திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்
திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்
டியர் ஜெ.மோ
வணக்கம். திராவிட இயக்கம் திராவிட இயக்கத்தார் இலக்கியம் குறித்த உங்கள் கடிதங்கள் வாசித்தேன்.
அது குறித்து சிலச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அண்ணாவின் பார்வதி பாய் பி.ஏ நாவல் குறித்து நீங்கள் எழுதி இருந்தீர்கள். அந்த நாவல் எனக்கு முதுகலையில் தற்கால இலக்கியத்தில் வாசிப்புக்கு இருந்த து. அந்த நாவலை வாசித்துவிட்டு அதிர்ச்சி அடைந்த நான் விடுமுறையில் மும்பை வந்திருந்தப் போது என் அப்பாவிடம் (பி.எஸ். வள்ளி நாயகம்) அண்ணா சிறந்த நாவலாசிரியர் இல்லை.. என்று சொல்லிவிட்டேன்! அதுவும்’பேச்சு வாக்கில் சொன்னது தான். என் அப்பாவுக்கு கடும் கோபம் வந்துவிட்ட து.
“எங்க அறிஞர் அண்ணாவை விமர்சிக்கிற அளவுக்கு நீ வளர்ந்திட்டாயா..?உனக்கு ரொம்ப படிச்சிட்டோம்னு இப்பவே நினைப்பு வந்திடுச்சா…. பற்களைக் கடித்துக் கொண்டு கோவத்தில் கண்கள் சிவக்கப் பேசிய அப்பா .. இப்போதும் என்னைத் துரத்துகிறார்..!அப்பாவிடம் எவ்வளவொ விளக்கம் சொல்ல முயற்சி செய்தேன். அவர் கேட்கும் மன நிலையில் இல்லை. ஒரு அக்மார்க் திமுக கார ர்கள் எப்போதுமே இப்படித்தான் இருப்பார்கள் இருக்கிறார்கள் என்பதை வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் அனுபவித்திருக்கிறேன்.
அப்பாவின் கோபம்.. முதுகலையில் நான் மெரிட்டில் தேர்ச்சி பெற்று கோல்ட் மெடல் வாங்கியப் பிறகும் மாறவில்லை.என் மேற்படிப்பு தொடரவில்லை!மேலும் ஜெயகாந்தனை வாசிக்கும் வாசகர் வட்ட த்தை,ஏன் இன்று ஜெ.மோவை வாசிக்கும் வாசகர்களில் சிலரையேனும் உருவாக்கியதில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பு அதிகமுண்டு.
திராவிட இயக்கத்தினரின் இலக்கியம் குறித்த உங்கள் கருத்துகளில் உடன்படும் நான் அவர்களின் பத்திரிகைகள், நாடகங்கள் குறித்த மதிப்பீட்டை குறைத்து மதிப்பிடமுடியுமா என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.நாடகத்தின் போக்கு உள்ளடக்கம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர்கள் திராவிட இயக்கத்தார்.அண்ணா எழுதிய துரோகி கப்லான், ஜன நாயக சர்வாதிகாரி, சகவாச தோசம் ஆகிய நாடகங்கள் வித்தியாசமானவை. மேலும் எம் ஆர் இராதா, திருவாரூர்தங்கராசு, என் எஸ் கிருஷ்ணன் நாடகங்களும் முக்கியமானவை. இந்த நாடகங்களின் பங்களிப்பு இலக்கியப் பங்களிப்பில் இடம் பெறாதா?
திராவிட இயக்கத்தாரின் பத்திரிகைகள்..எனக்குத் தெரிந்து 70க்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வெளிவந்திருக்கின்றன. ஒரு இதழை எனக்குத்தெரிந்தே 5 முதல் 20 பேர் வரை ஓசியில்வாசிப்பார்கள். அதில் இலக்கியம் இல்லைஎன்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் அவைவாசிக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கியது. அதற்கு முன்பு வரை இலக்கியம் என்பது மேட்டுக்குடிக்கானதாக இருந்த து மாறி இலக்கிய வாசகனை அடிமட்ட நிலையிலும் உருவாக்க ஒரு காரணமாக இருந்த தாக நினைக்கிறேன்.அண்ணாவின் அரசியல் நிலைப்பாட்டுக்கு அவர் சில தளங்களை மீட்டெடுக்கிறார்.
அதாவது வெள்ளையரின் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எதிராகவேத இந்தியாவின் கலாச்சாரமும் மேன்மையும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பாரதி போன்றவர்கள் கொண்டாடும் ஆரியதேசம் இந்தவகைப்பட்டதுதான். ஆனால் அறிஞர் அண்ணா இந்த திசையை தன் இயக்கத்தின் ஆணிவேராக மிகச்சரியாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியா என்ற ஒரு தேசம் பிறப்பதற்கு முன்பே தமிழர்களுக்கான தேசமும் தமிழ்த்தேச அரசியலும் தமிழ் மண்ணில் இருந்தது என்பதை 2000 வருடத்திற்கு முந்திய சங்க இலக்கியத்திலிருந்தும் மற்றும் இடைக்கால தமிழ்க் காவியங்களிலிருந்தும் எடுத்துக்கொண்டார். தமிழனின் சங்க காலத்தைப் பொற்காலமாகவும் தமிழ் மொழியையும் இனத்தையும் அப்பொற்காலத்தின் அடையாளமாகவும் காட்டியதன் மூலம் தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் உலகத்தில் மிக எளிதாக தாக்கத்தை ஏற்படுத்தினார்.
இது எப்படி சாத்தியப்பட்டது என்றால் அண்ணாவின் திமுக காலத்திற்கு முந்திய ஆதிதிராவிடர் எழுச்சியும்உரிமைப்போராட்டங்களும் அக்காலத்தில் நீதிக்கட்சி வழங்கிய கல்விச்சலுகைகளும் பெரியாரின் திராவிடர் இயக்கம் ஏற்படுத்திய தாக்கங்களும் கிராமப்புற இளைஞர்களிடம் ஏற்கனவே மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. கிராமப்புறங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களாக இருந்த அக்கால இளைஞர்கள் பெரும்பாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வாசிக்க கிடைத்தவை பெரும்பாலும் இவர்கள் எழுதியவையும் இவர்கள் மேற்கோள் காட்டிய செய்திகளும்தான்.
இக்கிராமப்புற இளைஞர்களை சொந்த ஊரில் நிலவுடமை சமூகமாக இருக்கும் ஆதிக்கச்சாதியினர்மதித்ததில்லை. பணிபுரியும் இடத்திலும் இவர்களுக்கு மரியாதை இல்லை. இப்படியாக தமிழ்மொழிக் கற்ற இவர்கள் ஒதுக்கப்பட்ட சூழலில் பேசப்பட்ட தமிழின் பெருமையும் தமிழரின் பொற்காலமும் இவர்களை அந்த பெருமையின் அடையாளமாக உணரச் செய்தது.கனவிலும் கிராமப்புறத்தில் தலைமைத்துவ இடத்திற்கு வரமுடியாது என்ற நிலையில் இருந்த இவ்விளைஞர்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மூலம்கிராமத்தில் தங்களுக்கான ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.
இக்காலக்கட்டத்தைப் பற்றி ஆய்வு செய்திருக்கும் ஜேக்கப் பாண்டியன் அவர்கள் கிராமங்களில் 60க்குப்பின் ஏற்பட்ட இம்மாற்றத்தில் தலைமைத்துவ இடத்திற்குஆதிக்கச்சாதியைச் சார்ந்த இளைஞரும் அவருக்கு ஆதரவாக பிற சாதி இளைஞர்களும் இருந்தார்கள் என்று சொல்கிறார்.அண்ணா அரசியலுக்காக எழுதினார்.அரசியலுக்காக கதை புதினம் நாடகம் ஏன் கவிதைகூட எழுதிப் பார்த்திருக்கிறார்.
இன்னொரு சின்ன சந்தேகம்…புதுமைப் பித்தன் கவிஞர் பாரதிதாசனின் புரட்சிக்கவி காப்பியத்திற்கு எழுதிய அணிந்துரை வாசிக்க கிடைக்கிறது.புதுமைப்பித்தனை நேசிக்கிறவர்கள் இதைப் பற்றிஎழுதுவதில்லை. பாரதிதாசன் வகையாறாக்களுக்கும்புதுமைப்பித்தன் எழுதியதை மறந்தும் பேசுவதில்லை.இதையும் எங்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
அன்புடன்,
புதியமாதவி,
மும்பை.
பி.கு: உங்கள் வலைத்தளத்தில் என் கடிதம் காந்தி பற்றி எழுதியதை வாசித்த உங்கள் வாசகர் திரு.எஸ். வேலுமணி அவர்கள் சென்னையிலிருந்து “இன்றைய காந்தி” உங்கள் புத்தகம் அனுப்பி
தந்தார். வாசித்துக் கொண்டிருக்கிறேன். பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அன்புள்ள புதியமாதவி,
அதை என் கட்டுரையிலேயே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஒர் இயக்கத்தின் கொடையை வரையறைசெய்யும் போது மிகையின்றி பார்ப்பது இங்கு நிகழ்வதில்லை என்பதே நான் சொல்வது. தமிழ் அடையாளம், தமிழ்அரசியல் இரண்டுமே திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்டவை அல்ல. அவை திராவிட இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்னரே இங்கு மிக வலுவாக உருவாகி நிலைகொண்டவை. பேரறிஞர்களாகிய முன்னோடிகள் அதற்கு உண்டு. உண்மையில் திராவிட இயக்கம் தமிழியக்கத்தைப் பொருட்படுத்தாததாக அதை ஏளனம் செய்வதாகவே இருந்தது. பழைய தமிழ்நூல்கள், குறிப்பாக திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நூல்களில் திராவிட இயக்கம், திராவிட இனம் என்னும் கருத்தாக்கம் ஆகியவற்றை கடுமையாக கண்டிக்கும் பகுதிகளைக் காணலாம். சி.என்.அண்ணாத்துரை அவர்கள் தமிழியக்கத்தின் பார்வைகளை, கருத்துக்களை எடுத்து பரப்பியக்கம் ஒன்றை கட்டமைத்தவர். அப்பரப்பியக்கத்தின் கொடைகளை அவருடைய சாதனைகளாகக் காணலாமே ஒழிய தமிழியக்கத்தின் கொடைகளை அவருடையவை எனக்காட்டுவது வரலாற்று மறுப்பு நோக்கு மட்டுமே.
நாடகத்தைப் பொறுத்தவரை அதையும் இரண்டாகவே பிரிக்கவேண்டும். தமிழின் சீரிய நாடகமரபு ஒன்று உண்டு. இன்னொன்று பரப்பியல்நாடக இயக்கம். சி.என்.அண்ணாத்துரையின் கொடை பரப்பியல் நாடகத்தளத்திலேயே ஒழிய சீரிய நாடக இயக்கத்தில் அல்ல. சீரிய நாடக இயக்கத்தை இன்னும் நாம் தெளிவாக வரையறைசெய்துகொள்ளவில்லை. நான் அதை எஸ்.வி.சகஸ்ரநாமம் முதல்தான் தொடங்குவேன்.
ஜெ
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்