அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா
பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
லக்ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா
பச்சையப்பா கல்லூரியை நிறுவிய வள்ளல் பச்சையப்பர், தினமும் கூவம் நதியில் குளித்துவிட்டுத் தான் தன் அன்றாட அலுவல்களைத் துவங்குவார் என ஒரு கதை சொல்லப்படுகிறது. அது, கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்பு. சென்னை ஒரு வணிக நகராகத் துவங்கியதின் முதல் பலி, அடையாறு மற்றும் கூவம் ஆறுகள். இன்று, எண்ணூர்க் கழிமுகத்தில் இயங்கும் அனல்மின் நிலையம், கொசஸ்தலை ஆற்றின் கழுத்தை நெரித்துக் கொல்லத்துவங்கியிருக்கிறது. மேட்டுப்பாளையம் விஸ்கோஸ், திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள், ஈரோட்டின் சாயப்பட்டறைகள் முறையே, பவானி, அமராவதி. நொய்யல், காவிரியாறுகளைக் காவு வாங்கியுள்ளன. 80 களில் துவங்கி, கங்கையைச் சுத்தம் செய்யும் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை. ஹரித்துவார் தொழில் நகரத்தின் கழிவுநீர்ச் சுத்திகரிக்கும் ஆலை மட்டுமே தினமும் 20 லட்சம் லிட்டர் தொழிற்கழிவுகளை, சுத்திகரிக்காமல், கங்கையில் கலக்கிறது என்கின்றன செய்திகள். ஆறுகள், நீர்நிலைகள் என்றாலே, எதிர்மறைச் செய்திகளே நம் செவிகளில் விழுகின்றன. இதற்கு விடிவுகாலமே இல்லையோ என்னும் சோகம் எவர் மனதிலும் எழாமல் இருக்காது.
ஆனால், இன்னும் நம்பிக்கையின் சிறுகீற்று உயிருடன் இருக்கிறது என்பதற்கான ஒரு அடையாளமாக, ராஜஸ்தான் மாநிலத்தில், ஆள்வர் மாவட்டத்தில் பாயும் ஆர்வரி என்னும் சிறு நதி இருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்தில் வறண்டு போன அந்த நதி, 1990 களில் உயிர் பெற்று, தற்போது வருடம் முழுவதும் நீர் இருக்கும் நதியாக மாறியுள்ளது. இந்தியாவில், மிகக் குறைந்த மழை பெய்யும் பாலைவன மாநிலமான ராஜஸ்தானில், ஒரு வறண்டு போன நதி, வருடம் முழுதும் நீரிருக்கும் நதியாக உயிர்த்தெழுந்தது எவ்வாறு?
உத்தரப்பிரதேசத்தின், பாக்பத் மாவட்டத்தின், தாவ்லா என்னும் கிராமத்தின் ஒரு பெரும் நிலக்கிழாருக்கு, 1959 ஆம் ஆண்டு, மூத்த மகனாகப் பிறந்தவர், ராஜேந்திர சிங். நா லாயக் (உதாவக்கரை) என் அன்போடு தந்தையால் அர்ச்சிக்கப்பட்டவர். அவரை மேலும் உதவாக்கரையாக்க, 1974 ஆம் ஆண்டு, காந்தி அமைதி இயக்கத்தில் (Gandhi peace foundation) இருந்து ரமேஷ் ஷர்மா என்பவர், தாவ்லாவுக்கு வந்து, ராஜேந்திர சிங்கின் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். அப்போது, அவர் கிராமத்தைச் சுத்தம் செய்தல், குடிப்பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள் போன்றவற்றில் ராஜேந்திர சிங்கைப் ஆற்றுப்படுத்தினார். கல்லூரியில் படிக்கையில், அவசர நிலை அமுலில் இருந்தது. அப்போது, ஜெயப்பரகாஷ் நாராயணனின் மாணவர் இயக்கமான, ‘சாத்ரா யுவ சங்கர்ஷ் வாஹினியில்’, தன்னை இணைத்துக்கொண்டு, அதன் உள்ளூர்த் தலைவரானார். பின்னர் ஜெயப்ரகாஷ் நாராயணின் உடல் நலிவுக்குப் பின்னான அரசியல் குழப்பங்களால், அதிலிருந்து விலகினார். ஜெயப்ரகாஷ் நாரயணுடன் பழகிய சில காலத்திலேயே, தன் வாழ்க்கையின் நோக்கம் மிகத் தெளிவாகியது என்கிறார் பிற்கால நேர்காணல் ஒன்றில். ஆயுர்வேத மருத்துவம் பயின்றவர்.
பின்னர், 1980 ஆம் ஆண்டு, ஜெய்ப்பூரில், முதியோர் கல்வித்திட்டத்தில், ஒரு அரசு அலுவலராகப் பணியில் சேர்ந்தார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத் தீ விபத்தில் மாண்டவர்களுக்கு, உதவ, ’தருண் பாரத் சங்’, (இளைய இந்தியா சங்கம்) என ஒரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதில் இணைந்து கொண்டார். ஆனால், அதன் பணிகளைப் பற்றிய கேள்விகளை எழுப்பிய போது, அதன் தலைவர்கள் அனைவரும், சங்கத்தை நீயே வைத்துக் கொள் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.
அரசுப்பணியின் பொருளின்மை அவரைச் சில காலம் உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு நாள், தன் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் விற்றுக் காசாக்கிக் கொண்டு தன் நண்பர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு பேருந்தில் ஏறி, அதன் இறுதி ஸ்டாப்புக்கு 5 டிக்கெட் எடுத்தார். அது ஆள்வர் மாவட்டம், தானகாஜி தாலுக்காவின், கிஷோரி என்னும் கிராமம்.
திடிரெனப் பஸ்ஸில் வந்து இறங்கிய ஐவரை, கிஷோரி கிராம மக்கள், தீவிரவாதிகளோ எனச் சந்தேகித்தார்கள். அப்போது, பஞ்சாபில் தீவிரவாதம் வளர்ந்து கொண்டிருந்த காலம். உள்ளூரில், வேலை எதுவும் இல்லாததால், கிராமத்தில் இருந்து இளைஞர்கள் எல்லாம் வேலை தேடி, நகர்களுக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள். வயதானவர்களும், குழந்தைகளும் மட்டுமே ஊரில் இருந்தார்கள், எனவே அவர்களுக்கு, சந்தேகத்தோடு, பயமும் வந்தது. நல்ல வேளையாக, ஒரு உள்ளூர்ப் பெரியவர், கவுண்டமணித்தனமாக, இந்த ஊருக்கெல்லாம், எந்தத் தீவிரவாதி வரப்போகிறான் என தலையிட்டு, உள்ளூர் ஹனுமான் கோவிலில் தங்க வழிசெய்தார்.
சில நாட்கள் என்ன செய்வது என யோசித்து, ஆயுர்வேத மருத்துவமனையைத் துவங்கினார். நண்பர்கள், உள்ளூர்ச் சிறுவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் எனத் திட்டமிட்டார்கள். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மாமூ மீனா என்னும் முதியவர் அவரை வழிமறித்து, ‘இங்கே என்ன செஞ்சிட்டிருக்கீங்க?’, எனக் கேட்டார்.
‘ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கிறோம்; குழந்தைகளுக்கு இலவசமாகப் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம்’, என்று சொன்னார் ராஜேந்தர். ’அதையெல்லாம் வச்சி சோறு திங்க முடியாது; இங்க ஒரு குளம் வெட்டினா, மழைத் தண்ணி தேங்கி விவசாயத்துக்கு உதவும்.. அதனால, நாளக்கி, நீ கடப்பாறை, மண்வெட்டி கொண்டு வா’, எனச் சொல்லி அனுப்பினார். அதில் பொருள் இருப்பதாக அவர் உள்ளுணர்வு சொல்லியது.
மாமூ மீனா சொன்னதை, நண்பர்களுடன் விவாதித்தார். ‘எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கிழவன் சொல்வதையெல்லாம் செய்து கொண்டிருக்க நாங்கள் முட்டாள்களில்லை’, என அடுத்த நாள் காலையிலேயே இருவர் கிளம்பி விட்டார்கள். ராஜேந்திர சிங் மண்வெட்டி, கடப்பாறை, மண் அள்ளும் சட்டி சகிதம் மாமூ மீனாவிடம் சென்றார். ஒரு நீரோடை ஓடி வரும் பாதையை மறித்து ஒரு குளம் வெட்டச் சொன்னார் மாமூ மீனா..
அடுத்த ஆறுமாதங்கள், தினமும் 8-10 மணிநேரம், தனியாக அந்த ஊர்க்குளத்தைத் தோண்டினார். மாமூ மீனா மிகவயதானவரானதலால், அவரால் உடல் உழைப்பு செய்ய முடியவில்லை. இந்த கிறுக்குத்தனமான உடல் உழைப்பைக் கண்ட மற்ற இரண்டு நண்பர்களும், சில காலத்தில் கிளம்பி விட்டார்கள்.
மழைக்காலம் துவங்கியது. நகரத்துக்கு வேலைக்குச் சென்றிருந்த இளைஞர்கள் பலர் விவசாய வேலை செய்ய ஊர் திரும்பி வந்தார்கள். மாமூ மீனா, அவர்களை, ராஜேந்திரோடு சேர்ந்து உழைக்கச் சொன்னார். ஆனால், கூலியில்லாமல் உழைக்க அவர்கள் மறுத்துவிட்டார்கள். சில தன்னார்வ நிறுவன்ங்களை அணுகி, கொஞ்சம் தானியங்களுக்கு ஏற்பாடு செய்தார் ராஜேந்திரா. சிலர் இணைந்து அவ்வப்போது உழைத்தார்கள். கிட்டத்தட்ட 15 அடி ஆளமுள்ள அந்தக் குளத்தை வெட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆயின. மூன்றாவது ஆண்டில், நல்ல மழையில் குளம் நிரம்பியது. குளத்துக்குக் கீழ்ப்புறம் இருந்த கிணறுகளில் எல்லாம் நீர் நிரம்பியது. மாமூ மீனா, சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தன் உறவினர்களுக்கெல்லாம், இந்த அதிசயத்தை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார். பல கிராமங்களில் இருந்து குளத்தை வந்து பார்த்துச் சென்றார்கள்.
இந்த வெற்றியைப் பற்றி மக்களுக்குச் சொல்ல, ஒரு பாதயாத்திரை சென்றார்கள். அந்த ஆண்டு, 9 கிராமங்களில், குளங்கள் வெட்டப்பட்டன. பின்னர் அது 36, 70 என உயர்ந்தது. இந்தப் பணிகள் துவங்கும் முன்பு, இந்தப் பகுதி வறட்சிப் பகுதி என அரசு ஆவணங்களில் பதியப்பட்டிருந்தது. நீர் அதிகமாகி, வேளாண்மை துவங்கிய பின்பு, அரசு ஆவணங்களில் பயிர் விளையும் பகுதி என மாற்றப்பட்டது. எல்லோரும் வரலாற்றை மாற்றுவதாகச் சொல்வார்கள். நாங்கள் புவியியலை மாற்றினோம் என்கிறார் ராஜேந்திர சிங் வேடிக்கையாக.
ஆர்வரி என்பது, ஆள்வர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் மட்டுமே ஓடும் ஒரு சிறுநதி. (ஆள்வர் என்னும் பெயரின் வேர்ச்சொல்லாக இருக்கலாம்). பனோட்டா கொல்யாலா என்னும் கிராமத்தில் இருந்து, இது துவங்குகிறது. தருண் பாரத் சங்கின் உதவியோடு, நதியின் ஊற்றுமுகத்தில், மக்கள் இணைந்து, ஆரவல்லி மலையில் ஒரு மண் தடுப்பணையை உருவாக்கினார்கள். அதே போல, அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில், மலைச்சரிவுகளில் உள்ள கிராமங்களில் எல்லாம், சிறு சிறு தடுப்பணைகளைக் கட்டினார்கள். அவ்வாறு மொத்தம் 375 தடுப்பணைகள் ஆர்வரி நதிக்கு நீர் வரும் வழியில், ஆரவல்லி மலைச்சரிவுகளில் கட்டப்பட்டன. பருவமழைக்காலங்களில், தடுப்பணைகளில் நீர் நிரம்பி, கசிந்து, ஆர்வரி நதிக்கு வரும் நீர் வருடம் முழுவதும் வரத்துவங்கியது. 1995 ஆம் ஆண்டு முதல், வருடம் முழுவதும் ஆர்வரியில் நீர் இருந்தது.
ஆர்வரி நதி ஓடத் துவங்கியதும், நதியோரக் கிராமங்களில் வருடம் இரு போக வேளாண்மை துவங்கியது. பிழைப்புக்காக பெரும் நகரங்களில், உடல் உழைப்பைத் தந்து, சேரிகளில் வசித்து வந்த மக்களில் பலர் ஊர் திரும்பி, நிரந்தரமாக வசிக்கத் துவங்கினார்கள். இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் பொருட்கள், காய்கறிகள், பெரும் நகரங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இத்துடன் பிரச்சினையும் வந்தது.
நதி காய்ந்து கிடந்த போது கண்டு கொள்ளாத அரசு, ஓடத்துவங்கியதும், அதற்கு உரிமை கொண்டாட வந்தது. நதியில் மீன் பிடிக்க டெண்டர் விட்டது. இதை மக்கள் எதிர்த்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் அசைவம் உண்ணாதவர்கள். நாங்கள் உருவாக்கிய நதியின் பயன்கள் எங்களுக்கே சேர வேண்டும் எனப் போராடினார்கள். இதை எதிர்த்து அரசு, நீதிமன்றத்துக்குச் சென்றது. நதியை உயிர்ப்பித்த மக்களின் பங்களிப்பை அங்கீகரித்த நீதிமன்றம், இந்த நதியை மீட்டெடுத்த மக்கள், இதை நிர்வகிக்க ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அதுவரை, நதியின் நிர்வாகம், அரசு வசம் இருக்கும் எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பின் விளைவாக, ‘ஆர்வரி மக்களவை (Arwari Parliament)’, என்னும் மக்கள் அமைப்பு உருவானது. இந்த நதிநீரைப் பயன்படுத்தும் 72 கிராமங்களில் இருந்து, 2 பேர் வீதம் 144 உறுப்பினர்களைக் கொண்டது இந்த மக்களவை. இதன் முக்கிய நோக்கம், இந்த நதியின், ஒருங்கிணைந்த நதிநீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை வழிகளைப் பாதுகாத்து, உறுதி செய்வது ஆகும். இது காந்தியக் கொள்கைகளான, சமத்துவம் மற்றும் பங்கேற்பு மேலாண்மையை வலியுறுத்துகிறது. முடிவுகள், கிராம அளவில் மக்களால் பேசி எடுக்கப்படுகின்றன.
இந்த மக்களவை வருடம் இருமுறை கூடி, கொள்கை முடிவுகளை அலசித் தீர்மானிக்கின்றது. தினசரி நதிநீர் மேலாண்மையைக் கவனித்துக் கொள்ள ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மக்களவை, நதிநீர் மேலாண்மைக்கான கீழ்க்கண்ட விதிகளை ஏற்படுத்தியுள்ளது.
- அதிக நீர் தேவைப்படும் கரும்பு, நெல் போன்றவை பயிரிடப்படக் கூடாது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
- ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு, பருவ மழை துவங்கும் வரை (கோடை காலம்), ஆற்றிலிருந்து யாரும் நீர் எடுக்கக் கூடாது.
- ஆர்வரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆள்துளைக் கிணறுகள் அமைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
- நீர்ப்பிடிப்புப் பகுதியின் மேற்பரப்பில் பார்லி, மக்காச் சோளம், கம்பு பயிரிடுதலும், கீழ்ப்பகுதியில் காய்கறிகள் வளர்த்தலும் அனுமதிக்கப் பட்டவை.
- ஆர்வரியின் நீர்ப்பரப்பு பகுதியான பைரோவ்தேவ் மக்கள் சரணாலயத்துக்குள், கோடரி கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
- உணவுக்காக மட்டுமே மீன் பிடித்தல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
- தானிய, காய்கறி மொத்த வியாபாரம் தடை செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூர் உற்பத்தியும், நுகர்வுமே பிரதானமாக வைக்கப்படுகிறது.
- மற்ற ஊர் மக்களுக்கு, இந்த ஊர் மக்கள் நீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்க உதவ வேண்டும்.
- வெளியூர்களில் இருந்து வரும் கால்நடைகளுக்கு, இந்தப் பகுதியில் மேய அனுமதியில்லை.
- மேய்ச்சல் நிலங்களில், சுழற்சி முறையில் மேய்ச்சல் முறை.
- ஆர்வரி நதி நீர்ப் பகுதியான 405 சதுர கிலோமிட்டரில், தொழிற்சாலைகள் துவங்கத் தடை.
இந்த விதிகளில், கரும்பு பயிர் செய்யக் கூடாது என்னும் விதி பல உறுப்பினர்களால், மிகப் பலமாக எதிர்க்கப்பட்டது. ஏனெனில், கரும்பு பணப்பயிர். வருமானம் அதிகம். பல விவாதங்களுக்குப் பிறகு, 25% நிலத்தில் கரும்பு பயிர் செய்து கொள்ளலாம் என ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஆர்வரி மக்களவைக்கு, சட்ட அதிகாரம் இல்லை. மக்களின் ஒத்துழைப்பால் இயங்குகிறது. இதை நடத்த, தருண் பாரத் சங்க ஊழியர்கள் உதவுகின்றனர். இந்த இயக்கத்தைப் பாதுகாக்க, ஒரு சட்ட அங்கீகாரத்துக்கான முயற்சியில் தருண் பாரத் சங்கம் தற்போது பணியாற்றி வருகிறது.
ஆர்வரி நதிநீர்த்திட்டம் வெறும் மழைநீர் சேகரிப்புத் திட்டமல்ல. அது ஆர்வரி நதியின் மொத்த ஆளுகைக்குட்பட்ட பகுதிச் சூழலையும், அங்கு வாழும் மக்களையும், அவர்கள் தேவைகளையும் ஒரு முழுமையான நோக்கோடு, அந்தப் பகுதியில் வாழும் மக்களே வடிவைமைத்துக்கொண்ட, சமூகப் பொருளாதார வாழ்வியல் அணுகுமுறையாகும் (Integrated socio economic livelihood project). வருடம் 600 மில்லி மீட்டர் மழைமட்டுமே பெய்யும் வறண்ட பிரதேசம் (மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில், வருடம் சுமார் 3000 மில்லிமீட்டர் மழைபெய்கிறது). அந்த 600 மி.மீ மழையின் மூலம் உபரியாக வரும் நீரை, நதியும் ஊற்றுமுகத்திலிருந்து நதி ஓடும் வழியில் தடுப்பணைகள் கட்டி, சேகரித்து, அதை ஒட்டிய கிராமங்களில் வேளாண்மைக்கு உபயோகித்தது. தடுப்பணைகளில் இருந்து மெல்ல மெல்லக் கசிந்து நதியில் கலந்த நீர், வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே பெய்யும் மழை நீரைத் தேக்கி, வருடம் முழுதும் சீராக நதிக்கு நீரை அளித்தது. ஆர்வரி மக்களவை என்னும் பங்கேற்பு ஜனநாயக அமைப்பு, அந்த நதியில் கிடைக்கும் நீரை, ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பயன்பெறும் வகையில் பங்கிட்டுக் கொடுத்தது. இந்த மக்களவை விவாதங்களில், தனிமனிதத் தேவைக்கும், சமூகத்தின் மொத்தத் தேவைக்குமிடையேயான பேரத்தில், அனைவருக்கும் சமத்துவமான (equitable) ஒரு பங்கீடு எட்டப்பட்டது.
‘இந்த உலகில் அனைவரின் அடிப்படைத் தேவைகளுக்கான அனைத்தும் உள்ளன’ என்னும் காந்தியின் வாக்கியம், மேற்கண்ட ஆர்வரி மக்களவையின் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது. தனி மனித அடிப்படைத் தேவைக்காக, பொதுச் சொத்தை நீடித்து நிற்கும் முறையில் பயன்படுத்துவதற்கும், தனி மனிதப் பேராசை அல்லது மேலாதிக்கம், பொதுச் சொத்தை அழிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு, ஆர்வரி மக்களவையின் விதிகளில் தெரிகின்றன.
தருண் பாரத் சங்கம் மக்கள் உதவியோடு, நீரோடும் வழிகளில், மண் தடுப்பணைகளைக் கட்டியது ஆர்வரிப் பகுதியில் பெரும் நேர்மறை விளைவுகளை உண்டாக்கினாலும், சாரிஸ்கா புலி வனப் பாதுகாப்புப் பகுதியில் பெரும் வெற்றியைப் பெறவில்லை. அப்பகுதியில், சுண்ணாம்புக்கல் / பளிங்குக்கல் குவாரிகள், சட்டத்தை மீறி உருவாகியிருந்தன. சிறு தடுப்பணைகளில் தேங்கும் நீர், ஆறுகளை உயிர்ப்பிப்பதற்கு பதிலாக, குவாரிகள் உருவாக்கிய பெரும் குழிகளுக்குச் சென்று, யாருக்கும் பயன்படாமல் போனது.
குவாரிக் கொள்ளையர்கள் வேகமாகப் பெருகி வந்தனர். அவர்கள் தொழில், உலகின் மிகப் பழமையான ஆரவல்லி மலைப்பகுதியைக் குதறிப்போட்டது. சுரங்களில் இருந்து தூக்கியெறியப்பட்ட மண்ணும், கல்லும், சாரிஸ்கா புலிப் பாதுகாப்பு வனப்பகுதியைப் பெரிதும் பாதித்தது. வன விலங்குகள் வாழும் சூழல் அவதிக்குள்ளாகியது. பெரும் சூழியல் சமநிலையின்மை உருவாகி வந்தது. தருண் பாரத் சங்கம், உள்ளூர் மக்களை ஒன்றிணைத்து, ‘ஆரவல்லி மலைத் தொடரைக் காப்போம்’, என ஒரு தொடர் போராட்டத்தைத் துவங்கியது. உச்சநீதி மன்றத்தில், ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தது. 1991 ஆம் ஆண்டு, உச்ச நீதி மன்றம், ஆரவல்லி மலைத்தொடர்களில் குவாரிகள் செயல்படத் தடை விதித்தது. 1992ஆம் ஆண்டு, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஆரவல்லி மலைதொடர்ப் பகுதிகளில், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல் குவாரிகள் செயல்படத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, 470 குவாரிகள் மூடப்பட்டன.
ஆனால், இதன் பின்விளைவுகள் ராஜேந்திர சிங்கை உறங்கவிடவில்லை. தருண் பாரத் சங்க ஊழியர்கள் மிரட்டப்பட்டனர். தாக்கப்பட்டனர். அவர் மீதும், நிறுவனம் மீதும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டன. புலிகளை வேட்டையாடுகிறார் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. மூன்று பெண்களைக் கற்பழித்தார் என ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
ஆனால், காலப்போக்கில், வனத்துறைச் செயலர் போன்ற உயர் அதிகாரிகள், இவர்களின் களப்பணியை நேரில் கண்ட பின்பு, அரசுடனான மோதல் குறைந்து, நட்புறவாக மாறியது. சாரிஸ்கா புலிகள் சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதிகள் முழுவதிலும், வனத்தை உயிர்ப்பிக்க, நீர்நிலைகளை உருவாக்க அவரிடம் வேண்டுகோள் வைத்தது அரசு. 1985 ஆம் ஆண்டு ஐந்து புலிகள் இருந்தன. 2001 வாக்கில், அந்தத் தொகை 26 ஆக உயர்ந்தது. சாரிஸ்கா புலிகள் சரணாலயம் முழுதும் குளங்கள் வெட்டப்பட்டு, நீர்நிலைகள் உருவானது அதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக்க் கருதப்படுகிறது. முன்பு, சாரிஸ்கா சரணாலயத்தில், கோடையில், ஒரு சில இடங்களில் மட்டும், லாரிகளில் நீர் கொண்டு வந்து நிரப்ப்ப்படும். புலி வேட்டையாளர்கள், அங்கே மறைந்திருந்து, இருளில் நீர் அருந்த வரும் புலிகளை வேட்டையாடுவார்கள். ஆனால், சரணாலயம் எங்கும் நீர்நிலைகள் உருவான பின்பு, அவற்றைத் தேடிச் செல்வது கடினமாகவும், உயிருக்குப் பெரும் ஆபத்தாகவும் மாறிவிட்டது என்கிறார்கள்.
தருண் பாரத் சங்கம், தருண் ஜல் வித்யாபீத் (தருண் நீர்க் கல்விநிலையம்) என்னும் ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. நாடெங்கிலும், நீர்நிலைப் பராமரிப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். நாடெங்கும் இருக்கும் நீர்ப்பராமரித்தல் தொடர்பான மரபான நுட்பங்களையும், நவீன தொழில் நுட்பத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக இது செயல்படுகிறது. இதற்கான தொழில்நுட்பவியலர்களையும், தலைவர்களையும் உள்ளூர் அளவில் உருவாக்குதல் இதன் முக்கிய நோக்கம்.
இந்தக் கல்விநிலையத்தில் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. பட்டங்கள் அல்ல. மக்களுடன் கலந்து திட்டங்களை உருவாக்குதல், தன்னார்வ முயற்சிகளை வளர்த்தெடுத்தல், உரிமைகளுக்காகப் போராடும் முறைகள், பிரச்சினைகளுக்கான சட்ட ரீதியான தீர்வுகளைத் தேடுதல் போன்றவற்றில், கிராம அளவில் இருக்கும் தலைவர்களுக்கு இருக்கும் அறிதல் மிகக் குறைவு. தருண் நீர்க் கல்விநிலையம், இந்தத் தளத்தில் பயிற்சி அளித்து, கிராமத் தலைவர்களை, காந்திய வழியில் தீர்வுகளைத் தேடும் வழியில் ஆற்றுப்படுத்துகிறது.
இது தவிர, மாநில மற்றும் தேசிய அளவில், நீர் மேலாண்மை தொடர்பான கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து, அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுகிறது.
அகில இந்திய அளவில், டாக்டர்.ஜி.டி.அகர்வால் அவர்கள் தலைமையில், ‘கங்கையைக் காப்போம்’, என்னும் ஒரு போராட்ட இயக்கம் துவங்கப்பட்டது. அவரது தலைமையின் கீழ், தருண் பாரத் சங்கம் இந்தப் போராட்டத்தைப் பல தளங்களிலும் கொண்டு சேர்த்தது. ஜி.டி.அகர்வால், கங்கையைக் காக்கும் ஒரு திட்டத்தை உருவாக்க வலியுறுத்த, இரண்டு முறை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இதனால், மத்திய அரசு, வேறு வழியின்றி, 2009 ஆம் ஆண்டு, கங்கையை தேசிய நதியாக அறிவித்தது. தேசிய கங்கை நதிநீர் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இதன் விளைவாக, பாகீரதி நதியில் கட்டப்பட இருந்த ஒரு அணைக்கட்டுத் திட்டம் கைவிடப்பட்டது. ஸ்வாமி சானந்த் என அழைக்கப்பட்ட அகர்வால், பண்டிட் மதன் மோகன் மாள்வியா துவங்கிய கங்கா மகாசபாவின் புரவலர் ஆவார். இவர் ரூர்க்கி பொறியியல் கல்லூரியில், கட்டுமானப் பொறியியல் பயின்றார். கலிஃபோர்னியாப் பல்கலையில் மேற்படிப்புப் படித்து விட்டு, ரூர்க்கி கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். இந்தியச் சுற்றுச் சூழல் சட்ட விதிகளை உருவாக்குவதிலும், அரசு சுற்றுச் சூழல் நிர்வாக அமைப்பை உருவாக்குவதிலும் பெரும் பங்காற்றியவர். இரண்டு முறை அரசை எதிர்த்து, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தோல்வியடைந்த அவர், இறுதியில் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி வெற்றி பெற்றார். இவர் தருண் பாரத் சங்கத்தின் உதவித் தலைவருமாவார்.
தருண் பாரத் சங்கமும், ராஜேந்திர சிங்கும், தங்கள் பணிகளுக்கான பல நூறு விருதுகள் வாங்கியிருந்தாலும், இரண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. 2005 ஆம் ஆண்டு, ஆர்வரி நதியை உயிர்பெறச் செய்ததற்காக, ஆஸ்திரேலியா நதிகள் அமைப்பு வழங்கிய, திஸ் நதி விருது முதன்மையானது. அதை விட முக்கியமானது, 2015 ஆம் ஆண்டு அவர் பெற்ற, நீருக்கான நோபல் பரிசு எனச் சொல்லப்படும், ‘ஸ்டாக்ஹோம் நீர் விருது’.
வெறும் விருதுகளால் அளந்துவிடக் கூடியது அல்ல ராஜேந்திர சிங் அவர்களின் பங்களிப்பு. இந்தியாவின் சமூக, அரசியல் கொள்கைகளின் போதாமையினால், சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகள் மேலாதிக்கம் செலுத்திவரும் இந்தக் காலகட்டத்தில், இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை, அளவான வளம் என்னும் சமூகத்தில், காந்தியப் பொருளாதாரக் கோட்பாடுகளின் தேவைக்கும், வெற்றிக்கும் முன்னுதாரணமாக நின்று கொண்டிருப்பது மிக முக்கியமானது.