கங்கைக்கான போர் -கடிதங்கள்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

அன்புள்ள ஜெ

 

சோர்வடைய வைத்த பதிவு – இரண்டு பேரின் உயிரிழப்பு, மூன்றாவது ஒருவரின் உயிரும் பணயம் வைக்கப்பட்டுள்ளது… என்னதான் செய்ய முடியும்..

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2014 தேர்தல் ஒரு வித நம்பிக்கையை, அரசியல்-லட்சியவாத அலையை எழுப்பி இருந்தது – ஆம் ஆத்மி, மோடி ஆகியோரின் மூலம்.. ஆனால், மீண்டும் மீண்டும் வரலாறு உரைப்பது ஒன்று தான் – அரசியல் வேறு லட்சியம் வேறு.. ஆகவே, “எல்லாம் அப்படித்தான்” என்ற மனநிலைக்கு இந்த 5 ஆண்டுகளில் திரும்பி வந்து சேர்ந்திருக்கிறோம்..

 

மீண்டும் ஒரு வெளிச்சம் யாரும் என்று நம்புவோம்.. நமக்காக உயிரையும் துறப்பவர்களுக்கு நம் வணக்கங்களையும், நம் வருங்கால சந்ததியின் நன்றிகளையும் தெரிவிப்போம்..

 

நன்றி

ரத்தன்

 

அன்புள்ள ஜெ வணக்கம்…

 

குக்கூ அமைப்பினரின் நீர் நெருப்பு ஒரு பயணம், மற்றும் நெருப்பு தெய்வம் நீரே வாழ்வு இரண்டையுமே படித்தேன்.

 

எதிர்வினைகள் செய்யாமைக்கு ஒருவிதமாய் மரத்துப்போனதும், சுரணையின்னையுமே காரணங்கள்.

 

என் சொந்த ஊர் திருப்பூர் சிறுவயதில் நொய்யல் ஆற்றில் குளித்திருக்கிறேன் நீர் குடித்தும் இருக்கிறேன், அனுவனுவாக அந்த ஆறு சிதைந்தது யாவரும் அறிந்ததே, அதை கண்ணுற்ற மௌன சாட்சிகளில் நானும் ஒருவன். அக்குற்ற  உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக என் தொழில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பது, பெரும் இலட்சியவாத வேகத்தோடு தமிழகத்தில் பரவிய இயற்கை வேளாண்மையின் இன்றைய நிலையை நீங்களே அறிவீர்கள்.

 

அதற்கு முன்பிருந்தே இயற்கை சூழல் செயல்பாடுகள் சார்ந்து நிறைய பங்கெடுத்து இருக்கிறேன்.

 

நகர்ப்பகுதிகளில் செய்யப்பட்ட மரம் வளர்ப்பு முயற்சிகள் 97% தோல்விதான். (பல காரணங்கள் அவை விரிவானவை இங்கே பேச விரும்பவில்லை),

 

இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் நெகிழி தடை நானறிந்த மூன்றாவதோ, நான்காவதோ தடை.

தடை அமலான சில நாட்களிலேயே எல்லாம் இயல்புப்படி நிகழ்ந்தது.

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும்பாலான பகுதிகளுக்கு வன சுற்றுலாவும் மலை ஏற்றமும் தொடர்ந்து சென்று வருபவன் என்ற வகையில் வன அழிப்பு , வனவிலங்கு வேட்டை,நிகழாத இடங்களே இல்லை என்று கூறிவிடலாம்.

 

 

மேற்கண்டவற்றை நான் கூறுவது பிறர் மேல் பழி போடுவதற்காக மட்டுமல்ல.

 

இந்த வாழ்வில் நான் அடைந்த புரிதல்களில் ஒன்று ஏந்த மாற்றமும் எளிதாக வந்துவிடுவதில்லை.

 

இப்போதைய பிரதமரோ முந்தைய பிரதமரோ இந்திய ஆறுகள் அழிவதை அறியாதவர்கள் அல்ல, அதை காக்கும் வழிமுறைகள் தெரியாதவர்களும் அல்ல,

சீரமைக்க எடுக்கும் முயற்சிகள் பல கோடி மக்களின் வாழ்வில் நேரடியாக தலையிடுவது, தற்கால ஓட்டு பொறுக்கும் அரசியலில் இவையெல்லாம் நடக்குமா?

 

வாழத் தெரியாதோர் வாழும் நாட்டில் ஆளத் தெரியாதோர் ஆட்சி தானே அமையும்.

 

 

தொலை நோக்கோடு சிந்திக்கும் தலைவர்களும், பேராசையற்ற மக்களும் நம் சமூகத்தில் மிகச்சிறுபான்மையே.

 

 

இந்திய ஆறுகள் காக்கப்பட வேண்டும் எனில் பெரும் செலவில் உள்கட்டமைப்பு வசதிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் வேண்டும்.

 

 

நதிக்காவல்துறை/RIVER ARMY

 

நாட்டின் எல்லையை காப்பது போல, சமரசமற்று ,குற்றங்களுக்கு கடும் தண்டனை  வழங்கும் ஒரு பெரும் அமைப்பு தேவை, அது சில பத்தாண்டுகள் தொடர் செயல்பாட்டுடன் இருக்கும்போது மட்டுமே மாற்றம் சாத்தியம் என  எண்ணுகிறேன்.

 

 

மாத்ரிசதன் அமைப்பினரின் போராட்டம் படிக்கும் பொழுதே பெரும் நிலைகுலைவினை ஏற்படுத்துகிறது, அவர்கள்  மொளனமாக எழுப்பும் கேள்விகள் அச்சத்தை உண்டாக்குகிறது, இவ்வளவு அப்பட்டமான உண்மையை எதிர் கொள்வது எளிதாக இல்லை.

 

 

துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், சிறு நன்கொடைகள் அளித்தல்,மரம் நடு விழாக்கள், சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கங்கள், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வை பரப்புதல்,  போன்ற எளிய  குழந்தை விளையாட்டுக்களை பார்த்தும், ஆடியும் ,பழகிய  என் போன்றவர்களுக்கு மாத்ரிசதன் நிகழ்த்தும் நிஜ யுத்தத்தை ஒளிந்து இருந்தும் கூட காண முடியவில்லை.

 

அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகியும், எப்போதும் நிறைவின்மையையே உணரும் மனங்களை கொண்ட இக்காலகட்டத்தின் ஒரு துளி தான் நானும்.

 

மு.கதிர் முருகன்

கோவை

 

அன்புள்ள ஜெ

 

நானும் நீங்கள் எழுதியதைப்பற்றி யோசித்திருக்கிறேன். ஐரோம் ஷர்மிளா பற்றி தமிழில் எவ்வளவு எழுதிக்குவிக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள். கிட்டத்தட்ட இருபது நூல்கள் அவர்களைப்பற்றி எழுதப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேல் கட்டுரைகள் இருக்கும். பலர் அவரைப்பற்றி எழுதும்போது காந்தியவழிகளை ஆதரிப்பவர்கள் என்னும் பாவனையையும் மேற்கொள்வதுண்டு. அவர்கள் எவருமே இந்த கங்கைக்கான சாத்விகப்போர் பற்றி எதுவும் எழுதவில்லை.

 

ஏன்? இது இந்தியா, இந்துமதம் ஆகியவற்றுக்கு எதிரான போர் அல்ல. அப்படி இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்கள். இந்து துறவிகள் என்று வரும்போதே செத்தால்சாகட்டும் என்னும் புறக்கணிப்பு உருவாகிவிடுகிறது. தமிழகத்தில் சுற்றுச்சூழலைப்பற்றிப் பேசும் நூறு குழுக்களாவது உள்ளன. அவர்கள் எவருமே இதைப்பற்றிப் பேசுவதில்லை. ஏனென்றால் சுற்றுச்சூழல் இவர்களுடைய அக்கறையே இல்லை. இவர்களின் அக்கறை இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான அமைதியின்மையை உருவாக்குவது மட்டுமே. அதற்கு மட்டுமே பணம் கிடைக்கும்.

 

இந்துத்துவர்கள் இந்தப்போராட்டம் காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாக இருந்ததுவரை அரைமனதோடு ஆதரித்தனர். அவர்களின் ஆட்சி வந்ததுமே போராடும் துறவிகள் எதிரிகளும் துரோகிகளும் ஆகிவிட்டார்கள். ஏழாயிரம்கோடி ரூபாய் கங்கையை தூய்மைசெய்ய செலவழிக்கப்பட்டது. ஆனால் ரசாயனக் கழிவுகளை கட்டுப்படுத்த, சட்டவிரோத குவாரிகளை கட்டுப்படுத்த ஒன்றுமே செய்யவில்லை. செய்யும் எண்ணமும் இல்லை. துறவிகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்துக்கள் என நரம்புபுடைக்கிறார்கள். வணங்கத்தக்க இந்துத்துறவிகளின் உயிர்த்தியாகம் இவர்களின் மனசாட்சியைத் தொடவில்லை. ஏனென்றால் இவர்களின் உண்மையான ஆர்வம் அதிகார அரசியல்மட்டுமே

 

இவற்றுக்கு அப்பால் இங்குள்ள சாமானியர்களை நம்பி பேசிக்கொண்டிருக்கவேண்டியதுதான்

 

அருண் கல்யாண்

முந்தைய கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11
அடுத்த கட்டுரைபொண்டாட்டி – சுரேஷ் பிரதீப்