அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்

அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  ஜினுராஜ் 

“ஒரு பொதுவான கதையில் அறிவியல்கூறுகள் சேர்க்கப்பட்டால் அது ஒருபோதும் அறிவியல் கதை அல்ல”

“அக்கதையின் மையக்கரு அறிவியல் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும்.அதாவது ஓர் அறிவியல் கண்டுபிடிப்புக்கு ஆதாரமாக அமைவது அறிவியல் ஊகங்கள்( Hypothesis ).அப்படி ஒரு அசலான அறிவியல் ஊகமானது நிரூபணத் தர்க்கத்தை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக புனைவாக்கம் நோக்கி வந்தால் மட்டுமே அது அறிவியல் புனைவாகும்” ( முடிவின்மையின் தொடர்பு எனும் கட்டுரையிலிருந்து )

1.எதிர்காலக் கற்பனை

2.பேசும் கருவின் தத்துவ / தரிசன மதிப்பு

3.கதையின் கதைத்தன்மை

4.கதையின் சமுக விமர்சனத்தன்மை,கண்டறிதல்தன்மை

5.தமிழ்த்தன்மை

சிறுகதை போட்டி முடிவில் குறிப்பிட்ட இந்த ஐந்து அடிப்படைகளை கொண்டு விமர்சனம் செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.

1.அவன் – தன்ராஜ் மணி

காலத்தில் புறம் மாறும்பொழுது அதற்க்கேற்ப்ப உள்ளுணர்வு மாறுவதையும் அதனால் மனிதனில் நிகழும் பரிணாம மாற்றம் பற்றிய கதைக்கருவாகும்.கதைக்கரு கதையில் வளர்ச்சியடைவில்லை மாறாக Hகதைக்கருவை விளக்குவதே கதையாக அமைந்துவிட்டது .

அடிப்படை சிக்கல்களை அல்லது பிரச்சனைகளை புனைவு கொண்டு இலக்கியமாக்கும் போது அது கதையின் வழியே வளர்ச்சியடைந்து ஒரு தரிசனத்தை கண்டடைய வேண்டும்.அவ்வாறு கண்டடையாத கதைக்கரு பெரிய தரிசன மதிப்பை பெறுவதில்லை.

கதை சொல்லும் தன்மை வாசகனை பங்கேற்க வைக்கிறது,வாசகனை நோக்கி  அறிவியல் வளர்ச்சியால் ஏற்படும் விளைவுகளை விமர்சனம் வைக்கிறது.

சிறுகதை முடிவில் நிகழும் திருப்பம் நிகழவில்லை எனவே மீண்டும் வாசிக்கும் தன்மை கதையில் இல்லை,சிறுகதையாக அல்லாமல் இது அறிவியல் புனை கதையாக உள்ளது.

2.கடவுளும் கேண்டியும் – நகுல்வசன்

வடிவம் மற்றும் உத்திகளில் இந்த கதை சிறப்பாக அமைந்துள்ளது.இதிலுள்ள மென் பகடி மற்றும் கதை சொல்லித்தனம் வாசகனை கதையை விட்டு விலகிவிடச்செய்வதில்லை.

கதை அமைப்பில் ஒவ்வொரு முறையும் கந்தசாமியின் குணாதிசயங்களை தனியாக விவரிக்கிறது அது வாசகனுக்கு சலிப்பைதரும் மாறாக சம்பவங்களின் வழியே குணாதிசயங்களை காட்டும்போது கதாபாத்திரம் தீர்க்கமாக இல்லாமல் விரிவடையும் தன்மையுடையதாக இருக்கும்.அது மறுவாசிப்புக்கு சாத்தியமளிக்கும்.

கதைக்கரு தொழில்நுட்பத்தின் மூலம் மெய்நிகர் அனுபவங்களை தரும்பொழுது உண்மையான அனுபவங்களின் மதிப்பென்ன என்பதாகும்.கதைக்கரு சிறப்பான தத்துவ மதிப்புகளை பெற்றிருக்கவில்லை மற்றும் கதை வளர்ச்சியடைந்து சிறப்பான தரிசங்களை கண்டடையவில்லை.

3.கோதார்டின் குறிப்பேடு – கமலக்கண்ணன்

கதை சொல்லும் முறை சிக்கலாக அமைந்துள்ளது.ராம்சேயின் குறிப்பேடுகள் மற்றும் கோதார்டின் சிந்தனை தெளிவான வேறுபாடுயில்லாமல் இல்லாமல் அமைந்துள்ளது.கதை சொல்லும் மொழி கனவு போல அமைந்துள்ளது ,ஒரு மனவியல் மருத்துவர் அவ்வாறுதான் சிந்திக்கூடும் என்றாலும் அது வாசகன் தன்னை பொருத்திக்கொள்ள இடம் கொடுக்கவில்லை.

கதையின் ஆரம்பத்தில் வரும் தத்துவ விசாரணை போன்ற பகுதி ஆசிரியரின்  கூற்றுப்போல உள்ளது இவ்வகையான பகுதிகள் கதையின் ஆரம்பத்திலேயே வரும் போது வாசகனின் பல வகையான ஊகங்களை குறைத்துவிடும்,கதையின் வடிவ ஒருமை சிதைந்துவிடும்.

கதைக்கரு குறிப்பேடுகள் எடுக்கும் ஒருவனின் சுயம் தொடர் குறிப்பேடு எடுப்பதன் வழியே தன்னுடைய ஆளுமையை இழந்து பல ஆளுமைகளின் கலைவையாக மாறிவிடுகிறான்.அந்த குறிப்பேடுகள் வழியே தன்னையறியாமல் நடித்துக்கொண்டுருக்கும் ஒருவன் அந்த குறிப்பேடு இல்லாத போது சுயத்தை இழந்தவனின் மதிப்பு என்ன? மற்றும் ஆளுமையே இல்லது தவிக்கும் ஒருவனிடம் இந்த குறிப்பேடுகளின் விளைவு என்ன?.இந்த இரண்டு கேள்வியும் கதை முடிவுக்கு பின் வாசகனுள் வளர்ச்சியடைகின்றன.கதைக்கரு தற்போதுள்ள வாழ்வின் அடிப்படியை நோக்கி வினா எழுப்பவில்லை எனவே அதற்க்கு பெரிய தரிசன மதிப்பும்மில்லை.

4.தியானி – கி.பி 2500 அஜீக்

கதைக்கரு எழுத்தும் தியானம்தான் என்று கோட்பாட்டை வைக்கிறது.அந்த கோட்பாட்டை நிறுவதற்கு நிகழ்சிகளை கொண்டு கதை அமைக்கபட்டுள்ளது  எனவே கதை கருவைத்தாண்டி எந்த தரிசனத்தையும் கண்டடையவில்லை.

கதை சொல்லும் தன்மை வாசகரை உள்ளுழுக்கும் விதமாக அமைந்துள்ளது அதேவேளையில் கதை சிறுகதைக்குரிய வடிவத்தில் அமையாமல் அறிவியல் புனைவு நீதிக்கதை போல அமைந்துள்ளது.

தமிழ் பெயர்கள் எதிர் காலத்தில் இருக்காது என்பது போல அறிவியல் புனைகதையில் தமிழ் பெயர் வருவது அதிசியமாக உள்ளது,அதற்க்கு மாறாக கதையில் வரும் சுடலை எனும் பெயர் வாசர்களின் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது.

5.நிறமாலைமானி – பெரு.விஷ்ணுகுமார்

கணவன்,மனைவி இருவரும் ஒன்றின் இரு வேறு பிம்பங்கள் தான்.இரண்டு எனத் தெரிவது தோற்றப்பிழைதான்.திருமணம் அந்தப் பிழையை சரி செய்யும் ஒரு சோதனையாகும்.அந்தச் சோதனையில் அந்த பிழைக் கோணத்தை துல்லியமாக கண்டறிந்து இருவரும் ஒன்றினைய வேண்டும் என்பதுதான் அதன் கரு.

ஆசிரியர் கருவையும் நிறமாலைமானியும் ஒன்றுனைக்க வேண்டும் என முடுவு எடுத்து கதையை நிறமாலைமானி சோதனையுடன் பிணைத்து அந்தச் சோதனை முழுதாக புரிந்தவர் மட்டுமே அறியக்கூடிய அறிவியல் கதையாக்கிவிட்டார்.அதன் கதை சொல்லும் மொழியும் சிக்கலான தன்மை கொண்டதாகிவிட்டது.மாறாக கதையில் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து படிமம் தானாக மேலேழுர்ந்து வந்தால் வாசகன் அதை கண்டடையும் தருணம் கதை மேலும் திறந்துகொள்ளும் அது மீள்வாசிப்புக்கும் இடம் அளிக்கும்.படிமங்களை வலுக்கட்டாயமாக திணிக்கும் போது வாசகன் கதையினுள் நுழைய இயலாது.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்த நிகழ்ச்சியை மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்வது ஒரு சிறந்த யுக்தி .அது வாசகனுக்கு திடீர் அதிர்ச்சியை அளிக்கும் வாசகனை கதையில் பங்குபெறவும் இடம் கொடுக்கும்.

கதை நிகழும் காலம் நிகழ் காலத்திலேயே அமைத்தது ஒரு சிறப்பம்சம் ஆகும்.கண்ணனுக்கு முன்னே உள்ளது திடீரென தன் தீர்கமான வடிவத்தை இழந்து புனைவாவது வாசகனை மேலும் ஈர்க்கச்செய்யும்.

6.ம் – கிரிதரன் கவிராஜா

அறிவியல் என்றவுடன் நமது உள்ளம் மேலை அறிவியலுக்குத்தான் செல்கிறது.ஆனால் நமக்கென்று சிந்தனை முறையுடன் கூடிய அறிவியல் உள்ளது என்பதை மறந்துவிடுகிறோம்.வாழ்க்கையின் அடிப்படை வினாக்களை இந்திய தத்துவ சிந்தனை கொண்டு பார்க்கும்போது நமக்கு மட்டும் உரித்தான ஒரு தரிசனம் கிடைப்பதற்க்கான வாய்ப்புள்ளது.அந்த வகையில் இந்தக் கதை வழக்கமான அறிவியல் கதைகளிலிருந்து மாறுபட்டதாக உள்ளது.

கதைக்கரு இருப்பு மற்றும் இறப்பை எதிர்கால விண்வெளி வளர்ச்சியின் பார்வையில் வைத்து நோக்கியுள்ளது.கதைக்கருவின் தரிசன மதிப்பு உயர்ந்தது என்றாலும் அது கதையிலிருந்து எந்த புதிய தரிசனத்தை நோக்கி நகரவில்லை அந்த தரிசனத்தை பற்றிய புனைவாக மட்டுமே உள்ளது.இது வாசகனுக்கு எந்த அறிதலின் கணத்தையும் தருவதில்லை மாறாக கதை முடிவடையும் போது அந்த தரிசனத்தை பற்றிய முழுப்பார்வை கிடைக்கிறது.

கதை முழுக்க ஒரு வகையான கவித்துவ மொழியில் அமைந்திருப்பது இந்த கதையின் கருவோடு பொறிந்திப்போகிறது.வாசகனை பங்கேற்க வைக்கும் கதைச்சொல்லிதனம் கதையில் இல்லை.

7.மின்னெச்சம் – ரூபியா ரிஷி

மனிதனின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை மின்னாக்கம் செய்து,அவற்றை தரவுகளாக்கி அந்தத் தரவுகள் கொண்டு மின்னணு மூளையாக்கும் போது இறப்பு,இருப்பு மற்றும் இறப்பிற்கு பின் இருப்பு ஆகியவற்றை பற்றி வினாவுவது இந்தக் கதையின் கருவாகும் .

நினைவுகளிருந்து அந்த நினைவுக்குரிய நிகழ்ச்சிக்கு சென்று அதை கதையாக்கும் போது கதைக்கரு மேலும் துலக்கம் கொள்கிறது.கதைசொல்லும் தன்மையும் வாசகனை ஒரு தரப்பாக உட்கார வைக்கிறது. இந்த கருவை அருமையாக கதையாக மாற்றியுள்ளார்.

மையக்கருவின் இரண்டு பக்கங்களையும் கதை பேசுகிறது இது ஒரு சிறுகதையின் முக்கிய அம்சம் எனக் கருதுகிறேன்,வாசகனே கதையின் வழியே அவற்றின் நேர்,எதிர் தரப்புகளை பின்னி அவனுக்குரிய புது தரிசனத்தை கண்டடைகிறான்.

கதையின் கடைசி மூன்று பத்திகள் கதையின் எழுச்சியை குறைத்து விட்டன சிறு வீழ்ச்சி அடைந்து முடிவில் திறக்கும் தருணம் இல்லாமல் செய்துவிட்டது.

8.மூக்குத்துறவு – கே.பாலமுருகன்

கதைக்கரு பூமியில் காற்று பஞ்சம் ஏற்படுகிறது அந்த பஞ்சத்திற்கு அந்த தலைமுறையும்,அதற்கு முந்திய தலைமுறையும் எவ்வாறு எதிர் வினையாற்றுகிறார்கள் என்பதாகும்.

கதைக்கரு வளர்ச்சி அடைந்து ஒரு தரசனத்தை கண்டடையவில்லை ஏனெனில் மூக்குத்துறவு என்பது அறிவியலின் வளர்ச்சியால் மருத்துவத்தில் நிகழும் ஒரு தொழில்நுட்ப வளர்ச்சிதான்.தொழில்நுட்பம் எனும்போதே கதைக்கரு வளர்ச்சியடைவதர்கான வாய்ப்புகளை இழந்து விடுகிறது.

மூக்குத்துறவினால் சமுக மதிப்பீடுகள் மாறுவதை அந்த தலைமுறையும்,அதற்கு முந்தைய தலைமுறையும் எதிர் கொள்வதை கதையில் அமைந்துள்ளது கதைக்கு சமூக விமர்சனத்தன்மை அளிக்கிறது.

9.பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்

கதையின் கரு சூப்பர் கணினி எனும் ஆல்ஃபாக்கள் சூப்பர் மனிதனையும்;சூப்பர் மனிதன் சூப்பர் ஆல்ஃபாக்களையும்படிக்கை முற்படுவதாகும்.அவ்வாறு சூப்பர் மனிதன் உருவாகும்போது சமுகத்தில் சாதாரண மனிதனின் இடம்மென்ன ?.சூப்பர் ஆல்ஃபாக்களில் கூட்டு நனவிலி மற்றும் பிரக்ஞை ஆகியவற்றின் இடமென்ன ? என்பதாகும்.

மனிதனை பிரதி எடுக்கும் இயந்திரம் உருவாகும்போது மற்றும் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் இரு உடல் களைந்து ஒன்றென நிரந்தரமாக ஆகும்போது ‘நான்’ எனும் கேள்வி மேலும் அழுத்தமாக எழுகிறது.எக்காலத்திலும் இந்த கருவிற்கு மதிப்புள்ளது.

கதையின் கரு வளர்ச்சியடைந்து ‘நாம்’ எனும் கேள்வியை நோக்கி நகர்கிறது ஆனாலும் அந்த நான் எனும் கேள்வி அப்படியே உள்ளது இதற்க்கு காரணம் கதை சூப்பர் ஆல்ஃபாக்களை எவ்வாறு உருவாக்குவது,அதிலுள்ள பிரச்சனைகளை எவ்வாறு களைவது  என கதை தொழில்நுட்ப ரீதியா நகர்ந்துவிட்டது.

கதை சொல்லும் தன்மை வாசகனை பங்கேற்க வைக்கிறது மீள் வாசிப்பிற்க்கும் இடமளிக்கிறது.

இதிலுள்ள பெரும்பாலான கதைகள் அறிவியல் புனைகதைகளிலிருந்து விலகி அறிவியல் தொழில்நுட்ப கதைகளாக மாறி அதன் போதாமைகளை சுட்டி காட்டுவதாக முடிந்துவிடுகின்றன.( அவன் ,கடவுளும் கேண்டியும் ,மின்னெச்சம் ,முக்குத்துறவு ,பல்கலனும் நாம் அணிவோம் )..இதிலிருந்து சில கதைகள் முன்னேறி தனி தரிசனங்களை கண்டடைந்துருகின்றன.(மின்னெச்சம் ,பல்கலனும் நாம் அணிவோம்).

கதைக்கருவிற்க்கு எதிர் காலத்திலும் மதிப்பு இருக்க வேண்டுமே தவிர. அறிவியல் கதை என்றால் எதிர்காலத்தை பற்றி மட்டும் பேச வேண்டும் எனும் கட்டாயமில்லை.நிகழ்காலத்தையே கதையின் காலமாக கொள்ளும் போது நிகழ் காலத்தில் உள்ள பொருள் அல்லது கருத்து ஏற்கனவே அது கொண்டுள்ள தீர்க்கமான வடிவத்தை இழந்து மாயத்தன்மை பெற்று விடுகின்றன .அந்த வகையில் அமைந்தவை ம் மற்றும் நிறமாலைமானி ஆகும்.

அறிவியல் புனை கதைகளுக்கு என்று சில பொதுவடிவங்கள் உள்ளன.அந்த பொது வடிவங்கள் சில பூமியின் அழிவு முற்றிலும் அல்லது  பகுதி ,மனித மூளையை பிரதி செய்தல் ,இயந்திரங்களின் முழு வளர்ச்சி மற்றும் அவற்றின் ஆதிக்கும்,தொழில்நுட்ப வளர்ச்சி (VR,BIG DATA,NEURO MAPPING) போன்றைவை மற்றும் தற்போதுள்ள உள்ள ஆராய்ச்சிகளின் நீட்சி. இந்த பொது வடிவில் தான் பெரும்பாலான கதைகள் ( ம், நிறமாலைமானி தவிர ) அமைந்திருந்தன.இந்த பொது வடிவில் எழுதும்போது அது தமிழில் அமைந்துள்ளது தவிர்த்து வேறு சிறப்பம்சம் எதுவும் இருக்காது .ஆங்கிலத்தில் இது போன்ற எண்ணற்ற கதைகள் வாசிக்க கிடைக்கும். மட்டுமே விதி விலக்காக அமைந்திருந்தன.

இவையெல்லாம் ஒரு வகையில் மேலை சிந்தனைகளாகவும் ,நமது பண்பாட்டுக்கு அந்நியமாகவும் உள்ளன.கதைகளின் மாயத்தருணம் கனவுகளிருந்து வருவது இந்த சிந்தனைகள் நமது ஆழ்நிலைக்கு அந்நியமாக உள்ள போது கதையில் அந்த உச்சதருணம் அமையாது போய்விடும்.

இந்தியாவிற்கென தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கிய அறிவியல் இருந்தது அவை  நவீன யுகத்திற்க்கு ஏற்ப வளர்ச்சியடையவில்லை ஆனால் அவற்றிலிருந்து கதைகள் பிறந்தால் உலக அறிவியல் புனைகதைகளிலிருந்து தனித்து விளங்கும்  மற்றும் நமக்கு மட்டும் உரிய தனித்துவமான கண்டடையும்.

கதை சொல்லும் மொழி அனைத்து கதைகளிலும் தேர்ச்சியாகவே அமைந்துள்ளது.எனவே மேற்கொண்டு தொடரும்போது மேலும் சிறப்பான கதைகள் அமையும் என நம்புகிறேன்.

பி.கு : யாமத்தும் யானே உளேன் மட்டும் என் வாசிப்பிற்கு முழுவதுமாக புரி படவில்லை அதை மட்டும் தவிர்த்து இருக்கிறேன்.

தி.ஜினுராஜ்

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி
முந்தைய கட்டுரை1000 மணிநேர வாசிப்பு சவால்
அடுத்த கட்டுரை‘உயிர் விளையாட்டு’- கிருஷ்ணன் சங்கரன்