இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
பாரதியார் ‘உங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்?’ என்று கேட்டவரை சினந்துகொண்டதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். முகநூலில் ஒருவர் வ.ராவின் நூலில் இருந்து மூலப்பகுதியை எடுத்துப்போட்டிருக்கிறார்.
புதுச்சேரி கடற்கரையில், ஆனந்தமாக காற்று வாங்கி கொண்டிருந்தோம்….. பாரதியார் அருமையாக பாடிக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் வ.வே.சு. அய்யரின் நண்பரான திருச்சி வக்கீல், ஒருவர் (ரொம்ப பிரபலஸ்தர்) எங்களுடன் இருந்தார்.
பாட்டு முடிந்ததும் அந்த வக்கீல், பேச ஆரம்பித்தார், ‘என் சார்! ஒங்க டிலக் இப்ப எங்கே இருக்கான்? என்று வ.வே.சு. ஐயரைக் கேட்டார். டிலக் என்று சொன்னது, லோகமான்ய திலகரை. அய்யரின் முகம் சிவந்து போயிற்று. அவர் தமது, ஆத்திரத்தை அடக்கி கொண்டார். ஆனால், பாரதியார் ஒரே வெடியாக வெடித்துவிட்டார். கடகடவென்று அவர் கொட்டத் தொடங்கினார்.
‘ஏண்டா நீ தமிழன் இல்லையா நீ வெள்ளைக்காரனா? என்னடா டிலக் வேண்டியிருக்கு/திலகர் என்று சொல்ல நாக்கு கூசுகிறதா?. அவன் இவன் என்று மரியாதையில்லாமல் பெருக்கிறாரு. முழு மூடா! என்று நிரம்பக் கேவலமாக பேசிவிட்டார்.
வக்கீலின் முகம் அப்படியே வெளுத்துப் போய் விட்டது. வக்கீல் வேண்டுமென்றே மரியாதைக் குறைவாக பேசவில்லை என்று பின்னால் தெரிந்தது. தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்குள் ஒரு கெட்டபழக்கம், பிரசன்னமாக இல்லாத ஒருவரை, அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது. இந்தப் பழக்கத்துக்கு பலியானவர் வக்கீல். அவ்வளவுதான்.
வக்கீல் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அப்போது பாரதியாரைப் பார்க்க வேண்டுமே.. முகத்தில் ஈ ஆடவில்லை. நிரம்பவும் சிரமப்பட்டுப் போனார். ‘நீங்கள் செய்தது அறியாப் பிழை என்று தெரிந்து கொண்டதால், எனக்கு ஒரு புறம், வருத்தம்: ஒரு புறம் சந்தோசம். நீங்கள் வேண்டுமென்றே உதாசீனமாக சொல்லிவிட்டீர்களோ என்று எண்ணி நான் சற்று கடுமையாக பேசிவிட்டேன். தயை செய்து மன்னித்து விடுங்கள் என்று மிகவும் அங்கலாய்த்துக்கொண்டு சொன்னார்.
*
நீங்கள் நினைவுப்பிழையாக உண்மையை திரிக்கிறீர்கள், வரலாற்றைத் திரித்துவிடுகிறீர்கள், இளம்வாசகர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள் என எழுதியிருந்தார். உங்கள் கவனத்திற்கு இதைக் கொண்டுவருகிறேன்
க.
***
அன்புள்ள க,
நமது வரலாற்று வாசிப்பு பல படிகள் கொண்டது. ஒரு வரலாற்று நிகழ்வை, ஒரு அரசியல் தீர்மானத்தை நேராக அவ்வண்ணமே நாம் மேற்கோளிடவேண்டும். ஏனென்றால் அது ஒரு தகவல். ஆனால் இது ஒரு சிறிய அன்றாட நிகழ்வு. இது நினைவில் நிற்பதும் பேசப்படுவதும் ஒரே காரணத்திற்காகவே. இது ஒரு குறியீட்டுநிகழ்வு. இக்குரலை ஒரு பிரதிநிதித்துவக் குரலாக எடுத்துக்கொள்வது என்பது ஆய்வாளனின் நோக்கு சார்ந்தது.
வரலாற்றில் இருந்து இச்சிறு நிகழ்வினூடாக நாம் ஒரு குரலை கண்டெடுக்கிறோம். அது அன்று ஒலித்ததா இல்லையா என்பது மட்டுமே முக்கியமானது. அக்குரலே ஒலிக்கவில்லை, அல்லது அக்குரல் நேர் மாறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது, அல்லது ஒரு பெரிய பின்னணியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு வேறுபொருள் அளிக்கப்பட்டது என்றால் அது பிழை அல்லது திரிப்பு. அந்தப் பொருள்கோடலுக்கு பின்புலமாக மெய்யான ஒரு சூழலை சுட்டிக்காட்டமுடியாது என்றால் அது ஏற்றுக்கொள்ளமுடியாத ஆய்வு.
‘உங்க’ ‘டிலக்’ இப்ப எங்க ’இருக்கான்?’ என்று கேட்கும் குரல் குறைந்த அளவுக்கான தேசபக்தி கொண்டதோ, திலகர் மேல் அடிப்படையான மரியாதை கொண்டதோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவேதும் தேவை இல்லை. அந்த ஆசாமியின் பேச்சுமுறையே அதுதான் என்றால் தன் தந்தையை அவன் இவன் என்றா சொல்வான்?
இந்திய அரசியலின் கொந்தளிப்பான காலகட்டம் அது. அச்சூழலில்கூட இயல்பாக அப்படி ஒரு குரல் எழுவது ஒர் அடையாளம், ஒரு குறியீடு. அது ஓர் அரசியல்தரப்பால் வெறுப்புடன் கேட்கப்பட்ட குரலாக இருந்தால் அதன் பொருள் வேறு. ஒரு சாதாரண மனிதர் இயல்பாக அதைக் கேட்கிறார். ஆகவே மேலும் துல்லியமான ஒரு பிரதிநிதிக்குரல். அது ஒரு பெரும்பான்மையின் தரப்பு. அக்குரலில் ஒலிக்கும் விலக்கம், அலட்சியம் அதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டியது. நான் அதைத்தான் சுட்டுகிறேன். அந்த பெரும்பான்மையின் மனநிலை என்றுமுள்ளது என்கிறேன்
அந்த ஊகத்தை நிகழ்த்த அடிப்படையாக அமைவது பாரதியின் வாழ்க்கை. அவர் தன் வாழ்நாளெல்லாம் அடைந்த புறக்கணிப்பு ஏளனம் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. பாரதியே அன்றைய பெரும்பான்மையின் இந்த மனநிலையை சுட்டி சீற்றத்துடன் ஆற்றாமையுடன் பதிவு செய்திருக்கிறார். அந்த பின்புலத்துடன் சென்று இக்குரல் பொருந்துவதனாலேயே இவ்வாறு பொருள்கொள்ள முடிகிறது.
அந்தக் கேள்வியைக் கேட்டவர் பாரதியின் மிகையான சினத்திற்குப்பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் என்றும், பாரதி அவரை மன்னித்துவிட்டார் என்றும், தன் மிகைச்சினத்தை உணர்ந்து பாரதி பின்னர் நாணினார் என்றும் சொல்வதனால் அக்குரல் எழுந்தது மறுக்கப்படுகிறதா என்ன? அந்த நபர் பொதுவாக அப்படிப்பட்டவர் அல்ல என்பது வ.ராவால் கூடுதலாகச் சொல்லப்படுகின்றது என்பதைக்கொண்டு அக்குரல் எழவில்லை, அல்லது அதன் அர்த்தம் அவ்வாறல்ல என்றாகிவிடுகிறதா என்ன?
வ.ரா அச்சூழலில் அக்குரலை அப்படி எடுத்துக்கொள்கிறார். அன்று அது அவருக்கு பாரதியின் பெருமையைச் சுட்டிக்காட்டும் ஒரு நிகழ்வு மட்டுமே. அவருடைய பார்வை அது. நூறாண்டுக்குப்பின் இன்று அது வரலாற்றில் இருந்து பல்வேறு அர்த்தங்களை இழுத்துச் சேர்த்துக்கொண்ட ஒரு குறியீட்டுக்குரல் என எனக்குப் படுகிறது.
அந்த வரலாற்றுத்தரப்பின் குரலை அன்றைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கான முகாந்தரமாகக் கருதி ஆராய்கிறோம். வரலாற்றை தரவுகளின் அடிப்படையில் புறவயமாகத் தொகுப்பது ஒர் அணுகுமுறை. அது வரலாற்றாய்வாளனின் பார்வை.குறியீடுகள், பிரதிநிதித்துவ நிகழ்வுகளில் இருந்து உள்ளுறை அர்த்தங்களை நோக்கிச் செல்வது அகவய அணுகுமுறை. இன்றைய பின்நவீனத்துவ ஆய்வுகளில் இரண்டாவது அணுகுமுறையே மேலோங்கி ஒலிக்கிறது. இதையே நுண்வரலாறுகளின் முக்கியத்துவம் என்கிறார்கள்.
குறிப்பாக வாழ்க்கை வரலாறுகள், நிகழ்வுப்பதிவுகளில் இருந்து வரலாற்றுப் புரிதல்களை அடைவதற்கான வழி இதுவே. மொத்த அர்த்தத்தையும் தன்னியல்பாக தன்மேல் ஏற்றிக்கொண்ட சில நிகழ்வுகள், சில குரல்கள் எப்போதும் காணக்கிடைக்கின்றன.வரலாற்றை அகவயமாக நோக்கும் நுண்வரலாற்று ஆய்வின் பாணி. அவ்வாறு நோக்குவதற்கான நூற்றுக்கணக்கான உதாரணங்களை கொஞ்சம் வாசிப்பவரே இன்றைய எழுத்துக்களிலிருந்து கண்டறிய முடியும்.
ஓர் உதாரணம் சொல்கிறேன், காந்தி ’ஹரிஜன்’ மக்களுக்காக ஓர் உண்ணாவிரதம் இருக்கிறார். அந்த உண்ணாவிரதத்தை ஒரு தலித் சிறுவன் பழச்சாறு கொடுத்து முடித்துவைக்கும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் உரிய தருணத்தில் அச்சிறுவன் அங்கே வராமல் எங்கோ சென்று ஒளிந்துகொள்கிறான். இது ஒரு சிறுநிகழ்வு. ஆனால் இந்நிகழ்விலிருந்து அன்றைய தலித் மக்களின் உளநிலை, மேலிருந்து கருணையை எதிர்கொள்கையில் மானுடனின் தன்மானம் கொள்ளும் திரிபு என பல தளங்களில் டி.ஆர்.நாகராஜ் விரித்துச்செல்வதை அவருடைய தீப்பற்றிய பாதங்கள் நூலில் காணலாம். இன்றுவரை காந்தியுடன் தலித்துகளுக்கான உறவைப் பற்றி இச்சிறுநிகழ்வைக்கொண்டே நாகராஜ் ஆராய்கிறார். அவரை நான் எடுத்த பேட்டியிலும் இதைச் சொல்கிறார். இத்தகைய அணுகுமுறைகளை உணர சமகாலச் சிந்தனைமுறைகளில் குறைந்தபட்ச வாசிப்பு, அதற்கான புரிதல் தேவை. மொண்ணையான முகநூல் தர்க்கங்கள் அல்ல
வரலாற்றை அகவயமாக வாசிக்கவேண்டியது இப்படித்தானே ஒழிய ‘வ.ராவே அந்தாள் பாவம்னு சொல்லிட்டார் தெரியுமா?’ என நூலை மேற்கோளாக்கி வாதிடுவதன் வழியாக அல்ல. அல்லது ‘அந்த தகவலிலே ஒரு சின்ன பிழை இருக்கு, எப்டி இருக்கார்னு கேக்கலே, எங்க இருக்கார்னுதான் கேக்கறார்’ ‘பாரதிகிட்டே சொல்லலே, வராகிட்டே சொல்றார்’ என்றெல்லாம் வெட்டிவாதம் பேசுவதென்பது அந்தக்குரலுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் இன்றைய சாதிப்புத்திதான். தன் சாதிக்கெதிரான கூற்று அது என்னும் பதற்றமே இத்தகைய வாதங்களை உருவாக்குகிறது.
அந்தக் குறுகிய தளத்திலிருந்து எழும் பொருளில்லாத வாதங்களுடன் இணைநின்று பேச நான் ஒருபோதும் முயல்வதில்லை. குறைந்த அளவுக்கேனும் புரிந்துகொள்ள முயலாத குரல்களுடன் விவாதிப்பதைப் போல வெட்டிவேலை பிறிதில்லை
ஜெ.