கங்கைப்போர்- கடிதங்கள்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

 

அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

ஈரோடு விவாத பயிற்சிப் பட்டறையில் அளிக்கப்பட்ட குக்கூ காட்டுப்பள்ளியின் “நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு” வாசித்திருந்தேன்.  அத்துடன் அதன் வெளியீடான ”உரையாடும் காந்தி” வாங்கி வாசித்திருந்தேன்.  எதிர்வினை ஆற்றாதிருந்தது அறப்பிழையே.

 

சுவாமி நிகமானந்தர், சுவாமி கியான் ஸ்வருப் சானநத் கங்கையைக் காக்க உயிர் அளித்த அவர்களின் தியாகம் வீண்போகக்கூடாது என்று விழைகிறேன்.  சுவாமி ஆத்மபோதானந்தரின் உண்ணாவிரதம், அவர் உயிர் காக்கப்பட வேண்டும் என்று விழைகிறேன்.  கருத்தளவிலேனும் தம் எதிர்வினைகளின் வாயிலாக, விவாதங்களின் வாயிலாக தம் அற உணர்வினையும் மற்றவரது அற உணர்வினையும் விழிப்பிக்க முயலவேண்டும்.

 

இரண்டு விஷயங்கள், ஒன்று சூழியல் குறித்த விழிப்பு இல்லை – இது தொடர் முயற்சியின் மூலம் சரி செய்யப்படக் கூடியது.  இரண்டு, தன்னெஞ்சறிவது பொய்த்தே பழகி இருக்கிறது.  இதை சரி செய்வது மிகப்பெரும் சவால்.  இச்சவாலை ஏற்கும் துணிவு காந்தியத்திற்கு மட்டுமே உள்ளது.  அறம் வென்றே தீரும் என்று நம்புகிறேன்.

 

பட்டறைக் கழிவுகளின் நாற்றத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காவிரியைக் கடக்கும்போது தோன்றுவது அல்ல கர்னாடக பேருந்தின் மீது கல்லெறிந்து காப்பதுதான் காவிரியை காப்பது.  எதிர்பக்கதிற்கும் காவிரியை காப்பது என்பது அப்படித்தான்.

 

பெரும்பொழுது முகநூலில் கழித்து ஓயாமல் தன் புகைப்படங்களைப் போட்டுக்கொண்டு (அவ்வப்போது கையில் மண்வெட்டியுடன், சேற்றில் கால்வைத்து, மரத்தடியில் நின்று அப்படி ஒன்றிரண்டேனும் போட்டுக்கொள்ள வேண்டும் அப்போதுதான் சூழலியல் போராளி) மாரியம்மன் விழாவினால், மூடநம்பிக்கைகளால் சுற்றுச்சூழல் நாசமாபோகிறது என்று முற்போக்கு காட்டி, தனிப்பட்ட தன்னல நோக்கங்களுக்காக சூழலியல் போராளி வேடத்தை வியாபார உத்தியாக கையாண்டு பெரும் வர்த்தக வாய்ப்பு நோக்கி நிற்பவர்களையும் கடந்துதான் உண்மை அறம் ஒலிக்க வேண்டும்.

 

குக்கூவென்னும் குரல் பேரறறத்தின் காதுகளில் விழும், கங்கை பேரறறத்தால் காக்கப்படும் என்று நம்புகிறேன். என்னால் ஆவன சிறிதெனினும் செய்ய சித்தமாய் இருக்கிறேன்.

 

அன்புடன்,

விக்ரம்,

கோவை.

அன்புள்ள ஜெ

 

கங்கையைக் காப்போம் என்னும் இந்த இயக்கம் பற்றி நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் திமுக, இன்னொருவர் பாஜக. திமுக காரர் கங்கையைப் பாதுகாப்போம் என்பதே வகுப்புவாதம் என பேசினார். ஊரிலே எல்லா ஆறும் சாக்கடையாத்தான் இருக்கு, கங்கை மட்டும் என்ன ஸ்பெஷல் என்று கேட்டார். கங்கை என்பதனால்தானே சாமியர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூவம் சீர்கெட்டதனால் உண்ணாவிரதம் இருக்க வருவார்களா என்றார். கூவம்போன்ற நதிகளுக்காகவும் சாமியார்கள் போராடுகிறார்கள் என்றேன். கூவத்துக்காக நீங்கள் போராடலாமே என்று கேட்டேன். கூவத்தை கலைஞர் ஏற்கனவே சுத்தம்செய்துவிட்டார் என்றார். அவருக்கு முப்பது வயதுகூட இருக்காது

 

பாஜக ஆள் பிராமணர். இன்னும் சின்ன வயசு. அவரிடம் சொன்னபோது சன்யாசிகள் தற்கொலை செய்யக்கூடாது, உயிரை மாய்த்துக்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை என்றார். இதை எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்து மதத்தில் பல்வேறு வகையில் தற்கொலை செய்வதை போற்றித்தானே சொல்லப்பட்டுள்ளது? கங்கையில் குதிப்பதே மோட்சம் என்று சொல்லப்பட்டுள்ளதே. தற்கொலை செய்துகொண்டு பேயாக ஆன ஒருவராவது இந்து மதத்தில் உண்டா என்றேன். அவரால் சொல்லமுடியவில்லை. கங்கைமாதாவை மோடி காப்பாற்றிவிடுவார் என்றார்கள். அதற்காக ஏதாவது ஒரு நடவடிக்கையாவது எடுத்தாரா என்றேன். இனிமேல் எடுப்பார் என்றார்

 

சட்டென்று கோபப்பட்டு இந்தச் சாமியார்கள் ஏமாற்றுக்காரர்கள், பாரம்பரிய மடத்தை சேர்ந்தவர்கள் அல்ல என வசைபாட ஆரம்பித்தார். திமுககாரரும் இதேபோல ஏமாற்றுக்காரர்கள் என்றுதான் அவர்களைச் சொன்னார் என்று சொன்னேன்

கட்சிமனநிலை என்பது ஒருவகையான நவீன மூடநம்பிக்கை என்ற எண்ணம் உறுதிப்பட்டதி

 

எம்.ராஜேந்திரன்

முந்தைய கட்டுரைஅருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசேர்ந்து முதிர்தல்