கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

 

அரிய பெரும் அறப்போராட்டத்தின் விழுமியங்களையும் விளைவுகளையும் அருகில் உணரும் தருணத்தில் சாமானிய மனித மனம்  அதை முழுவதுமாக உள்வாங்க முடியாமல் நடுங்குகிறது.  பெரிதும் மரத்துப்போன ஒரு சமூகத்தில் நம்பிக்கையையும் மன உறுதியையும் மட்டுமே துணையாகக் கொண்டு போராடும் இத்தகைய நிகழ்வுகள் குறைந்த பட்ச மக்கள் அங்கீகாரம் கூட கிடைக்காமல் வெற்று செய்திகளாக மனிதர்களைக் கடந்து செல்வது வேதனைக்குரியது.

 

மூன்று வேறுவேறு வயதினரிடம் இதைப்பற்றி விவாதித்தேன். இருவர் குறிக்கோள் உயர்ந்ததெனினும் இக்கால கட்டத்தில் உண்ணாநோன்பு பயனற்றதென்றனர். இருவரும் ஒரு தலைமுறை இடைவெளி கொண்டவர்கள். பிறகு காந்தியில் ஆரம்பித்து குக்கூ காட்டுப்பள்ளியினர்  வரை அறத்தின் விழுமியத்தால் கட்டமைக்கப்பட்டு தன் வழியில் செல்பவர்களைப் பற்றி நானறிந்தவரை விளக்க முயன்றேன். தன்னறம் என்ற சொல்லை வாழ்க்கையில் முதன்முறையாக கேட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

கடந்த ஞாயிறன்று வெளியான டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிக்கையில் கங்கைக்கரையோர நகர்களின் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் அதற்கான செலவிடப்படும் தொகைகள் குறித்தும் ஒரு பதிவு வந்திருந்தது.  அதில் கங்கையைத் தூய்மை செய்யும் முயற்சியில் எந்த முன்னெடுப்பும் நிகழவில்லை என ஒரு சில வரிகளில் சொல்லப்பட்டிருந்தது.  மாத்ரி சதன் பற்றி எதுவும் குறிப்பில்லை.  மறுநாள் இதழில் ஸ்வாமி ஆத்மபோதானந் அவர்கள் தண்ணீரைக்கூட ஏப்ரல் 27ல் இருந்து நிறுத்தப்போவதாக பத்தாம் பக்கத்தில் ஒரு செய்தி.  ‘ஆமாம் படித்தேன்’ என்கிறார்கள் கேட்டவர்கள். அதைத் தாண்டி எதுவும் இச்சமூகத்தைச் சென்றடையவில்லை.  நீரையும் துறந்து ஒருவர் மேற்கொள்ளும் கடுந்தவம் எப்படி ஒரு உணர்ச்சியையும் உண்டாக்காமல் கடந்து செல்லக்கூடும்?

 

அறத்தின் வழிகளனைத்தும் புதர்மண்டிக்கிடக்கின்றன.  அறத்தை சொல்லிக்கொடுக்கும் எந்த ஒரு நிகழ்வும் பொது வெளியில் இன்றில்லை.  நுகர்  இன்பத்தில் திளைத்து அதிலேயே உழன்று வாழ்வது தெரியாமல் செத்துப்போக தயாராக இருக்கிறார்கள்.  தன்னைச்சுற்றி ஆடிகளை நிறுத்திக்கொண்டு தான் தானென்று தன் சிறுமைகளை அணிந்து வியந்துபோகிறார்கள்.  அதற்கு வெளியில் நடக்கும் அனைத்திற்கும்  வெட்டுப்படப்போவது தெரியாமல் விழிக்கும் மந்தமான ஆட்டு விழிப்பார்வையே பதில்.  பதைத்து ஒரு ஆம்புலன்ஸிற்கு வழிவிடுவது மறைந்து அதன் பின்னால் சென்றால் வேகமாகச் சென்றுவிடலாமென்ற கீழ்மை நிறைந்து கிடக்கிறது.  அறம் பிழைக்கும் ஒரு சமூகத்தில் வேறென்ன நடக்க இயலும்?

 

நிறைவேறும் சாத்தியக்கூறுகள் பற்றி மனதில் கொள்ளாமல், ஆகப் பெரும் அரசு மற்றும் பெருந்தொழில் இயந்திரங்களை எதிர்த்து தன்னறம் ஒன்றே துணையாக போரிடும் இவர்களைப் பற்றி பொது வெளியில் மேலும் பேசப்படவேண்டும்.  சுதந்திரப் போராட்டம் பற்றியும் சுதந்திர உணர்வைப் பற்றியும் புரிதலை ஏற்படுத்தாதன் விளைவு, வெயிலில் சிறார்களை நிறுத்தி மிட்டாய் கொடுத்து ( இப்போது சாக்லேட்டாக இருக்கலாம்) சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் கண்டுகளித்து செல்வதோடு முடிகிறது. உங்கள் ஒரு உரையில் கூட ” சுதந்திரம் கட்டற்று பொறுப்பின்மையை சென்றடைந்துவிட்டதென்று’ கூறியிருப்பீர்கள்.   இந்த அறப்பிழை  தொடர்ந்து பல தளங்களில் இரண்டு தலைமுறைகளைக்கடந்து சென்றுவிட்டது.

 

காந்தி போன காலகட்டத்தில் இருந்தமையால் பெருமை கொண்டவர்.  அது அவரது நல்லூழ்.  அதற்கு பெருவாரியான அன்றைய மக்களின் அறம் சார்ந்த உணர்வும் காரணமென்று நினைக்கிறேன்.  ஒருவேளை காந்தி இன்றைய சமூகத்தில் இருந்திருந்தால், கூட வர நாலு பேர் இல்லாமல் போராட்டம் செய்ய முயன்று மண் லாரியில் அடிபட்டு பத்திச்செய்தியாக உயிர் துறக்கக்கூடும்.

 

ஆயினும் பிரம்மத்தின்  ஏதோ ஒரு கருணையால்  இத் தருணத்தில் இவர் உயிர் காப்பாற்றப்படவேண்டுமென்று விழைகிறது மனம். அல்லல் படவில்லையாயினும் செயலற்ற ஆனால்  மனம் கலங்கி, இறையை வேண்டும் மனிதர்களின் ஆற்றாத கண்ணீர் அந்த  அறம் பிழைத்த செல்வத்தைத் தேய்க்கட்டும்.

 

வேண்டுதலுடன்

நா. சந்திரசேகரன்

 

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24
அடுத்த கட்டுரைவல்லினம் இணைய இதழ்