ஏகதேசம் உங்களுடைய அனைத்து படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். ஒன்றிரண்டு விடுபட்டிருக்கலாம். உங்களுடைய படைப்புகள் மீது எனக்கு மதிப்பும் உண்டு என்பதும் நீங்கள் அறிந்ததுதான்.உங்கள் படைப்புகள் குறித்து எழுதவும் செய்திருக்கிறேன். உங்கள் படைப்புகள் புதுமைப்பித்தன்,மண்டோ ,ருல்போ போன்றோரின் மரபு சார்ந்தவை.ஒருவேளை நீங்கள் இவர்களை பொருட்படுத்தாதவராக இருக்கலாம். ஒருவேளை மண்டோ,ருல்போ இருவரையும் ஏற்றுக் கொண்டு பித்தனை மட்டும் நிராகரிக்கவும் செய்யலாம். அது பிரச்சினையில்ல.புதுமைப்பித்தன் உங்களுக்கு பொருட்டல்ல என்று சொல்லியிருக்கிறீர்கள்.ஓகே . ஆனால் உங்கள் படைப்புகளில் அமையும் பகடிக்கும் புதுமைப்பித்தனுக்கும் தொடர்பு இருக்கிறது.நான் பொருட்படுத்த மாட்டேன்,ஆனால் தாத்தாவின் அத்தனை சாயலும் என்னிடம் உண்டு என்பதை போல.
தமிழில் பொலிட்டிக்கல் தரப்புகளுடன் நின்று சரசம் ஆடும் எழுத்தாளர்கள் பலர் திராவிட இயக்கத்தால் வந்தோம் ,பராசக்தி இல்லையென்றால் நாங்கள் பல் விளக்கவே பழகியிருக்க மாட்டோம் என்றெல்லாம் அதிர்ச்சி மதிப்பிற்காக கத்துவதுண்டு.நானும் ரஜினி சினிமா பார்த்தே இலக்கியத்திற்கும் வந்தேன் என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள் ? நன்றாகத்தான் இருக்கும். அப்படித்தான் நீங்களும் பல சமயங்களில் பேசுகிறீர்கள்.அதை பற்றியே நான் கேட்கிறேன்.அவற்றிற்கும் உண்மைக்கும் இடையில் எவ்வளவு தூரம் ?
உங்களைக் காட்டிலும் அதிகமாக எனக்கு திராவிட இயக்கத்தை சேர்ந்த பலர் நெருக்கமாக இருப்பவர்கள்.ஒன்றிரெண்டு பேர் அல்ல.நிறைய பேர்.என்னுடைய அப்பா திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்.
திராவிட இயக்கம் ,கருணாநிதி ,அண்ணா என்றெல்லாம் அதிர்ச்சி காட்டுகிற எழுத்தாளர்கள்,திராவிட இயக்கத்தவருடன் கூடுவதில்லை.பேச்சு வைத்து கொள்வதில்லை.விவாதிப்பதில்லை.நவீன இயக்கம் சார்ந்தோருடனும் ,சிற்றிதழ் சார்ந்தோருடனுமே இருக்கிறீர்கள்.ஆனால் பல்ப் ஒன்றும் குறைபாடுடையதில்லை,என்று இவர்களை முன்னிட்டு நிறுவும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சவடால் அடிக்கிறீர்கள்.ஒன்றில் உண்மையாகவே மதிப்பு கொண்டிருக்கிறீர்கள் எனில் அவற்றோடு ஊடாடிக் கொண்டிருக்க மாட்டீர்களா என்ன ? திராவிட இயக்கம் முக்கியமானது என்று கூட நீங்கள் சிற்றிதழ் தரப்பினரோடுதான் பேச முடியும்.அந்த பக்கமாக திரும்பி பேச முடியாது.அங்கே கேட்பதற்கே ஆள் கிடையாது.பஜ கோவிந்த் மட்டுமே அவர்களுக்கு புரிந்த ஒரேயொரு மொழி .
ஒருமுறை பெரியவர் ஒருவர் செருப்பு தைப்பதும் படைப்பும் ஒன்றுதான் என்றார்.இது நீங்கள் குறிப்பிடுகிற செருப்பு தைப்பவர்களுக்குத் தெரியுமா ? என்று திருப்பி கேட்டேன்.செருப்பு தைப்பதா,படைப்பா என்பதல்ல என்னுடைய விவாதம் . செருப்பு தைக்கும் போது கிடைப்பதுதான் படைப்பிலும் கிடைக்கிறது என்றார் அவர் .நல்லது.அப்படியானால் ஏன் நீங்கள் பத்துப்பதினைந்து செருப்பு தைப்பவர்களை அழைத்து பேசிக் கொண்டிராமல் எங்களை அழைத்து பேசுகிறீர்கள் என்று கேட்டேன்.அதிர்ச்சிக்காக பேசுவோரிடம் இப்படி கேட்டால் அவர்களிடம் பதில் இருப்பதில்லை.நீங்களும் அவ்வப்போது இப்படி உளறிக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.படைப்பின் மதிப்பால் உளரட்டும் அதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சியிருக்கிறது என்றிருப்பதால் எங்கள் அனைவரையும் நீங்கள் 420 என கருதிவிடக் கூடாது ..