எம்.எல்- கடிதங்கள்

எம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன்

வணக்கம் ஜெயமோகன் .

இன்று  வண்ணநிலவன் அவர்களின் எம் எல் என்ற நாவல் குறித்த விமர்சனத்தை கண்டேன்.அந்த நாவலை நானும் வாசித்தேன். வண்ணநிலவன் அவர்களின் நாவல்களை வாசித்து புளகாங்கிதம் அடைந்த எண்பதுகளின் வாசகன் நான்

ஆனால் முப்பது ஆண்டுகள் கழிந்து அவர் எழுதிய எம் எல் என்ற இந்த நாவல் மிகவும் எளிமையாகவும் ஒற்றைப்படையான பார்வை கொண்டதாகவும் அமைந்திருக்கிறது.எம் எல் இயக்கம் குறித்த ஒரு வெறுப்புணர்வோடு எழுதப்பட்ட நாவல் இது என்றால் மிகையில்லை, முன்முடிவுகளோடு எழுதப்படுகிற எல்லா புனைவுகளும் எந்த இடத்தில் முடியுமோ அப்படி முடிந்திருக்கிறது இந்த நாவல்.

ml இயக்கத்தை அது ஏதோ போகிற போக்கில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு கருத்து என்பது போன்ற ஒரு மேட்டிமை மிக்க  ஒரு பார்வை அவரிடம் இருக்கிறது.உண்மையில் எம்எல் இயக்கம் உருவாக்கப்பட்ட போது இருந்த நிலைமைகள் இன்று வரை மாறிவிடவில்லை அவர்கள் ஜனநாயகத்தை மறுதலித்தார்கள். ஏனென்றால் அது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக இல்லை என்பது அவர்களுடைய பார்வை.ஒரு பரந்துபட்ட ஜனநாயக நாட்டில் உள்ள எல்லா அசிங்கமான விளைவுகளையும் நாம் இப்போது சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

வாக்களிப்பதில் தொடங்கி வரி செலுத்துவது வரைக்கும் எல்லா இடங்களிலும் ஊழல் ஊழல் இல்லாத ஒரு துறையும் இப்போது நாம் பார்க்க முடிவதில்லை.ஒரு தவறான கருத்து கொண்ட பார்வையாக மார்க்சிய-லெனினிய இயக்கத்தை போகிற போக்கில் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள வாய்ப்பே இல்லை.

இந்த நாவலை நான் வாசித்த போதே எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த “தரையில் இறங்கும் விமானங்கள்”என்ற நாவலின் இன்னொரு பதிப்பாகவே எம் எல் நாவலை பார்க்க முடியும். (இந்துமதி எழுதியது என்று நினைக்கிறேன்)

தரையில் இறங்கும் விமானங்கள் நாவலில் குடும்பம் பேசு பொருளாக இருந்தது எம் எல் நாவலை அரசியல் பேசுபொருளாக இருக்கிறது மற்றபடி அவர்கள் கண்டறிய தரிசனம் ஒன்றுதான் .அது தவறாக போய்விட்ட பாதையில் இருந்து மாறி சமூகத்தில் மையநீரோட்டத்தோடு கலந்து விடுவது.

எம் எல் இயக்கம் தொடங்கப்பட்ட போது,  இந்தியாவில் இருந்த அந்தக் காலகட்டத்தினுடைய மிக நுட்பமான அறிவாளிகள் பலரும்.அதில் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த சமூகத்தின் மீது மரியாதையும் மாறாத காதலையும் கொண்ட அவர்கள் தங்கள் முயற்சி தோல்வி அடைந்த பின் பல்லாயிரம் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதே அதற்கான சாட்சியாகும் .அத்துணை இளைஞர்களும் இந்த சமூகத்தின் மிக முக்கியமான சொத்துக்கள் .ஆனால் அவர்களைப் பாதுகாப்பதற்கு வக்கற்றவர்கள் தான் இன்றைய அரசியல்வாதிகள் .அவர்கள் மீது இப்படி பழி போடுவதன் மூலம் தங்களுடைய அரசியல் அம்பலமாகாமல் காத்துக் கொள்வதே இப்போதைய தேவையாக இருக்கிறது.

அவர்கள் குறித்தெல்லாம் இந்த நாவலில் எந்த அளவுக்கும் சிந்திக்கப் படவேயில்லை மாறாக ஒரு எளிமையாக இது ஒரு தவறான ப்ராஜெக்ட் என்பது போன்ற ஒரு சித்திரத்தை வண்ணநிலவன் வழங்குகிறார்

உண்மையில் ஒரு வரலாற்று சம்பவங்களை பார்க்கும் பொழுது தான் இருக்க வேண்டிய இரண்டு பக்கத்திற்குமான  பார்வையை பார்க்க தவறுகிறார்.அந்த நாவல் முழுமையும் செ. கணேசலிங்கன் நாவல் எழுதுவதை அதுபோன்ற ஒரு ஒருதலைப்பட்சமான பார்வையாகவே இருக்கிறது.

வண்ணநிலவனின் பழைய நாவல்களை படித்துக்கொண்டு இப்போதைய இந்த நாவலை வாசிக்கும் பொழுது மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம் .ஏனெனில் அப்போது எழுதியது ஒரு இலக்கியவாதி என்கிற வண்ணநிலவன் .இப்போது இவர் எழுதிய வண்ணநிலவன் ஒரு அரசியல்வாதி .ஒரு அரசியல்வாதி எப்போதுமே கரடுமுரடாகவே இருக்கிறார். இதை இந்த நாவல் மெய்ப்பிக்கிறது.

Dr கோவிந்தராஜ் சுப்ரமணியன்.

 

அன்புள்ள ஜெ

வண்ணநிலவன் எழுதிய எம்.எல் சென்ற இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிக மோசமான நாவல். அதை ஒருவர் பாராட்டி எழுதி வெளியிட்டிருப்பது சோர்வூட்டுகிறது. வண்ணநிலவனின் பார்வையை ஒரு சோனித்தனமான உலகப்பார்வை என்று சொல்லலாம். நோய்கொண்ட பார்வை அது. சத்திழந்து வெளிறிய உடல் போன்றது. அதனால் ஒரு சின்ன வட்டத்தைக் கடந்து சிந்திக்கவே முடியாது. அவருடைய எல்லா கதைகளுமே ஒரு சின்ன குடும்பவட்டத்திற்குள் ஆண்பெண் உறவைப்ப்பற்றி பேசுபவை. அதுவும்கூட முதிர்ச்சியில்லாத இளைஞர்களின் கோணத்தில். அதை ஒருவகையான பாவனையான மென்மையும் நெகிழ்ச்சியுமாகச் சொல்வதனால் அந்த வயசில் அவை நல்ல இலக்கியமோ என்று தோன்றுகின்றன. கொஞ்சம் கடந்து வாசித்தால் சோர்வுதான் மிச்சம்

எம்.எல் அந்தச் சோனியான பார்வையில் இடதுசாரி இயக்கங்களைப்பற்றிப் பேசும் நாவல். ஒரு மிடில்கிளாஸ் கோழையின் பார்வை. அந்தப்பார்வை நாவலில் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையாக இருந்தால் சரிதான். ஆசிரியரின் பார்வையே அதுதான் என்றால் சலிப்புதவிர என்ன மிச்சம்? நான் ஒன்றும் இடதுசாரி இயக்கங்களின் ஆதரவாளன் அல்ல. ஆனால் அந்த இயக்கம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்க அந்தக்காலகட்டத்தில் உருவான ஓர் இடதுசாரி எழுச்சியின் பகுதி. மிகப்பெரிய கனவுகள் கொண்டது அது. இந்திய இலக்கியத்திலும் சினிமாவிலும் கலையிலும் அதன் பங்களிப்பென்ன என்று பார்த்தால் மட்டும் போதும் அது ஒருவகையான அசட்டுத்தனம் என்று நினைக்கும் வண்ணநிலவன் போன்றவர்களின் குறுகல் தெரியும்.

வண்ணநிலவனுக்கு எப்போதுமே வரலாற்றையோ சமூகவளர்ச்சியை ஒட்டுமொத்தமாகவோ சொல்லும் பார்வை கிடையாது. கீழ்நடுத்தரவர்க்கத்து மக்களின் லௌகீகமான துக்கங்களையும் பாலுறவுகளையும் அங்கே இங்கே பார்த்து கொஞ்சம்பூடகமாக எழுதும் இவரைப்போன்றவர்கள் அரசியலெழுத வந்தது மிகப்பெரிய தவறு

ஆர்.கணேசன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18
அடுத்த கட்டுரைராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா