அறம், மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ.மோ.
வணக்கம்.

அறம் சிறுகதை அற்புதம். உள்ளத்தை உருக்கிய ‘உண்மைக்’ கதை. ”அறத்தை நாம் காக்க அறம் நம்மைக் காக்கும்” என்றும், ”அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” என்றும் படித்து நினைவில் வந்தது. பெரும்பாலான பதிப்பகங்கள் எழுத்தாளர்களைச் சுரண்டித் தான் வாழ்கின்றன. இதை சுட்டிக்காட்டவும் துணிவின்றி எழுத்தாளர்கள் இருந்துவரும் நிலையில், சிறுகதை வாயிலாக அவர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்திருப்பதாகவே கருதுகிறேன்.

இக்கதையில் நீங்களும் ஒரு பாத்திரமாக உலவி இருப்பது கதையின் உண்மைத்தன்மையை அதிகப்படுத்துகிறது. உயிர்மை பதிப்பகம் உங்கள் புத்தகங்களை அண்மையில் நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இருட்டடிப்பு செய்ததும் நினைவில் வந்துசென்றது.

எளிய ஆரம்பத்துடன், திகைப்பூட்டும் முடிவுடன், சிறுகதை இருந்தது. என்றாலும் சில வார்த்தைப் பிரயோகங்களை (தாயளி) தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இயல்பான சந்திப்பு என்று காட்டுவதற்காக கொச்சை வார்த்தைகளைச் சேர்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. ஏனெனில், சிறுகதையின் ஆழம் செறிந்த கருவுடன் அந்த எளிய சொற்களை இணைத்துப் பார்க்க இயலவில்லை.

-வ.மு.முரளி.
http://kuzhalumyazhum.blogspot.com/2011/02/blog-post.html

திரு ஜெயமோகன்,

அறம் வாசித்தேன்

சமீபத்தில் ஒரு பத்திரிகையில் (பெயர் ஞாபகம் இல்லை), உங்களை பேட்டி கண்டவர், ஒரு எழுத்தாளனுக்கு வசதியான வாழ்க்கை அவசியமா என்று கேட்டிருந்தார். இந்த கேள்வி எனக்கு நாகரிக குறைவாக பட்டதோடல்லாமல் எரிச்சலாகவும் இருந்தது. ஆனால், நீங்கள் எந்த பாசாங்கும் இல்லாமல், வசதியான வாழ்க்கை அவசியம் என்பதை விட, தினசரி பொருளாதார கவலைகள் அவனுக்கு இருக்க கூடாது. அவன் விரும்பும்போது idle ஆக இருக்கும் சுதந்திரம் வேண்டும் என்று பதில் கூறி இருந்தீர்கள். பட்டுன்னு ஒரு பதில். (அந்த நேர்மை நன்றாக இருந்தது.)

உங்கள் வலைத்தளத்தில் நான் வாசித்த மற்றுமொரு கட்டுரை ‘நான்கள்’. அதை பற்றி உங்களுக்கு கடிதம் எழுதினேன். இப்போது இந்த கதை. இந்த மூன்றையும் ஏதோ ஒரு இழை இணைப்பது போல் தோன்றுகிறது. நான் யோசிப்பது சரியா என தெரியவில்லை.

நம்மில் சிலருக்காவது அந்த செட்டியார், ஆச்சி, அல்லது எழுத்தாளர் ஆகியோரின் இடத்தில நிற்கும் சூழல் வந்து இருக்கும். அல்லது வரும். எப்படி எதிர்கொண்டு இருப்போம்? எதிர்கொள்ள உத்தேசித்திருக்கிறோம்?

பின்குறிப்பு: கலப்பின நடை மிகவும் கஷ்டப்பட்டு தவிர்த்து உள்ளேன்.

மங்கை

வெளிநாட்டில் நடக்கும் அரசியல் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போகும் ஒரு இந்தியர், காந்தி பிறந்த தேசத்தைச் சேர்ந்தவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுபோல், இலக்கியக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒரு தமிழர், ஜெயமோகன் பிறந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். அறம் உங்கள் மணி மகுடத்தில் மின்னும் இன்னொரு வைரம். நீங்கள் வாழும் காலத்தில் வாழ்கிறேன் என்பது மிகுந்த பெருமிதத்தைத் தருகிறது.
அன்புடன்
மகாதேவன்’

Dear Jeyamohan,

I read your short story ‘aRam’. I was reminded of the night here at Albany when you said quite a few things about MVV. I vaguely remember that you made a remark that he wrote that collection of biographies and he had issues getting the fee for that. With your wonderful imagination and words, you have made it an unforgettable short story. Hats off to you.

Regards,

Obla Vishvesh

அன்புள்ள ஜெ

அறம் -அற்புதமான கதை -அர்விந்த் நீங்கள் சொன்னதாக எனக்கு சொன்ன போதே , அந்த கதையை பற்றி ரொம்ப நேரம் பேசினோம்.
உங்கள் படைப்புகளில் எனக்கு மிக பிடித்தது கொற்றவை- அதன் கதை அமைப்பு, மொழி மிகவும் அழகாக , தெளிவாக அமைய பெற்றது . அது போல் தான் அறமும்.

ஆச்சி கொற்றவையின் சிறுகதை வடிவம், அவளின் அற சீற்றம் , கொற்றவையின் சீற்றமே . ஒரு பெரும் வித்யாசம் , கண்ணகி அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக பொங்கி எழுந்து , அறத்தை நிலை நாட்ட துணிந்தாள் – ஆச்சி தன் குடும்பத்தை காக்க மற்றவனுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக நடு தெருவில் அமர்ந்தாள்.

உங்கள் கதைகளில் உள்ள மற்றொரு சரடு – மறுதலிக்கப்பட்ட அன்பு – அதனால் உருவாகும் கையறு அவலம் – அது மெல்ல மெல்ல இறுகி மனதில் பாறையாக உறையும் நிலை, கொற்றவையில் அது தான் முக்கிய சரடு . இதில் தன்னில் முழுமை அடைந்த, உறவுகளில், சிக்கல்கள் அற்ற தாயின் அற சீற்றம்.

மற்றுமோர் ஆச்சர்யம் –
நான் படித்த , எனக்கு பிடித்த novel 18 ஆம் அட்சயகோடு – நீங்கள் கதைகளுக்கு கோனார் உரை எழுதுவது மிக அபூர்வம் – ஆனால் 18 ஆவது அட்ச கோடுக்கு எழுதிய விரிவுரை – கிரேட்- ஒரு புனைவை படிப்பது , மதிப்பிடுவது பற்றி நீங்கள் விமர்சகராக எழுதுவதுடன் , இப்படி ஓரிரு classics பற்றி விரிவாக எழுதுவது எங்களுக்கு பயனுள்ளதே.

விஜி

அன்புள்ள விஜி

நன்றி.

எனக்குச் சொல்லப்பட்ட ஒரு நிகழ்ச்சி. இருபதாண்டுகளுக்கும் மேலாக மனதில் இருந்தது. அதில் ஒரு முக்கியமான விஷயம் சேரவேண்டியதனால்தான் இத்தனைநாள் கதையாக ஆகாமல் தவித்தது. இப்போது ஆகிவிட்டிருக்கிறது. அந்த விஷயம் ஆச்சிதான்

ஜெ

ஜெயமோகன் ‘அறம்’ மிகவும் அற்புதமான கதை. எங்கள் குலத்தில் பாடுவார் முத்தப்பர் என்ற புலவர் உண்டு அவர் பாடினால் அப்படியே பலிக்குமென்று
சொல்வார்கள் . அவர் ஒருமுறை செவ்வூர் என்ற ஊருக்கு சென்றார் அங்கு அவரை சரியக மதிக்கவில்லை உடனே அவர் ‘எவ்வூர் சென்றாலும் செவ்வூர் செல்லவேண்டாம்’ என்று பாடிவிட்டாராம். அவர் கூறியது நடந்தது என்று கூறுவார்கள். உடனே இது தெரிந்த அவ்வூர் மக்கள் அவரிடம் ஐயா எங்களை மன்னிக்கவும். நாங்கள் செய்தது தவறு நீங்கள் தயவு செய்து எங்களுரைபற்றி நல்ல பாடல் பாடவும் என்று கேட்டுகொண்டார்கலாம். புலவர்கள் வாக்கு பலிக்கும் என்று புலவர்கள் மீது மிகுந்த மதிப்பு கொண்டார்கள். அதுதான் அந்த ஆச்சி செயல் எடுத்துக்காட்டுகிறது.
‘காடு வெட்டி கடியநிலம் திருத்தி வீடு கட்டிகொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு அன்றைக்குவந்த அம்மா இலக்குமியே என்றைக்கும் நீங்காதிரு’ என்று அவர் பாடினாராம் அதனால் தான் இன்றைக்கும் செட்டியார்கள் பெரும்பாலும் நல்லநிலையில் இருக்கிறார்கள் என்றுகூறுவதுண்டு.

நீங்கள் கூறுவது போல் அறம் சிறுக சிறுக தேய்ந்து இன்று இல்லை என்று ஆகிவிட்டது. சிலரிடம் அறம் இருக்கலாம் தேடுவது கடினம்.

செந்தில் குமார்

ஒரு கைப்பிடி வாழ்க்கை
வாழ்வின் வேர்கள்
வேர் மனம்
——— என்று பல குறிப்புகள்.

எனக்கு நகுலன் (என்று நினைக்கிறேன்) கவிதை நினைவுக்கு வந்தது..

நாபிக்கொடி பிணைக்கிறது
அறுத்து எறிந்து விட்டு கிளம்புவாய்
அத்துடன் தீர்ந்த தென்று எண்ணுவாய்
அப்படி எண்ண வொண்ணாதே

வெகு நேரம் கதையில் அளைந்து (எழுத்து பிழையில்லை) கொண்டிருந்தது மனம்

அன்புடன்
முரளி

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசோற்றுக்கணக்கு [சிறுகதை]