மொழிபெயர்ப்புகள் சிலசமயங்களில் சரியில்லாமல் போவதற்கும் நகைச்சுவைக்கு ஆளாவதற்கும் என்ன காரணம்? மொழிபெயர்ப்பாளர் இரண்டு மொழியிலும் சம அளவிலும் தேர்ச்சிபெற்றவராகவும், மூலப்படைப்பின் படைப்பாளிக்குச் சற்றும் சளைத்தவரல்லாதவராகவும் இருக்கவேண்டியிருப்பது எவ்வளவு முக்கியம்! அப்படி இல்லாதபோதெல்லாம் மொழிபெயர்ப்பு தோற்றுப்போகிறதா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மொழிபெயர்ப்புகள் என்ன நோக்கத்துக்காகச் செய்யப்படுகின்றன என்ற தெளிவு இல்லாமல் செய்யப்படுவதும் மொழிப்பயிற்சியின்மையும்தான் காரணம்.
நல்ல மொழிபெயர்ப்பானது அழகான மொழிபெயர்ப்பு அல்லது பயனுள்ள மொழிபெயர்ப்பு என இருவகைப்படும். ஒரு படைப்பிலக்கியம் மொழியாக்கம் செய்யப்பட்டால் அதன் படைப்பூக்கத்தின் பெரும்பகுதியை நம்மில் கொண்டுவந்து சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அம்மொழியாக்குநர் செயல்பட்டிருக்கவேண்டும். தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை மொழியாக்கம் செய்த டி.எஸ்.சொக்கலிங்கம் மூல ஆசிரியரின் சிறப்பியல்புகளான நுட்பமான தகவல்களைச் சரளமாகச் சொல்லிச்செல்லும் எளியநடையை தமிழிலும் கொண்டுவந்தார். ஆனால் ராடுகா பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்புகளில் அந்த இலக்கு குறிக்கப்படவேயில்லை. அவை தல்ஸ்தோயை சம்பிரதாயமான கதைசொல்லும் முறையும் பழைமையான நடையும் கொண்டவராகக் காட்டிவிட்டன. ஹெமிங்வேயை மொழிபெயர்த்த எம்.எஸ் [கிழவனும் கடலும். காலச்சுவடு பதிப்பகம்] அவரது கச்சிதமான துண்டுச்சொற்றொடர்களை அழகாக நமக்குக் காட்டித்தருகிறார்.
கட்டுரைகளை மொழியாக்கம் செய்தால் அதன் கருத்து தெளிவாக நமக்குக் கிடைப்பது முதல் அவசியம். ஆசிரியனின் நடையின் சிறப்பு நம்மை வந்தடைவது இரண்டாவது அவசியம். டி.எஸ்.எலியட் எப்போதுமே ‘வகுத்துக் கூறும்’ நடை கொண்டவர். அவரது கருத்துக்கள் நம்மை வந்தடைவதுடன் அந்த தனித்துவமும் வந்தால் நல்லது.
இவ்வாறு இலக்கை அடைவதற்கு அவசியமான மொழிமாற்ற முறையைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பாளன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் தவறு. மிதமிஞ்சி எடுத்துக் கொண்டாலும் தவறு. எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது அவனது நோக்கத்தைச் சார்ந்தது.
பொதுவாக மூலம் நம் மனதில் பசுமையாக இருக்கும்போது மொழியாக்கத்தின் போதாமை கண்ணில் படுவதில்லை. ஆகவே மொழியாக்கத்தைச் சற்று விலக்கி மேலும் ஒருமுறை பரிசீலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்தோமென்றால் நம்மை அறியாமலேயே ஆங்கிலச் சொற்றொடரின் அமைப்பு அதில் ஊடுருவிவிடும். ஆகவே அவற்றை மீண்டும் ஒருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது.
மூலமொழியின் பண்பாட்டுக் கூறுகளை ஓரளவாவது அறியுமளவுக்கு மொழிப்பயிற்சி அவசியம். எழுதும் மொழியில் அம்மொழிமாற்றத்தை நிகழ்த்துமளவுக்குப் பயிற்சி தேவை. பொதுவாகக் கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஒருவருக்கு சமகால கவிமொழிக்கூறு [Poetic diction] நன்கு தெரிந்திருக்கவேண்டும். ‘யாண்டு போயினன் சோக்கன் என எவர் வினவினும்’ என்று முன்னே சொன்ன ஜென் கவிதையை ஒருவர் மொழிபெயர்த்தால் என்ன ஆகும்? புனைகதைகளை மொழிபெயர்க்க சமகால புனைவுமொழிக்கூறு தெரிந்திருக்கவேண்டும். ஹெமிங்வேயை பாலகுமாரனின் நடையின் சாயலில் மொழிபெயர்க்கலாகாது. துறைசார் மொழியாக்கங்களைச் செய்ய உரிய கலைச்சொற்களும் சொல்லாட்சியும் தெரிந்திருக்கவேண்டும்.
ஆங்கில ஆக்கங்களைத் தமிழுக்குக் கொண்டுவருகையில் பலவிதமான பிழைகள் உருவாக நேரும். வழக்காறுகள், சொலவடைகள், வட்டாரவழக்குகள், உட்குறிப்புகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதில் பிழைகள் நிகழலாம். நாம் பல்லாயிரம் காதம் தள்ளி வேறு ஒரு பண்பாட்டுச்சூழலில் நின்றபடி வாசிக்கிறோம். மூலமொழி நம்மைச் சுற்றிப் புழங்கவில்லை. நமது அன்றாடப் பேச்சுமொழியாகவும் அது இல்லை. அதில் நாம் யாரும் பெரும்புலமைகொண்டவர்களுமல்ல. பெரும்புலமைகொண்டவர்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யவேண்டும் என்றால் மொழிமாற்றமே தேவையில்லை என்றே பொருள்.
ஆங்கிலத்துக்குப் பெரும்பணம் பெற்றுக் கொண்டு பெரிய அளவில் பிழைநோக்கி மேம்படுத்தி செய்யப்படும் புகழ்பெற்ற மொழிமாற்றங்களில் பிழைகள் பல இருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஏ.கெ.ராமானுஜனின் கன்னட வீரசைவ வசன மொழியாக்கம் [Speaking of Shiva] உலகப்புகழ்பெற்றது. அதைக் கடுமையாகப் பிழைகண்டு குறைகூறி தேஜஸ்வினி நிரஞ்சன் எழுதிய கட்டுரை ஒன்றை எப்போதோ படித்திருக்கிறேன். ஆகவே இங்கே எவ்வித ஊதியமும் இல்லாமல் சொந்த ஆர்வத்தால் செய்யப்படும் மொழியாக்கங்களில் குறைகண்டு கெக்கலிக்கும் அற்பத்தனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
மொழிமாற்றம் இன்னும் பலமடங்கு தேவைப்படுகிறது. பிழைகளை விவாதித்து மேம்படுத்திக் கொண்டு முன்னகர்வதே இப்போதைக்கு நம் முன் உள்ள வழிமுறையாகும். வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆயிரம்பேர் ஆளுக்கொரு நூலை மொழியாக்கம் செய்தால் எப்படி இருக்கும்!
-*-
ஒரு படைப்பின் தழுவல் என்பது எவ்வகையில் வேறுபடுகிறது? அது இரண்டாம் படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் தருகிறது என்று கொள்ளலாமா?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
ஒரு ஆக்கத்தின் முக்கியமான கூறு எனத் தனக்குப் படுவதை எடுத்து இன்னொரு மொழியில் மறு ஆக்கத்தை நிகழ்த்துவதே தழுவலாகும். தழுவல் மூலம் இலக்கியப் படைப்பின் பொதுவான அழகுகள் மற்றும் தனித்தன்மைகள் மற்ற மொழிக்குச் செல்வது இல்லை. தல்ஸ்தோயின் ஆக்கங்களை ருஷ்ய மண்ணில் இருந்தும் பண்பாட்டிலிருந்தும் பிரிக்க இயலாது. ஆனால் தல்ஸ்தோயின் ஒழுக்கநோக்கு தமிழுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று எண்ணும் ஒருவர் அவரது ஆக்கங்களைத் தழுவி இங்கே சில ஆக்கங்களை உருவாக்கக் கூடும். அதற்கு ஓர் எல்லைவரை பயன் உண்டு.
பொதுவாக தழுவல் சிறந்த இலக்கிய வழிமுறை அல்ல என்றாலும் பல காலகட்டங்களில் அது தேவைப்பட்டுள்ளது. தமிழில் நவீன இலக்கிய அலை உருவான காலகட்டத்தில் அந்த அலையை வாசகர்களிடையே பரவலாகக் கொண்டுசெல்ல தழுவல்கள் ஏராளமாகத் தேவைப்பட்டன. அவை மூலப்படைப்புகளின் எல்லாத் தனிச்சிறப்புகளையும் இங்கே கொண்டுவரவில்லை. மாறாக மூலப்படைப்புகளில் உள்ள நவீன கதைசொல்லல் என்ற சிறப்புக் கூறினை மட்டும் கொண்டுவந்தன. மொழியாக்கம் மூலம் அதை மட்டும் கொண்டு வர இயலாது என்பதனால் தான் தழுவல்கள் தேவைப்பட்டன. பொதுவாக இந்திய இலக்கியங்களில் நவீன இலக்கியமானது ஆங்கிலப் படைப்புகள் மற்றும் வங்கப்படைப்புகளின் தழுவல்கள் மூலமே கொண்டுவரப்பட்டது. தமிழிலும். நாம் முதல் சிறுகதையாகக் கருதும் ‘குளத்தங்கரை அரசமரம்’ [வ.வெ.சு.அய்யர்] தாகூரின் தழுவல் கதையே.
அதேபோல பின்நவீனத்துவ அலை உருவானபோதும்கூட தழுவல்கள் தேவையாயின என்பதைக் கவனிக்கவேண்டும். உதாரணம் ‘தமிழவனி’ன் பிரபல நாவலான ‘ஜி.கெ எழுதிய மர்மநாவல்’. இது உம்பர்ட்டோ எக்கோ எழுதிய ‘Name o the Rose-ன் தழுவலாகும். தமிழவனின் நோக்கம் உம்பர்ட்டோ எக்கோவை இங்கே கொண்டுவருவதல்ல. மாறாக பலவகையான கதைகள் பின்னிச்செல்லும் அவ்வகைக் கதைசொல்லல் தமிழிலும் இயல்வதே என்று காட்டுவதேயாகும். தழுவலின் இடம் இங்கேதான் வருகிறது.