எப்போது போர் தொடங்கியதென்று தெரியவில்லை. போர்முரசு ஒலித்ததை கேட்டோமா என்றே அர்ஜுனனுக்கு ஐயமாக இருந்தது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் கர்ணனை நோக்கி தான் சென்றுகொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். பல ஆண்டுகளுக்கு முன் முதல்முறையாக கலிங்கத்திற்குச் சென்று கடலை பார்த்தபோது அந்த ஆட்கொள்ளல் உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. மிகத் தொலைவிலேயே அவன் கடலின் முழக்கத்தை கேட்கத் தொடங்கினான். ஆனால் காற்றின் சுழற்சியில் அது அவன் தலைக்குப் பின்னும் இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது. பெருந்திரளொன்று அலைகொள்வதுபோல, கூச்சல்கள் குழம்பி பொருளற்ற முழக்கமென மாறியதுபோலத் தோன்றியது. அருகே எங்கோ பெரும் சந்தை இருப்பதாக, விழவொன்று கூடியிருப்பதாக, போர்க்களம் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனை அறியாமலேயே அவன் உள்ளம் எண்ணியது.
அவ்வாறு அவன் எண்ணுவதைக்கூட அவ்வெண்ணத்தைத் தொடர்ந்து அவன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளைக் கொண்டுதான் அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. எதிரில் தெரிந்த காட்சியிலிருந்து தன்னை விலக்கும் ஓசைகளை திரும்பித்திரும்பி நோக்கிய பின்னர் அங்கே வெறும் புறநிலம்தான் என உணர்ந்து மீண்டும் நோக்கியபோது தொலைவில் மண் மேலெழுந்து வானில் சற்றே வளைந்த கோடென நின்றிருப்பதை கண்டான். மரமோ செடிகளோ இல்லாத நீல நிலம். பின்னர் அதை நீலவண்ணம் பூசப்பட்ட பெரும்கோட்டைச்சுவர் என எண்ணினான். அதன் பின்னர்தான் துரட்டியால் குத்தப்பட்டதுபோல் அது கடல் என்று புரிந்துகொண்டான். அக்கணமே ஓசை சென்று அதில் பொருந்திக்கொண்டது. கொந்தளிப்போசையுடன் எழுந்து நின்று அலையடித்த அந்த நீர்வெளியைப் பார்த்தபடி அவன் கைநடுங்க அசைவிலாது நின்றான். நீர் அவ்வண்ணம் பொங்கி மேலெழுந்து தலைக்குமேல் நின்றிருக்கக் கூடுமென்பதை அவனால் கற்பனை செய்யவே இயலவில்லை.
விந்தையானதோர் தெய்வ ஆணைக்கு கட்டுப்பட்டதுபோல் அது தன்னைத் தன்னாலேயே வேலியிட்டுக்கொண்டு அங்கே நின்றது. நுரைக்குமிழிச் சுவர் அப்பரப்பு. ஒரு சிறுவிரல் தொடுகையில் உடைந்து பெருகி கரைக்கு வந்து ஒவ்வொன்றையும் அறைந்து சிதறடித்து தான் மட்டுமே ஆகி நின்றிருக்கும் என்று எண்ணச்செய்தது. அதன் விளிம்பில் அலைகள் நெளிந்தன. ஓடும் புடவையின் கீழ்மடிப்பின் அலைகள்போல. பறவைகள் அதன் மேல் இயல்பாக பறந்து சென்றன. கலங்கள் அதன் மேல் உள்ளங்கைகளால் ஏந்தி அசைக்கப்படுவதுபோல் நின்றுகொண்டிருந்தன. காற்றில் உலையும் நீண்ட சரடுமேல் எறும்புகள் வரிசையாக நின்றிருப்பதுபோல் என அவன் படகுகளை கற்பனை செய்தான்.
“எதனால் நீர் கரை நோக்கி வராமலிருக்கிறது?” என்று அவனுடன் வந்த இளம்வணிகன் கேட்டான். “பள்ளம் நோக்கி பெருக்கெடுக்கும் ஆணையை அதற்கு அளித்த தெய்வங்கள் பொறு என்று சொல்லி மறைந்துவிட்டன என்று என் மைந்தனுக்குச் சொன்னேன்” என்றான் முதிய வணிகன். திரும்பி அவன் நோக்கிக்கொண்டே நின்றிருப்பதைக் கண்டு நகைத்து “இதுதான் கடல்” என்றான். “தலைக்குமேல் இத்தனை நீர் எழுந்து நிற்கும் என்று நான் எண்ணியதே இல்லை” என்றான் அர்ஜுனன். “தலைக்குமேல் அல்ல. தொலைவை நாம் உயரமென எண்ணிக்கொள்கிறோம்.” அர்ஜுனன் அக்கணமே அதை விழியுணர்ந்து “ஆம், தொலைவு!” என்று எண்ணிக்கொண்டான்.
“தொலைவும் உயரமும் ஒன்றாவதை நாம் கடலில் மட்டுமே காணமுடியும்” என்றான் முதிய வணிகன். “இங்கு தொலைவென்பதற்கு பொருளே வேறு. கரையில் தொலைவென்பதை பலநூறு அடையாளங்களைக்கொண்டே நாம் வகுத்துக்கொள்கிறோம். ஊர்கள், மலைகள், ஆறுகள் என. கடலில் தொலைவென்பது நீர்வெறுமை. பெருந்தொலைவு முழு வெறுமை. இதோ இவ்வண்ணமே நீல மின்பரப்பு முடிவிலி வரை சென்றுகொண்டே இருக்கும். தன்னைத்தானே சுற்றிக்கொண்டே இருக்கும் ஆழி இது. பிறிதொன்றிலாததனால் பாழி.”
அவன் நீரை நோக்கி நீள்மூச்சுவிட்டான். அது நீரென்றே தோன்றவில்லை. “பளிங்குப் பரப்பென்று விழிமாயம் கூட்டுகிறது” என்றான். “அதன் மேல் சென்றுகொண்டிருக்கையிலும் கூட அவ்வாறு தோன்றும். இறங்கி நடந்துவிடலாமென்னும் எண்ணம் ஏற்படும். அவ்வழைப்பு மாலுமிகள் உளம் கலங்குகையில் ஆற்றல் கொள்கிறது. இறங்கி நடந்து சென்று மறைந்தவர்கள் பல்லாயிரம் பேர் உண்டு” என்றான் முதிய வணிகன். “அது வெறுமை என்பது ஒரு ஏமாற்று. அதற்கு அடியில் இப்புவி மேல் நாம் காணும் உலகத்தைவிட மும்மடங்கு, மூவாயிரம் மடங்கு பெரிய ஓர் உலகம் உள்ளது. இளையவனே, இந்தப் பெருநாவாய்களை நீருமிழ்ந்தே சிதறடிக்கச்செய்யும் மீன்கள் அங்கு உள்ளன.”
“இப்புவியில் உள்ள மானுடர்கள், பிற உயிர்கள் அனைத்தையும்விட ஆயிரம் மடங்கு உயிர்கள் அங்கு செறிந்திருக்கின்றன. மீன்கள், பாம்புகள், சிறகுவிரித்து நீந்தும் முதலைகள், சிப்பிகள். நாம் உயிரென்றும் உடலென்றும் எண்ணியிருக்கும் அனைத்துக் கற்பனைகளையும் கடந்த ஆழத்தில் இப்பெருங்கடலின் எடை அனைத்தையும் தன்னுள்ளேற்றி உயிர்வாழும் கரிய மீன்கள் உள்ளன. அவை அப்பேரழுத்தத்தில் மட்டுமே வாழக்கூடியவை, இழுத்து மேலெடுத்தால் அக்கணமே உடல் சரிந்து உயிர் விடுபவை. கடலின் ஆழத்தில் ஒரு துளி ஒளியும் சென்று சேர்வதில்லை, ஒலி என எதுவும் அங்கு அடைவதில்லை, இவ்வுலகிலிருந்து அதை நோக்கவோ கேட்கவோ எவ்வழியும் இல்லை. ஆனால் இப்புவியில் கைவிடப்பட்ட அனைத்தும் அங்கு சென்று சேர்கின்றன.”
“இங்கிருந்து ஒழிந்தவை அனைத்தையும் தெய்வங்கள் அங்கே கண்டெடுக்கின்றன. ஆகவேதான் நீத்தாரை கடல்புகச் செய்கிறோம். இங்கு அவர்கள் வாழ்ந்த உலகு அங்குதான் பிறிதொரு வடிவில் உள்ளது. அவ்வுலகில் அவர்களும் பிறிதொரு வடிவில் இருப்பார்கள்” என்றான் முதுவணிகன். “கடலென்பது ஒரு மாபெரும் உள்ளம். கடந்தவை அனைத்தும் இருளெனச் செறிந்த முடிவிலி. தெய்வங்களின் கைகளும் விரல்களும் அங்கே மீன்களென அலைகின்றன. ஒவ்வொன்றையும் தொட்டுத்தொட்டு உணர்கின்றன. அவ்விருள் மேல் கதிரவனின் ஒளி படுவதனால் இந்நீலவண்ணம் உருவாகிறது. இருளின் புன்னகை அது.”
“கடலை கதிரவனின் மைந்தன் என்று தொல்யவனர்கள் கூறுவதுண்டு. அவர்களின் வருணன் நீல உடல் கொண்டவன். ஓயாது எழும் கைகள் கொண்டவன். ஒற்றைச் சொல்லை ஊழி முழுக்க சொல்லி நிலைபெற்ற ஊழ்கம் அமைந்தவன். புவி முழுக்க அனைத்து மக்களும் கடலை பெருங்கொடையாளனாகவே எண்ணுகிறார்கள். மழையால் மண் குளிர்கிறது. அன்னம் உருவாகிறது. அன்னத்தில் சேதனை எழுகையில் உயிர் பிறக்கிறது. அன்னத்தை உண்டு உயிர் வளர்கிறது. மடிந்து உப்பாகி மீண்டும் கடலுக்கே மீள்கிறது” என்றான் முதுவணிகன். “மைந்தர்களே, ஆயிரம் பல்லாயிரம் யுகங்களாக இப்புவிக்கே அள்ளி அள்ளி அளித்துக்கொண்டிருக்கும் கைகளையே நீங்கள் அலைகளென்று பார்க்கிறீர்கள். கடல் அளித்த கொடையே இந்நிலம். அதைச் சூழ்ந்து தன் எல்லையை தானே வகுத்து நின்றிருக்கிறது கடல். நோக்குக, அந்த வெண்ணிற மணல்விளிம்பை! எத்தனை ஆயிரம் கோடி அலைகள் வந்திருக்கும்! ஒவ்வொன்றும் விழிக்குத் தெரியாத அவ்வெல்லைக்கோட்டில் முட்டி திரும்பிச் செல்கின்றன. கடல் தனக்கு அளித்துக்கொண்ட சொல் அங்கு நுண்ணுருவில் சரடென நின்றிருக்கிறது.”
அர்ஜுனன் இரு கைகளையும் விரித்தபடி கடல்விரிவை நோக்கி செல்லத்தொடங்கினான். முதுவணிகன் அவனுடன் நடந்தபடி “இளையவனே, கடல் மானுடரை இழுக்கும். அது கண்முன் எழுந்த பிரம்மம். முடிவிலி என மானுடன் முன் தோன்றும் பொருள்வடிவம் அது ஒன்றே. ஓங்குசொல் எழுந்த பெருநாவு. வான்நோக்கும் நீலவிழி. அறிந்ததும் மறந்ததும் கனவும் கடந்த ஆழமும் ஒன்றேயான அதன் ஆழ்தொலைவு. கடலில் இறங்கியவன் ஒருபோதும் மீள்வதில்லை. மேலும் மேலுமென விழைவுகொண்டு அதன் விரிவுதேடி செல்வான். மாலுமியாக அதன் மீது அலைவான். நிலத்தை வெறுப்பான். ஒருநாள் அதன் ஆழத்தில் மூழ்கி மறைவான்” என்றான்.
கடல்அலைகளை நோக்கி சென்று, சற்றும் தயங்காமல் அதிலிறங்கி, இடை கடந்து நெஞ்சு கடந்து கால் துழாவத்தொடங்கிய பின்னரும் அவன் சென்றுகொண்டிருந்தான். கரையிலிருந்து “இளையவரே, இளையவரே” என்று கூவிய வணிகர்கள் இருவர் பின்னர் நீரில் பாய்ந்து நீந்தி அவனருகே அணைந்து அவன் இடையில் சுற்றிய கச்சையை பற்றிக்கொண்டார்கள். “வருக! வருக!” என இழுத்துச்சென்று மணல்கரையில் நிறுத்தினார்கள். “என்ன செய்யவிருந்தீர்கள்? இது என்னவென்று முற்றுணர்ந்தீர்களா? இது ஆட்கொள்ளும் விரிவு. விரிவுகளை அணுகும் எவரும் தன்னை இழப்பார்.” அவன் பித்தன்போல கடலையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீர்த்துளியை வானம் கவ்வி நிறுத்தி வடிவத்தை வழங்குகிறது. மானுடருக்கு ஆணவமே இருப்பையும் பொருளையும் அளிக்கிறது. விரிவுகள் ஆணவத்தை அறைந்து சிதறடிக்கின்றன.”
அவன் மெல்ல தளர்ந்து “ஒளி கொண்ட கருமை” என்றான். “ஆம்!” என்று கடலை திரும்பிப்பார்த்தபின் இளம்வணிகன் சொன்னான். “கடல் தங்களை பற்றிக்கொண்டுவிட்டது. இனி மீளமீள கடலை நாடி வந்துகொண்டிருப்பீர்கள். நெடுங்கடல் பயணங்களை நிகழ்த்துவீர்கள். கடலிலிருந்து முற்றகன்று உங்களால் இனி வாழ இயலாது.” அர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “இனி நீங்கள் நீலத்தால் ஆட்கொள்ளப்படுவீர்கள். விழி மூடினால் அக்கணமே அந்நிறம் உங்களை சூழ்ந்துகொள்ளும்.”
தொடங்கிய சில கணங்களிலேயே என்றும் அப்போர் அவ்வாறே நிகழ்ந்துகொண்டிருந்ததை அர்ஜுனன் உணர்ந்தான். ஒவ்வொரு போருக்குப் பின்னரும் அந்தப் போர் அம்புகளாலும் வில்லாலும் நிகழத்தொடங்குவதற்கு நெடும்பொழுதிற்கு முன்னரே அது தொடங்கியிருப்பதை உணர்ந்ததுண்டு. அக்களம் கூடுகையில், அல்லது அதற்குரிய வஞ்சங்கள் எழுகையில், அதற்கும் அப்பால் அந்த உளநிலை முளைவிடுகையில். பீஷ்மரிடம் போர் தொடங்கியது அஸ்தினபுரியின் அவையில் திரௌபதி சிறுமைசெய்யப்பட்டபோது. துரோணருடன் போர் தொடங்கியது அவன் துருபதரை வென்று கொண்டுசென்று அவர் காலடியிலிட்டு அவரில் ஊறிய நச்சுப்புன்னகையை கண்ட அக்கணத்தில். அப்போதே முதல் அம்பு அம்பறாத்தூணியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. அது நாணில் அமைந்து காற்றில் எழுவதற்கு அத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டன.
குருக்ஷேத்ரத்தில் கர்ணனுடன் போர்புரிகையில் குருதியும் புழுதியும் கலந்து வழிந்த உடலுடன் தோல்வியின் வஞ்சம் எரிந்த உள்ளத்துடன் முதல்நாள் அந்தியில் போர்முரசு கேட்டு காண்டீபத்தை தாழ்த்துகையில் அவன் உணர்ந்தான் அப்போர் அவன் கர்ணனை உளம் கொள்ளத்தொடங்கிய நாளில் தொடங்கிவிட்டதென்று. அல்லது அதற்கு முன்னரே. ஏழு பிறவியில் தொடரும் வஞ்சம் என இவனுடன் எனக்கென்ன உள்ளது? ஒருவேளை சூதர் கதைகளில் சொல்லப்படுவதுபோல இவன் மெய்யாகவே கதிர்மைந்தனும் நான் இந்திரன்மைந்தனும்தானா? அத்தேவர்கள் தங்களுக்குள் கொண்ட பகைதானா இது?
அவர்களுக்குள் என்ன போட்டி இருக்க இயலும்? அள்ளிக் கொடுத்துக்கொண்டே இருக்கும் கதிரவன். இப்புவியில் விளைந்தவை, கனிந்தவை, முழுத்தவை அனைத்தையும் தனக்கென எடுத்துக்கொண்டே இருக்கும் இந்திரன். அவர்களுக்கிடையே ஒரு போதும் ஒத்திசைவு நிகழ இயலாது. அவர்கள் முரண்பட்டு நிற்பதினூடாகவே இப்புடவி முடையப்பட்டுள்ளது. எனில் இப்பகைமை எவ்வகையிலும் நான் வகுத்துக்கொள்ள இயலாதது. இது எனக்கும் இவனுக்குமான போரல்ல. என்னிலும் இவனிலும் எழுந்து நிகழ்ந்து முடிவது. முன்பும் இவ்வாறே வாலியிலும் சுக்ரீவனிலும் நிகழ்ந்திருக்கும். உலகமெங்கும் இருவருக்கும் மைந்தர்கள் பிறந்து பூசலிட்டுக்கொண்டே இருப்பார்கள். சிம்மங்களில், புலிகளில், மான்களில், மீன்களில், எறும்புகளில், உயிர்க்குலங்கள் அனைத்திலும்.
ஏனென்றால் விண்வாழும் அவர்களின் தந்தையர் இருவரும் ஓரன்னை வயிற்றில் எழுந்த உடன்குருதியர். அவர்கள் இருவரும் போரிட்டுக்கொள்வதை விண்ணில் எங்கோ இருந்து அன்னை அதிதி நோக்கிக்கொண்டிருக்கிறாள். முடிவிலிவரை நீள்வது அவளுடைய பெருந்துயர். மண்ணையும் விண்ணையும் செயல்விசை கொண்டதாக ஆக்கும் மாறா நெறி அவள் கண்ணீரின்மேல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றல்மிக்க மின்னரசன் வெய்யோனுடன் என்றேனும் இணைந்துள்ளானா? அன்னை முன் அவர்கள் இருவரும் சென்று நின்றுள்ளனரா? அன்னை புன்னகைக்கும் ஒரு பொழுது எழக்கூடும். இருவரும் தழுவிக்கொண்டால் ஓருடலென்றாவார்கள். அன்று இப்புடவிப்பெருநெசவு பிரியத்தொடங்கும். தன்னைத்தான் அழித்து இன்மையென்றாகும்.
கர்ணனின் இருபுறமும் அவன் மைந்தர்கள் தேரிலெழுந்திருந்தனர். அர்ஜுனனுக்கு இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் சதானீகனும் ஊர்ந்தனர். இருபுறமும் விரிந்த படைகளை நடத்தியபடி சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் போரிட்டனர். போர் தொடங்கிய சற்று நேரத்திலேயே அம்புகளால் வானம் நிறைந்தது. கர்ணன் முழு விசையுடன் போரிட்டான். அவனுடைய அம்புகளினூடாக உருவான வான்கோட்டைக்கு அப்பால் அவர்கள் தொடுத்த அம்புகள் எதுவும் சென்று சேரவில்லை. ஆயினும் அர்ஜுனன் கைசலிக்காது அம்புகளால் கர்ணனை எதிர்த்தான். ஆயிரம் பல்லாயிரம் நாகங்கள் விண்ணில் புழைதேடி தவித்தன. நாகங்களால் அறைபட்டுப் பின்னி மண்ணில் விழுந்தன. அவன் விழிகளும் கைகளும் முற்றாக ஒத்திசைந்து போரிட உள்ளம் சொற்குவைகளைக் கலைத்தபடி அலைபாய்ந்துகொண்டிருந்தது.
போரில் வெற்றி தோல்வி இலாது, ஒருவர் கை ஒருவருக்குத் தாழாது நிகழ்கையில் போரென்பதே பொருளற்ற ஒன்றாகிவிடுகிறது. இப்புவியில் ஒருவர் ஒருவரை வெல்லவே இயலாதென்று தெய்வங்கள் வகுத்திருக்குமெனில் போரென்பதே நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. வெற்றி என்றொன்றை படைத்த தெய்வங்கள் ஒருபோதும் ஒழியாத போரை உள்ளும் புறமும் நிகழ்ந்துகொண்டிருக்கும்படி அமைத்தன. போர் ஒருவரை ஒருவர் கொல்வதில் நிறைவுறுவதில்லை. கொல்வதென்பது ஒரு தொடக்கமே. கொன்ற பின்னர் இறந்தவன் மேல் தன் புகழால் மேலும் ஒரு வெற்றியை அடைந்தாகவேண்டும். அதன்பொருட்டே இறந்தவனை வென்றவன் புகழ்ந்து பெரிதாக்குகிறான். வென்றது எளிய வெற்றி அல்ல என்று நிறுவுகிறான். வென்றது ஊழென்று அமைக்கிறான். வெற்றியை மீளமீளச் சொல்லி நிலைநிறுத்தவேண்டும். விதைக்குமேல் பெரும்பாறையைத் தூக்கி வைத்ததுபோல அடியிலிருந்து முளைத்து வளைந்தெழுந்து தோற்றவர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
போர் வெற்றி என்பது ஒரு பண்டமாற்று வணிகம். வென்றவனுக்கு இவ்வுலகு கிடைக்கிறது. தோற்றவர்கள் என்றுமுள புகழை அடைகிறார்கள். இப்புவியில் வீரன் என்று நானிருப்பேன். தன் உடலையும் உயிரையும் கொடுத்தவனாக இவன் எழுவான். தன் ஆணவத்தால் தோற்றவர்கள்கூட கொடையாளர்களாக புகழ் கொண்டெழுகிறார்கள். தோற்றவர்களை எங்கேனும் எவரேனும் முழுக்க மறந்திருக்கிறார்களா என்ன? நினைவில் நிறுத்துவதற்காகவே இப்போரெனில் இப்போது நான் செய்துகொண்டிருப்பதென்ன? என் பேருருவை, என் கனவுவடிவை இப்பல்லாயிரம் அம்புகளால் பெருந்திரையென விரித்து வானில் ஆணி அறைந்து நிறுத்துகிறேனா? இவ்வெண்ணங்கள் என்னுள் ஓட இங்கு நான் செய்துகொண்டிருப்பதென்ன?
போரில் கர்ணனை மானுடர் ஒருபோதும் வெல்ல இயலாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஏனென்றால் அவன் ஆசிரியனை எந்த மானுடனும் வென்றதில்லை. என் ஒவ்வொரு அம்பும் அதையே சொல்கிறது. ஒவ்வொரு அம்பையும் அவன் அம்பு அறைந்து வீழ்த்துவதையே இங்குள்ளோர் காண்கிறார்கள். ஒவ்வொரு அம்பிலும் அவன் என்னைத் தடுப்பதற்கு அப்பால் ஒருகணம் மேலெழுந்திருக்கிறான் என்பதை நான் மட்டுமே அறிவேன். ஒவ்வொரு கையசைவிலும் அவனில் கூடும் அந்த ஒத்திசைவை நான் எங்கும் அறிந்ததில்லை. சுடரென எழுந்து நெளிந்தாடி என் உடல் கொள்ளும் இந்த ஒத்திசைவைவிட முற்றிலும் இருபுறமும் நிகர் கொண்டு அசைகின்றதா என்று விழிக்கு திகைப்பூட்டி அவன் எழுப்பும் அம்புகளின் ஒத்திசைவு ஒரு படி மேலானது. ஓரிடத்தில் நான் களைத்து சலிக்கக்கூடும். இவன் கடந்து செல்வான்.
இவன் என்னை கடந்து செல்லும் கணம்தான் என்ன? ஒவ்வொரு முறையும் இவன் அம்பால் நான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அது எங்ஙனம் நிகழ்ந்தது என்று எண்ணிச் சென்று அவ்விடத்தை தொட்டு திகைக்கிறது என் உளநுண்மை. எவ்வண்ணமோ அது நிகழ்ந்திருக்கிறது. வைரத்தின் ஓர் அரைக்கணத் திரும்பலில் அதன் முழு ஒளித்தோற்றமும் மாறிவிடுவதுபோல். எங்கு இம்முறை நான் தோற்றேன்? எவ்வண்ணம் என் அம்பு பொருளிழந்தது? அவன் வில் என்னை வெற்றி கொள்ளும் கணத்தை மட்டும் தொட்டெடுப்பேன். அதை என்னுள் நூறாக, ஆயிரமாக, பல்லாயிரமாக பிரித்து மீளமீள அடுக்கி கண்டடைவேன், இவனை வெல்வதெப்படி என. இவனில் என்னில் இல்லாத எது எஞ்சுகிறது என. எவ்வகையில் நான் என் கனவுகளுக்கு இப்பால் நின்றிருக்கிறேன் என. நான் எய்தவேண்டிய தொலைவு அக்கணத்துளியில், அவ்வணுவிடையில் பெருகிவிரிந்திருக்கிறது.
கர்ணனின் அம்புகள் அவன் தலைக்குமேல் வெடியோசை எழுப்பின. அர்ஜுனனின் தேர்மகுடம் அனல்கொண்டு உருகி நெளிந்தது. விழிக்கு முன் பொன்மஞ்சள் அலைகளென ஒளி திரையிட காட்சிகள் நெளிந்தமைந்தன. சூழ்ந்த புகைப்புழுதிக்குள் விழி தெரியாது அவன் தேர் மிதந்தலைவதுபோல் சுழித்து உலைந்தது. கர்ணனின் நாணோசையை மட்டுமே அர்ஜுனன் கேட்டான். அவ்வதிர்விலிருந்து எழும் அம்பை உய்த்தறிந்தான். அவ்வம்பு எழுப்பும் மெல்லிய சீழ்க்கையிலிருந்து அதன் திசையையும் வடிவையும் உணர்ந்தான். நுண்புலன் ஒன்றால் அம்பு தொடுத்து அவ்வம்பை அறைந்து விண்ணிலேயே சிதறடித்தான். தலைக்குமேல் ஆயிரம் அனல்பறவைகள் என அம்புகள் முட்டிக்கொள்ளும் பொறிகள் நிறைந்தன. மின்கள், சுடர்வுகள், தழல்வுகள், எரிவுகள் வானை மூடின.
செவிகளில் வெடிப்பின், அதிர்வின், கொப்பளிப்பின் வெவ்வேறு ஓசைகள். கண்களுக்குள் நீலமும் பச்சையுமென வெடித்த ஒளிக்குமிழ்களை கண்டான். எக்கணம் எக்கணம் என்று அவன் உள்ளம் வியந்தது. பல்லாயிரம் அம்புகளை இதோ காற்றில் நிறுத்தி வைத்திருக்கிறேன். அவன் எடுக்கும் ஒவ்வொரு அம்புக்கும் இணையான அம்பு. நான் எடுக்கும் ஒவ்வொரு அம்புக்கும் இணையான அம்பு ஒன்று அவனிடம் இருக்கிறது. அப்பால் ஒன்றும் இருக்கிறது. எடுத்து தொடுக்கும்போதே அவன் அதை அறிவான், வந்து வென்ற பின்னரே நான் அறிவேன். அதை முன்னறியக்கூடுமெனில் நான் அவனை வெல்வது இயல்வதாகும். அது அங்கிருப்பதை எனக்குச் சொல்லும் உணர்வு என்ன? அது பெருகி என் துணைத்தெய்வமென எழலாகாதா? இதோ என் முன் தெய்வப்பேருரு என நான் கண்ட என் தலைவன். ஆனால் இப்போது இத்தேரில் நான் முற்றிலும் தனித்திருக்கிறேன்.
நாணறுந்து காண்டீபம் துள்ளித்துள்ளித் தெறித்துச் சரிந்தது. அக்கணமே அர்ஜுனன் தேர்த்தட்டில் குப்புற விழுந்து தன் மேல் கடந்து சென்ற கொலைவாளியை ஒழிந்தான். அதன் விம்மல் கடந்துசென்ற பின்னரும் அவன் காதுகளில் ஒலித்தது. தேர்த்தட்டிலிருந்து பாய்ந்து பின்னால் விழுந்து தரையில் புரண்டு அவன் கடந்து செல்ல ஏழு அம்புகள் அவனைத் தேடி தேர்த்தட்டை வந்தறைந்து தூண்களை உடைத்து தேர்மகுடத்தை தேரிலேயே விழச்செய்தன. அர்ஜுனன் கொல்லப்பட்டான் என எண்ணி பாண்டவப் படைகள் பேரொலி எழுப்பின. அதைக் கேட்டு கௌரவப் படைகளும் வெற்றிக்குரல் எழுப்பின. ஆனால் கடிவாளத்தைப் பற்றிய கையை இறுக்கி மறுகையை விண்ணில் தூக்கி அர்ஜுனன் இறக்கவில்லை என்று இளைய யாதவர் காட்டினார்.
திகைத்து சொல்லழிந்து நின்ற பாண்டவப் படைகள் சுருள்வில் எழுவதுபோல் உயிர்கொண்டு “வெற்றி! விஜயனுக்கு வெற்றி! வெல்லப்பட முடியாதவனுக்கு வெற்றி!” என்று கூச்சலிட கௌரவப் படைகள் திகைத்து பின்னர் சினவெறி கொண்டு “வெல்க! அங்கர் வெல்க! விண்ணொளி மைந்தர் வெல்க! கதிரோன் வெல்க!” என்று கூவினர். அர்ஜுனனைத் தேடி காற்றில் எழுந்த கர்ணனின் அம்புகள் வெடிப்பொலியுடன் மின்னொளியுடன் களத்தை வந்தறைந்தன. யானைகளை அரிந்து வீழ்த்தின. தேர்களை சிதறடித்து தீப்பற்றி எரியச்செய்தன. அர்ஜுனன் அவற்றினூடாக மழைத்துளிகளை கொசு ஒழிவதுபோல் கடந்து சென்று தன் படைக்குவைக்குள் புதைந்து மறைந்தான். அவன் சென்ற வழியெங்கும் மண்ணை அறைந்து குழியெழுப்பி புழுதித்திரை சமைத்தன கர்ணனின் அம்புகள். இறந்த யானைகளும் புரவிகளும் வீரர்களும் உடைந்த தேர்களுமாக அப்பாதை களத்தில் தெளிந்தது.
தேரை பின்னுக்குத் திருப்பி வளைத்து படைகளுக்குள் கொண்டு வந்த இளைய யாதவர் இறங்கி அங்கே எழுந்து உடல் தளர்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனை நோக்கி ஓடிவந்தார். “என்ன ஆயிற்று? நலமாக இருக்கிறாயா?” என்றார். அர்ஜுனனை அணுகிய சகதேவன் அவனை தொடமுயன்று கையை விலக்கினான். அர்ஜுனனின் கவசங்கள் அனல்கொண்டு சிவந்து தோல்பட்டைக் கட்டுகள் பொசுங்கிக்கொண்டிருந்தன. அவனை நோக்கி ஓடிவந்த மருத்துவஏவலர் அவன் மேல் நீரை கொட்ட அவை நாகமென சீறி நீர்ப்புகை எழ வைத்தன. தோல்பட்டையை வெட்டி அறுத்து கவசங்களைக் கழற்றி அப்பாலிட்டனர். அர்ஜுனன் தளர்ந்து அவ்வண்ணமே மண்ணில் விழுந்து கண்களை மூடிக்கொண்டான். சகதேவன் “உடலில் அனல் வாழ்வதை இப்போதுதான் காண்கிறேன்” என்றான்.
அர்ஜுனனின் அருகே குனிந்த இளைய யாதவர் “நீ உயிர் பிழைத்திருக்கிறாய். அதுவே இத்தருணத்தில் வெற்றி எனக்கொள்க! உன் ஊழ் அவனை வெல்வதே என்பதற்கான சான்று அது. எழுக!” என்றார். அர்ஜுனன் கண்மூடி அசைவிலாது கிடக்க “ஐயம் வேண்டாம். நீ அவனை வெல்வாய். ஏனென்றால் முன்னர் இந்திரன் மைந்தனை கதிர்மைந்தன் வென்றான். இது உன் முறை” என்றார். அவன் தோளை மெல்ல தொட்டு “அவனை வெல்வது எத்தனை அரிது, அது எத்தகைய புகழை உனக்கு சேர்க்கும் என்பதன்பொருட்டே இத்தோல்விகள். இதற்காக நாளை நீ மகிழக்கூடும்” என்று இளைய யாதவர் மேலும் சொன்னார்.
கண்களைத் திறந்த அர்ஜுனன் “யாதவரே, என் நாணை அறுத்த அந்த அம்பு எங்கே?” என்றான். “நீ கேட்பாய் என்று தெரியும்” என்று கூறி இளைய யாதவர் தன் கையிலிருந்த மிகச் சிறிய அம்பை எடுத்து அவனிடம் காட்டினார். நான்கு விரற்கடை நீளம் கூட இல்லாத அந்த அம்பு மூன்றாம் பிறையென வளைந்து படையாழியின் பாதிபோல் இருந்தது. அர்ஜுனன் அதை கையிலெடுத்துப் பார்த்தான். அதன் முகமுனை மட்டுமல்லாமல் அதன் தண்டும் ஒருபுறம் கூர் கொண்டிருந்தது. “இது ஆழியும் அம்பும் ஒன்றே ஆனது. இப்பகுதியில் எவரிடமும் இல்லாதது” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் புன்னகைத்து எழுந்து “ஆம், நான் அவனை வெல்வேன்” என்றான். இளைய யாதவர் புன்னகைத்தார்.
அருகே நின்ற சகதேவன் “ஏன், மூத்தவரே?” என்றான். “இது மிக அரிய அம்பு. தக்கணத்திலிருந்து இங்கு வந்தது. என்னை வெல்ல அறிந்த அம்புகளுக்கு அப்பால் ஒன்று அவனுக்கு தேவைப்படுகிறது என்பதே அவன் எல்லையை காட்டுகிறது. இத்தகைய அரிய அம்புகளுக்கு ஓர் எல்லை உண்டு. தெரிந்த அம்புகளில் நாம் கொள்ளும் கலைத்திறனுக்குத்தான் முடிவே இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான்.