வணக்கம் குரு.,
அப்பாவின் தாஜ்மகால் ,படிக்க படிக்க ஒரு மர்ம கதை போல,ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பது முன் கூட்டியே தெரியவருகிறது, ஆனால் அது அப்பா,அம்மாவின் மரணத்தில் முடியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.எவ்வளவு கனவுகளுடன் அதை ஆரம்பித்து இறுதியில் அதே வீட்டில் அப்பா அந்த ஐம்பத்தைந்து நாட்களை எவ்வளவு மனக்கஷ்டமான சூழ்நிலையில் கழித்திருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது.
அப்பாவின் தாஜ்மகால் ,படிக்க படிக்க ஒரு மர்ம கதை போல,ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பது முன் கூட்டியே தெரியவருகிறது, ஆனால் அது அப்பா,அம்மாவின் மரணத்தில் முடியும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.எவ்வளவு கனவுகளுடன் அதை ஆரம்பித்து இறுதியில் அதே வீட்டில் அப்பா அந்த ஐம்பத்தைந்து நாட்களை எவ்வளவு மனக்கஷ்டமான சூழ்நிலையில் கழித்திருப்பார்கள் என்று நினைக்கும் போது மிகுந்த வேதனையளிக்கிறது.
இதுபோன்ற பெரும் துயரங்களை தாங்கிக்கொண்டு உங்களால் இவ்வளவு பெரிய எழுத்தாளுமையை எப்படி வளர்த்துக்கொள்ள முடிந்தது? கீதையின் வரிகளுக்கு மிகப்பொருத்தமான வாழும் உதாரணம் நீங்கள் தான்..
பணிவன்புடன் மகிழவன்.
அன்புள்ள மகிழவன்,
தாஜ் மகால் என்றாலே அழியாத்துயரத்தின் சின்னம் தானே? பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய கவிதை இது.
என்னுடைய வீடு
என்னுடைய வீடு
எண்ணிக்கையில்லா காததூரத்துக்கு அப்பால் இருக்கிறது
இருளில், தனித்து, கைவிடப்பட்டு
பழக்கமான தென்றல்
தயக்கமில்லாது அதனுள் நுழைகிறது
ஒட்டடைகளை மெல்லிய விரல்களால் வருடிச்செல்கிறது
கதவில்லாத வாசல்கள் வழியாக வழிந்து
சாளரங்கள் வழியாக வெளியே பீரிடுகிறது
தூசுப்படலத்தில்
தன்பெயரைப் பொறித்து வைக்கிறது
என்னுடைய வீட்டுக்குள்
இனம்புரியாத பெருமூச்சுகள் மட்டும் நிறைந்திருக்கின்றன
இன்னும் அடங்காத தவிப்புகளின்
அறையிருள் கனக்கிறது
சொல்லித்தீராத சொற்களால்
சுவர்கள் அதிர்கின்றன
நீர்ப்படலம் போல
என்னுடைய வீடு
பிரபஞ்ச இருளின் கடலில்
ஒரு சருகு போல மிதந்துகொண்டிருக்கிறது இநேரம்
தனித்து கைவிடப்பட்டு
***
அன்புள்ள ஜெயமோகன்
இன்னும் கொஞ்ச நாட்களுக்கு உங்கள் இணையப்பக்கத்துக்கே வரமுடியாது போலிருக்கிறது. மனம் அப்படி கனத்துக்கிடக்கிறது. அதிர்வு அலைகள் மோதி மோதி ஏதேதோ நினைவுகள். இந்த மாபெரும் சோகங்களை எந்த தீய பழக்கமும் இல்லா நெறி சார்ந்த வாழ்வோடு எதிர்கொள்ள பெரிய மன உறுதி வேண்டும். அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
அன்புடன்
குமார்
குமார்
அன்புள்ள குமார்
மன உறுதி என்பதைவிட அப்போது பற்றிக்கொள்ள கிடைத்த புணை, நூல்களாக இருந்தது என்பது தான் உண்மை. நன்றி.
நீங்கள் ஆங்கில பெரிய எழுத்துக்களில் தட்டச்சிட்டிருக்கிறீர்கள். www.suratha.com/reader.htm என்ற இணையபக்கத்தை இறக்கம்செய்து அதன் மேலே உள்ள பக்கத்தில் இதேபோல சிறிய எழுத்துக்களில் தமிழாங்கிலத்தில் தட்டச்சிடுங்கள். அதன் நடுவே உள்ள புள்ளிகளில் ரோமனைஸ்டு என்பதில் சொடுக்குங்கள். யூனிகோடு வடிவில் தமிழில் எழுத்துக்கள் வரும். அப்படியே வெட்டி எந்த மெயில் பக்கத்திலும் ஒட்டி கடிதம் அனுப்பலாம். இணையதளங்களுக்கு எதிர்வினையும் அனுப்பலாம்
ஜெ
ஜெ
**
அன்புள்ள ஜெ
அப்பாவின் தாஜ்மகால் படித்து மனம் கலங்கினேன்
நம் நாட்டில் பெரும்பாலான கட்டிடங்கள் இப்படிப்பட்ட கனவுகளுடன் அல்லவா கட்டப்படுகின்றன? வாழ்க்கை முழுக்க உழைத்து கட்டிடங்களை கட்டுகிறார்கள். கட்டி முடிக்கும்போது அனேகமாக பிள்ளைகள் பணி நிமித்தமோ கல்யாணமாகியோ போயிருப்பார்கள். கிழவனும் கிழவியும் அந்த வீட்டில் தன்னந்தனிமையில் இருப்பார்கள். குழந்தைகளுடன் இனிமையாக வாழவேண்டிய வயதில் வீடுகட்டும் கனவுடன் சேமிப்பதற்காக குட்டி வீட்டுக்குள் ஒண்டி ஒடுங்கி வாயைக்கட்டி வாழ்கிறார்கள். எல்லா வீடுகளும் அர்த்தமில்லாத தாஜ்மகால்கள்தான். என்னுடைய வீடும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டியிருக்கிறது
எம்.கெ.ஆர்.சங்கரநாராயணன்
**
அப்பாவின் தாஜ்மகால் சிறப்பான கட்டுரை. அதில் உள்ள நுட்பமான ஒரு சித்திரம் மனதை மிகவும் கனக்க வைத்தது. அப்பாவுக்கு அவரது மனசுக்குள் ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறது. அதை அவர் யாருக்கும் சொன்னதே கிடையாது இல்லையா? அவர் அந்த வாழ்க்கையை வாழ்வதற்குத்தான் முயன்றார். யாருமே இறந்தகாலத்துக்குப் போய் வீடுகட்டி வாழமுடியாது இல்லையா? நல்ல கட்டுரை ஜெ
சிவம்
சிவம்