அறம் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

அறம் சிறுகதையை வாசித்தேன். நல்ல சிறுகதைகளே அருகி வரும் காலகட்டம். எந்த இதழில் எந்த சிறுகதையை வாசித்தாலும் ஏமாற்றமும் கோபமும்தான் வருகின்றது. சல்லித்தனமான எழுத்துக்கள். மரபு தெரியாமல், உலக இலக்கியமும் தெரியாமல்,மொழி தெரியாமல் எழுதுகிறார்கள். அதைவிட வாழ்க்கை தெரியாமல் எழுதுகிறார்கள். சின்னச்சின்ன தந்திரங்களும் வார்த்தைச் சிக்குக்களுமே இலக்கியமாக நினைக்கப்படுகிறது. ஒன்றுமே இல்லாமல் இந்தா வாழ்க்கை என்று ஒரு கைப்பிடி சதையையும் ரத்ததையும் அள்ளி வைத்தது போன்ற கதை. உண்மையில் மெய்சிலிர்த்துப்போனேன். நடந்ததா இல்லை நடந்ததாக ஒரு மனம் சொன்னதா என்ற மயக்கம் கதையில் உள்ளது. ஆகவே யதார்த்தம் அல்ல அதன் பிரச்சினை. அதிலே உள்ள ஆழமான கேள்விதான். வாழ்க்கையைப்பற்றியும் மனிதனை ஆட்டுவிக்கிற அந்த வேல்யூஸ் பற்றியும். உங்களுடைய மிகச்சிறந்த கதைகளிலே ஒன்று இது

வாழ்த்துக்கள்

சிவராமன்

அன்புள்ள சிவராமன்

எழுதிய பின்னர் நானே அதன் மையத்தைக் கண்டுபிடித்த கதை. என் கதைகளில் இப்படி ஒரு உடனடியான பெரும் வரவேற்பு எந்தக்கதைக்கும் கிடைத்ததில்லை. காரணம் இதன் எளிமை மட்டும் அல்ல, நம்முடைய மரபுடன் தொடர்புள்ள ஒரு தொப்புள்கொடிதான்.

நாட்டுக்கு அல்ல, அறம் வீட்டுக்குத்தான் என்ற வரி என்னை மிகவும் சிந்திக்கச் செய்தது. இன்று அரசியல்வாதிகள், வணிகர்கள் என எல்லார் வீடுகளிலும் அறம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது. அதுதான் முக்கியமான வீழ்ச்சி

ஜெ

அன்புள்ள ஜெ

அறம் கதை வாசித்தேன். அறம்பாடுவது என்றால் என்ன என்று எனக்கு முதலில் தெரியாத காரணத்தினால் கொஞ்சம் கழிந்துதான் எனக்கு கதை புரிந்தது. நண்பரிடம் போனிலே கேட்டேன். இந்த மரபு தமிழ்நாட்டிலே நீண்டநாட்களாக உள்ளதா என்ன?

ஜார்ஜ், நெல்லை

அன்புள்ள ஜார்ஜ்

விக்கியில் இதைப்பற்றி வந்துள்ளது.

அறம்பாடுதல் பற்றி விக்கி

இது நம் நெடுங்கால நம்பிக்கைகளில் ஒன்று. போகிற போக்கில் சாபமாக ஏதாவது சொன்னால் ‘அறம்பற்றிவிடப்போகிறது’ என நம் பாட்டிகள் சொல்வார்கள்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

அறம் – சிறுகதை படித்தேன் !!

கதை சரளமான காவிரி (அந்தக்கால காவிரிதான் !!) ஓட்டம், ஆச்சியின்வாயிலாக
விஸ்வரூபம் எடுக்கும்போது கண்கள் பனித்தன !!

”சரஸ்வதியின் சாபத்தை, துர்கையின் வீரமும் விவேகமும், உள்வாங்கி,
விமோசனமளித்ததாகவே தோன்றியது.

மிகவும் நன்றாக இருந்தது !

நன்றி !!

வெ. கண்ணன்
பெங்களூர்.

அன்புள்ள ஜெ,

அறம் சிறுகதை படித்தேன். ஷாக் அடித்தது போல், எனக்கே சாமி வந்தது போல் இருந்தது.
அழாமல் படிக்க முடியவில்லை. மறுமுறை படிக்கும்போதும். எந்த ஒரு கதை
படித்த போதும் இந்த ஒரு உணர்வு வந்தது இல்லை. சிறுகதைன்னா இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று உணர வைத்த கதை. நன்றி.

‍‍ ‍‍- கார்த்தி

படித்து கொஞ்ச நேரம் அழுது தீர்த்தேன்.

’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’ என்று வாசித்தவுடனே பொங்கிவிட்டது. அலுவலகத்தில் இருந்ததால் கர்சீபை முகத்தில் போட்டு சமாளித்தேன். கவுண்டனாகப் பிறந்து (சம்பாதிக்காமல்!)படிக்கவேண்டுமென்று ஆசைப்பட்டதால் நானும் கொஞ்சம் கஷ்டம், ஏச்சு ( அடஏஏஎ..உங்கூட படிச்சவனெல்லாம் இன்னக்கி ஊடு கட்டீ காரு வாங்கி…..) பார்த்துவிட்டேன். அதனால் நானே பொங்கி கவுண்டர்களை சபிப்பதாக எண்ணிக்கொண்டேன்.

ஆனால்
“’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றன்னறம்’ ” என்று இருக்க வேண்டுமோ?

நன்றி

வெங்கட் c

அன்புள்ள வெங்க்ட

நன்றி

செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென்று அறம்’ என்பதே சீரிபிரித்து வரும் பொருள். அப்படி பிரித்தால் தளை தட்டும் என்பதனால் செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’ என்றிருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ

அறம் சிறுகதை படித்தேன்.dramatic. அந்த அம்சம் எப்போதுமே இலக்கியத்திற்கு அடிப்படையானது. நியாயமான ஒரு தளத்தில் நின்று கொண்டு நாடகத்தன்மை உருவாகுமென்றால் அதைப்போல இலக்கியத்தின் zenith வேறு ஒன்று கிடையாது. இன்றைக்கும் உலக இலக்கியத்தின் உச்சங்கள் என்றால் dramatic monologues தான். கிளாசிக் நாவல்கள் ஒவ்வொன்றாக மனசிலே வந்து செல்கின்றன. கவித்துவமான வீச்சுள்ள சொற்கள் நிறைந்தவை. நிறையபேர் டாஸ்டாயெவ்ஸ்கியைத்தான் சொல்வார்கள். எனக்கு அதே அளவுக்கு. d.h. லாரன்ஸும் முக்கியமானவர். நடுவிலே மாடர்னிசம் கொஞ்சநாள் வந்து உணர்ச்சியே இல்லாத கதைகளை எழுதினார்கள். இப்போது மீண்டும் அந்த கிளாசிக் தன்மை உலக இலக்கியத்திலே பெரிதும் பேசப்படுகிறது. பலரும் எழுதிப்பார்க்கிறார்கள். ஆனால் கிளாசிக் தன்மையை எழுத பாரம்பரியம் வேண்டும். அதாவது பாரம்பர்யமான imagery தேவை. ஆகவேதான் லத்தீன் அமெரிக்காவிலோ ஆப்ரிக்காவிலோ வருகிறது. ஐரோப்பிய கலாச்சாரம் கன்ஸ்யூமரிசத்தில் தேங்கிவிட்டது. ஆகவே அவர்களுக்கு செக்‌ஷுவல் அபரேஷன்ஸ் தவிர வேறு ஒன்றும் எழுதுவதற்கில்லை என்ற நிலைமை உருவாகி இருக்கிறது. என்னென்னவோ எழுதுகிறேன். மன்னிக்கவும் சரியாக எழுத தெரியவில்லை. என்னைப்பொறுத்தவரை இந்தக்கதை ஒரு சரியான கிளாசிக் கதை. அற்புதமான dramatic monologue உள்ளது. பெரியவர் பேசும் எல்லா வரிகளும் அற்புதமான கவித்துவத்துடன் உள்ளன. மீண்டும் ஜானகிராமனின் கிளாசிக் கதைகள் வர ஆரம்பித்துவிட்டது மாதிரி ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. ஆனால் அவற்றை விட more philosophical . தத்துவமும் கவித்துவமும் வாழ்க்கையோடு கலக்கக்கூடிய இந்த மாதிரி இடங்களிலேதான் நல்ல இலக்கியம் உருவாகும் என்று படுகிறது . என்ன சொல்வது electrifying

சம்பந்தன்

அன்புள்ள சம்பந்தன்

நன்றி.

சில கதைகள் அவற்றின் உச்ச நிலையில் மட்டுமே நிற்க முடியும். அவற்றின் கருக்களின் இயல்பு அப்படி. சில கதைகள் தரையில் மட்டுமே நடக்க முடியும்.

தரையில் நடக்கும் கதைகளுக்கு மட்டுமே நம்பகத்தன்மை உண்டு என நம்பவைத்தது நவீனத்துவம். எல்லாமே கதைகள்தான் என சொல்லியது பின்நவீனத்துவம். ஆகவே எல்லாமே நம்பகத்தன்மை கொண்டவைதான்

வாழ்க்கையில் உள்ள உக்கிரம் பலசமயம் புனைவில் இல்லை

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்களை அறிந்த வாசகர்களில் நானும் ஒருவன். இன்று காலை எனது நண்பர் ஒருவர் உங்களின் அறம் சிறுகதை குறித்து தெரிவித்தார். பதிப்பகம் வைத்துள்ள என்னைப் போன்றோரை பற்றிய கதை தான் என்று வேறு நண்பர் கூறியதால் உடனே படித்தேன். கதையின் ஊடே நீங்கள் எழுதியிருப்பது போல் “நான் எங்கே இருக்கிறேன் என்றே கொஞ்ச நேரம் எனக்குத் தெரியவில்லை.”

உங்கள் கதை என் கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. ஏனென்றால் இக்கதையில் வருவதைப் போன்ற ஒரு நெருக்கடி நிலை பதிப்பகம் வைத்திருக்கும் எனக்கும் ஏற்பட்டது. என்ன என்னால் சாபம் கொடுக்கத் தெரியவுமில்லை, அதற்கான அறமும் என்னிடம் இருக்கிறதா, அல்லது அந்த அறம் இருந்தாலும் அதை மதிக்கும் அந்த பெண்மணியைப் போன்றோர் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

நீங்கள் கடைசி வரியில் சொன்னது போல் ஒருவனிடம் உள்ள அறத்தை மதிக்கத் தெரிந்தவரிடம் தான் உண்மையான அறம் வாழ்கிறது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அப்படி மதிப்பவர்கள் தான் இக்காலத்தில் அரிதாகி வருகிறார்கள். என் பிரச்சனைகள் காரணமாக மனத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை குறைக்கும் அளவிற்கு ஒரு அழுத்தமான மனதைப் பிழியும் கதை. படைத்த உங்களுக்கு நன்றி. கடைசியாக ஒரு விஷயம் இதை கதை என சொல்லியிருந்தாலும் எனக்கு ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது. நல்ல கதைகள் எல்லாம் ஏற்கனவே உண்மையில் நடந்தவை தானே?

தங்களுக்கோ தங்கள் கதைகளுக்கோ அறிமுகமும் விளம்பரமும் தேவையில்லை என்றாலும், நல்ல எழுத்தை நம்மால் முடிந்தவரை நான்கு பேரையாவது படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கதையை படித்த பிறகு வந்தது. என்னுடைய இணைய தளத்தில் முதல் முறையாக படித்ததில் பிடித்தது என புதிய பகுதியை ஏற்படுத்தி இணைத்துள்ளேன்.
http://www.chennailibrary.com/

அன்புடன்
கோ.சந்திரசேகரன்
சென்னைநூலகம்.காம்
கௌதம் பதிப்பகம்

அன்புள்ள சந்திரசேகரன்

நன்றி

நல்ல கதைகள் நடந்தவையாக இருக்க வேண்டியவை அல்ல. ஆனால் அவற்றின் வேர்கள் வாழ்க்கையில் இருக்கும்

இந்தக்கதை வாழ்க்கையில் இருந்து வந்தது. அந்த வாசனை அடிக்கிறது அவ்வளவே

ஜெ

முந்தைய கட்டுரைநான்காவது கொலை !!! – 11
அடுத்த கட்டுரைநான்காவது கொலை!!! – 12