அரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2

அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்
அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்தொடர்ச்சி

 

அவன்

தன்ராஜ் மணியின் இந்த கதை இயந்திரங்களுக்கு மனிதர்களின் உள்ளுணர்வை ஊட்டுவதையும், கூட்டு நனவிலி அமைப்பை உருவாக்குவதை பற்றியும் பேசுகிறது. 2080ல் நடப்பதாக சொல்லப்படுகிறது கதை – அதில் உள்ள மனிதர்களையும் அவர்களின் மொழியையும் கொஞ்சம் அந்த காலத்தை ஒட்டி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது மிகவும் கடினம் தான். ஒரு துப்பறியும் கதைக்குறிய களத்தையும் அதற்கான வேகத்தையும் கதை கொண்டிருப்பது சிறப்பு. ARTIFICIAL INTELLIGENCE கணித்த மனிதனின் செயலை ‘அவன்’ செய்வானா, மாட்டானா என்ற தவிப்பை வாசகனுக்கும் கடத்துகிறது.

இன்றைய தேதியில் கணினி துறையில் வேகமாக முன்னேறி வரும் துறைகள் ARTIFICIAL INTELLIGENCE , MACHINE LEARNING, DATA SCIENCE. எல்லா நிறுவனங்களும் மும்முரமாக அதில்தான் கவனம் செலுத்துகின்றன. மனித மூளையில் எப்படி தகவல்கள் சேகரிக்க படுகிறதோ அப்படி இயந்திரங்களும் தகவல்களை சேகரித்து கொள்வதையும், சேகரித்த தகவல்களின் மூலம் புள்ளி விவரங்களை உருவாக்கிக் கொண்டு, அதன் மூலம் வருங்கலாத்தை கணிக்கும் யூகங்களை வளர்ப்பதில் பெரிதும் கவனம் செலுத்துகின்றன. இத்தகைய வளரும் துறையை களமாக கொண்டு அதன் வளர்ச்சியையும், வழிகளையும் புனைவாக ஆக்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

எல்லா மனிதருக்கும் ஒரு உள்ளுணர்வின் வழியேதான் எந்த அதிசயமும் நிகழ்கிறது. கவிதையை போலவே கதையை போலவே மனிதன் செய்யும் எல்லா தொழிலுமே உள்ளுணர்வின் மூலமே தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கின்றன. கணினியின் முன்பு பல நாட்கள் போராடியும் வேலை செய்யாத மென்பொருள் ப்ரோக்ராம்கள் திடீரென ஒரு உள்ளுணர்வின் வழிகாட்டுதலில் தீர்க்கப்படும். இக்கதையில் அவன் அடிக்காமல் இருப்பதற்கு உள்ளுணர்வும், நமக்குள் பொதுவாக உருவாகியிருக்கும்  கூட்டு நனவிலியும் தான் காரணம் என்று சிவா கண்டுபிடிப்பதும் அத்தகைய உள்ளுணர்வால் தான். வென்றவன் அவன்தான், கொன்றவன் அவன்தான், செத்தவன் அவன்தான் என்பதுபோல எல்லாமே அந்த உள்ளுணர்வின் வெளிப்பாடுதான். கிரிக்கெட் மேட்ச்சை அதை பார்த்துக்கொண்டிருக்கும் கோடான கோடி மக்களின் கூட்டு நனவிலி கூட தீர்மானிக்குமென்று நான் எண்ணியிருக்கிறேன். அத்தகைய கூட்டு நனவிலியும், உள்ளுணர்வும் இயந்திரதிற்கும் எதிர்காலத்தில் கிட்டும் என்பது இன்று புனைவில் சாத்தியப்படுவதை போல நாளை நிஜத்திலும் சாத்தியமாகும். கற்பனையிலிருந்துதானே நிஜம் பிறக்கிறது.

*

கடவுளும் கேண்டியும்

நகுல்வசனின் இந்த கதை புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமியும்’ அழகாக மீளுருவாக்கம் செய்துள்ளது. ஒரு பழைய பாடல் ரீமிக்ஸ் ஆகி  கேட்பதை போன்ற ஒரு துள்ளலான உணர்வை தந்தது. அதே சமயத்தில் மூலத்தின் மீதான வியப்பையும் ஏக்கத்தையும் அதிகரித்தது. சிறுகதைகளில் ரீமேக் எனக்கு புதிதாகவும், கவர்வதாகவும் இருந்தது. மொழிநடையும் மூலத்தின் நடையையே கொண்டிருப்பது ஆசிரியரின் சவால் மற்றும் அவரடைந்திருக்கும் வெற்றி.

பழைய கதையில் கந்தசாமிக்கு வந்திருப்பது கடவுள் என்று தெரிந்தும் அவருடன் சகஜமாக மனிதனை போலதான் பழகுவார். கடவுளிடம் எந்த வரங்களையும் கேட்டு பெறமாட்டார். இந்த கதையில் கேண்டி வந்திருப்பது கடவுளென அறிந்திருக்கவில்லை. அறிவியலின் வளர்ச்சியில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை கடவுளுக்கும் கேண்டிக்குமான உரையாடலின் வழி சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் தூரங்கள் மிக சுருங்கிவிடும் என்பதை கதை மிக எளிதாக பின்புலத்தில் சொல்லி செல்கிறது. பிராட்வேயிலிருந்து தினமும் அமெரிக்காவிற்கோ, பிரிட்டனிற்கோ தினமும் வேலைக்கு சென்று வரும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. தூரத்தை சொன்னதை போலவே மற்ற முன்னேற்றங்களான VR, ARTIFICIAL

INTELLIGENCE போன்றவற்றையும் கதையின் தேவையோடு இணைத்திருக்கலாமென தோன்றியது. அவற்றை சொல்வதற்காகவே சில யுக்திகள் கையாண்டிருப்பதாக பட்டது. உலகமெல்லாம் வருங்காலத்தில் டாலரே பொதுவான கரன்சியாகும் என்பது அரசியலையும் தொடுகிறது.

கடவுள் உருவாக்கிய அனைத்தையும் மனிதனாலும் உருவாக்க முடிந்ததை காணும் கடவுளின் மனநிலை கதையில் அழகாக பதிவாகியிருக்கிறது. கடவுளின் இயல்பான அன்பையும் கருணையையும் அவர் மனிதனிடம் கடைசிவரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஆனால் அது கடைசிவரை நிகழ்வதாய் இல்லை. அதனால் தான் சொல்லாமல் கொள்ளாமல் நூறு டாலரை வைத்து விட்டு சென்று விடுகிறார் போலும். மனிதனுக்கு புரியும் மொழி டாலர் மட்டும்தானே.

*

யாமத்தும் யானே உளேன்

சுசித்ராவின் இந்த கதை மிக அற்புதமான வாசிப்பனுபவத்தை தந்தது. பெரும் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் நாவல்களும் ஏற்படுத்தும் உளக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கதையின் நீளம் பெரியதாக தோன்றினாலும் அவசியமற்ற எதுவும் கதையில் இல்லாதது போல்தான் தெரிகிறது. வாசிக்கும் போது சில நேரங்களில் தொடர்நது வாசிக்க முடியாத சலிப்பையும் ஏற்படுத்தியது. கதையின் நீளமோ அல்லது தொடக்கத்தில் நிலவும் புரியாத தன்மையோ அதற்கு காரணமாக இருக்கக்கூடும்.  கதையின் இறுதி தருணங்களில்தான் கௌதமனை ஒரு தானியங்கி இயந்திரமென விடுவிக்கிறார்.  உண்மையில் அதற்கு  பின்பு மனதில் எழும்பும் அதிர்வுகள் அதிகம். அதுவரை அந்த அதிர்வுகளை ஏற்படுத்த்தும் கல்லாக அதற்கு முன்பு நிகழும் அத்தனையும் தேவைதான் என்றே நினைக்கிறேன். இருந்தும் அதை அறியும் வரை ஏனோ ஒரு சலிப்புத்தன்மை கூடவே வருகிறது.

ஆசிரியரின் மொழி மிகவும் அருமையாக வெளிப்படுகிறது. பல இடங்களில் கவித்துவம் மிக்க தருணங்கள் கைகூடியிருக்கிறது. அதே போல உணர்வுகளின் ஆழங்களை அழகாக மொழியாக்கியிருக்கிறது. கதையை படிக்க தொடங்கிய போது வெண்முரசின் ஒரு அத்யாயம் போலவே இருந்தது.  இருளாழத்தில் வாழும் கதைகள் மனிதரின் உளம் தொட்டு உயிர்பெற காத்திருக்கும் இப்பெருவெளியின் விளையாட்டை காட்டுகிறது. மனிதரின் அழைப்பிற்காக காத்திருக்கும் தேவதைகளை போல அவை உருக்கொள்கின்றன. மந்திரங்களின் வழியே தேவதைகள் வெளிவருவதை போலவே கதைகளும் மனிதரின் அழைப்பிற்கு காத்திருக்கின்றன.

லக்கானின் உளவியல் வழிமுறையில் ‘நான் என்பது எனக்கு வெளியே இருக்கிறது’ என்கிறார். நம்முடைய நான் மற்றமையால்தான் கட்டமைக்கப்படுகிறது என்கிறார். எம்.ஜி.சுரேஷ் எழுதிய லக்கான் பற்றிய ஒரு புத்தகத்தில் ஒரு ஆய்வை குறிப்பிடுகிறார். தன் முட்டைகளை அடைகாத்துக்கொண்டிருக்கும் ஒரு வாத்தை அதன் முட்டைகள் பொரிந்து குஞ்சு வெளிவரும் சமயம் பார்த்து அப்புறப்படுத்திவிட்டு அந்த வாத்திற்கு பதிலாக ஆய்வாளரின் பூட்ஸை வைத்துவிடுகின்றார். முதன் முதலாக வெளியே வரும் குஞ்சுகளின் கண்ணில் படுவது அந்த பூட்ஸ்தான். அந்த குஞ்சுகள் அந்த பூட்ஸையே தாயென கருதிக்கொள்கின்றன. அவர் அந்த பூட்ஸை அணிந்துகொண்டு எங்கு சென்றாலும் அந்த பூட்ஸையே அவை சுற்றி சுற்றி வருகின்றன. இதிலிருந்து மனிதனின் சுயம் அவன் பிறப்பின் வழி வருவதில்லை. அது அவன் வெளியே வந்த பின்னே மற்றமைகள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து உருவாகிவருகிறது என்கிறார். சிந்தித்து பார்த்தால் நான் என்பது இந்த சமூகம் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மட்டுமே என்று தோன்றுகிறது.

இந்த கதையில் வரும் கௌதமன் அந்த வாத்து குஞ்சை போலவே இருக்கிறான். அவனுக்கு சொல்லப்படும் கதைகளின் வழி அவன் அவனை கட்டமைத்துக்கொள்கிறான். கதைகள் அவனுக்கு உள்ளுணர்வை தருகிறது. உள்ளுணர்வால் வலிகளும் தோன்றுகிறது. கதைகளின் வழிதான் மனிதனின் மனமும் உள்ளுணர்வும் உருவாகி வருகிறது. அதையே ஒரு இயந்திரத்திற்கு முயலும்போது அதுவும் மனிதனாகி வருகிறது. உயிர் என்ற ஒன்று மனிதனின் சாபமோ வரமோ, ஆனால் அதனால்தான் அவன் மனிதனாக இருக்கிறான்.  இயந்திரமாக இருந்தாலும் அவனுக்கும் அவன் தாய்க்கும் இடையே நிலவும் பிணைப்பு மனித உறவுகளை போலதான் உள்ளது. அவர்களுக்குள்ளே கண்ணீர், அன்பு, உறவு சிக்கல்கள் அனைத்தும் நிலவுகிறது. எந்திரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை கதை நம் உணர்வு தளத்தில் நிகழ்த்துகிறது. உணரும் திறன் இருந்தால் எந்திரமென்ன மனிதனென்ன எல்லாம் ஒன்றுதானே.

மனிதர்களின் சலிப்பை, வாழ்வின் மீதான வெறுப்பை தீர்க்கும் மருந்து கலைகளும் இலக்கியமும் மட்டுமே என்று தோன்றவைக்கிறது. அன்னையின் சொல்லுக்கு சட்டென தலையாட்டி, தானே சிதறி பூமியில் உள்ள மனிதரின் வாழ்வை மீட்க கதைகளென உலாவ துணியும் கௌதமன் போன்றவர்கள்தான் எழுத்தாளர்களும் கலைஞர்களும் ஞானிகளுமென நினைக்கிறேன். அதற்கும் அவனுக்கு அவன் அம்மா சொன்ன கர்ணனின் கதைதான் காரணமாக இருக்கக்கூடும். கர்ணனின் அம்மா அவனை ஆற்றில் விட்டதை போல, கௌதமனின் அம்மா அவனை வெளியில் விடுகிறாள்.

*

மின்னெச்சம்

ரூபியா ரிஷியின் இந்த கதை மனித மூளையை இறப்பிற்கு பின் உயிர்ப்புடன் வைத்து அதில் உள்ள தகவல்களை கணினியில் நியூரல் நெட்ஒர்க் என நிறுவி இறப்பிற்கு பின்னும் மனிதனை ஓரளவு உயிரோடு வைத்திருக்கும் சாத்தியத்தை பேசுகிறது. சாகாவரத்தை, மரணமற்ற பெருவாழ்வை அறிவியலின் வழி கற்பனை காண்கிறது. மனித மூளையை ஒரு டாட்டாபேஸ் ஆக்கி அதிலிருந்து அலைகள் மூலம் மனித மனதை சிமுலேட் செய்து இறந்த மனிதனை மீண்டும் உயிர்த்தெழ செய்வது ஒரு உளக்கிளர்ச்சியை தருகிறது. எல்லோருக்கும் சாகாவரம் சாத்தியமாகும் காலம் அறிவியல் மூலமே சாத்தியமென்றே நினைக்கிறன். கதையின் மொழிநடை அறிவியல் புனைவுக்கான செறிவோடு இருக்கிறது. மின்னெச்சம் இயற்கையின் விதிகளை தாண்டிய ஒரு மனிதனின் இருப்பை வெறும் கழிவென உணர செய்கிறது.

இந்திய மெய்ஞானத்தில் ஆண்மா மட்டுமே அழியாதது, என்றைக்கும் உள்ளது என்ற தத்துவத்தின் நெருக்கத்தை இக்கதை கொண்டிருக்கிறது. ஆண்மாவை அறிவியல் நம்பமுடியாது. அறிவியலில் மனிதனின் மூளைதான் ஆண்மா. அதை தக்கவைப்பதின் முலம் அமரத்துவத்தை எய்துகிறது. அப்படிப்பட்ட சாகாவரத்தின் சாதக பாதகங்களை கதைஆராய்கிறது. பல்வேறு பட்ட மனிதரின் மூளைகள் இறப்பிற்கு பின் எதிர்வினையாற்றும் உரையாடல்கள் வழி சாகாவரத்தின் விளைவுகளை பேசுகிறது. சிறுவயதில் என் தாத்தா வீட்டில் ஆங்கில எழுத்துக்களை உடைய ஒரு சதுரங்க போர்டில் மெழுகுவத்தியை மட்டும் ஏத்தி வைத்து இறந்த முன்னோர்களோடு பேசுவார்கள். அத்தகைய ஒரு அனுபவத்தை நவீனமாக உணர்வதை போல இதன் உரையாடல்கள் இருந்தன.

மனிதனின் மனதிலுருந்து அவனது துயர்களையும் விரும்பப்படாத நினைவுகளையும் அழித்துக்கொள்வது வரம் போல தோன்றினாலும் சாபமாகவும் தோன்றுகிறது. அப்படி ஒரு வசதி வந்தாலும் மனிதன் அதை செய்துக்கொள்ள தத்தளிப்பான் என்றே தோன்றுகிறது. வெறும் ஆன்மாவாக எஞ்சிவிட்டாலும் செயலாற்ற வேன்டுமென்றால் ஒரு உடலின்றி முடியாது என்பதை போல மூளை சேமிக்கப்பட்டு சிமுலேட்டர் மூலம் இயங்கினாலும் அவன் பிறரின் உதவியுடன்தான்  வாழமுடியும் என்பது இயற்கையின் விதிகளை மனிதன் ஓரளவுதான் தாண்ட முடியுமென காட்டுகிறது.

*

 பல்கலனும் யாம் அணிவோம்

ரா. கிரிதரனின் இந்த கதை அறிவியல் மாற்றங்களுக்கும் அதை எதிர்க்கொள்ளும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் போராட்டத்தை பேசுகிறதென நினைக்கிறேன். மனிதன் தன்னை வெறும் மனிதனாக மட்டும் தக்கவைத்துக்கொள்ளும் சுகந்திரத்தை அறிவியல் வளர் வளர இழந்துகொண்டே வருகிறான். இன்றைய சூழலிலேயே அறிவியலின் மாற்றங்களால் மனிதன் தன் வாழ்க்கைக்குள் அவன் வேண்டாதவற்றையும் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். இந்த கதை முன்வைக்கும் காலக்கட்டங்களில் மனிதர்களும் பாதி இயந்திரங்களாக வாழ  வேண்டிய காட்டயத்தில் தள்ளப்பட்டிருப்பர். ஆனாலும் அப்போதும் மனிதனின் ஆதாரமான அன்பு, காதல், காமம், வன்மம், குரோதம், அகங்காரம் போன்ற உணர்வுகள் இருந்துகொண்டுதான் இருக்கும். மனிதர்களுக்குள் நேசம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கும். காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் காதலர்கள் அப்போதும் இருக்கதான் செய்வார்கள். தற்கொலைக்கான வழிமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். இந்த கதை அவ்வகையில் அறிவியலுக்கும் மனித உணர்வுகளுக்கும் இடையே நிகழும் போராட்டத்தை பேசுவதாக உள்ளது. ஆசிரியரின் மொழிநடையும் கதை சொல்லிய விதமும் அந்த போராட்டத்தை நம்முள் அழகாக கடத்துகிறது.

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி
அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்
அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்
அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-1
முந்தைய கட்டுரையக்ஷிப்பாலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெல்வது மீளாது