்தையின் மாளிகைக்குக் கொண்டுசென்று விட்டார் அவர். அப்போது டாக்டர் சுப்பராயன் சென்னை மாகாணத்தின் உள்துறை அமைச்சராக இருந்தார்!
அவர்களின் குடும்ப மருத்துவரான ஏ.சீனிவாசன் வரவழைக்கப்பட்டு கிருஷ்ணனுக்கு சிகிழ்ச்சை அளித்தார். அவர் ரகசியமாக கிருஷ்ணனை அவர் பணியாற்றிய அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஒரு விசேட வார்டில் ‘பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை’ என்ற போர்டுக்குப் பின் கிருஷ்ணன் சேர்க்கப்பட்டு சிகிழ்ச்சை அளிக்கப்பட்டார். பத்துநாள் உயிருக்குப் போராடியபின் மெல்லமெல்ல கிருஷ்ணன் மீண்டுவந்தார். நோய் குணமான பின்பு அவரை பிணம் கொண்டுசெல்வதற்காக இருந்த சிறிய கதவின் வழியாக வெளியே நின்ற காருக்குக் கொண்டுசென்று தப்பச்செய்தார் டாக்டர்.
டாக்டர் சுப்பராயனுக்கு மருமகன் தன் வீட்டில் இருப்பது தெரியும். அவரைக் கைதுசெய்ய ஆஸ்பத்திரியின் எல்லா வாசல்களிலும் ஆளை நிறுத்தி வைத்திருந்தார் அவர். ஆனாலும் கிருஷ்ணன் தப்பிவிட்டார். நோயுற்றிருந்த மருமகனைக் கைதுசெய்ய சுப்பராயனின் மனம் ஒப்பவில்லை. இந்த சம்பவத்தைப்பற்றி அவர் பின்பு தன் மந்திரிசபைக்குத் தெரிவித்தார். அவரை ஒருவரும் எதிர்க்கவில்லை. அவரது நேர்மையை எவரும் ஐயப்படுவதில்லை. ஆனால் சுப்பராயன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி அவரே கோரி மந்திரிசபையிலிருந்து விடுபட்டு மகாராஷ்டிரத்தின் கவர்னராக பணியாற்றச் சென்றார்.
ஒரு இனிய காதல்கதை அதற்குரிய முடிவை நெருங்குவதைப்போல கிருஷ்ணன் தன் மகள் இந்திராவின் வளர்ச்சியைச் சொல்லிச் செல்கிறார். மருத்துவப்படிப்பை முடித்த இந்திரா தன்னுடன் படித்த மருத்துவரான மனஸ் தாஸ்குப்தாவை காதலித்து மணக்கிறார். அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பார்வதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் அந்த திருமணம் மிக எளிமையாக நடக்கிறது– பலவருடங்களுக்கு முன்னர் கிருஷ்ணன்-பார்வதி திருமணம் எப்படி நடந்ததோ அப்படி.
”1976 ஜனவரி 22 ஆம் நாள் என் குடும்பவாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. நான் தாத்தாவாகிவிட்டேன். அந்த நாளில் தான் பூர்ணிமா பிறந்தாள். அன்று அதிகாலையில் நான் கெஜி மருத்துவமனைக்கு விரைந்தேன். அச்சிறு குழந்தையை கரங்களில் எடுத்துக்கொண்டு அவளுடைய சிறிய முகத்தை ஆசைதீரப்பாத்துக் கொண்டிருந்தேன். எனது நினைவுகள் 1943ல் அவளின் தாயை சென்னையில் என் கரங்களில் ஏந்திக்கோண்டிருந்த நாட்களை நோக்கி திரும்பின”
வாழ்க்கை இனியது. போராடும்போது மேலும் இனிதாகிறது. ஏனெனில் எல்லா போராட்டங்களும் வாழ்க்கை மீதான ஆழமான விருப்பத்தில் இருந்து பிறப்பவை.
[நம்பிக்கை ஒளி, [ஒரு கம்யூனிஸ்டின் வாழ்க்கை வரலற்று நினைவுகள்]. என்.கெ.கிருஷ்ணன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடட். சென்னை. தமிழாக்கம் எல்.ஜி.கீதானந்தன்]