தனிமை – கடிதங்கள்

வானோக்கி ஒரு கால் – 2

வானோக்கி ஒரு கால் -1

அன்புள்ள ஜெ.,

 

விவாதப்பட்டறை சிறப்பாக நடந்தது குறித்து மகிழ்ச்சி. நீங்கள் ‘பார்ம்’ க்கு வர ஒரு ‘வார்ம் அப்’ பாகவும் இருந்திருக்கும். பல அறிவு தீபங்களை நாள்தோறும் ஏற்றிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் கதிரணைதலை பார்த்தோம் என்று எழுதி பக்கத்தில் கரிச்சானைப் போல ஒரு பறவை படமும் போட்டதால், அதுதான் ‘கதிரணைதலை’ போல என்று ஒரு கண நேர மயக்கம். ஒரு ஒற்று ‘ப்’ இருந்திருந்தால் இந்தக்குழப்பம் வந்திருக்காது. அது போகட்டும். தனிமை கண்டதுண்டு…அதில் சாரம் இருக்குதம்மா….என்ற கவிஞன் கூறிய சாரத்தை உங்கள் தனிமைப் பயணங்களில் நீங்கள் கண்டடைந்தீர்களா?

 

அன்புடன்,

 

கிருஷ்ணன் சங்கரன்

 

 

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

 

 

சிந்தனைப்பழக்கமுள்ள எவருக்கும் தனிமை நன்கு பழகியதாகவும், இனிமையானதாக மாறும்தன்மை கொண்டதாகவும்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

 

இத்தகைய தனிமைகள் நமக்கு நாமே விதித்துக்கொள்வனதானே?.

 

ஜெ

 

அன்புள்ள ஜெ எம்

 

வானோக்கி ஒரு கால் வாசித்தேன்.   நெல்லை நினைவு வந்து விட்டது.  கொஞ்ச காலமாகவே மனம் வேரைத் தேடுகிறது.

 

நாங்குநேரி அருகில் திருக்குறுங்குடி போய் இருக்கிறீர்களா?  உங்களுக்கு சிற்பம் பற்றிய ஆவல் உள்ளதால் இந்த கோயில் பிடிக்கும்.  மலையாள நடிகை மேனகாவின் தாய் வழி ஊர்.

 

இன்னொன்று :

”திருடி பத்திரமா மியூசியத்திலேதானே வைக்கிறான். இங்க இருந்தா நம்மூர் அயோக்கியனுங்க உடைச்சு போட்டிருப்பாங்க. என்னைக்கேட்டால் மிச்சமிருக்கிற நல்ல சிலைகளையும் அவன்கிட்டேயே குடுத்திடலாம். அவனுக்கு மதிப்பு தெரிஞ்சிருக்கு”

இதையேதான் நானும் நினைத்தேன்.

 

சிவா சக்திவேல்

 

அன்புள்ள சிவா

 

அது ஒரு கொதிப்பில் எழுதியது. சிலைகள், ஆலயங்கள், நீர்நிலைகள் மீது தமிழர்களுக்கு ஏதோ வன்மம் உள்ளது என்ற எண்ணம் எழுவதுண்டு. குப்பைமலைகள் குவிந்துகிடக்காத நீர்நிலையே தமிழகத்தில் இல்லை. சீரழிந்திருப்பது ஆறா ஆலயமா என நெல்லையில் ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்

 

ஜெ

முந்தைய கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்
அடுத்த கட்டுரைஷோபா சக்திக்கு…. லக்ஷ்மி மணிவண்ணன்